31 வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆறுமுகம் தங்கராஜா

ஆக்கம்: திலகம் பாலகுமாரன் (ஓய்வு பெற்ற ஆசிரியை)
"பூரணத்துவமான மனித சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள்'

"நித்தமும் புத்தறிவினைப் படைப்போரும் ஆசிரியர்களே' என்பதற்கிணங்க ஆறுமுகம் தங்கராஜா 31 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி இன்று தமது சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

எல்லோராலும்"தங்கன்' என அன்பாக அழைக்கப்படும் இவர். தீவகத்தில் முதன்மை வகிக்கும் வேலணையில் ஆறுமுகம்சொர்ணம்மா தம்பதியினரின் புதல்வராவார். தமது ஆரம்பக் கல்வியை வேலணை ஆத்திசூடி வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை தீவகத்தின் கலங்கரை விளக்காகத் திகழும் வேலணை மத்திய கல்லூரியிலும் உயர்கல்வியை யாழ்.வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியிலும் பெற்று 1978 இல் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு உயிரியல் விஞ்ஞானத்துறைக்கு அனுமதி பெற்று விஞ்ஞானமானிப் பட்டதாரியானார்.

"ஆசிரியப்பணி அறப்பணி, அதை நாட்டிற்கு அர்ப்பணி' என்ற சேவை நோக்கில் ஆசிரியப் பணியை மகத்தான, மகிழ்வான பணியாகக் கருதி அதனை விருப்புடன் ஏற்ற "தங்கன்' யாழ்நகரில் உள்ள பிரபல தனியார் கல்வி நிலையமொன்றில் விலங்கியல் ஆசிரியராக தம்மை இணைத்துக் கொண்டார். அக்கால கட்டத்தில் இளமைத்துடிப்புடன் தனது ஆளுமைமிக்க கற்பித்தல் செயன்முறையால் மாணவர் மனதில் நல்லாசானாக இடம்பிடித்த வேளையில் 1984 இல் ஆசிரிய நியமனம் பெற்று கல்முனை (மருதமுனை) ஷம்சுல் இல்ம் மகா வித்தியாலயத்தில் கற்பித்தல் பணியைத் தொடர்ந்தார். அக்கால இடைவெளியில் அப்பாடசாலையில் முதன்முதலாக க.பொ.த.உயர்தரம் விஞ்ஞானப் பிரிவை ஆரம்பித்து வைத்த பெருமை ஆசிரியர் தங்கனையே சாரும். அவர் தனது பணியை அர்ப்பணிப்பு, செயற்திறன், விடாமுயற்சியுடன் ஆற்றியமைக்கு இது சான்றாக அமைகிறது எனலாம்.

தொடர்ந்து 19891990 வரை யாழ்.மத்திய கல்லூரியிலும் பின்னர் 1991 இல் இருந்து மட்டக்களப்பு வின்சர் மகளிர் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுள்ளார். அவர் அங்கு விலங்கியல் பாடத்தைக் கற்பிப்பதில் சிறந்த ஒரு நல்லாசானாகத் திகழ்ந்தார். அவருடைய பாட நிபுணத்துவப் புலமை, ஆளுமைமிக்க குரல்வளம், மொழிவளம், கற்பித்தல் முறைகளால் மாணவர்களின் மனதில் அழியாத இடத்தைப் பெற்று பல மாணவர்களை மருத்துவபீடம் வேறு பல்வேறு துறைகளில் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொடுத்து அக்கல்லூரியில் தமது முத்திரையைப் பதித்துக் கொண்டார்.

"ஆசிரியம்' என்பது உயிரோட்டமுள்ள ஒரு சமுதாயத்துடன் உறவாடுகின்ற பணியாகும். காலத்திற்குக் காலம் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து மாணவரின் சிந்தனை வளர்ச்சியை தூண்டுவதற்குத் தொடர்ந்து தமது அறிவைத் தேடுபவர்களாகவும் புதுப்பிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக ஆசிரியர் தங்கன் விளங்கினார் என்று கூறினால் மிகையாகாது.

மேலும் இவரது சேவைக்காலத்தில் மலையகத்தில் குறிப்பாக பதுளை, பண்டாரவளைப் பிரதேசங்களில் க.பொ.த.உயர்தர உயிரியல் பிரிவு மாணவர்களுக்கான கருத்தரங்குகளை நடத்தி மாணவர்களின் முன்னேற்றமே தமது மனநிறைவும் மகிழ்ச்சியும் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு உழைத்தார். மேலும் தமது சேவைக்காலத்தில் 1989 இல் இருந்து 2010 வரை க.பொ.த.உயர்தர உயிரியலுக்கான உதவிப் பரீட்சகர், மேலதிக பிரதம பரீட்சகர் பதவிகளையும் வகித்து உயிரியற் துறையின் மேம்பாட்டிற்கு அரும்பணியாற்றினார். அதேநேரத்தில் தமது சுயவிருப்பத்திற்குரிய பணியாக ஆசிரிய சேவையை தெரிந்தெடுத்தது போல தனது வாழ்க்கைத் துணையையும் தன்னை போன்ற ஆசிரியை ஒருவரை சுயவிருப்பத்தின் பேரில் தெரிவு செய்து இல்லறம் என்ற நல்லறத்தை நடத்தி அதன் பயனாக 3 சற்புத்திரர்களைப் பெற்றெடுத்தார்.

கல்விப் புலத்தில் அவர் பெற்ற வெற்றிபோலவே வாழ்க்கைப் புலத்திலும் அவரது வெற்றியின் சின்னமாக மூத்த புதல்வர் மருத்துவபீடத்திலும் இரண்டாமவர் பொறியியல் பீடத்திலும் இளையவர் கணக்கியற் துறையிலும் தமது பட்டப்படிப்பை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமாக விளங்கும் ஆசிரியர் தங்கன் குடும்பம் நாடளாவிய ரீதியிலும் பெருமை சேர்த்திருப்பது குறிப்பிடக்கூடிய விடயமாகும். கணக்கியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் கனிஷ்ட புத்திரன் டினேஸ் காந்தன் தேசிய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் டெனிஸ் விளையாட்டு வீரனாகப் பிரகாசித்துக் கொண்டிருப்பது நம் எல்லோருக்கும் பெருமையைத் தேடிக் கொடுத்திருக்கிறது.

கல்விப் பணி, சமுகப்பணி, ஆன்மீகம் தொடர்பாக சேவையாற்றிவரும் ஆசிரியர் கல்வி உலகிற்கு வழிகாட்டியாக "கல்வியே வாழ்க்கை' என்பதற்கு சான்றாக விளங்குகின்றார் என்றால் அது உண்மையிலேயே வெறும் புகழ்ச்சி அல்ல. அவரது மேன்மை மிக்க பணி. அவரது ஓய்வுக்காலத்திலும் தொடரவும் அவரும் அவரது குடும்பத்தினரும் ஆரோக்கியத்துடன் மென்மேலும் மேன்மைபெற எல்லாம் வல்ல விநாயகனை வேண்டுகிறோம்.

Please Click here to login / register to post your comments.