அரசியலமைப்பு திருத்தங்கள்; ஏன் இந்த அவசரம்?

சகல அரசியல் கட்சிகள், குழுக்களினதும் சிவில் சமூகத்தினதும் கருத்துகளைப் பரிசீலனை செய்த பின்னரே புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதா அல்லது தற்போதைய அரசியலமைப்புக்குத் திருத்தங்களைக் கொண்டு வருவதா என்பது குறித்து அரசாங்கம் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும் என்றும் அந்தத் தீர்மானத்தில் மக்களின் தேவைகளும் அரசியல் சூழ்நிலையும் செல்வாக்கைச் செலுத்தும் என்றும் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாடொன்றில் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரான நிமால் சிறிபால டி சில்வா கூறியிருந்தார். அவரின் அக்கூற்று அரசியலமைப்புக்கு அவசரமாகத் திருத்தங்களைக் கொண்டு வருவதில் அரசாங்கத்துக்கு இருந்து வந்த ஆர்வம் சற்று குறைவடையத் தொடங்கியிருப்பதன் அறிகுறியாக இருக்குமோ என்று அப்போது அரசியல் வட்டாரங்களில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், தற்போது திடீரென்று அடுத்தமாத ஆரம்பத்தில் பாராளுமன்றம் கூடும் போது அரசியலமைப்புக்கான முக்கிய சில திருத்தங்களைச் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதற்கான அறிகுறிகளைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஒருவார காலத்துக்கிடையில் அரசியல் கட்சிகள், குழுக்களினதும் சிவில் சமூகத்தினதும் கருத்துகளை அரசாங்கம் பரிசீலனை செய்து முடித்துவிட்டது என்று யாருமே நம்பப்போவதில்லை. அரசாங்கத்தின் தலைமைத்துவக் குடும்பத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு இசைவான முறையில் அரசியலமைப்பை மாற்றுவதற்கான சூழ்நிலை உருவாகும் வரை, அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்றத்தில் பெறக்கூடியதாக மேலும் சில எதிரணிப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கவர்ந்திழுக்கும் வரை தங்களுக்கு ஒரு கால அவகாசம் தேவைப்படுகின்றது என்பதையே அமைச்சர் சிறிபால டி சில்வா நாகரிகமான வார்த்தைகளில் "மக்களின் விருப்பமும் அரசியல் சூழ்நிலையும் இறுதித் தீர்மானத்தின் மீது செல்வாக்கைச் செலுத்தும்%27 என்று கூறியிருந்தார் என்பதை தற்போது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

நேற்றைய தினம் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பொதுநிருவாக சேவை சங்கத்தின் ஆண்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அரசாங்கத்துக்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு மேலும் 5 உறுப்பினர்கள் மாத்திரமே தேவைப்படுவதால், அரசாங்கத்தில் எவரும் இணைந்துகொள்வதற்குக் கதவுகள் அகலத்திறந்திருக்கின்றன என்று பகிரங்கமாகவே அழைப்பு விடுத்திருக்கிறார். கடந்த சில நாட்களாக அவதானிக்கக் கூடியதாக இருந்த அரசியல் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கக் கூடியதாக எதிரணியில் இருந்து சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவதற்கான விருப்பத்தை ஜனாதிபதிக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் வெளிக்காட்டி விட்டார்கள் என்றே நம்பவேண்டியிருக்கிறது. அரசாங்கத்தில் இணையாவிட்டாலும் கூட, கொண்டு வரப்படக்கூடிய சில அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு ஆதரவளிக்கக் கூடிய சில எதிரணிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த மாத நடுப்பகுதியில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் கருத்தொருமிப்பைக் காண்பதற்கெனக் கூறிக்கொண்டு அரசாங்கமும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தபோது இவ்விரு தரப்பினருக்கும் இடையே கருத்தொருமிப்பு ஏற்படக்கூடியதாக இருக்குமென்று மக்கள் ஒருபோதுமே நம்பவில்லை. ஒரே எலும்புத் துண்டுக்காக சண்டையிடும் இரு நாய்களுக்கிடையில் இணக்கப்பாடு எவ்வாறு ஏற்படமுடியும்? இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போர்வையில் காலத்தை இழுத்தடித்து விட்டு இறுதியில் தனக்குத் தேவையான எண்ணிக்கையான எதிரணிப் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் கவர்ந்திழுக்கும் என்று எந்தவிதமான சஞ்சலமும் இன்றி எதிர்பார்க்கப்பட்டது. கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.க.வின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவான பிரபாகணேசனும் நுவரேலியா மாவட்டத்தில் போட்டியிட்டுத் தெரிவான திகாம்பரமும் ஆரம்பித்து வைத்த இந்த தாவல் நாடகத்தில் அடுத்த சில தினங்களில் மேலும் சிலர் பங்கேற்கப் போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. 2006 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐ.தே.க.வுக்கும் இடையே அலரிமாளிகையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட மூன்று மாதங்களில் எந்தவிதமான தயக்கமும் இன்றி அரசாங்கம் சுமார் 20 ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை ஆசை காட்டி அதன் பக்கம் இழுத்துக் கொண்டதன் விளைவாகத் தனக்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவின் அனுபவத்துக்குப் பின்னரும் கூட அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்த எதிர்க்கட்சித் தலைவரின் செயலை என்னவென்று வர்ணிப்பதென்றே புரியவில்லை.

ஜனாதிபதி ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, எதிரணியின் எந்தவொரு நிபந்தனையினதும் அடிப்படையில் அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகக்கூடிய சூழ்நிலையை அவர் ஒருபோதுமே விரும்பப்போவதில்லை. அவரது அரசாங்கம் செயற்பட்டு வந்திருக்கும் பாணியை அவதானித்திருக்கக்கூடிய எவருக்கும் இதைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காது. நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு, பாராளுமன்றத்துக்குப் பதில் கூறக் கடமைப்பட்ட நிறைவேற்று அதிகார பிரதமர் உருவாக்கம் என்ற பேச்சுகள் எல்லாமே வெறும் உருட்டுப் புருட்டுக்களே என்பது அம்பலமாகிவிட்டது. இவ்வாரம் ஐ.தே.க. தூதுக்குழுவைச் சந்தித்த ஜனாதிபதி ராஜபக்ஷ மூன்றாவது பதவிக் காலத்துக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்றவகையில் அரசியலமைப்பில் திருத்தத்தைக் கொண்டுவருவதற்குத் தீர்மானித்திருப்பதை வெளிப்படையாகவே கூறிவிட்டார். அவர் தனது இரண்டாவது பதவிக் காலத்துக்காக எதிர்வரும் நவம்பர் நடுப்பகுதியில் பதவிப் பிரமாணம் செய்வதற்கு முன்னதாக, ஒருவர் ஜனாதிபதியாக இரு பதவிக் காலங்களுக்கே (12 வருடங்கள்) அதிகாரத்தில் இருப்பதற்கு மட்டுப்பாடுவிதிக்கும் அரசியலமைப்பு ஏற்பாட்டை நீக்குவதற்கான திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட வேண்டுமென்பதில் அரசாங்கம் மிகுந்த அக்கறையாக இருக்கிறது. ஒருவர் மூன்றுபதவிக் காலத்துக்கு மாத்திரம் ஜனாதிபதியாகப் பதவியில் இருக்க முடியுமென்றா அல்லது விரும்பினால் எத்தனை பதவிக்காலத்துக்கான ஆணையையும் மக்களிடமிருந்து பெறமுடியுமென்றா திருத்தம் சமர்ப்பிக்கப்படப்போகிறது என்று தெரியவில்லை. எது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை.

ஆனால், இந்த அரசியலமைப்புத் திருத்தங்களை மக்கள் கோரினார்களா? இல்லையே. உண்மையில் இன்று மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படுவது அரசியலமைப்புச் சீர்திருத்தங்களே அல்ல. அதிகாரத்தில் இருப்பவர்கள் தொடர்ந்தும் தங்களது அதிகாரத்தை வலுப்படுத்துவற்கே அரசியலமைப்பை மாற்றவேண்டுமென்று கங்கணம்கட்டி நிற்கிறார்கள். உணவுப் பொருட்களின் விலைகள் வானளாவ உயர்ந்துகொண்டு செல்கின்றன. மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை ஓட்டமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். சுகாதாரச்சேவை, கல்வித்துறை உட்பட அரசாங்க நிருவாகத்தின் சகல துறைகளுமே சீர்குலைந்து போய்க் கிடக்கின்றன. போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வாழ்வை மீளக்கட்டியெழுப்ப முடியாமல் அவலப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் போதாது என்று டெங்கு நோய் மறுபுறத்தில் தினமும் பலரைக் காவுகொள்கிறது. இவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படாத அரசாங்கத்துக்கு அதன் தலைமைத்துவ குடும்பத்தின் எதிர்கால அதிகார நலன்களை உறுதிப்ப டுத்துவற்கான அரசியலமைப்புச் செயன்முறைகளில் மாத்திரம் அவசரம் காட்டக்கூடியதாக இருக்கிறது!

Please Click here to login / register to post your comments.