இந்தியாவின் வலியுறுத்தல்களும் இலங்கையின் சமாளிப்புகளும்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு மேற்கொள்கின்ற விஜயங்களின் போது இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளின் நிலைவரம் தொடர்பில் அவருடன் ஆராய்வதுடன் இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காணவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தவும் தவறுவதில்லை. பொதுநலவரசு நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு வைபவத்தில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்வதற்காக கடந்த வாரம் ராஜபக்ஷ புதுடில்லி சென்றிருந்த வேளையிலும் மேற்குறிப்பிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அரசாங்கம் அவருடன் கலந்துரையாடியது. கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் மக்களின் புனர்வாழ்வு மற்றும் இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஜனாதிபதியுடன் ஆராய்ந்த இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அரசியல் இணக்கத் தீர்வொன்றை எட்டுவதற்காக இலங்கை அரசாங்கம் தீர்க்கமான முறையில் செயற்பட வேண்டுமென்ற இந்தியாவின் விருப்பத்தை மீண்டும் வெளிப்படுத்தியிருந்தார்.

இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையை மிகவும் சுமுகமான சந்திப்பு என்று வர்ணித்திருக்கும் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், "எந்த விவகாரமுமே விரிவாக ஆராயப்படவில்லை. ஆனால், எமது திட்டங்களை அறிந்துகொள்வதற்கு இந்தியா விரும்பியது. இனப்பிரச்சினையில் பங்கும் ஈடுபாடும் கொண்ட பரந்தளவிலான பிரிவினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நாம் விரும்புகிறோம் என்பதை இந்தியத் தரப்பினருக்கு தெரியப்படுத்தினோம். அத்தகைய பேச்சுவார்த்தைகளே கருத்தொருமிப்பைக் காண்பதற்கான ஒரே வழி%27 என்று இந்தியத் தலைநகரில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை ஏற்கனவே இரு தடவைகள் சந்தித்த ஜனாதிபதி ராஜபக்ஷ கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனைச் சந்தித்துப் பேசுவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் பேராசிரியர் கூறினார். இதேவேளை, ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் கலாநிதி சிங்கிற்கும் இடையேயான சந்திப்புக் குறித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழ் பேசும் மக்களின் அக்கறைகளைப் போதுமான அளவுக்கு கவனத்திலெடுத்து அவர்களை வென்றெடுப்பதற்குத் தீர்க்கமான முறையில் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டிய தருணம் இதுவென்று இந்தியா நம்புகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு பல தடவைகள் இந்தியா தமிழர் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காணவேண்டிய தேவை குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் வலியுறுத்தி வந்திருக்கிறது. கடந்தவாரம் கிடைத்த சந்தர்ப்பத்தையும் கலாநிதி சிங் பயன்படுத்தி மீண்டுமொரு தடவை அதே விடயத்தை வலியுறுத்தியிருக்கிறார். வழமைபோன்றே ஜனாதிபதி ராஜபக்ஷவும் இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தி கருத்தொருமிப்பைக் காண்பதற்கு நாட்டம் கொண்டிருப்பதாக இந்தியத் தரப்பினரிடம் கூறிவிட்டு நாடு திரும்பியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான திட்டங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்தரப்பினர் இந்தியாவில் கூறுகின்ற அளவுக்கு இலங்கையில் எந்தவிதமான அக்கறையையும் காட்டுவதில்லை. சம்பந்தனுடன் மீண்டும் பேசுவதற்கான ஜனாதிபதியின் திட்டம் குறித்து பேராசிரியர் பீரிஸ் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். ஆனால், இலங்கையில் இருக்கும் சம்பந்தனுக்கோ அல்லது அவரது சகாக்களுக்கோ அத்தகைய சந்திப்புக்கான சாடை எதுவும் கிடைத்திருக்குமென்று நம்புவதற்கில்லை.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை தற்போதைய சூழ்நிலையில், தமிழர் பிரச்சினைக்கான அரசியல் இணக்கத் தீர்வுவிடயத்தில் இந்தியாவிடமிருந்து வரக்கூடிய எந்தவிதமான வேண்டுகோளையும் வழமையான சாக்குப் போக்குகளைக் கூறிச் சமாளித்து விடமுடியுமென்ற உறுதியான நம்பிக்கையில் அது இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் தமிழர் பிரச்சினையுடன் தொடர்புபட்ட எந்தவொரு விவகாரத்திலும் இலங்கையை விரோதித்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஒரு நிலைப்பாட்டை

இந்தியா எடுக்கப்போவதில்லை என்பதையும் அரசாங்கம் நன்கு தெரிந்தே வைத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையான தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய உருப்படியான அரசியல் செயன்முறைகளை முன்னெடுக்கும் நோக்கமெதுவும் அரசாங்கத்திடமில்லை. இத்தகைய பின்புலத்தில் அரசியல் தீர்வு தொடர்பில் இந்தியாவிடமிருந்து வரக்கூடிய எந்தவொரு வலியுறுத்தலும் பயனுறுதியுடைய சிறியதொரு நகர்வையேனும் செய்விக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு இல்லை. அதையும் மீறி இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தும் பட்சத்தில் வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்தி அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் கீழான அதிகாரப் பரவலாக்கலைச் செய்வதற்கு படிப்படியாக நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை கொண்டிருப்பதாகக் கூறுவதன் மூலமாக அதைச் சமாளிப்பதற்கான தந்திரோபாயமும் அரசாங்கத்திடம் கைவசம் இருக்கிறது.

இதனிடையே, கடந்த வாரம் புதுடில்லியில் இருந்த வேளை பேராசிரியர் பீரிஸ் இலங்கை விவகாரங்களில் நன்கு பரிச்சயமுடையவரான இந்திய மூத்த ஊடகவியலாளர் களில் ஒருவரான எஸ்.வெங்கட் நாராயணுக்கு அளித்த பிரத்தியேகப்பேட்டியில் தெரிவித்த கருத்தொன்று எமது கவனத்தை வெகுவாகத் தூண்டியிருக்கிறது. ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கத்தின்செயற்பாடுகளுக்கு சாதகமான பிரதிபலிப்பு தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது என்று தெரிவித்திருக்கும் பேராசிரியர், "கடந்த காலத்தில்

அதிகாரத்தில் இருந்தவர்களினால் தமிழ் மக்கள் மீது திட்டங்கள் திணிக்கப்பட்டன. கடந்த கால் நூற்றாண்டு காலமாக இலங்கையில் பதவியிலிருந்த அரசாங்கங்கள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்காததால், வடக்கு, கிழக்கிற்கான எந்தவொரு பயனுறுதியுடைய

திட்டத்தையும் அல்லது அதிகாரப் பரவலாக்கல் யோசனையையும் முன்னெடுப்பது சாத்தியமாயிருக்கவில்லை. இரண்டாவது பதவிக்காலத்துக்கு ஜனாதிபதி கடந்த ஜனவரியில் மக்களால் தெரிவாகியிருப்பதுடன், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு

ஏப்ரில் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மிகவும் நெருக்கமான வெற்றி கிடைத்ததையடுத்து இலங்கையின் அரசியல் கோலத்தில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன%27 என்று குறிப்பிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

கடந்த 25 வருட காலத்தில் நாட்டில் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களுக்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இல்லாததன் காரணத்தினாலேயே அவற்றினால் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு உருப்படியான அதிகாரப் பரவலாக்கலைச் செய்து இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர இயலவில்லை என்று நாமெல்லோரும் நம்பவேண்டும் என்பதே பேராசிரியர் பீரிஸின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அவரின் கருத்துக்களை வேறுவிதமாக அர்த்தப்படுத்த

முடியவில்லை. தற்போதைய அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு நெருக்கமான பலம் பாராளுமன்றத்தில் இருப்பதாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விரும்பிய நேரத்தில் திரட்டக்கூடிய ஆற்றல் அதற்கு இருப்பதாலும் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலமான தீர்வொன்றைக் காணக்கூடிய தகுதியை அது கொண்டிருக்கிறது என்று பேராசிரியர் கூற முன்வந்திருக்கிறார் என்பதிலும் சந்தேகமில்லை.

மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை எந்தநேரத்திலும் திரட்டக்கூடிய அதன் வல்லமையை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரேயடியாக அரசியல் தீர்வைக் காண்பதற்குப் பயன்படுத்தும் என்று யாரை நம்பவைப்பதற்கு இந்தப் பேராசிரியர் பிரயத்தனம் செய்கிறார். இந்தியாவின் தலையீட்டின் விளைவாகக் கொண்டு வரப்பட்டும் கூட,இரு தசாப்தங்களுக்கும் மேலாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் மூலமாக மாகாணங்களுக்கு அளிக்கப்படவேண்டியவையாக இருக்கும் அதிகாரங்களில் மேலும் தளர்வுகளைச் செய்வதற்கு அல்லது அந்த திருத்தத்தை முற்றாக வலுவிழக்க செய்யக்கூடிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் அதற்கு இருக்கக்கூடிய பாராளுமன்ற வல்லமையைப் பயன்படுத்தாமல் இருந்தால் அதுவே பெரிய புண்ணிய காரியமாக இருக்கும்!

Please Click here to login / register to post your comments.