அழிவுகளைக்கண்டு கலங்காமல் மாணவர்கள் அனுபவங்களினூடாக முன்னேற முயலவேண்டும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அரிகரன்

தமிழ் மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கல்வி கலாசார அழிப்பினை விழிப்புணர்வோடு எதிர்கொண்டு எமது விழுமியங்களைக் காப்பாற்றுவதன் மூலமே எதிர்காலத்தில் நாம் தலைநிமிர்ந்து நிற்க முடியும். அழிவுகளைக் கண்டு கலங்காமல் மாணவர்கள் அனுபவங்களூடாக முன்னேற முயல வேண்டும். இந்தப் பாரிய பொறுப்பு மாணவர்களிடமே உள்ளது என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ்.அரிகரன் தெரிவித்தார்.

வன்னிப் பாடசாலைகளில் "இழந்த கல்வியை விரைந்து மீட்போம்' என்ற தொனிப்பொருளில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட கணித மற்றும் விஞ்ஞான பாடச் செயலமர்வுகளின் இறுதி நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகிய இச் செயலமர்வு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நடைபெற்றது. க.பொ.த.சாதாரண தரத்தில் கல்விகற்கும் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி நடத்தப்பட்ட இச் செயலமர்வின் இறுதி அமர்வு கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய அரிகரன் மேலும் தெரிவித்ததாவது;

தமிழ் மக்களாகிய நாங்கள் அனைவரும் கடந்து வந்த பாதை மிகக் கொடியது. இழக்கக்கூடாத அனைத்தையும் இழந்தோம், உறவுகளை இழந்தோம், உடமைகளை இழந்தோம், எம் கனவுகள் எம் கண் முன்னே அழிக்கப்பட்டன. ஆனால் எமது கல்வியை நாம் ஒருபோதும் இழக்கக்கூடாது. அதை பாதுகாக்க வேண்டியது மாணவர்களின் கடமையாகும்.

மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டவர்கள். தற்போதும் உங்களது குடும்பங்கள் எந்தவிதமான வருமானமும் இன்றி வாழ்கின்றன. இதைவிட உங்களது பெரும்பாலான பாடசாலைகளில் தளபாட வசதிகள் இல்லை. போதிய நூல்கள் இல்லை, கட்டிடங்கள், கூரைகள் இன்றி காணப்படுகின்றன. கற்றலுக்குரிய சூழ்நிலை காணப்படவில்லை. இது போன்ற மனத்தாக்கங்களினால் நீங்கள் ஒருபோதும் உங்களது கல்வியை இடை நிறுத்தக்கூடாது.

இன்று இந்தப் பிரதேசங்களில் தொண்டு நிறுவனங்களிற்கு கல்வி அபிவிருத்திக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழ் மாணவர்களின் கற்றல் வசதிகளை குறைப்பதன் மூலம் எங்களது கற்றல் திறனைக் குறைத்து சிந்திக்கும் ஆற்றலை இல்லாமல் செய்வதே அரசாங்கத்தின் நோக்கம். இதைவிட எமது கலை, கலாசார, பண்பாடுகளை அழித்து இன்னொரு பக்கத்தால் எமது கல்வி வளத்தை குறைத்துக்கொண்டு செல்கிறார்கள். இந்த கலாசார அழிப்பு போர் எவ்வாறு எம்மீது தொடுக்கப்பட்டுள்ளது என நீங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அழிக்கப்பட்ட ஜப்பானிய மக்கள் அன்று ஒருநேர சாப்பாட்டிற்கே ஏங்கினர். 15 பேருக்கு ஒரு புத்தகமே வழங்கப்பட்டது. அரசியல் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. எதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அனுமதி பெற வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால் அந்த மக்கள் துவண்டு போய் யாரையும் அழைக்கவில்லை. தங்களை மட்டுமே நம்பி தாங்களே உழைத்து முன்னுக்கு வந்தனர். இதேபோல் நாங்களும் வரலாற்று அனுபவங்களினூடாக முன்னுக்கு வரவேண்டும். இது எல்லாம் மாணவர்களாகிய உங்கள் கைகளிலேயே உள்ளது.

நாங்கள் முன்னேறுவதற்குப் புலம்பெயர் சமூகம் எமக்கு கைகொடுக்க வேண்டும். எமது மாணவர்களினதும் மக்களினதும் வளர்ச்சி அவர்கள் கைகளிலேயே உள்ளது. தேவையான நேரங்களில் எமது மக்களுக்கு உதவி புரிந்ததற்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறோம். ஆனால் இன்னமும் அவர்கள் செய்ய வேண்டியவை ஏராளம் உள்ளன. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தால் அவற்றுக்கு களம் அமைக்க நாம் தயாராக உள்ளோம். இங்குள்ள மாணவர்கள் படும் துன்பங்களை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. எனவே எமது மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு நீங்கள் பொறுப்போடு செயற்படுவீர்கள் என எண்ணுகின்றோம்.

எனவே எமது அன்புக்குரிய மாணவச்செல்வங்களே எமது எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு எம்மீது தொடுக்கப்பட்டுள்ள கலாசார அழிப்பை விழிப்புணர்வோடு எதிர்கொண்டு அதைக் காப்பாற்றிக்கொண்டும் சமூகப் பொறுப்பு மிக்கவர்களாக அனைவரும் செயற்பட்டு எமது எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டும் என்றார்.

Please Click here to login / register to post your comments.