முத்தமிழ் வித்தகரின் பிறந்த தினத்தன்று தமிழ் மொழித்தினம் கொண்டாடப்படுவதே பொருத்தம்

ஆக்கம்: வி. தம்பிராஜா

ஈழத்திருநாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் காரைதீவு எனும் ஊரில் சாமிதம்பி என்பவருக்கும், கண்ணமைக்கும் புதல்வனாக அவதரித்த மயில்வாகனன். ஆசிரியர், அதிபர், பேராசிரியர், நூலாசிரியர் என்னும் பணிகளூடாக இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழை வளர்த்த முத்தமிழ் வித்தகர் ஆவார். இவரின் துறவு நாமம் சுவாமி விபுலானந்தர் என்பதாகும்.

இம்மகானின் நினைவு தினமான ஜுலை மாதம் 19ம் திகதி தமிழ் மொழித் தின விழா கொண்டாட வேண்டும் என்ற சிந்தனை உதித்ததன் விளைவாக தமிழ் மொழித் தின போட்டிகள் 1991 ம் ஆண்டு தொடக்கம் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழை பாடசாலை, வலய, மாகாண, தேசிய மட்ட போட்டிகளாக நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் மாணவர்களிடம் தமிழ் மொழியைப் பிரயோக அடிப்படையில் பயன்படுத்தும் ஆற்றலையும் தமிழ் மொழியினது செழுமையின் ஆழத்தை அறிந்துகொள்ளவும், மொழியினூடாக தமிழ் கலை வடிவங்களை அறிந்து செயற்படவும், தமிழ் மொழி ஊடாகத் தமது ஆளுமையை வளர்த்துச் செல்லவும், இத்தமிழ் மொழியை கற்பதால் பயனுள்ள வகையில் பொழுதை கழிக்கலாம் என்பதை அறிவதற்கும், ஒருவர் ஒருவரோடு இணைந்து வாழ்வதற்கு உதவுவதே மொழி என்ற உண்மையினைத் தாம் உணர்ந்து, பிறருக்கு உணர்த்துவதற்கும், சிங்கள மாணவர்கள் தமிழ் மொழி கற்பதில் ஏற்பட்டுள்ள ஆர்வத்தை மேலும் வளர்த்துக் கொள்வதற்காகவும், இப்போட்டிகள் கல்வி அமைச்சின் தமிழ் மொழி பிரிவு 1991 ம் ஆண்டு தொடக்கம். நிதி, ஆளணி மற்றும் பெளதீக வள பற்றாக்குறையுடன் நலன்விரும்பிகளிடம் உதவிகளை பெற்று நடத்தி வருகின்றது.

1991 ம் ஆண்டில் தமிழ் மொழி பிரிவுக்கு பணிப்பாளர் நாயகமாக இருந்த திரு வெற்றிவேல் சபாநாயகம் 1993 ம் ஆண்டு வரை நடத்தி வந்தார். 1994 ம் ஆண்டு திரு அல்பிரட் பணிப்பாளராக இருந்து நடத்தி வந்தார். இவருடைய காலப் பகுதியில் கல்வி அமைச்சில் மொழிகள் மற்றும் மானிடவியல் பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதன் கீழ் சிங்களம், தமிழ் மொழி பிரிவுகள் உருவாக்கப்பட்டன.

தமிழ் மொழி பிரிவுக்கு திரு. அல்பிரட், திரு. நடராஜா, திரு. பி. இராசையா, திரு. எஸ். இதயராஜா, திருமதி கிறேஸ் சடகோபன் ஆகியோர் தொடர்ச்சியாக உதவிப் பணிப்பாளர்களாக இருந்து தமிழ் மொழித் தின போட்டிகளை நடத்தி வந்தனர். 2005 ம் ஆண்டு நாட்டில் நிலவிய அசாதாரண நிலை காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை.

இதனால் ஒரு வருடம் தேசிய நிலை போட்டிகள் பிந்தி வந்தன. இதனை உதவி பணிப்பாளர் திரு. எஸ். இதயராஜா 2010 ம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணத்தில் 2009 ம் ஆண்டுக்கான போட்டிகளை நடத்தினார். இவர் கல்வி அமைச்சின் இந்து சமய பிரிவுக்கு உதவி பணிப்பாளராக சென்றதன் பின் தமிழ் மொழி பிரிவுக்கு 2010.10.18 ம் திகதி நியமிக்கப்பட்ட உதவி பணிப்பாளர் திருமதி கிறேஸ் சடகோபன், இந்து சமய பிரிவின் உதவியுடன் 2010 ம் ஆண்டுக்கான போட்டிகளை நவம்பர் மாதம் கொழும்பில் நடத்தினார்.

ஒரே வருடத்தில் இரு போட்டிகளை நடத்தி முடித்த இருவருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவிக்கின்றனர்.

பாடசாலை கலைத்திட்டத்தில் இணைப்பாடவிதான செயற்பாடுகள் முக்கியமானவை. தமிழ் மொழித் தினப் போட்டிகள் இவற்றை வலுவுள்ளதாக்குகின்றன. பாடசாலை கலைத் திட்டத்துக்கு துணையாக இருப்பதோடு மாணவர்களின் திறன்களை வளர்க்கவும், வெளிக்காட்டவும், ஆசிரியர்களின் திறமைகளை வெளிக்காட்டவும் மேலும் வளர்க்கவும் உதவுகிறது.

மேலும் அருகிவரும் பல்வேறு கலைகளை பாதுகாக்கவும், கலை கலாசாரங்களை மாணவர்களிடையே வளர்க்கவும் தமிழ் மொழித் தின போட்டிகள் உதவுகின்றன. முஸ்லிம் மாணவர்களுக்கென முஸ்லிம் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறுவதனாலும், சிங்கள மாணவர்களுக்கான போட்டிகள் மூலம் சிங்களவர்கள் தமிழ் மொழியை கற்க ஆர்வத்தை ஏற்படுத்துவதனாலும் இப்போட்டிகள் முக்கியத்துவம் உடையதாக விளங்குகின்றன.

இப்போட்டிகள் மாணவர்களின் ஆளுமை விருத்திக்கு பெரும்பங்கு வகிக்கின்றன. அத்தோடு தேசிய மட்ட போட்டிகளில் 1ம், 2ம் 3ம் இடங்களை பெறுபவர்களுக்கு உயர் கல்விக்கான சந்தர்ப்பங்களில் சலுகைகளைப் பெறச் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

தேசிய மட்ட போட்டிகளில் சகல மாணவர்களுக்கும் பங்குகொள்ள முடியாது. பாடசாலை மட்ட போட்டிகளில் சகல மாணவர்களுக்கும் பங்குகொள்ள வாய்ப்புள்ளதால் கூடுதலான கவனம் செலுத்த வேண்டிய கடப்பாடு இருக்கிறது. கல்வி அதிகாரிகளும், பெற்றோர்களும் இவ்விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும். பாடசாலை மட்ட போட்டியிலேயே தமிழ் மொழித் தின போட்டிகளின் வெற்றி தங்கியுள்ளது.

பாடசாலை மட்ட போட்டியிலிருந்து தேசிய மட்ட போட்டி வரை மத்தியஸ்தம் வகிக்கும் நடுவர்கள் அவ்வத்துறையில் போதிய தராதரம், தகைமை, அனுபவம், மற்றும் நன்னெறி உள்ளவர்களே நடுவர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் தங்கள் கடமைகளை மிகவும் பொறுப்புணர்ந்து ஆற்றி வருகின்றனர்.

இவர்களின் தீர்ப்புகளுக்கு மதிப்பளிக்கும் மனப்பக்குவம், ஆசிரியர், மாணவர், பெற்றோரிடம் இருத்தல் வேண்டும். ஆசிரியர்கள் பெரும் கஷ்டப்பட்டு பல்வேறு நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்து பயிற்றுவித்து தோல்வி காணும் போது தீர்ப்புகளில் சந்தேகம் வருகின்றன. வெற்றிபெற்றவர்கள் அதையும் விட திறமைகளை காட்டியிருக்கலாம் என எண்ணக்கூடிய பக்குவம் இருத்தல் வேண்டும்.

2010 ம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் வட மாகாணம் முதல் இடத்தை தட்டிக்கொண்டது. இரண்டாம் இடத்தை கிழக்கு மாகாணமும், 3ம் இடத்தை மேல் மாகாணமும் பெற்றுக்கொண்டன. எனினும் இம்முறை நடைபெற்ற போட்டிகளில் வெற்றிகள் சகல மாகாணங்களுக்கும் பரவலாக கிடைக்கப் பெற்றுள்ளன. இது மாணவர், ஆசிரியர் மத்தியில் போட்டியின் மீதும் நடுவர்கள் மீதும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதோடு ஆர்வமும் உற்சாகமும் ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

தமிழ் மொழியூடாக தமிழ் கலை வடிவங்களை வளர்ப்பதற்காக நாட்டிய நாடகம், வில்லுப்பாட்டு, நாட்டார் பாடல், இலக்கிய நாடகம் என்பன இணைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நாட்டுக்கூத்து, சமூக நாடகம் என்பன நீக்கப்பட்டிருப்பது நியாயமானதா? ஒரு பகுதியினரிடம் காணப்பட்ட நாட்டுக்கூத்து தற்போது பல்கலைக்கழகங்களில் உள்ளது.

நாட்டுக்கூத்து பிரதேச ரீதியாக வேறுபட்டு காணப்படுவதால் உதாரணமாக வடபகுதியில் வட மோடி, தென்மோடி கூத்துகளும், மலையக பிரதேசத்தில் காமன்கூத்து போன்றனவும் காணப்படுகின்றன. இவ்வாறு பிரதேச ரீதியாக வேறுபட்டு காணப்படும் கூத்தை தேசிய மட்ட ரீதியாக போட்டி நடத்த முடியாது.

இதனை மாகாண மட்டம் வரை மட்டுப்படுத்தி நடத்தினால் பிரதேச மட்டத்தில் இக்கலை பாதுகாக்கப்படும்.

சமூக நாடகங்கள் நீக்கப்பட்டுள்ளமைக்க கூறப்படும் காரணங்கள் எவ்வளவு தூரம் பொருத்தப்பாடுடையது என்பது அனைத்து தரப்பினரும் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். இப்போட்டிகளை நடத்துவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி வருவதாலும், செம்மொழி பற்றிய சிந்தனை நிகழ்வும் இக்காலகட்டத்தில் இவ்வாறான பேச்சு மொழி பேசுகின்ற நாடகங்கள் தேவை தானா என கேள்வி நிலவுகிறது.

இவ்வாறான நாடகங்கள் தனிப்பட்ட ரீதியாக நபர்களை பாதிக்குமாறு தயாரிப்பதனால் பிரச்சினை ஏற்படுகிறது. இதனை சுற்று நிருபத்தில் திருத்தம் கொண்டு வந்து இணைத்துக் கொண்டால் சகலராலும் தயாரிக்கக் கூடியதாக இருப்பதால் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளிலிருந்தும் மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்வர், இலக்கிய நாடகம் நாடக துறையில் பாண்டித்தியம் பெற்றவர்களாலேயே முடியும்.

இவ்வாறான கலை துறைக்கு ஆசிரியர் தட்டுப்பாடு நிலவும் பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு பங்கு கொள்வது என்பது எட்டாக் கனியாகவே இருக்கும், ஆகவே சமூக நாடகங்களை இணைத்துக் கொண்டால் பின்தங்கிய பிரதேச பாடசாலை மாணவர்கள் பங்கு கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

இசை, நடனம் போன்ற போட்டிகளுக்கு பங்கு கொள்கின்ற போட்டியாளர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். காரணம் எல்லா பாடசாலைகளிலும் நடனம், இசை பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை.

அதனால் சுற்று நிருபத்திலுள்ள விதிகள் ஆசிரியர் இல்லாத பாடசாலைகளிலிருந்து குறித்த போட்டிகளுக்கு போட்டியாளர்களை அனுப்ப முடியாமல் இருக்கிறது. ஆகவே சுற்றுநிருபத்தில் சில மாற்றங்களை கொண்டுவர முடியுமாயிருந்தால் கேள்வி ஞானத்தின் மூலம் பயிற்றுவிக்கும் மாணவர்கள் இவ்வாறான போட்டிகளில் பங்குகொள்ள வாய்ப்பு ஏற்படும்.

2010 நவம்பர் மாதம் 07ம், 13ம், 14ம் திகதிகளில் அகில இலங்கை தமிழ் மொழித் தினப்போட்டிகள் கொழும்பில் நடைபெற்றன. இப்போட்டிக்கு ஒன்பது மாகாணங்களிலிருந்தும் சுமார் 200 பாடசாலைகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர்.

தூர இடங்களிலிருந்து வந்த மாணவர்கள் பாடசாலைகளில் தங்கினர். சிலர் தெரிந்த வீடுகள், உறவினர் வீடுகளில் தங்கினர். பெரும்பாலானோர் பாடசாலைகளிலேயே தங்கினர். இவர்கள் கொழும்பு வருவதற்காக பெருந்தொகை பணத்தை செலவு செய்தே வந்தனர். இம்முறை அவர்களுக்கு போக்குவரத்து செலவு மட்டும்மல்ல உணவும் காசுக்கே பெற வேண்டிய நிலை காணப்பட்டது.

இதற்கு முன் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளின் போது உணவு, தங்குமிடம் என்பன வழங்கப்பட்டன. இம்முறை உணவு வழங்காததால் கூடுதலான பணம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் உணவை பெற்றுக்கொள்வதற்கு கடை இருக்கும் இடம் தெரியாமலும் பெரும் அசெளகரியத்துக்கு உள்ளானார்கள்.

ஒரு வருடத்தில் இரு போட்டிகள் நடந்ததாலும் நலன்விரும்பிகளிடம் வருடத்தில் இரு முறை உதவி கோர முடியாத காரணத்தாலும் உணவுக்கு பெருந் தொகை செலவாகும் என்பதாலும் இம்முறை உணவு கொடுக்க முடியாமல் போய்விட்டதாக அறிய முடிகிறது.

எது எவ்வாறு இருப்பினும் மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும், அவர்கள் போட்டிக்கு வந்தவர்கள். அவர்களின் மனம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும், அவர்களுக்கு ஏற்படும் அசெளகரியம் அவர்களின் பெறுபேறுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவும் கல்வித் துறை சார்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழ் மொழி தினப் போட்டி சம்பந்தமாக பெற்றோர்களுக்கு பாடசாலையூடாக விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், அதன் மூலம் பெற்றோரின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.

நடுவர்கள், இணைப்பாளர்கள் இலங்கையில் பல பிரதேசங்களிலிருந்து வருகை தருவதால் அவர்களுக்கு வழங்குகின்ற கொடுப்பனவுகளில் அதிகரிப்பு செய்யப்பட்டால் உசிதமாக இருக்கும்.

தேசிய மட்டம் வரை போட்டியில் வெற்றி கொண்ட மாணவர்கள் ஒரு சான்றிதழுடன் மட்டுமே செல்கின்றனர். அவர்களின் ஆக்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதற்கு தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடம் பெற்ற ஆக்கங்களை விழா ஒன்றின் மூலம் அரங்கேற்றம் செய்தால் அவர்களுக்கு மேலும் உற்சாகம் ஏற்படும். அத்தோடு பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கெளரவப்படுத்துவதன் மூலம் அவர்களின் பங்களிப்பை மேலும் பெற்றுற்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நினைவு தினமான ஜுலை மாதம் 19ம் திகதி அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா கொண்டாடாமையினால், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி அதிகாரிகள் அனைவரும் தமது ஆதங்கங்களை தெரிவிக்கின்றனர்.

ஆகவே குறித்த தினத்தில் இவ்விழாவை நடத்துவதற்கு அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என்பதே எல்லோரதும் விருப்பமாகும்.

Please Click here to login / register to post your comments.