பெரும்பான்மை பொது இணக்கப்பாடும் சிறுபான்மையினரின் சந்தேகங்களும்

ஆக்கம்: அஜாதசத்ரு
தமிழ் மக்கள் மீது கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பாரிய போர் இராணுவ ஆக்கிரமிப்பைத் திணித்து இனநெருக்கடித் தீர்வு முயற்சிகளுக்காக உள்நாட்டிலும் மற்றும் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனும் பல தடவைகளில் கொண்டு வரப்பட்ட ஒப்பந்தங்கள், தீர்வு முயற்சிகள் என்பவற்றைத் தட்டிக் கழித்து அமைதி வழியிலான சமாதான முயற்சிகள் அனைத்தையும் தட்டிக் கழித்து வந்த தென்னிலங்கையின் இரு பெரும்பான்மையான பிரதான அரசியல் கட்சிகளும் இன்று பொது இணக்கப்பாடொன்றின் மூலம் தேசத்தை கட்டியெழுப்புவதற்கு முன்வந்திருப்பது இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையின தேசியக் கட்சிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும் எச்சரிக்கை உணர்வையும் தோற்றுவித்துள்ளன.

கடந்த காலங்களில் தென்னிலங்கையின் ஆட்சியதிகாரங்களை மாறிமாறி தம்வசப்படுத்தியிருந்த இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும்-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆறு பிரதான விடயங்களை உள்ளடக்கியதான யோசனைகளின் அடிப்படையில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பொது வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு இணக்கம் கண்டுள்ளன.

இனநெருக்கடிக்கு தீர்வு, தேர்தல் முறைகளில் மறுசீரமைப்பு, ஊழல் இலஞ்சமற்ற திறமையான அரசாங்கம், தன்னிறைவான பொருளாதார அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி, தேசத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற ஆறு விடயங்கள் தொடர்பிலேயே இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படப் போவதற்கான அரசியல் யோசனைகளை முன்வைத்தே இரு கட்சிகளும் செயற்படுவதற்கான இணக்கப்பாடொன்றிற்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான பொது இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் இரு பிரதான கட்சிகளும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் கைச்சாத்திட்டு செயற்படப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இரு பிரதான கட்சிகளின் தலைமைகளும் தலைமைத்துவ உள்முரண்பாடுகள் மற்றும் தேசிய ரீதியாக எதிர்கொள்ளப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நெருக்கடியான நிலைமையொன்றை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே இந்தப் பொது இணக்கப்பாட்டு வேலைத்திட்டத்திற்கு முன்வந்துள்ளதாகவே பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்படுவதும் மிகவும் கவனிக்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஜாதிக ஹெல உறுமய ஆகிய இரு பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஒற்றையாட்சி முறைமைக்குள்ளேயே இனநெருக்கடிக்கு தீர்வு என்ற கொள்கையை முன்வைத்து தென்னிலங்கையில் பெரும்பான்மையின வாக்குகளைப் பெற்று ஆட்சியதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அக்கட்சிக் கூட்டமைப்புக்குள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு சிக்கலான நிலைமையொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் வெற்றிக்குக் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது உறுதுணையாக நின்ற ஜே.வி.பி. தற்போது புதிதுபுதிதாக கொடுத்துவரும் அழுத்தங்கள் காரணமாக அவர்களை திருப்திப்படுத்த முடியாத இறுக்கமான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்.

சமாதான அனுசரணைப் பணிகளிலிருந்து நோர்வே தரப்பினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும், புரிந்துணர்வு உடன்படிக்கையை கிழித்தெறிந்து விடுதலைப் புலிகள் மீது முழுமையான போரைத்தொடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ள ஜே.வி.பி.யின் தலைமை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் அவரது அமைச்சரவையையும் வெளிப்படையாகவே மிக மோசமாக விமர்சிக்கும் நிலையில் ஜே.வி.பி.யினரின் செயற்பாடுகள் மேலோங்கிக் காணப்படுகின்றது.

இந்த நிலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.த் தரப்பினருக்கும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சிப் பிரதிநிதிகளுக்குமிடையில் உத்தியோக பூர்வமாக நடைபெற்ற சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை தாம் இனிமேலும் ஏற்று செயற்பட முடியாது என்று ஜே.வி.பி. எச்சரிக்கை செய்துள்ளதுடன் அரசுக்கு எதிரான விமர்சனங்களையும் வெளியிட்டு வருகிறது.

இவ்வாறே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியும் அதனையடுத்து அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் அமைச்சுப் பதவிகளுக்காக அரசின் பக்கம் தாவும் போக்கும் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

இவ்வாறானதோர் நிலைமையிலேயே இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஆறு பிரதான விடயங்களில் உடன்பாடு கண்டு பொது இணக்கப்பாட்டின் மூலம் ஒருமித்து செயற்படுவதென்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த இரு பெரும்பான்மையினக் கட்சிகளின் இணைவானது சிறுபான்மையினக் கட்சிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் எச்சரிக்கையையும் தோற்றுவித்துள்ளமையையும் நிராகரிக்க முடியாது.

ஏனெனில், தேர்தல்முறை மறுசீரமைப்பின் ஊடாக சிறுபான்மைக் கட்சிகளின் தயவில் தங்கியிருக்காமல் பெரும்பான்மையின சிங்கள ஆதிக்கத்தைப் பாராளுமன்றத்தில் புகுத்துவதற்கான நிலைப்பாட்டையும் இந்த இரு கட்சிகளும் முன்னெடுக்கலாம் என்றே சிறுபான்மைக் கட்சிகள் அஞ்சுகின்றன.

பாராளுமன்றத்தில் ஆட்சியதிகாரத்தைக் கொண்டு வருவதற்கு கடந்த காலங்களில் சிறுபான்மைக் கட்சிகளின் தயவை நாட வேண்டிய நிலைக்கே இருபெரும்பான்மைக் கட்சிகளும் நாடிநின்றன. இந்த நிலைமை மாற்றப்பட்டால் சிறுபான்மைக் கட்சிகள் ஓரங்கட்டப்படும் நிலைமையொன்று எதிர்காலத்தில் உருவாக்கப்படலாம்.

இதனைவிட இன நெருக்கடித் தீர்வு முயற்சிகள் தொடர்பில் இரு பெரும்பான்மையினக் கட்சிகளும் இரு வேறுபட்ட கொள்கைகளைக் கொண்ட நிலைப்பாட்டுடன் உள்ளன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சமஷ்டி முறையிலான தீர்வொன்றை இனநெருக்கடிப் பிரச்சினைக்கு தீர்வாக முன்வைத்ததுடன் இன்று நடைமுறையிலுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் ரணில் விக்கிரமசிங்கவே கையெழுத்திட்டுள்ளார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொரு விடயமாகும்.

அதேநேரம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ சமஷ்டி முறையிலான தீர்வை நிராகரித்து ஒற்றையாட்சிக்குள் சகலருக்கும் சம உரிமை என்ற அடிப்படையிலேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென்று தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.

இந்த நிலைமையில் நாட்டின் பிரதான பிரச்சினையான இனநெருக்கடித் தீர்வு முயற்சிகளுக்கு எத்தகையதொரு பொது இணக்கப்பாட்டுக்கு வருவார்கள் என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.

இதெல்லாவற்றுக்குமப்பால் கடந்த சுமார் இருமாத காலமாக யாழ். குடாநாட்டையும் தென்னிலங்கையையும் இணைக்கும் பிரதான ஏ-9 வீதி மூடப்பட்டு குடாநாட்டு மக்கள் பட்டினிச்சாவின் விழிம்புக்குள் தள்ளப்பட்டுள்ளதுடன் அங்குள்ள பாடசாலைகள் மூடப்பட்டு கல்விச் செயற்பாடுகள் முற்றாக சீர்குலைந்தும் அரசதிணைக்கள செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்த நிலையிலும் காணப்படுகின்றன.

மூதூர் கிழக்குப் பிரதேசத்திலிருந்து ஆட்லறி மற்றும் விமானக் குண்டு வீச்சு காரணமாக இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கதிரவெளி பிரதேசங்களில் இடம்பெயர்ந்துள்ள சுமார் 50 ஆயிரம் மக்கள் அரச நிவாரண உதவிகள் மறுக்கப்பட்ட நிலையில் மிகவும் மோசமான மனித அவலமொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறே திருகோணமலை நகர கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 50 வீதமான மக்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், அச்சுறுத்தல்கள் காரணமாக தமது இருப்பிடங்களை கைவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறியுள்ளனர்.

இவர்களில் சுமார் 15 ஆயிரம் தமிழ் மக்கள் மன்னாருக்கு சென்று அங்கிருந்து படகு மூலம் அகதிகளாக தமிழகத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள அகதி முகாம்களில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதுமென்ற நிலையில் அகதி வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களில் தினமும் படுகொலைகள் இடம்பெறுகின்றன. இளைஞர், யுவதிகள் மாத்திரமின்றி சிறுவர்கள் குழந்தைகள் வயதுமுதிர்ந்தவர்கள் கூட எதற்காக கொல்லப்படுகின்றோம் என்று புரிந்துகொள்ள முடியாத நிலையில் கணப்பொழுதில் கொல்லப்படுகிறார்கள்.

இலக்கத் தகடுகளில்லாத வெள்ளைவான் ஆயுத பாணிகளால் இளைஞர், யுவதிகள் மாத்திரமன்றி சமூக மட்டத்தில் எஞ்சிப் போயுள்ள ஒரு சில புத்தி ஜீவிகள், கல்விமான்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் கடத்தப்படுகிறார்கள். பின்னர் காணாமல் போகின்றனர்.

தலைநகர் கொழும்பில் அதி உச்ச பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட பலர் காணாமல் போயுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறாகத் தொடரும் இராணுவ மேலாதிக்கப் போக்குகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் கடந்த ஆறு தினங்களாக பாராளுமன்றத்தில் ஜனநாயக ரீதியாக மேற்கொண்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பாக அரச தரப்பினரோ பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ கணக்கிலெடுக்காத போக்கொன்றே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதெல்லாவற்றுக்குமப்பால் நாட்டில் முன்னொரு போதுமில்லாதளவிற்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையிலும் தமிழ் மக்களுக்கு எதிரான மிக மோசமான மனித உரிமைமீறல்கள் அதிகரித்துள்ள நிலையிலும் இரு பெரும்பான்மையினக் கட்சிகளும் பொது இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ள நிலையில் இனநெருக்கடித்தீர்வு முயற்சிகளுக்கு ஒருமித்த நிலைப்பாட்டை முன்னெடுப்பார்களா என்பது தொடர்பில் சந்தேகங்களே மேலோங்கிக் காணப்படுகின்றன.

இதனைவிட, நாட்டின் வரலாற்றில் இராணுவ வளங்களை பெருக்குவதற்காக இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்காக 13,955 கோடியே 63 இலட்சத்து 33 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை அரச தரப்பினருடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரிக்குமானால் தமிழ் மக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையை முழுமையாக இழந்து பொது இணக்கப்பாடானது வெறுமனே பெரும்பான்மைக் கட்சிகளை திருப்திப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே அமையும்.

Please Click here to login / register to post your comments.