தமிழர்கள் மாத்திரம்தான் கடந்த காலத்தை மறக்க வேண்டுமோ

இலங்கையில் சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு அனுசரணையான அரசியல் கோட்பாடுகளில் நம்பிக்கைகொண்ட தாராள சிந்தை கொண்டவர்களாக ஆரம்பத்தில் தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட பின்னர் காலப்போக்கில் அதேசிறுபான்மை இனங்களின் எந்தவொரு நியாயபூர்வமான அபிலாசையையும் ஏற்றுக்கொள்வதற்கு வெறித்தனமாக மறுத்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் சக்திகளின் முன்னணிப் பேச்சாளர்களாக உருமாறிக்கொண்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஆங்கிலப் புலமைமிக்க புத்திஜீவிகளில் கலாநிதி தயான் ஜெயதிலகவும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்கவும் முக்கியமானவர்கள்.

காலஞ்சென்ற பிரபல ஆங்கிலப் பத்திரிகையாளரான மேர்வின் டி சில்வாவின் புதல்வரான கலாநிதி ஜெயதிலக 22 வருடங்களுக்கு முன்னர் இணைந்த வடக்குகிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவிவகித்த அண்ணாமலை வரதராஜப் பெருமாளின் அமைச்சரவையில் ஒரு உறுப்பினர். அண்மைக்காலத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றி பின்னர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதிநிதியாகப் பதவிவகித்த அவர் போர் முடிவடைந்து ஒன்றரை வருடங்களுக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்டபோதிலும் வடக்கு, கிழக்கில் இராணுவமயச் செயற்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தும் அரசாங்கத்தின் போக்கை நியாயப்படுத்தும் வகையிலான கருத்துகளை முனைப்புடன் வெளிப்படுத்திவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. காலஞ்சென்ற சானக அமரதுங்கவுடன் சேர்ந்து இலங்கை லிபரல் கட்சியை ஸ்தாபித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் விஜேசிங்க முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சாம் விஜேசிங்கவின் புதல்வர். அரசாங்க சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பதவிவகித்த இவர் தற்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவர்கள் இருவரும் வெளிப்படுத்திவரும் கருத்துகள் உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மக்களை நோக்கி உருப்படியான அரசியல் சமிக்ஞையைக் காட்டுவதற்குத் தயாரில்லாமல் இருக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளையும் செயற்பாடுகளையும் வலிந்து நியாயப்படுத்துபவையாக அமைந்திருக்கின்றன. அத்துடன் இரு புத்திஜீவிகளும் காலத்துக்கொவ்வாதபழமைவாதத்தன்மையான பேரினவாதக் கோட்பாடுகளுக்கு நவீன முலாம் பூசுகின்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் போலத் தெரிகிறது. போரின் முடிவுக்குப் பின்னர் சிறுபான்மை இனமக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் தங்களது அரசியல் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கடந்தகால யோசனைகளைக் கனவிலும் சிந்தித்துப்பார்த்தலாகாது என்பதே கலாநிதி ஜெயதிலகவினதும் பேராசிரியர் விஜேசிங்கவினதும் நிலைப்பாடாக இருக்கிறது.

கடந்தவாரம் இந்தியத் தலைநகர் புதுடில்லியில் சமாதானம் மற்றும் நெருக்கடி ஆய்வுகள் நிறுவனத்தில் உரையாற்றிய போது தமிழர் பிரச்சினை தொடர்பில் தெரிவித்த கருத்துகள் இச் சந்தர்ப்பத்தில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியவையாக இருக்கின்றன. "இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதில் அக்கறை கொண்ட நலன்விரும்பிகள் இலங்கையின் முழுமையான நிலைவரத்தையும் கருத்தில் எடுத்துக்கொண்டு யோசனைகளைக் கூறவேண்டுமேயொழிய, கடந்த காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கக்கூடாது. சமகாலத்துக்குப் பொருத்தமில்லாத அடிப்படைகளைக் கொண்ட புராதன யோசனைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமேதுமில்லை. வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இலங்கை அரசாங்கம் மீண்டும் இணைக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இலங்கையில் இன்னமும் கூட சில அரசியல்வாதிகள் இரு மாகாணங்களினது இணைப்புக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதால் இரு மாகாணங்களையும் ஒரு அலகாக நோக்குவது தவறானதாகும்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களும் தாங்கள் தனியான அடையாளத்தைக் கொண்டவர்கள் என்பதை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பிளவின் மூலமாக வெளிக்காட்டிவிட்டார்கள். இணைப்பு தொடர்பில் மீண்டும் உணர்வுகளைக் கிளப்பினால் மேலும் சந்தேகங்கள் ஏற்படுவதற்கு அது வழிவகுக்கும்' என்று பேராசிரியர் விஜேசிங்க கூறியிருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், "அந்தக் கூட்டமைப்பு இன்னமும் கூட சமஷ்டி பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது. சமஷ்டி என்பது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஒரு எதிர்மறையான கோட்பாடேயாகும். கடந்த வருடம் மே மாதத்தில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சாகசங்களில் ஈடுபட்டிருப்பதைக் காணும்போது பெரும் கவலையாக இருக்கிறது. இந்தக் கூட்டமைப்பின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்று கூறுபவர்கள் கேடுவிளைவிக்கக்கூடிய இக்குழுவினரின் அணுகுமுறைகளை முதலில் மனதிற் கொள்ளவேண்டும்' என்று கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பிறகு சிங்கள அரசியல் சக்திகள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து ஒருபோதும் பேசமுன்வரப்போவதில்லை என்பதைத் தமிழர்கள் ஏற்கனவே தெளிவாக உணர்ந்திருந்தார்கள். அது விடயத்தில் அவர்களிடம் எந்த மாயையும் இருக்கவில்லை. அரசியல் தீர்வைக் காண்பதற்கு விடுதலைப் புலிகள் தான் முட்டுக் கட்டையாக இருந்தார்கள் என்று கூறிவந்த அரசாங்கமும் தென்னிலங்கை அரசியல் சக்திகளும் இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துவிட்டால் அதற்குப் பிறகு அரசியல் தீர்வொன்றுக்கான தேவை தங்களுக்கு இருக்கப்போவதில்லை என்ற நம்பிக்கையிலேயே செயற்பட்டுவந்தன என்பதிலும் சந்தேகமில்லை. அரசியல் தீர்வொன்றை நோக்கிய செயன்முறைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்துக்கு குறைந்தபட்ச நெருக்குதலையேனும் கொடுக்க இயலாதவையாக தமிழ்க் கட்சிகள் இருக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான பேராசிரியர் விஜேசிங்கவின் விமர்சனம் விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில், தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான செயன்முறைகளை இனிமேலும் தாமதித்தலாகாது என்று வெளியில் இருந்துவரக்கூடிய எந்தவொரு நெருக்குதலையும் சமாளிப்பதற்கான சாக்குப்போக்காக அந்தக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஒரு முட்டுக் கட்டையாகக் காண்பிக்கும் நோக்கம் கொண்டது என்பதில் சந்தேகமில்லை.

போரின் முடிவுக்குப் பின்னர் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு எத்தகைய அடிப்படையைக் கொண்டிருக்க வேண்டுமென்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறு எந்தவொரு தமிழ்க் கட்சியுமோ தெட்டத் தெளிவான யோசனைகளை இதுவரை முன்வைக்கவில்லை. இது உலகிற்குத் தெரிந்த விடயம். உண்மைநிலை அவ்வாறிருக்கையில் புதுடில்லியில் வைத்து பேராசிரியர் விஜேசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சாகசத்தில் ஈடுபடுவதாக எவ்வாறு குற்றஞ்சாட்டமுடியும்? தமிழர்கள் இன்று சமஷ்டியைப் பற்றி பேசுவதோ நினைப்பதோ தீங்குவிளைவிக்கக் கூடியது என்றால் அரைநூற்றாண்டுக்கு முன்னரே சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வுக்கோரிக்கையை முன்வைப்பதற்கு நிர்ப்பந்தித்த பேரினவாத அடக்குமுறை அதையும் விட நாசகாரத்தனமானது என்பதே எமது அபிப்பிராயமாகும்.

தமிழர்களும் அவர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டுமென்று அக்கறைப்படுபவர்களும் கடந்த காலத்தை மறந்துவிட வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கமும் தென்னிலங்கை அரசியல் சக்திகளும் கடந்த காலத்தை மறந்துவிடவேண்டிய அவசியம் இல்லையா?

தமிழ்ப் பகுதிகளில் இன்று தீவிரப்படுத்தப்படும் இராணுவமயம் கடந்த காலத்தை மறந்து புதிய யுகமொன்றுக்குள் பிரவேசிப்பதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறையையா பிரதிபலிக்கிறது? கடந்த காலத்தை மறப்பதல்ல முக்கியம்.

கடந்த கால அனுபவங்களில் இருந்து முறையான பாடங்களைக் கற்றுக்கொண்டு எதிர்காலத்துக்கான பாதையை ஆரோக்கியமானதாக வகுப்பதில் இதய சுத்தியான அக்கறை காண்பிக்க வேண்டியதே அவசியமானதாகும். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்துவிட்டதுடன் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளும் அழிந்துவிடவில்லை.

தேசிய இனப்பிரச்சினையென்பது உயிர்த்துடிப்புடன் இருக்கும் ஒரு மெய்மையாகும். இதை உணர மறுக்கும் தீக்கோழி மனோபாவம் தீங்கானது. அரசியல் தீர்வைக் கோரும் தமிழனை தேசவிரோதியாகக் காண்பிக்கும் தன்மையான நச்சுத்தனமான போக்கு கைவிடப்படவேண்டும்.

Please Click here to login / register to post your comments.