பறிபோகும் தமிழர் நிலங்களை மீட்க புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு நகர்வு

ஆக்கம்: நிராஜ் டேவிட்
போரினால் இடிந்து வீழ்ந்திருக்கும் இடிபாடுகளினூடாகத்தான் ஈழத்தமிழர்களது வரலாறுகளுக்குள் நுழைய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். நாசமாக்கப்பட்ட நகரங்கள், தீய்ந்து கருகிய வயல்வெளிகள், பிணங்களை மறைத்து வைத்துள்ள காடுகள், இரத்தமாகிவிட்ட நதிகள், - இவைதான்- எம்மைப்பற்றி அறிந்துகொள்வதற்கு எம்முன் திறந்துகிடக்கும் ஆவணக் காப்பகங்கள். தாழப் பறந்து வீசப்பட்ட குண்டுகளால் வாய் பிளந்து வெறிக்கும் நிலக் குழிகள் தாம்- ஈழத்தமிழர் நாம் ஆய்வுக்காகத் திறக்க இருக்கும் நூலகங்கள்.

உலகத்தின் கண்களுக்கு முற்றாகவே மறைக்கப்பட்டுவிட்ட முள்ளிவாய்க்கால்களாகவே ஈழத் தமிழர்களின் வரலாறும் அவர்களது இருப்பும் இருளாக இருந்துகொண்டிருக்கின்றது.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்குள் நின்றுகொண்டுதான் எமது எதிர்காலத்தைத் தேடவேண்டிய ஒரு கட்டாயத்திற்குள் நாம் நின்றுகொண்டிருக்கின்றோம்.

எம்முடையவை என்று உரிமை கொண்டாட எதுவுமே இன்று எமக்கு இல்லை.

அனைத்தையுமே இழந்துவிட்டு நடுத்தெருவில் நின்றுகொண்டிருக்கின்றோம்.

ஈழத் தமிழர் இழந்துவிட்ட அல்லது இழந்துவிடும் அபாயத்தில் இருக்கின்ற பல விடயங்களுள் முக்கியமானது அவர்களது தாயக பூமி.

ஈழத் தமிழர்களின் தாயக பூமியாகிய வடக்கு கிழக்கு என்பது ஈழத் தமிழ் இனத்தின் இருப்பை மாத்திரமல்ல, அவர்களது எதிர்கால வாழ்வியலையே உறுதிப்படுத்துகின்ற ஒரு முக்கிய அம்சம்.

ஈழத்தமிழர்களை தனித்துவமாகக் காண்பிக்கின்ற ஒரு முக்கிய அடையாளம். ஆனால் அந்த முக்கிய அடையாளம் ஈழத் தமிழர்களிடம் இருந்து பகிரங்கமாகவே கபளீகரம் செய்யப்படுகின்ற ஒரு சூழ்நிலை தற்பொழுது வடக்கு கிழக்கில் உருவாகியுள்ளது.

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பத்தாயிரம் ஏக்கர் காணியை சிறிலங்கா அரசாங்கம் கையகப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் பல வழிகளிலும் தமிழரது பாரம்பரிய பூமி அபகரிக்கப்பட்டு, அவர்களின் விகிதாசாரம் மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளாகிவிட்ட நிலையில், வடக்கிலும் தமிழரது விகிதாசாரத்தை குலைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்கின்ற குற்றச்சாட்டை இலகுவில் நாம் நிராகரித்துவிட முடியாது.

'வடக்கில் சிங்களவர்கள் முன்னர் பெருமளவில் வாழ்ந்தார்கள். பின்னர் அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். அவர்கள் விரும்பினால் அங்கு மீண்டும் சென்று வாழலாம். இரண்டு இனத்தவர்களும் கலந்து வாழ்வதே நல்லது என்று நான் நினைக்கின்றேன்" என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்ததை நாம் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டி இருக்கின்றது.

வடக்கில் பாரிய சிங்களக் குடியேற்றம் இடம்பெறப் போகின்றது என்பதை உறுதிப்படுத்தும்படியான ஒரு செய்தியை சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும் அண்மையில் வெளியிட்டிருக்கின்றார்.

'வடக்கு கிழக்கின் பாதுகாப்பு கருதி அங்கு நிரந்தர இராணுவ முகாம்களும், படைத்தளங்களும் அமைக்கப்படும் என்றும், அவற்றில் பணிபுரியும் இராணுவத்தினரின் குடும்பங்கள் தங்கி வாழ அந்தப் பிரதேசங்களில் இராணுவக் குடியேற்றங்கள் அமைக்கப்படும்" என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு தெரிவித்துள்ளதானது, வடக்கில் மிகப் பொரிய சிங்களக் குடியேற்றத்திற்கு அரசாங்கம் தயாராகின்றது என்கின்ற உண்மையை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றது.

வடக்கில் தற்பொழுது சுமார் ஒரு இலட்சம் சிங்களப் படையின் தங்கியிருக்கின்றார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் வடக்கில் குடிமனை அமைத்துக்கொடுத்து, அவர்களது குடும்பங்களை அங்கு குடியமர்த்தப்பட்டால், ஒரு குடும்பத்தில் குறைந்தது மூவர் என்று பார்த்தாலும் கூட மூன்று இலட்சம் சிங்களவர்கள் வடக்கில் உடனடியாகவே குடியமரும் சாத்தியம் இருக்கின்றது. வடக்கில் மூன்று இலட்சம் சிங்களவர்கள் நகர்கின்ற சந்தர்ப்பத்தில் அங்கு சிங்களப் பாடசாலைகள், அரச அலுவலகங்கள், சுகாதார நிலையங்கள், போக்குவரத்து சாதனங்கள் - என்று சிங்கள உத்தியோகத்தர்களும் பெருமளவில் செல்லவேண்டிய நிலை உருவாகும். அப்படிச் செல்லும் சிங்கள உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் போன்றோரின் குடும்பங்களும் வடக்கில் குடியேறவேண்டி ஏற்படும்.

இதனால் அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளுக்குள் வடக்கில் தமிழர்களது விகிதாசாரம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுவிடும் அபாயம் இருக்கின்றது.

இலங்கை என்பது ஒரு பௌத்த சிங்கள நாடாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சிங்களத் தலைவர்கள் காலாகாலமாக மேற்கொண்டுவருகின்ற நடவடிக்கையின் ஒரு முக்கிய நகர்வாக வடக்கு கிழக்கில் பாரிய அளவில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தும் காரியம் விரைவில் மிக மும்முரமாக முன்னெடுக்கப்படப்போகின்றது. இதில் சந்தேகம் இல்லை.

அண்மைக்காலப் போரில் தமிழர் தரப்பிற்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான தோல்வியானது, இந்த விடயத்தில் ஒரு பெரிய அனுகூலத்தை சிறிலங்காத் தலைவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இப்பொழுது எம்மிடையேயுள்ள ஒரு மிகப் பெரிய கேள்வி இதுதான்.

எமது தாயகப் பூமி பறிபோவதை நாம் தடுப்பது எப்படி?

எமது எதிர்கால இருப்பை நாம் தக்க வைத்துக்கொள்து எப்படி?

இதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?

இராணுவ ரீதியாக இதனைத் தடுக்கும் நிலையில் இன்று ஈழத் தமிழர் இல்லை.

அரசியல் ரீதியாகவும் எம்மால் இது முடியாது. அண்மைக்காலத்தில் நாம் பெற்றுள்ள தோல்வி என்பது இப்படியான ஒரு பாரிய தாக்கத்தினை எமக்கு ஏற்படுத்திவிட்டுள்ளது.

சர்வதேச இராஜதந்திர நகர்வுகள் மூலமும் இதனை எம்மால் ஒரு வரையறைக்கு மேல் மேற்கொள்ள முடியாது. இலங்கை என்கின்ற தேசத்திற்குள் யாரும் எங்கும் சென்றுவாழ்வதை சர்வதேச சமுகம் கேள்வி கேட்க முடியாது.

அப்படியானால் எமது தாயக நிலங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியே கிடையாதா?

எனக்குத் தெரிந்த ஒரு வழி இருக்கின்றது.

புலம் பெயர் தமிழர்கள் மிகக் கவனமாகத் திட்டமிட்டு அந்த வழியைக் கைக் கொண்டால், அவர்களால் தமது நிலங்களை ஓரளவு காப்பாற்றிக்கொள்ள முடியும்.

அப்படி என்ன வழி அது?

அது யூதர்கள் தமது நிலங்களை மீட்க கைக்கொண்ட ஒரு வழி.

தமது சொந்த நிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு, தமது நிலங்களை மற்றவர்களிடம் இழந்திருந்த நிலையில், 1900 வருடங்கள் அகதிகளாக உலகம் முழுவதும் அவல வாழ்க்கை வாழ்ந்த யூதர்கள், தமது நிலங்கை மீட்டெடுக்கக் கைக்கொண்ட ஒரு தந்திர முறை அது.

தமது தாயக பூமியை மீட்டுக் கொள்வதில் மிகப் பெரிய வெற்றியை யூதர்களுக்குப் பெற்றுக்கொடுத்த ஒரு முறை.

இஸ்ரேல் என்று தற்பொழுது அழைக்கப்படுகின்ற பாலஸ்தீன தேசம் அப்பொழுது துருக்கிய ஒட்டோமான் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

இஸ்ரேலின் (பலஸ்தீனத்தின்) பெரும்பான்மையான நிலங்கள் பலஸ்தீன அரோபியர்களுக்கே சொந்தமாக இருந்தது. ஆங்காங்கு சிறிய அளவிலேயே யூதர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பலஸ்தீனத்தில் வசித்துக்கொண்டிருந்த சில பணக்கார யூதர்கள் திடீரென்று மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக ஆங்காங்கே சில நிலங்களை வாங்கத் தொடங்கினார்கள். நில வங்கிகளையும் அமைத்துக் கொண்டார்கள்.

யூதர்கள் அமைத்திருந்த அந்த நில வங்கிகள் பலஸ்தீனர்களை மிகவும் கவர்ந்தது. 'யார் வேண்டுமானாலும் நிலம் வாங்குவதற்கு நில வங்கியில் பணம் பெறலாம். குறைந்த வட்டி விகிதங்கள். நிலங்களை விற்க விரும்புபவர்களும் வங்கி மூலமே நிலங்களை விற்கலாம். அதிக பணம் கொடுத்து நிலங்கள் வாங்கப்படும்."

இவ்வாறு மிகவும் கவர்ச்சிகரமான அறிவிப்பை அந்த நில வங்கிகள் வெளியிட்டதும், படிப்பறிவில்லாத கிராமப்புறத்து அரேபிய நிலச் சொந்தக்காரர்கள் தமது நிலங்களை, குறிப்பாக விவசாயத்துக்கு உதவாத தரிசு நிலங்களை வங்கியிடம் விற்பதற்கு முண்டியடித்தார்கள்.

அந்த நேரத்தில் நிலங்களுக்கு இருந்த பெறுமதியைப் பார்க்கிலும் அதிகமான தொகை கொடுத்து அந்த நில வங்கிகள் பலஸ்தீனர்களின் காணிகளை பெருமளவில் கொள்வனவு செய்தன. எதுக்கும் உபயோகமில்லாத காணிகளுக்குக் கூட பெருமளவு பணத்தைச் செலுத்தி கொள்வனவு செய்த நில வங்கிகளைப் பார்த்து அரேபியர்கள் நகைத்தார்கள்.

வங்கி உரிமையாளர்கள் தமது முட்டாள் தனத்தை எண்ணி விழிப்படைவதற்கு முன்னதாக தமது காணிகளை எப்படியாவது நல்ல விலைக்கு விற்றுவிடவேண்டும் என்று நினைத்த பலஸ்தீன அரேபியர்கள், போட்டிபோட்டுக்கொண்டு தமது காணிகளை விற்றுத் தீர்த்தார்கள்.

அந்த நில வங்கிகளும் தயங்கவில்லை. ஒரு ரூபாய் கூடப் பெறுமதியில்லாத காணிகளை பல இலட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தன.

உண்மையில் அதிஷ்ட தேவதைதான் நில வங்கி ரூபத்தில் வந்து தங்களுக்கு உதவிக் கொண்டு இருப்பதாக நினைத்துப் புளகாங்கிதம் அடைந்தார்கள் பலஸ்தீன அரேபியர்கள்.

தினமும் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்கள் அரேபியர்கள் கைகளில் இருந்து நில வங்கிகளின் கைகளுக்கு மாறிக் கொண்டிருந்தன.

இந்த நில வங்கிகளின் அதிகாரிகளில் அனேகமானவர்கள் இஸ்லாமியர்களாக அல்லது இஸ்லாமிய பெயரை உடையவர்களாக இருந்ததால், இந்த நில வங்கிகள் பற்றி எந்த அரேபியரும் சந்தேகம் கொள்வில்லை.

ஆனால் அந்த நில வங்கிகளை உண்மையிலேயே யூதர்கள்தான் இயக்கிக்கொண்டிருந்தார்கள்.

இந்த அளவு பெரும் தொகைப் பணத்தைக் கொடுத்து நிலங்களை வாங்குவதற்கு இந்த வங்கிகளுக்கு பணம் எங்கிருந்து வரும்?

அதைப் பற்றி அரேபிய பலஸ்தீனர்கள் கவலைப்படவேயில்லை.

உலகெங்கிலும் புலம்பெயர்ந்திருந்த யூதர்கள் பணத்தைத் திரட்டி வங்கிகளுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்.

நாளாந்த வருமானத்தில் இருந்து, புலம்பெயர்ந்த நாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடாத்தி, தெருக்களில் துண்டேந்தி, வியாபார நிலையங்களை நடாத்தி - என்று பல வழிகளிலும் பணத்தைச் சேகரித்த யூதர்கள், தமது தாயக பூமியை மிக இரகசியமாக மீட்டுக்கொண்டிருந்தார்கள்.

உலகைப் பொறுத்தவரையில் அது ஒரு வியாபாரம்.

பலஸ்தீன அரேபியர்களைப் பொறுத்தவரையில் அது அவர்களுக்கு பொருளாதார ரீதியாகக் கிடைத்த ஒரு இலாபம்.

ஆனால் யூதர்களைப் பொறுத்தவரையில் அது அவர்களது விடுதலைக்கான ஒரு வித்து. அவர்களது கனவு. அவர்களது இருப்பு. அவர்களது எதிர்காலம்.

அரேபியர்களிடம் இருந்த விலைக்கு வாங்கிய நிலங்களில் மெது மெதுவாக யூதர்கள் சென்று குடியேற ஆரம்பித்தார்கள். யாருக்கும் தெரியாமல் இந்த குடியேற்றங்கள் நிதானமாக, ஆரவாரம் இல்லாமல் நடைபெற்றன. ஒரு குறுகிய காலத்தில் பலஸ்தீனத்தில் யூதர்களின் விகிதாசாரம் கணிசமான எண்ணிக்கையை அடைய ஆரம்பித்தது.

உலக ஒழுங்கில் மாற்றம் ஏற்பட்டு ஒட்டோமான் பேரரசு பிரித்தானியாவினால் தோற்கடிக்கப்பட்டு, பலஸ்தீன தேசம் பிரித்தானியாவின் ஆளுகைக்குள் செல்ல ஆரம்பித்த நேரத்தில், நில வங்கிகள் வசமிருந்த காணிகளில் உலகெங்கிலும் இருந்த யூதர்கள் சட்ட ரீதியாகச் சென்று குடியமர ஆரம்பித்தார்கள்.

யூதர்கள் தமது தாய் நிலத்தை மீட்பதற்காக மேற்கொண்ட அந்த நில வங்கித் திட்டம் பற்றி கருத்துவெளியிடும் ஆய்வாளர்கள் மிகுந்த ஆச்சரியம் வெளியிடுகின்றார்கள். உலகில் எந்த ஒரு இனமும் இத்தனை திட்டமிட்டு ஒரு காரியத்தைச் செய்ததாக சரித்திரத்தில் இல்லை என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

மிக இரகசியமாக, ஒரு ஈ காக்கைக்குக்கூடத் தெரியாமல் யூதர்கள் மேற்கொண்ட அந்த நடவடிக்கை, அவர்கள் விடுதலைலைப் பெறுவதற்கான ஒரு முக்கிய நகர்வாக கணிக்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கில் எங்களுடைய நிலங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு புலம் பெயர் தமிழர்கள் ஏன் யூதர்களின் திட்டத்திற்கு ஒத்ததான ஒரு திட்டம்பற்றிச் சிந்திக்கக்கூடாது?

சிங்களத்தின் நில ஆக்கிரமிப்பை ஆதரித்துப் பேசுகின்ற தமிழ் அரசியல்வாதிகள் தாராளமாகப் பேசிக்கொண்டிருக்கட்டும்.

இந்தியாவின் கால்களில் விழுந்து எமது நிலங்களை மீட்டுத்தாருங்கள் என்று கதறிக்கொண்டிருக்கும் தமிழ் தலைவர்களும் ஒரு பக்கம் அதனைச் செய்துகொண்டிருக்கட்டும்.

'அடித்துப் பிடிப்போம்.." என்று வீர முழக்கம் இடும் அமைப்புகளும் மறுபக்கம் அதனைச் செய்யட்டும்.

பொருளாதார ரீதியாக புலம் பெயர் தமிழர் மத்தியில் இருக்கும் பலத்தை வைத்துக்கொண்டு, எமது எதிர்காலத்தை ஸ்திரப்படுத்த எப்படியான நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி எம்மில் ஒரு தரப்பு ஏன் சிந்திக்கக்கூடாது?

nirajdavid@bluewin.ch

Please Click here to login / register to post your comments.