தென்னிலங்கையின் பழைய தீர்மானங்களும் புதிய அரசியல் காற்றும்

ஆக்கம்: பீஷ்மர்
சஜீத் பிரேமதாஸ முதல் ஆனந்த சங்கரி, சம்பந்தன் வரை நீளும் டில்லிப் பயணங்களின் சுவாரஷ்யங்கள் ஒருபுறமிருக்க, கடந்த வாரத்து கொழும்பு நிலைப்பட்ட செயற்பாடுகள் சிலவற்றின் முக்கிய காரணமாகவும் பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியப்பாடுகள் காரணமாகவும் அரசியல் கவனத்தை வேண்டி நிற்கின்றது.

முதலாவது வரவிருக்கும் பேச்சுவார்த்தைபற்றிய தீர்மானமாகும். புதனன்று இரவே `பி.பி.சி.' ஆங்கிலச் சேவையின் இரவு 11.30 மணி நிகழ்ச்சியில் திகதியும் இடமும் கூட கூறப்பட்டதென்றே நினைக்கின்றேன். ஆனால், அடுத்த நாள் காலை அமைச்சர் ரம்புக்வெல அவர்கள் தங்களை கேட்காமலே சொல்லப்பட்டுவிட்டது என்று கூறிவிட்டார்.

உண்மையில், கடந்த வாரம் லண்டனில் இருந்த ஜனாதிபதியும் கலாநிதி பாலித ஹோகணவும் இதற்கு தங்கள் ஒத்திசைவை தெரிவித்திருக்கிறார்கள்போல் தெரிகிறது. அமைச்சர் ரம்புக்வெல அவர்கள் படிப்படியாகத் தான் திகதியையும் இடத்தையும் ஒப்புக் கொள்கிறார். இடம் தொடர்பாக ஜெனீவாவே அரசாங்கத்துக்கும் பிடித்தமான இடமாகும். பிரபாகரன் நேரடியாக போக வேண்டும். நாங்கள் 3 முன் நிபந்தனைகளை வைத்துள்ளோம். அவற்றுக்கு இசைந்தால்தான் பேச்சுவார்த்தை என்று முதல் இரண்டு நாட்களும் கூறிய அமைச்சர் அவர்கள், நிபந்தனையற்ற பேச்சுகளுக்கு விடுதலைப் புலிகள் தயாரென்று கூறினார்.

அரசியலில் இத்தகைய வீராப்புகளுக்குப் பின் இசைவுகளுக்கும் என்றுமே இடமுண்டு. ஆனால், இம்முறை முன்னர் எப்பொழுதும் காணப்படாத புதிய சூழல் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளுக்கு அரசாங்கம் இணங்கி திகதி குறித்த நிலையிலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீது காலாட்படையும், வான் படையும், கடற் படையும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இதுவொரு புதிய நடைமுறை.

இச் செயற்பாட்டின் கருத்து யாது? சிங்கள ஊடகங்களில் சில முக்கிய வினாவை கேட்கின்றன. `விடுதலைப் புலிகள் தோற்கடிக்க ப்பட்டு துரத்தப்படும்' இந்த வேளையில் பேச்சுவார்த்தைகள் தேவைதானா, என்ற கேள்வி தோன்றியுள்ளது. ஆனால், அடிப்படை உண்மை சற்று வித்தியாசப்பட்டதாகவே தெரிகின்றது. படையினரை பொறுத்த வரையில் அவர்கள் தாம், கடந்த சில மாதங்களாக மேற்கொண்டுள்ள தங்கள் களச் செயற்பாடுகளை பேச்சுவார்த்தை இணக்கத்தை கண்டு நிறுத்த தயாரில்லை. இன்னொரு வகையில் சொன்னால், சம்பூரின் பின்னர் அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை இடை நிறுத்த தயாராகஇல்லை. இதிலுள்ள இன்னொரு உண்மையென்னவென்றால் பொது நிலையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்றும் அதனால் படை முன்னெடுப்புகளை நிறுத்தக்கூடாதென்றும் சிங்கள மக்கள் விரும்புகிறார்கள். எனினும், இந்த நடவடிக்கைக்குள்ளே மிகப் பாரதூரமான ஒரு அரசியல் `நிகழ்வு' ஏற்பட்டுள்ளது தெரிகிறது. அதாவது, யுத்தத்தின் கதியை (வேகம்) இப்பொழுது தீர்மானிப்பது படையினர்தான். அந்தளவுக்கு கொழும்பின் அரசியல் மையங்களில் படையினரின் சிந்தனை மேலாண்மை தெரிகின்றது. இதில் இரண்டு முக்கிய பின் விளைவுகளுக்கு இடமுண்டு.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது சிங்கள நிலைப்பட்ட ஒரு அரசியல் தேவையாகியுள்ளது. இந்த மனநிலை தொடர்ந்தால் படையினர் அரசியல் உரிமை கோரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

இந்த ஆட்சி யாப்பு வட்டத்தினுள் நின்று கூறுவதானால், நிர்வாக அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையில் சர்வபலம் இல்லாத அவற்றை பயன்படுத்தாக ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும்பொழுது இராணுவமும் நிர்வாகமும் தலை தூக்குவதற்கான சாத்தியப்பாடு உண்டு என்பது வெறும் புத்தக விடயமல்ல. ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மூலம் தனது அதிகாரம் நிலை நிறுத்தப்படுகின்றது என்று கருதலாம். கையெழுத்து நிலையில் அது சரி. ஆனால், உண்மை நிலை வேறு விதமாகவே அமைகின்றது.

இப்பொழுதுள்ள வினா யாதெனில், இத்தகைய ஒரு பின்புலத்தில் பேச்சுவார்த்தைகளின் சாத்தியப்பாடுகள் யாவை?

இது நிற்க, இதிலும் பார்க்க ஆழமான அடித்தள முக்கியத்துவம் கொண்ட ஒரு புதிய முன்னெடுப்புக்கான முன்னறிவித்தல் ஒன்று இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளிவந்துள்ளது. அது ஆறு முக்கிய விடயங்கள் சம்பந்தமாக யு.என்.பி. க்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையே ஏற்படவுள்ள புரிந்துணர்வு நடவடிக்கையாகும்.

இன விவகாரம் தேர்தல் மறுசீரமைப்பு, நல்லாட்சி, பொருளாதார அபிவிருத்தி, தேசத்தைக் கட்டியெழுப்புதல், சமூக அபிவிருத்தி இவற்றை விட அரசாங்கம் வேறு எந்த விடயங்களில் ஈடுபடுகின்றது என்பது தெரியவில்லை. சற்று ஆழமாக சிந்தித்தால் இலங்கை போன்ற நாடுகளின் இராணுவ முன்னெடுப்புகள் கூட இவற்றுக்குள்ளே வந்து விடும்.

இது பற்றிய அறிவிப்பின் அரசியல் சாத்தியப்பாடுகள் பல. பண்டாரநாயக்க, சேனநாயக்க காலம் முதல் நடக்காத ஒன்றை பிரபாகரன் ஏற்படுத்திவிட்டார் என்று ஒருவர் ஒரு நமட்டுச் சிரிப்புடன் எனக்கு கூறினார். சற்று ஆழமாக நோக்கினால் இக்கூற்றில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால், தென்னிலங்கையின் அரசியல் ஸ்தாபித நிலைகளில் உடனடிப் பயம் பிரபாகரன் அல்ல. அது சோமவன்ச அமரசிங்க போலவே தெரிகின்றது. என்னதான் யு.என்.பி.யும் சுதந்திரக்கட்சியும் கூறினாலும் அரசியல் யதார்த்தத்தைப் பார்க்கும்போது கிராமத்து சிங்கள இளைஞர்களிடையே விமல் வீரவன்சவுக்கு இன்று ஒரு `நட்சத்திர வலு' இருப்பதாகக் கேள்வி. அவரின் பார்வை முதல் குறுந்தாடி வரை அவரது நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த வேளையில் சுதந்திரக் கட்சி, யு.என்.பி. இணைவு இல்லையென்றால் இரண்டு கட்சிகளுமே தமது நிலைமையை இழக்க நேரிடும். ஜனாதிபதித் தேர்தலிலும் வடக்கு வாக்களிக்காதிருக்க, ராஜபக்‌ஷ அவர்களுக்கு கிடைத்த ஒரு 1.5 அதிகப் பெரும்பான்மை வாக்கில் ஜே.வி.பி. யின் செல்வாக்கு அதிகமுண்டு.

இன்னுமொரு கசப்பான உண்மையுண்டு. உண்மையில் எந்த அளவுக்கு சுதந்திரக் கட்சி பாரம்பரியத்தை பேணுகின்றதென்பதாகும். பண்டாரநாயக்காக்களுக்கு அதிகாரமில்லாத சுதந்திரக்கட்சி தனது அடையாளத்தையே இழந்து விடலாம். என்னதான் சொன்னாலும் ராஜபக்‌ஷ- ரணில் இணைவு என்பது பண்டாரநாயக்க- சேனநாயக்க இணைவு ஆகாது.

ஆனால், சுதந்திரக் கட்சியின் அண்மைய மீள் உயிர்ப்புக்கான காரணங்கள் பலவுள்ளன. ஒன்று, ஜனாதிபதி தனக்கென ஒரு அரசியல் தளத்தை பெயரளவிலாவது வைத்திருக்க வேண்டிய தேவை. இரண்டு, தேர்தல் தொகுதி மட்டங்களில் பாரம்பரிய சு.க. முக்கியஸ்தர்கள் ஜே.வி.பி. மீது கொண்டிருக்கும் எதிர்ப்புணர்வு. ஜே.வி.பி. சிங்களத்துவம் பேசும் பொழுது சுதந்திரக் கட்சியின் பாரம்பரிய நிலைப்பாடு இவர்களுக்கு பெரிதும் உதவுகின்றது.

இவை காரணமாகவே பண்டாரநாயக்கா வாடை வீசாத நிலையிலும் சுதந்திரக் கட்சியை மீட்டெடுக்க ஜே.வி.பி. விரோத சிங்களத்துவ அரசியல்வாதிகள் விரும்புகின்றனர். யு.என்.பி.யின் நிலைப்பாட்டிலும் ஒரு `அந்தர' தன்மையை காணலாம். ஒரு புறத்தில் அடுத்த 5 வருடங்களுக்கு அதிகாரம் இல்லாது, வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்கள் பெரிய நியாயங்களைக் கூறி, ராஜபக்‌ஷ அமைச்சரவையில் பெயர்க் குழப்பங்கள் பல நிறைந்த ஒரு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க தொடங்கி விட்டன. இதற்குள் கரு ஜயசூரிய, ரணில் விக்கிரமசிங்க தகராறு வேறு. ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூட அடுத்த தேர்தலில் தனது வெற்றிச் சாத்தியத்தை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

இவையாவற்றுக்கும் மேலாக கொள்கை நிலையில் அடிப்படை வேறுபாடுகள் இல்லை. ஆனால், யு.என்.பி.க்கு ஒரு சர்வதேச அங்கீகாரமுண்டு. அது இன்னமும் ராஜபக்ஷவுக்கு கிட்டவில்லை. இந்தியா முதல் அமெரிக்கா வரை ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசியல் மதிப்பளிப்பது நன்கு தெரிந்த விடயமே. இந்த யு.என்.பி. - சு.க. ஒற்றுமை ஏற்பட்டு விட்டால் நிச்சயமாக ஒரு பொதுத் தேர்தல் வரும். அதில் இப்பொழுது 38 அங்கத்துவ பலத்தைக் கொண்ட ஜே.வி.பி.யின் நிலை பலவீனமடையும். இந்தப் பின்புலத்திலேதான் யு.என்.பி. - சுதந்திரக்கட்சி உறவுக்கான பொருத்தம் பார்க்கப்பட்டுள்ளது.

யு.என்.பி. - சு.க. வின் இணைவின் பொழுது இன்னுமொரு வசதியுமுண்டு. தமிழர்கள், முஸ்லிம்கள் பற்றி தனியே பேச வேண்டியதில்லை. இதற்குள் பலர் அடங்கி விடுவார்கள். இது சம்பந்தமாக மலையக மக்கள் முன்னணி நேற்று முன்தினம் விட்ட அறிக்கை இந்த `சீசனில்' வந்த நல்ல ஹாஸ்பங்களில் ஒன்று. யு.என்.பி.யும் சு.க.வும் இணைவதால் சிங்கள இனத்துவ வாதம் பலப்பட்டுவிடக் கூடாதாம். யு.என்.பி.யிலிருந்து சு.க.வுக்கும் சு.க.விலிருந்து யு.என்.பி.க்கும் இவர்கள் செல்கின்ற போது தமிழுக்காகவே தாங்கள் தொழிற்பட்டுள்ளது போல மலையக மக்கள் முன்னணி கூறுகின்றது.

இவை ஒரு புறமிருக்க, கடந்த ஒரு மாத காலமாக இலங்கையின் அரசியற் துறையில் மிகப் பெரிய ஒலியை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் மௌனமே இந்த மௌனத்தின் பின்னால் உள்ள உத்தி யாது என்பது சிங்கள தலைவர்களை மாத்திரமல்ல தமிழ் மக்களையும் திணற வைத்துள்ள ஒரு வினாவாகும்.

Please Click here to login / register to post your comments.