தென்னிலங்கையில் யுத்த ஆதரவு அதிகரிப்பு அழிவே ஏற்படுமென வாசுதேவ எச்சரிக்கை

[ தினக்குரல் ] - [ Sep 23, 2006 12:52 GMT ]

அரசாங்கப் படைகளின் முன்னேற்றமும், விடுதலைப்புலிகளின் பின்வாங்கலும் தென் பகுதியில் யுத்தத்திற்கான ஆதரவு மனோபாவத்தை அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணயக்கார, யுத்தத்தால் அழிவுகளே அதிகரிக்கும். அரசியல் தீர்வே நிரந்தரத் தீர்வென்பதை மக்கள் உணர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். யுத்தம் அல்ல அரசியல் தீர்வே இறுதியானது என்ற தலையங்கத்தில் வாசுதேவ நாணயக்கார விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மாவிலாற்றை கைப்பற்றுவதற்காக இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்கள் சில தினங்களில் முடிவடையாது தொடர்ந்தது. அத்தோடு வடக்கில் இராணுவ முன்னரங்குகள் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் தோல்வி கண்டதோடு புலிகள் பின்வாங்கும் நிலைமையும் ஏற்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் யுத்தநிலை மாற்றங்களுடன் தொடரவே செய்யும்.

இந்தச் சூழ்நிலையில் யார் வெற்றி கொள்கிறார்கள்? யார் தோல்வியடைகின்றனர்? என்பதை நாம் எடை போடவில்லை மாறாக யுத்தத்தையே எதிர்க்கின்றோம்.

கடந்த காலங்களில் இராணுவம் பெற்ற வெற்றிகளால் யுத்தத்தை இலகுவாக வெற்றி கொள்ளலாம் என்ற மாயை தென்பகுதியில் தோன்றியுள்ளது. இது குறுகிய காலத்திற்குள் யுத்தத்தை நிறுத்த முடியாது அது நாட்டுக்குள் பல்வேறு கோணங்களில் அழிவுகளையே ஏற்படுத்தும். மக்கள் மீதே சுமையும் அதிகரிக்கும். இன முரண்பாடுகள் தொடரும்.

அத்தோடு, அரச கட்டுப்பாட்டு பகுதிகள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு விடுதலைப்புலிகள் ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது யுத்த நிலைமையை மேலும் மோசமாக்கும். எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாமென புலிகளை வலியுறுத்துவதோடு அதற்கான அழுத்தத்தை தமிழ் மக்கள் வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

யுத்தத்தை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும், தமது பக்கம் ஈர்க்க வேண்டுமெனில் தமிழ் மக்களுக்கு உயர்ந்தளவிலான அதிகாரப் பரவலாக்கலை அரசு முன்வைக்க வேண்டுமென்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.