என்ன செய்யலாம்?

ஆக்கம்: யோசனா
வணக்கம்

2009 இனப் படுகொலை முடிந்து ஒரு வருடமும் தாண்டி விட்டது. உயிரிழந்த தமிழரை நினைவு கூரும் நிகழ்வுகளையும் தாண்டி விட்டோம். சிங்களவர்களும் வெற்றியின் ஒரு வருடத்தை கொண்டாடியாயிற்று. இந்த வேளையில் உலகளாவி வாழும் தமிழ் நண்பர்களுக்கு எனது அன்பான வணக்கம். கடந்த வருடம் மிகவும் துக்ககரமான சம்பவங்களின் பின்னர் மிகவும கோரமான இனப் படுகொலையின் பின்னர் கவலையுடன் நாம் இருக்கிறோம்.

தமிழர் போராட்டத்தின் அடித்தளம்

தங்களைத் தாமே ஆண்ட தமிழினத்தின் இறையாண்மை படிப்படியாக அவர்களின் விருப்பத்திற்கெதிராக பறிக்கப்பட்டது. 1930 - 1940 களில் ஐரோப்பிய ஆட்சியாளர்களிடம் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி, பின்னர் சுதந்திரப் பேச்சு எழுந்த போது தமிழர்கள் தமக்கு சரிநகர் உரிமை வேண்டுமென்பதை வலியுறுத்தியும் ஆங்கிலேயர் அதைப் பொருட்படுத்தாது சிங்கள மக்கள் கையில் முழு ஆட்சியையும் கொடுத்துவிட்டுச் சென்றனர். தமிழர் தமக்கு பூரணமான சுயாட்சி உரிமை இருந்த போதிலும், 1948 முதல் 1976 வரை தமிழரும் சிங்களவரும் இணைந்த நாட்டில் சுய உரிமையுடன் வாழ அமைதியாகப் பகீரதப் பிரயத்தனம் செய்ததை நாம் அறிவோம்;.

ஆனால் சிங்களவரோ . .

  . . மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்தும் (1949) . . தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்தும் (1956)
  . . சத்தியாகிரகப் போராட்டங்களை வன்முறையால் முறியடித்தும் (1960)
  . . அதிகாரப் பகிர்வு ஒப்பந்தங்களை செய்வது போல் பாசாங்கு செய்தும் (1958, 1965)
  . . தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்களவரைக் குடியேற்றியும் (1950-)

தமிழ் இனப் படுகொலையெத் தொடங்கியதை நாம் அறிந்திருக்கிறோம்.

மேலும் 1970 களில்

  . . தனிச்சிங்கள புத்த அரசியலமைப்புச் சட்டத்தினாலும் (1972)
  . . பல்கலைக்கழக் அனுமதியில் தமிழருக்குப் பாதகமான இனப் பாகுபாட்டினாலும் (1970-)
  . . தமிழாராச்சி மாநாட்டு கடைசி நாள் நிகழ்ச்சியில் தமிழரின் படுகொலையினாலும் (1974)
  . . ஆயுதம் தாங்கிய அரச படையினரால் தமிழ் மக்கள், இளைஞர்கள் தாக்கப்பட்டதும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாலும் (1972-) . .

உத்வேகம் பெற்ற தமிழர் சுதந்திரப் போராட்டத்தை நாம் அறிவோம்.

இதை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடிய இளைஞர்கள் வழக்கு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டதும் வடக்கு மாகாணத் தமிழ்ப் பகுதிகளுக்கு தமது அரிசியைக் கூட கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதும் வரலாறு.

இத்தகைய இனப் பாகுபாட்டின், இனப் படுகொலையின் விளைவாக 1976 வட்டுக்கோட்டை தீர்மானமாக தமிழர் தனிநாடு தான் ஒரே தீர்வு என முடிவு செய்ததும் 1977ல் வடகிழக்குத் தமிழர்கள் ஏகோபித்த முடிவாக தனிநாட்டுக்கு வாக்களித்ததும் நாம் அறிந்த ஜனநாயக பூர்வமான உண்மைகள்.

1976 – 1977 இல் தமிழர் ஒட்டுமொத்தமாக எடுத்த முடிவு தங்களிடமிருந்து ஆயுத முனையிலும், பின்னர் வஞ்சகமாகவும் பறிக்கப்பட்ட சுய ஆட்சி உரிமையை மீண்டும் பெற்று, சுதந்திரத் தமிழ் ஈழம் என்ற நாட்டை அமைப்பதே.

தமிழரின் இந்த ஐனநாயப் பிரகடனத்தின் பின்னரும் 1977இலும் 1983இலும் தெற்கில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டு, சொத்துகள் எரிக்கப்பட்டு, அகதிகளாக வடக்கு கிழக்கு வந்ததும் நாம் அறிவோம். ஆயுதப் போராட்டம் இந்த அட்டூழியங்களின், வன்முறைகளின,; இனப் படுகொலையின,; விளைவாக தமிழர் சுய ஆட்சிக் கோரிக்கை ஆயுதப் போராட்டமாக பரிணாமமெடுத்ததை நாம் அறிவோம்.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்தப் பூமியிலுள்ள அனேகமான நாடுகளில,; இத்தகைய இனப் படுகொலைக்கு, அடக்குமுறைக்கு, வன்முறைக்கு எதிரான ஆயுதப் போராட்டங்கள் நடைபெற்றதும் சரித்திர வரலாறு.

தமிழரின் ஆயுதப் போராட்டம் ஒடுங்கிய நிலையில் என்ன நடக்கப் போகிறது ?

இனப் படுகொலை

இனப்படுகொலை என்பது எதைக் குறிக்கும் என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம். ஒரு இனத்தவர் எல்லோரும் உடனடியாக படுகொலை செய்யப்படுவதை இது குறிப்பதாக பொதுவாக எடுத்துக் கொள்ள முடியாது. இனங்களின் அத்தியவசிய அடித்தளங்களை அழிக்கும் நோக்கத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்களை இனப் படுகொலை என்பார்கள்;.

1948 முதல் சிங்களவரால் திட்டமிட்டு படிப்படியாக நிறைவேற்றப்பட்ட செயல்களை சிந்தித்துப் பார்ப்போம். தமிழரின் வாக்குபலம், பாரம்பரிய வாழ்விடம் (வடக்கு-கிழக்கு)இ மொழியுரிமை, படிப்பு, வணிகம், வாழ்வாதாரம் என்பன படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதை நாம் தெட்டத் தெளிவாக உணரலாம். தமிழ் மக்கள் 1977 முதல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, அகதிகளாக்கப்பட்டு நாட்டிலிருந்து வெளியேறி வருவதையும், தமிழ் பிரதேசங்கள் சிங்களமயமாக்கப்படுவதையும் நாம் அவதானிக்கலாம். இதற்கு மேலும் தமது சொந்த நாட்டின் தமிழ்ப் பகுதிகள் மீது 1980கள் முதல் சிங்கள அரசாங்கம் குண்டு, ஏவுகணைகளை வீசி வருவதும், 2009 இல் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டதும், 300,000 தமிழர்கள் சிறை வைக்கப்பட்டதும் அங்கு நடைபெறுவது இனப்படுகொலையே தான் என்று முத்திரையிட்டுக் காட்டியுள்ளது. இவற்றை சிங்களவரின் ஒவ்வொரு அரசியல் கட்சியும் சமூக இயக்கங்களும் பொது மக்களும் ஆதரித்து மாறி மாறி செயற்படுத்தி வருவது தெளிவாகிறது.

எதிர் காலம்

எமது மக்களின் ஏன் எமது இனத்தின் எதிர் காலம் தான் என்ன? இலங்கை வாழ் தமிழர்கள் வாய் திறக்க முடியாத நிலையில்; சிக்கித் திணற, வன்னி மக்கள் உணவு உடை தங்க நடமாட சுதந்திரம் இன்றி தவிக்க, இனப் படுகொலையின் உச்சத்தில் தமிழினம் சிக்கியுள்ளது. தமிழ் மக்களின் வாழ்வும் வளமும் வாழ்வாதாரமும் அழிக்கப்படும,; சூறையாடப்படும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

புலம் பெயர் சமுதாயத்தின் கலக்கம்

இந்நிலையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் என்ன செய்வதென்றறியாது திகைத்துப் போயுள்ளனர். என்ன செய்யலாம் என்று ஏங்குகின்றனர்.

இத்தகைய துயரமான சூழ்நிலையில் தமிழர் கை நூலான திருக்குறள் என்ன சொல்கிறது?

இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்

என்று திருவள்ளுவர் அன்றே சொல்லியிருந்தார். அதாவது துன்பத்தின் குறிக்கோள் உடம்பைத் துன்புறுத்துவது என்பதைத் தெளிவாகப் புரிந்து, எவ்வித மனக்கலக்கத்தையும் துன்பமாகக் கொள்ளாமல் அதன் குறிக்கோளை முறியடிப்பதே மேலானது.

இது எங்கள் துன்பத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறதல்லவா? எதிரி எமக்கு துன்பத்தை விளைவிப்பதே, எமக்கு மனக்கலக்கத்தை ஏற்படுத்தி, நாம் கலக்கத்திலிருக்க எமது இனத்தையும் எமது சுதந்திர தாகத்தையும் அழிப்பதற்கேயாகும். அதற்கு நாம் இடம் கொடுக்கலாமா?

அப்படியானால் கலங்காமல் நாம் என்னதான் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்பது விளங்குகிறது. எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க சரித்திரத்தை நாடுவோம்.

சரித்திரம் சொல்லும் உண்மைகள்

எமது கடந்த 60 வருட சரித்திரம் சொல்லும் உண்மைகள் தான் என்ன?

1956இல் தனிச் சிங்களச் சட்டம் வந்த போதோ 1970 தரப்படுத்தலின் போதோ மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போதோ தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போதோ, ஏன் 1977 ஃ 1983 இல் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போதோ, ஆயுதப் போர் இல்லாத நிலையிலும் எந்தச் சிங்களவர்கள் பொது அமைப்புகளோ இவற்றைக் கண்டிக்கவோ, இந்த அநியாயங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பவோ, விசாரித்து தண்டனை வழங்கவோ இல்;லை.

எனவே 1996இல் யாழ்ப்பாணத்திலும் 2007 இல் கிழக்கிலும் 2008-2009 இல் வன்னியிலும் தமிழர் பாரிய அளவில் இடம் பெயர வைக்கப்பட்ட போதும் கொல்லப்பட்ட போதும் 2009 இல் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட போதும் சிங்களவர் தமது அரசுக்கு ஏகோபித்த ஆதரவு கொடுத்தது ஆச்சரியப் படுவதற்கில்லை. 2009ல் எந்தச் சிங்களவரோ அவர்களின் அமைப்புகளோ, ஏன்; சிங்கள தேசத்தின் புத்த, கிறிஸ்தவ அமைப்புகளோ, பல்லாயிரக்கணக்கில் தமிழர் கொன்று புதைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட போது குரல் எழுப்பவில்லை. சிங்கள மக்களின் இனப் படுகொலை நோக்கத்தை இது எடுத்துக் காட்டுகிறது. இப்படிப்பட்ட சிங்கள இனத்தவருடன் தமிழர் வாழ முடியுமாவென்பதை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உலகளாவிய சூழ்நிலையில் ஆயுதப் போராட்டத்தின் முன்னேற்றமே, தமிழர்களின் அபிலாஷைகளுக்குத் தடையாகப் பார்க்கப்பட்டது. பனிப்போர் மற்றும் ஆவணி 2001 (அமெரிக்காவில் 9ஃ11 என்று சொல்வார்கள்) இற்குப் பிந்திய சூழலில் விடுலைப் போராட்டங்கள் பின்னடைவை அடைந்தன.

இத்தகைய உலக சூழ்நிலையில் தமிழர் ஆயுதப் போராட்டமும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதில் வியப்பில்லை. ஆக்கிரமிப்பு அரசாங்கங்கள் போர்க் குற்றங்களை முன்னெடுத்த நிலையிலேயே, அண்மையில் விடுதலையநை;த கிழக்குத் தீமோர், கொசவோ போன்ற நாடுகளில் அங்கு விடுதலை கோரும் மக்கள் சார்பாக உலக அபிப்பிராயம் திரும்பியது.

புலம் பெயர் மக்களின் 25 வருட பரிணாமம்

1983இனக்கலவரத்தின் பின்னர்; பொங்கியெழுந்தது உலகத் தமிழ் சமுதாயம.; தமிழ்த்; தலைவர்கள் டெல்கி சென்று இந்திரா காந்தியைச் சந்தித்தார்கள். பல நாடுகளிலுமிருந்தும் ஏன் தமிழ் நாட்டிலும் ஏற்பட்ட அழுத்தங்கள் அதிகம். அன்று வைகுந்தவாசன் ஐக்கிய நாட்டு சபையில் குரல் எழுப்பினார். இப்படி அன்று முன்னின்று செயற்பட்ட மிகச் சிறிய புலம் பெயர் சமுதாய மக்கள் மத்தியில் கடந்த 25 வருட காலத்தில் ஏற்பட்ட மாற்றம் தான் என்ன?

1983இனப் படுகொலையின் பின்னர் பல்லாயிரக்கணக்கில் புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழ்வு தானென்ன?

1984 இலிருந்து 2009 வரையிலான காலப் பகுதியில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் நிலையென்ன?

இன்றோ உலக விவகாரங்களில் பலம் அந்தஸ்து பெற்ற ஒவ்வொரு மேற்கு நாட்டிலும் ஏராளமாக தமிழர்கள் வாழ்ந்தாலும், எந்த ஒரு நாடும் இன்று தமிழர்களுக்கு கை கொடுக்க வரவில்லை ? ஏன்?

உண்மை என்னவென்றால், 1980களின் நடுப் பகுதியிலிருந்து நாம் பார்வையாளர்களாகி விட்டோம். அகதிகளுக்குப் பணம் சேர்த்து அனுப்பிவிட்டு சோர்ந்து விட்டோம். இந்த 25 வருட ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழர் போராட்டத்தையே தள்ளி நின்று பார்க்கப் பழகி விட்ட தமிழர்கள் . . புலம் பெயர்ந்த தமிழர்கள், தமது பங்களிப்பின் அவசியத்தை உணர மறந்து விட்டனர்.

சென்ற வருடம் பல போராட்டங்கள் நடந்தாலும் அது போதியதாக இருக்கவில்லை. ஆங்கிலத்தில் வழழ டவைவடந வழழ டயவந என்று சொல்வார்கள். எமது அரசியல் கற்றுக் குட்டித்தனத்தால் புலம் பெயர்ந்து வாழும் எம்மால் எமது மக்களைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது மிகவும் வருந்தத்தக்கது.

எனினும் 25 வருடங்களாக புலம் பெயர்ந்து வாழும் எமது சமுதாயத்தில், கூடிய சமூக அறிவும், பரந்து வாழும் சமூகத்துடனான தொடர்புகளும், சமூக நிதி ரீதியான உறுதியும் இருக்க வேண்டும். இவற்றை நமது சமுதாயம் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதா? எமது சமூகம் தமது பிள்ளைகளை இனப் பற்றுடனும் தமிழர் தனித்துவத்தையும் மனிதாபிமானத்தையும் ஊட்டி வளர்த்திருக்கிறதா அல்லது தன்னலமும் பொருளாசையும் கொண்டவர்களாக வளர்த்திருக்கிறதா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

1970 பிற்பகுதியில் தரப்படுத்தலாலும் 1977-1983 இன அழிப்புக் கலவரங்களினாலும் பாதிக்கப்பட்டு அன்று இங்கிலாந்து சென்ற ஒரு பகுதியினரின் பிள்ளைகள் இன்று இளைஞர்களாகியிருக்கும் பருவத்தில் அங்கு இளையோர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் தமிழ் எழுச்சி ஒரு அறிகுறியா?

என்ன செய்யலாம்?

இலங்கையில் தமிழர் நிலை கண்டு புலம் பெயர் தமிழர்களில் பலர் தவிப்பதும் என்ன செய்யலாம் என்று ஏங்குவதும் நாம் அறிவோம். பலர் என்ன செய்யலாம் என்று கேட்கிறார்கள். யார் தலைவர்கள், தமிழர் பிளவு பற்றி அங்கலாய்க்கிறார்கள். நாம் உள் நோக்கிய சமுதாயமாக இருந்து விடலாகாது. நாம் வெளி நோக்கிப் பார்க்க வேண்டாமா?

இத்தனை காலம் ஜனநாயக ஆட்சிமுறைகளில் வாழ்ந்து அனுபவப்பட்ட நாம், இவை எவ்வாறு இயங்குகின்றன என்று அறிவோமல்லவா? இதை உணர்ந்து நாம் செயற்பட வேண்டுமல்லவா? நாங்கள் வாழும் நாடுகளின் அரசியலை நாம் அவதானிக்க வேண்டும். மேற்கத்தைய அரசியல் கட்சிகள் தத்தமது கொள்கைளுக்கு அப்பால், மக்கள் எதற்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்றவாறே இயங்குவார்கள்.

நியுசீலாந்தில் அணுசக்தி ஆயுதங்களுக்கும் அவற்றைத் தாங்கும் கப்பல்களுக்கும் எதிரான நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதன் அரசியல்வாதிகள் என்ன நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும், இந்த நிலைப்பாட்டை இலகுவில் மாற்ற முடியாது. ஏனெனில் பொது மக்களின் அபிப்பிராயம் அணுசக்தி ஆயுதங்களுக்கு எதிராக உள்ளது.

கிழக்குத் தீமோரின் விடுதலை பற்றிய நிலைப்பாடும் அப்படியே இருந்தது.

இலங்கைத் தமிழர் பற்றிய நாம் வாழும் நாடுகளின் பரந்த சமுதாயங்னளின் நிலைப்பாடு தான் என்ன? பரந்த சமுதாய மக்களின் நிலைப்பாட்டை மாற்ற முடியுமா ?

தென்னாபிரிக்க நிலப்பாடு

முன்னைய தென்னாபிரிக்க இனவாத அரசை எடுத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஐரோப்பியாவும் அதன் மக்களும் 1980 கள் வரை அதற்கு ஆதரவாகவே இருந்தார்கள். நெல்சன் மன்டேலாவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கம் பயங்கரவாதிகளாகவே பார்க்கப்பட்டனர். ஆனால் 1980 களில் படிப்படியாக இந்த ஆதரவு இந்த மேற்கு நாட்டு மக்களின் எதிர்ப்பாக மாற்றப்பட்டது. அதாவது தென்னாபிரிக்க வெள்ளை இன வெறி அரசுக்கு எதிராக, வெள்ளை நிற மேற்கத்தைய மக்களின் நிலைப்பாடு மாற்றப்பட்டது. தென்னாபிரிக்காவில் கிளைகளை வைத்திருக்கும் பிரித்தானிய நிறுவனங்களை பிரித்தானிய மக்கள் புறக்கணிக்கத் தொடங்கினார்கள்.

இது பிரித்தானிய மாணவர் சமூகத்தில் தொடங்கி, பரந்த சமூகத்திற்கும் பரவியது.

இதைக் கண்டு பயந்த பிரித்தானிய நிறுவனங்கள் தென்னாபிரிக்கவில் தமது நடவடிக்கைளை குறைத்தன. இந்த மக்கள் நிலைப்பாட்டினால்; அதிர்ச்சியுற்ற மேற்கு நாட்டு அரசுகள் தென்னாபிரிக்காவுக்கு எதிராக பொருளாதார, விளையாட்டுத் தடைகளைக் கொண்டு வந்தன. இறுதியில் தென்னாபிரிக்க இனவாத அரசு அடிபணிந்தது.

இது மக்களின் நிலைப்பாட்டை மாற்ற முடியும், இதன் மூலம் அரசுகளின், ஏன் வல்லரசுகளின் நிலைப்பாட்டையும் மாற்ற முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான விளையாட்டுப் புறக்கணிப்பை முன்னெடுத்த பெருமை நியுசீலாந்தைச் சாரும். தென்னாபிரிக்காவை விட இலங்கையின் இனப் படுகொலை பல மடங்கு கொடியது.

2009 வைகாசிப் படுகொலையின் பின்னர் அங்கு இரத்தம் காய முன்னரே 300,000 தமிழர்கள் தடைமுகாம்களில் அடைக்கப்பட்டிருக்க நியுசீலாந்து கிறிக்கட் வீரர்கள் சிறீலங்காவுடன் குலாவி அங்கு கிறிக்கட் விளையாடினார்கள். தென்னாபிரிக்கா இனவாத அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த நியுசீலாந்து விளையாட்டு வீரர் இலங்கை இனப் படுகொலையை பாராமுகமாக ஆதரித்தது ஏன்? நமது தமிழர்களே சிறீலங்கா கிறிக்கட் வீரருடன் கூடிக் குலாவும் போது மற்றைய நாட்டவரை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? நாம் ஒவ்வொருவரும் தத்தமது மனச்சாட்சியைத் தொட்டுப் பார்க்க வேண்டும். நியுசீலாந்து கிறிக்கட் ஆட்டக்காரர்கள் இலங்கை செல்ல மறுத்திருந்தால், அது விளையாட்டுத் துறையிலும், பரந்த சமூகத்தினர் மத்தியிலும் பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்குமல்லவா?

காலத்தின் தேவை என்ன?

இப்போது எமக்கு உலகளாவிய ரீதியில் நண்பர்கள் தேவை. எமது வரலாற்று உண்மைகளையும் சுதந்திரத்தின் அவசியத்கையும் அறிந்த நண்பர்கள் தேவை.

சிங்களவர்கள் தமிழரை, ஆயுதமற்ற தமிழரை நசுக்கும் உச்சத்தில் இருக்கும் போது இதை நாங்கள் சாதிக்காவிட்டால் காலம் தந்த சந்தர்ப்பத்தைத் தவற விட்டவர்கள் ஆவோம். நடக்கும் தீமையிலும் வருங்காலத்திற்கு அவசியமான நன்மைக்கு வித்திடத் தவறி விடுவோம்.

போர்க் குற்றங்கள் நடைபெற்றது உண்மை தான். போர்க் குற்றங்கள் செய்தவர்களைத் தண்டிக்கப் பலர் துடிக்கிறார்கள். போர்க் குற்றங்களைப் பதிவு செய்வது முக்கியம். ஆனால் போர்க்குற்றம் புரிந்தவர்கள் ஆட்சியில் இருக்கும் போது அவர்கள் தண்டிக்கப்படுவது வரலாற்றில் அருமை. நாசி யேர்மனியையோ பொல் பொட்டின் கம்போடியாவையோ சிந்தித்துப் பாருங்கள். போர் குற்றங்கள் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட்டாலும் வரவிருக்கும் சிங்களவரும் இதையையே செய்வார்கள் என்பது எமது சரித்திரத்தின் பாடமல்லவா? அத்துடன் பின்நோக்கி பழி வாங்குவது எமது சமூகத்திற்கு சோறு போடுமா என்று நாம் சிந்திக்க வேண்டும்.

தற்போது நாம் செய்ய வேண்டிய முக்கிய தேவை, போர்க் குற்றம், இனப் படுகொலை நடைபெறுவதைக் காட்டி, உலக அபிப்பிராயத்தை நம் நியாயமான பக்கம் திருப்பி, உலக மக்கள் மத்தியில் நமக்கு சுதந்திரம் அவசியம் என்பதை நிறுவுவதல்லவா? உலகப் பொது மக்களை ஏன் இந்தியப் பொது மக்களையும் கூட எமது நண்பர்களாக்க வேண்டும்.

சிறு துளி பெரு வெள்ளம்

சிறு துளி பெரு வெள்ளம் . . இது தமிழர் தார்ப்பரியம். என்ன செய்யலாம் என்று நாம் தமிழ்ச் சங்கத்தையோ, உலகளாவிய தமிழர் பேரவையையே, நாடு கடந்த அரசாங்கத்தையோ, ஏன் வேறு இயக்கத்தையோ நம்பி இருந்து விடலாகாது. ஐக்கிய நாடுகள் என்ன செய்தது, செய்யும் என்று எதிர்பார்த்து இருக்கலாமா?

இயக்கங்கள் சாதிக்க முடியாதவற்றை தனி மனிதர்கள் சாதிக்க முடியும்.

ஒவ்வொரு தனி மனிதனும் தமது அனுபவங்களையும், தமது உறவினர் நண்பர்களின் உண்மைக் கதைகளையும் இலங்கையில் நடக்கும் இனப் படுகொலையையும் தமது சொந்தப் பாணியில் அவரவர் நாடுகளில் வாழும் பரந்த சமூகத்தினருக்கு சொல்லும் போது அது உண்மையாகப் பரவும். தனிப்பட்ட ரீதியில் நாம் சொல்லும் போது அது பரப்புரை ஆகாது. உண்மை உண்மையாகப் படும.;

நாம் ஒவ்வொரு கிழமையும் பரந்த சமூகத்திலுள்ள ஒருவருக்கு இதைச் சொல்லி அவர்கள் உண்மையை அறியச் செய்ய வேண்டும். நாம் வேலை செய்யும் இடத்தில் இதைச் சொல்லலாம் . . விளையாடும் இடத்தில் இதைச் சொல்லலாம் . . மாணவர்கள் படிக்கும் இடத்தில் இதைச் சொல்லலாம். பிள்ளைகள் கட்டுரை எழுதும் போது இதைப் பற்றி எழுதலாம், ஏன் ஆய்வுரை (யளளபைnஅநவெ) செய்யலாம்.

பிள்ளைகள் மூலம் உண்மைகளையும் பெரியோர் செய்ய வேண்டியதையும் பரப்புவது வெற்றி தரும் என்பது இங்கத்தைய கருத்து. இதற்காகவே வீட்டில் நெருப்பு வரும் அபாயம் பற்றியும் நில நடுக்கம் பற்றியும் அதற்கான முன்னேற்பாடுகள் பற்றியும் பிள்ளைகள் மத்தியில்; சொல்கிறார்கள்.

பிள்ளைகள் மூலம் நமது நாட்டு உண்மையையும் நாம் எடுத்துச் சொல்ல முடியும் அல்லவா?

கலைஞர்கள் இது பற்றிய நாட்டியங்கள், நாடகங்கள், தயாரிக்கலாம். கலைகள் சமூக சூழ்நிலையை கருத்திற் கொண்டு, தேவைகளை எடுத்துச் சொல்வது பாரம்பரியம் - ஏன் சமூகத்திற்கு நல்லதும் கூட. எல்லாம் எமது இனத்திற்கு உட்பட்ட நிகழ்ச்சிகள் இல்லாமல் பரந்த சமூகம் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகள் ஆகவும் இருப்பது நல்லதல்லவா?

உள்நோக்கும் சமூகம் இல்லாமல் வெளி நோக்கும் சமூகமாக நாம் மாற வேண்டும்.

தொடக்கத்தில் இது கஷ்டமாக இருக்கும். நியாயத்தை, உண்மையைச் சொல்ல நாம் ஏன் தயங்க வேண்டும்? ஒரு சிலருக்குச் சொல்ல நீங்களே இதில் பரீட்சயமாகி விடுவீர்கள். நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று பிறர் கேட்கும் போது சிறிலங்கா என்று சொல்லிவிட்டு வாய் மூடாமல் . . . சிறிலங்காவினால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழர் தாயகம் என்று சொல்லி ஆரம்பிக்கலாம் அல்லவா?

தமிழர் தமது நாடு சிறீலங்கா இல்லை . .

ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழர் தேசம் . . என்று மனதளவில் சிந்திக்க வேண்டும். பலருக்கும் சொல்ல வேண்டும். அப்போது இந்த மனநிலை நனவாகும்.

நாம் (சிங்களவரால்) ஒடுக்கப்பட்ட இனம் என்றோ நாடற்ற நாடோடிகளாக வந்தவர்கள் என்றோ பரந்த சமுதாயத்தினர் நினைத்து விடுவார்கள் . . அதனால் எம்மைக் குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள் என்றும் எம்மில் பலர் நினைப்பதும் உண்டு. இதனால் எமது வாழ்க்கை உயர்வு தடைப்பட்டு விடும் என்று சிலர் நினைக்கக் கூடும். இதனால் சிறீலங்காவில் நடக்கும் கொடுமைகளை சீர்கேடுகளை மறைத்து, அதன் பெருமை பேசுபவர்களும் நம்மவரில் உண்டு. தமது பிள்ளைகளை அவர்களின் அடையாளம் தெரியாமல் வளர்ப்பவர்களும் நம்மவர்களில் இருக்கிறார்கள்.

பாதிக்கப் பட்டவர்கள் சமூகத்தில் குறைத்து மதிக்கப்படுவார்கள் என்பதில்; எவ்வித உண்மையும் இல்லை என்பதை இது பற்றி பரந்த சமூகத்தினருடன் கதைத்தால் அறிகிறோம். அண்மையில் இலங்கை நிலவரம் பற்றி பரந்த சமூகத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவருடன் கதைக்கும் போது சொன்னார் - “உங்கள் சமூகத்தின் கஷ்டம் எமது நாட்டிற்கு நன்மையாகி விட்டது – ஆனால் இன்று தான் உங்கள் சமூகத்தின் உண்மையை அறிகிறேன்”. ஏன் சமூகத்தினரால் போற்றப்படும் பல பல அறிஞர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், பொறியியலாளர்கள், மருத்துவ ஞானிகள் போன்றவர்களில், ஒடுக்குமுறைகளினால் தமது நாட்டை விட்டு வெளியேறியவர்களும் அடங்குவார்கள். இவர்களை பரந்த சமுதாயம் மேலும் மெச்சுகிறதென்பது தான் உண்மை.

எமது நாட்டைப் பற்றிய உண்மையைச் சொல்வதை நாம் முதியவன்-இளைஞன், பெரியவன்-சிறியவன், படித்தவன்-படிக்காதவன், பணக்காரன்-ஏழை என்ற பேதமின்றி யாவரும் பணச்செலவின்றிச் செய்யக்கூடிய செயல். ஏன் என்றால் எல்லோருக்கும் பல பல தரப்பட்ட பரந்த சமுதாயத்தினருடன் தொடர்புகள் நிச்சயம் இருக்கும்.

எவ்வித பேதமுமின்றி எல்லோருக்கும் தேர்தலில் வாக்கு உண்டு. எல்லா மட்டங்களிலும் எமது இனப் படுகொலை பற்றிய உண்மை பரவ வேண்டும். எமக்கு தனி நாடு வேண்டியதன் தார்ப்பரியம் தெரிய வேண்டுமல்லவா?

‘கடமையைச் செய் . . பலனை எதிர் பாராதே’ என்று பகவத் கீதையில் கூறியதை நாம் மறந்து விடக் கூடாது.

இனவாத தென்னாபிக்க அரசுக்கும் தென்னாபிரிக்க றக்பி (சரபடில) விளையாட்டுக்கும் எதிராக அன்று போராட்டத்தில் பங்கேற்ற ஒரு நியுசீலாந்து நாட்டவர் சொன்னார் . . . “தென்னாபிரிக்காவில் இனப் பாகுபாட்டு அரசு முடிவுக்கு எப்போதாவது வருமோவென்று தான் எண்ணியதுண்டாம் - ஏனெனில் உலகில் பலம் பொருந்திய அரசுகள் இதற்கெதிராகவே இருந்தன.” தாம் உலகையே எதிர்த்து போராடுவது போலவும் தமது முயற்சிக்கு பலன் கிடைக்குமோ என்றும் எண்ணியதுண்டாம். ”. எனினும் நியாயம் வேண்டி போராட்டத்தில் பங்குபற்றினாராம். அதாவது பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்தார். நாளடைவில் பலரும் இப்படி செயற்பட பலன் கிடைத்தது.

தனி மனிதனின் செயல் பலன் தராது. அதை நாம் உடன் உணரவும் மாட்டோம். ஆனால் ஒவ்வொரு தமிழ்த் தனி மனிதனும் இதைச் செய்ய சிறு துளி நீரோட்டமாகும் . . பரந்த சமூகத்தினர் இது பற்றிக் கதைக்க, நீரோட்டம் வெள்ளமாகும் . . பரந்த மக்கள் செயற்பட, வெள்ளம் பெரு வெள்ளமாகும் . . ஊடகங்கள் இதைக் கவனத்திற் கொள்ள பெருவெள்ளம் ஆறு ஆகும் . . மேலும் பரந்த மக்கள் விழிப்புணர்வடைய ஆறுகள் கடலாகும். பரந்த சமூகத்தினர் இதைப் பற்றிச் சிந்திக்க கதைக்க இது பலம் பெறுமல்லவா?

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தமிழனும் இதைத் சிறிது காலம் தொடர்ந்து செய்தால் இனப் படுகொலையின் உண்மை உலகெங்கும் பரவும். பரந்த சமூகத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஊடகங்கள் முற்படும். பரந்த சமூகத்தினர் விழிப்புணர்வு அடைவார்கள். அப்போது அரசியல்வாதிகள் சிந்திப்பார்கள், அரசுகள் சிந்திக்க வைக்கப் படுவார்கள். அரசுகள் மாறினாலும் அவர்கள் மக்களின் கருத்தை மனதிற் கொண்டு செயற்பட வேண்டியவர்கள் ஆவார்கள். ஐக்கிய நாடு சபை குரலெழுப்பும். தமிழருக்கு அமைதி கிடைக்கும், விடுதலை பிறக்கும்.

எனவே எந்த இயக்கம் என்ன செய்கிறார்கள் என்று கேட்டு காலத்தைப் போக்காதீர்கள். சங்கங்கள் குழுக்கள் இயக்கங்கள் தங்கள் கடமையைச் செய்யட்டும். தமிழன் ஒவ்வொருவனும் தத்தமது கடமையைச் செய்தால் எமது உண்மை புலப்படும் நியாயம் வலுவடையும். எமது சிந்தனை நிறைவு பெறும்.

சிந்தித்து செயலாற்றுவோமா?

நாங்கள் எல்லோரும் நமது நாட்டில் சென்ற வருடம் படுகொலை . . ஏன் இனப் படுகொலை செய்யப்பட்ட தமிழரை நினைத்து, தமிழர் எதிர்காலத்தை நினைத்து வருந்துகிறோம்.

திருவள்ளுவர் சொன்னது போல நாம் தமிழர் உயிரிழப்பையும் துன்பங்களையும் நினைத்து கலங்கிக் கொண்டிருப்பதை விட . . . கலங்காமல் செயற்பட்டு துஷ்டர்களின் குறிக்கோளை முறியடித்து எமது நியாயபூர்வமான சுதந்திரத்தை அடைய உதவுவதே மேலானது.

இன்றியமையாத தமிழர் தேவைக்காக எமது கடமையை செய்வது அவசியமல்லவா?

நாம் நாளாந்தம் பழகும் பரந்த சமூகத்தினருக்கு இலங்கையில் தமிழர் தாயகத்தில் நடக்கும் இனப் படுகொலையையும், தமிழர் சுதந்திரத்தின் இன்றியமையாமையையும் எமது சுய பாணியில் தெரிந்த அனுபலங்கள் கதைகள் மூலம் எடுத்துச் சொல்லும் சிறு பங்கு தான் இந்தக் கடமை. கலைஞர்கள் தமது கலைகள் மூலமாகவும் பரந்த சமூகத்திற்கு எடுத்துச் சொல்லலாம்.

இன்றைய நிலமையில் எமது வாழ்வில் எமது சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய உதவி இது. இதில் நாம் தன்னம்பிக்கையுடனும் எமது இனத்தின் எதிர்காலத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் செயற்படுவது இன்றியமையாதது.

உலகளாவி வாழும் தமிழர்ளே, நாம் சிந்தித்துச் செயற்படுவோமா?

வணக்கம்.

Courtesy of Thamil Thendral, Wellington, New Zealand, 2010

Please Click here to login / register to post your comments.