ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டியது அவசியம்

அதிகாரப் பரவலாகத்திற்கான திருப்திகரமான திட்டமாக 13 ஆவது அரசியல் திருத்தம் அமையாதமையால் நாட்டின் ஒன்றையாட்சி முறைக்கு அப்பால் செல்லக்கூடிய வகையில் அரசியலமைப்பை மறுசீரமைப்பதன் மூலம் புதிய திட்டங்களையும் கட்டமைப்புகளையும் வடிவமைக்கவேண்டிய தேவை உள்ளதென கலாநிதி எஸ்.ஜ.கீதபொன்கலன் தெரிவித்தார்.கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோது சாட்சியளிக்கையிலேயே கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல், விஞ்ஞானம் மற்றும் பொதுக்கொள்கைகள் பிரிவின் தலைவர் கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் இவ்வாறு தெரிவித்தார்.

ஆணைக்குழு முன்னிலையில் கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கை சமூகம் எதிர்கொண்ட சிக்கல்களுக்கு குறிப்பிட்ட சமுதாயமொன்றையோ தனிநபரையோ குற்றஞ்சாட்டவோ அல்லது முரண்பாட்டிற்கான காரணத்தை கண்டறியவோ வரலாற்றை ஆராய நான் முற்படவில்லை.நிலைமைக்கு காரணமாக இருந்துள்ளோம் என்பதனையும் தவறுகள் இழைத்துள்ளோம் என்பதனையும் நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். தமிழ் சமூகத்தின் சார்பாக மன்னிப்புக்கோரும் உரிமை எனக்கு உண்டா என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால்,நாட்டின் நிலையான அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் மன்னிப்புக் கோருவது வழிகோலும் என நம்பி தமிழ் மக்களின் பேரால் இடம்பெற்ற வன்முறைகளுக்காக தனிநபராக எனது மன்னிப்பைக் கோர விரும்புகின்றேன்.தமிழர்கள் இயல்பாகவே பிரிவினைவாதிகளென்பதை நான் நம்பவில்லை.தமிழர்களின் அரசியல் அபிலாசைகளிற்கு உரியமுறையில் பதிலளிக்காத தெற்குடனான அதிருப்தியின் பெறுபேறாகவே ஈழத்திற்கான கோரிக்கை அமைந்தது. எனது நோக்கின்படி சிங்கள மக்களிலும் பார்க்க தமிழ் சமூகம் இலங்கையர்களாக உள்ளனர்.

இலங்கைத் தேசிய காங்கிரஸை அமைப்பதிலும் சுதந்திரத்திற்கான பங்களிப்பிலும் சேர் பொன்னம்பலம் அருணாச்சலத்தின் பங்கை நாம் மறந்துவிடமுடியாதென்படத நான் உறுதியாகக் கூறுகின்றோம்.சிங்கள அரசியல் தலைவர்களிற்காக நீதியின் பெயரால் நடத்தப்பட்ட 1915 இனக் கலவரங்களின் பின்னர் உடனடியாக சேர் பொன்னம்பலம் இராமநாதனால் மேற்கொள்ளப்பட்ட ஸ்திரமான நடவடிக்கைகளையும் நாம் மறக்கமுடியாது. சேர்.பொன் இராமநாதனின் போராட்டம் கேலிக்கிடமானதும் சிங்கள ஆதரவுடையதுமென விமர்சிக்கப்பட்டதை சுட்டிக்காட்டவேண்டியது அவசியமானதாகும்.1920 முதல் சிங்கள தலைவர்களின் அணுகுமுறையால் தமிழர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.1920 இன் பிற்பகுதியில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா உள்ளடங்கலாக கண்டியத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட சமஷ்டி கோரிக்கைகளுக்கு அவர்கள் இதுவரை ஆதரவு வழங்கவில்லை.சுந்திரமடைந்த காலந்தொட்டு தனிச்சிங்களவர்களை கொண்ட அமைச்சரவை நியமனம் போன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளினால் தமிழர்கள் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்தனர்.

தமிழர்கள் இந்திய முஸ்லிம் லீக் மூலம் இலகுவாக அறிந்துகொண்டு தனிநாட்டை கோரியிருக்கமுடியும்.ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.தேசிய சட்டசபையில் ஐம்பதுக்கு ஐம்பது பிரசன்னத்தையே தமிழர்கள் விரும்பினர்.ஒருவேளை,ஐம்பதுக்கு ஐம்பது திட்டத்தில் தொகை பிழையாக இருந்திருக்கலாம்.ஆனால்,அது தற்பொழுதும் கொழும்பை மையமாகக் கொண்டதிட்டமாகவே உள்ளதுடன் ஒரு நாட்டின் கருத்திட்டமாக தொடர்ந்தும் செயற்படுகின்றது. சுதந்திரம் கிடைத்த பின்னர் உடனடியாகக் கூட தமிழர்கள் தனிநாட்டைக் கோரவில்லை.பிராந்திய சுயாட்சியையே கோரினார்கள்.தென்பகுதி அரசியல் தலைமைகளிடமிருந்து உரிய முறையிலான பதிலளிப்பும் உண்மைத்தன்மையும் அற்றுப்போனமையே தமிழ் அரசியல் தலைவர்கள் தனிநாட்டைக் கோரவேண்டிய நிலைக்கு தள்ளியது.தனிநாடு குறித்து பேசும்போது தமிழ் அரசியல் தலைமைத்துவம் தனிநாட்டு கோரிக்கையில் உறுதியாக இருந்திருக்கவில்லை.ஆனால்,இளைஞர்கள் தனிநாட்டு கோரிக்கையில் உறுதியாக இருந்ததுடன் வன்முறையையும் பயன்படுத்த ஆரம்பித்தனர். வன்முறையானது தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தருமென ஆரம்பத்தில் தமிழ் மகள் மத்தியில் நம்பிக்கை இருந்தது.

ஆனால், இலங்கை அரசுக்கு எதிரான வன்முறையினால் பயனில்லை என்பது இன்று நிரூபணமாகியுள்ளது.இவ்விடயம் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டால் மட்டும் நிரூபணமாகவில்லை.ஜே.வி.பி.யினரும் இருதடவை முயற்சித்துள்ளனர்.வன்முறையால் நாட்டிற்கும் குறிப்பாக தமிழ் சமூகத்திற்கும் பாரிய அழிவுகளும் அளவிலா பாதிப்புகளுமே ஏற்பட்டுள்ளது.எதிர்காலத்தில் வன்முறையை அடிப்படையாகக் கொண்ட முரண்பாடுகள் மீண்டும் ஏற்படக்கூடாதென்பதை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டென நம்புகின்றேன்.தற்பொழுது மோதல்கள் முடிவடைந்துள்ளது.மோதலின் முடிவை சம பிரஜாவுரிமை என்ற அடிப்படையில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பவேண்டியதுடன்,எதிர்நோக்கி செல்ல வேண்டியதற்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும்.அதற்காக சிறுபான்மைகளின் கவலைகளைக் கையாள்வதற்கு சரியான முறையில் நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்களை நாம் உருவாக்க வேண்டும்.இந்நிலைக்கு நாம் வருவதற்கு முன்னர் தமிழ் மக்கள் மத்தியில் இன்றுள்ள அடிப்படை அரசியல் கொள்கைகள் மற்றும் அச்சங்களை குறித்து தெளிவுபடுத்தவேண்டும்.

எனது நோக்கில் தமிழ் சமூகம் அரசியல் ரீதியில் மூன்று அடிப்படை அச்சங்கைளக் கொண்டுள்ளது.சிங்கள மக்களை வடக்கு,கிழக்கில் குடியேற்றும் சதித்திட்டமானது வடக்கு,கிழக்கை தமது தாயகமென தமிழர்கள் கூறுவதை பலவீனமடையச் செய்யுமென தமிழ் மக்கள் அச்சமடைகின்றனர். கிழக்கு மாகாணத்தில் கடந்த சில அரசுகளினால் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசனத்திட்டங்கள் தமிழர்களின் குடிப்பரம்பலின் வலுவைக் குறைத்துள்ளது.இதுபோன்ற காரணங்களாலேயே தமது பிரச்சினைகளைத் தீர்க்கும் எந்தவொரு அரசியல் திட்டத்திலும் நில அதிகாரம் வேண்டுமென்பதில் தமிழர்கள் பிடிவாதமாய் உள்ளனர். பண்டாசெல்வா மற்றும் டட்லி செல்வா உடன்படிக்கைகளில் நில மற்றும் குடியேற்றத்துடன் தொடர்புடைய சரத்துகள் உள்ளது. வடமாகாணத்திலுள்ள தமிழ்ப் பகுதிகளில் முறையான திட்டத்துடன் குடியேற்றங்களை மேற்கொள்ள இந்த அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர். உதாரணமாக இராணுவ முகாம்களை சுற்றி சிங்களக் கிராமங்கள் அமைந்ததைக் கூறலாம்.

குடியேற்றத் திட்டங்கள் மூலம் தமிழ் மக்களின் அரசியலின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் திட்டமில்லை என்பதை செயற்பாட்டின் மூலம் நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் சிங்கள மக்களைக் குடியேற்றும் திட்டங்கள் இருந்தால் அதனை நிறுத்தவேண்டியது மிக முக்கியமாகும். தம்மை இரண்டாம் தரப்பிரஜைகளாக்குவதற்குரிய திட்டங்களை அரசுகள் கொண்டிருப்பதாக தமிழர்கள் பாரம்பரியமாக நம்பி வருகின்றனர்.சிங்களவர்களுடன் தாமும் சமமாக நடத்தப்படுபவர்கள் என்ற தமிழர்களின் சமவாழ்வு நம்பிக்கை தனிச்சிங்கள சட்டத்தால் அழிக்கப்பட்டது. தற்பொழுது இன்று அரசை அழுத்தும் சக்தி தமிழர்களிடம் இல்லை.அரசிலமைப்பில் சிங்கள மேலாதிக்கத்தை அதிகரிக்கும் வகையிலான சட்டமூலங்கள் அரசினால் அறிமுகப்படுத்தப்படலாமென தமிழர்கள் நம்புகின்றனர்.

மூன்றாவதும் முக்கியமானதுமான அச்சமாக உள்ளவிடயம் அரசியல் அதிகார ரீதியில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசுக்கு அழுத்தம் எத்தனம் கொடுக்கும் வல்லமை தமிழர்களிடம் இல்லை.அத்துடன்,மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிரும் திட்டங்களை அரசு இலகுவில் நீக்கிவிடும். ஸ்திரமான அமைதிக்கும் நல்லிணக்கத்துக்குமான திட்டமானது வடக்கு,கிழக்கு மக்களின்உடனடிப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் குறித்த கேள்விகளை நிவர்த்தி செய்யும் அரசியல் அமைப்பு உருவாக்கப்படவேண்டும். விடுதலைப்புலிகளை தோற்கடித்தமையோ அல்லது போரின் முடிவோ மக்களின் குறிப்பாக வடபகுதி மக்களின் பாதுகாப்பு அழுத்தங்களை பூரணமாக முடிவுக்குக் கொண்டுவரவில்லை.

பாலியல் துன்புறுத்தல்கள்,போரினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் உரிமை மீறல்கள்,ஆட்கடத்தல், காணாமல்போதல் ஆகிய விடயங்கள் குறித்து தமிழ் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்களை நிறுத்துவதற்கு பலமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டியது முக்கியமானதாகும்.போரின் முடிவினால் கிடைக்கும் நலன்களை தமிழ் மக்களும் அனுபவிக்கவேண்டும்.பொதுவாக சமூகங்களை இராணுவ மயமாக்கல் தவிர்க்கப்படுவதுடன் வட,கிழக்கு மாகாணங்களில் இராணுவப் பிரசன்னம் மிகக் குறைந்தளவிற்கு குறைக்கப்படவேண்டும்.அத்துடன், வடக்கு,கிழக்கில் தற்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் ஆயுதக் குழுக்கள் உள்ளிட்ட சட்ட விரோத ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்படவேண்டும்.

தமிழ் மக்களின் குடும்பக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளமையும் மிகவும் சிக்கலானதும் உடனடியாக தீர்க்கப்படவேண்டியதுமான விடயமாகும்.போர்க்காலப்பகுதியில் ஆண்களும் பெண்களும் காணாமல் போனமை ஆட்கடத்தல் ஆயுதப்படைகளுக்கு பலவந்தமாக ஆட்சேர்ப்பு,இடம்பெயர்வு ஆகியவற்றினாலேயே குடும்பங்களின் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதுமோதலின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்த புலி உறுப்பினர்களின் தகவல்கள் சரியான முறையில் கிடைக்கப்பெறவில்லையென்ற மனக்கிலேசம் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் மத்தியில் உள்ளது.உண்மையில் வெற்றிகரமான நல்லிணக்கத்திற்கு இவ்வாறான விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.அத்துடன் இவ்விடயங்களைக் கையாள்வதற்கு விசேட ஆணைக்குழு உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். இந்த ஆணைக்குழு போர் நடைபெற்ற காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களைத் திரட்டி அரச தடுப்பில் உள்ளவர்களுடன் விபரங்களுடன் ஒப்பிட்டு மீள் ஒருமைப்பாட்டினை உந்தும் வகையிலான இலக்குடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க வேண்டும்.

நலன்புரி முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு மக்கள் தடுத்து வைக்கப்பட்டதனால் தமிழ் மக்கள் மத்தியில் மிகப் பாரியளவில் உளரீதியான ஒருமைப்பாடு சீர் குலைக்கப்பட்டிருப்பதுடன் தமது உரிமைகளுக்காகப் போராடிய ஆயுதக் குழு இல்லாமல் போயுள்ள நிலையில் அரசாங்கம் தமக்கு நீதி வழங்கும் என்ற நம்பிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.முகாம்கள் ஒரு தவறான தீர்மானம் ஆனாலும், முகாம்களிலிருந்த பெரும்பாலான மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாம் இதனை வரவேற்கின்றோம்.அதேவேளை, மீள் குடியேற்றத்திற்கான உதவியுடன் முகாம்களிலுள்ள ஏனைய மக்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.விடுதலைப்புலிகளினால், தடுத்து வைக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையான மக்கள் போரின் இறுதிக் கட்டத்தில் தமது குடும்ப உறுப்பினர்களையும் சொத்துகளையும் இழந்துள்ளனர். இம் மக்களுக்கு சர்வதேச உதவி அமைப்புகள், நன்கொடையாளர்களின் உதவியுடன் நட்ட ஈடு வழங்கும் திட்டம் அமைக்கப்பட வேண்டும். ஆயுதப் படைகளின் உறுப்பினர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்கப்படலாம்.

அண்மைய எதிர்காலத்தில் மீண்டும் ஒரு வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வல்லமை தமிழர்கள் மத்தியில் இல்லை. எமது கொள்கை உரிமைகளை தாம் பெறுவோமாக இருந்தால் இனரீதியில் இலக்குவைக்கப்படும் வன்முறைகள் பூரணமாக நிறுத்தப்படும். அத்துடன், பயங்கரவாத தடுப்புச் சட்டம் (ககூஅ) உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அரசு போதுமான நம்பிக்கை கொண்டிருந்தால் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது சாத்தியமானது.தேவைப்பட்டால் எதிர்காலத்தில் பயங்கரவாத தடை சட்டமூலங்கள் உருவாக்கப்படலாம். எவ்வாறாயினும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்குவதே இலங்கையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்குரிய முன் நிபந்தனை ஆகும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வின்றி தமிழர்களை பொதுவோட்டத்திற்குள் உள்வாங்குவது சாத்தியமில்லை.

இவ்விடயம் தொடர்பாக தோற்கடிக்கப்பட்ட சமூகம் என்ற மனநிலையில் அரசுடன் பேச தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதுடன், குறிப்பிட்ட சிலரே அதிகார பரவலாக்கம் குறித்து பேசுகின்றனர். ஆனாலும், அதிகார பரவலாக்கத்திற்கான அரசியல் திட்டத்திற்கான தேவை தமிழ் மக்கள் மத்தியில் வலுவாக உள்ளது.தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளையும் இன முரண்பாடுகளையும் தீர்ப்பதில் 13 ஆவது அரசியல் திருத்தம் தோல்விகண்டதாகவே உள்ளது.ஒரு அரசினால் வழங்கப்பட்ட அதிகாரப் பகிர்வானது வேறொரு அரசால் இரத்துச் செய்யப்படுமென்ற தமிழ் மக்களின் அச்சத்தை 13 ஆவது அரசியல் திருத்தமும் மாகாணசபைத் திட்டமும் மேலும் வலுப்படுத்தியுள்ளது.இதனால், அதிகாரப் பரவலாக்கத்திற்கான திருப்திகரமான திட்டமாக 13 ஆவது அரசியல் திருத்தம் அமையாத காரணத்தினால் நாட்டின் ஒற்றையாட்சி முறைக்கு அப்பால் செல்லக்கூடிய அரசியலமைப்பை மறுசீரமைப்பதின் மூலம் புதிய திட்டங்களையும் கட்டமைப்புகளையும் வடிவமைக்க வேண்டிய தேவை உள்ளதெனத் தெரிவித்தார்.

Please Click here to login / register to post your comments.