ஸ்ரீலங்கா அரசின் போர் குற்றங்களும் அதற்கான ஆதாரங்களும்: தமிழர் அமைப்புக்கள் கவனம் எடுப்பார்களா?

ஆக்கம்: இரா.துரைரத்தினம்
முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு வெள்ளைக்கொடியுடன் சென்ற விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமல்ல நந்திக்கடல் இரட்டைவாய்க்கால் பகுதியில் ஏற்கனவே இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களான வே.பாலகுமாரன், யோகரத்தினம் யோகி உட்பட முக்கிய உறுப்பினர்கள் பலரும் இராணுவத்தினரின் தடுப்புக்காவலில் இருந்த வேளையில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரியவந்திருக்கிறது. சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு பொறுப்பான அதிகாரியாக செயற்படும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுகந்த ரணசிங்க தங்களிடம் யோகி பாலகுமாரன் ஆகியோர் இப்போது இல்லை (he did not have them.) என தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே இராணுவத்தினரிடம் சரணடைந்து அவர்களின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பாலகுமாரன், யோகி ஆகியோர் இப்போது அவர்களிடம் எப்படி இல்லாமல் போனார்கள் என்பதை பிரிகேடியர் ரணசிங்க தெரிவிக்கவில்லை. இராணுவத்தினரின் தடுப்புக்காவலில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என கேட்பதற்கும் இப்போது யாரும் இல்லை.

தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது உள்ளுரில் இருக்கும் மனித உரிமை அமைப்புக்களோ அல்லது ஊடகவியலாளர்களோ சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் பற்றி கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களை இருந்த இடம்தெரியாமல் செய்யும் அரசபயங்கரவாதமே இலங்கையில் நிலவுகிறது.

பாலகுமாரன், யோகி ஆகியோர் பற்றி தமக்கு தெரியாது, அவர்கள் தங்களிடம் சரணடையவில்லை, போரின் போது கொல்லப்பட்டிருக்கலாம் என்று இலங்கை அரசாங்கம் விளக்கமும் கொடுக்கலாம்.

ஆனால் இப்போது தம்வசம் இல்லை என கூறும் யோகி, மற்றும் பாலகுமாரன் உட்பட முக்கிய உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள், இராணுவத்தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கு ஆதாரபூர்வமான சாட்சிகள் உள்ளன. அதை ஸ்ரீலங்கா அரசாங்கம் மறுக்க முடியாது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பத்திரிகையான தினமின, Lankafirst.com, ஆகிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையும் பாலகுமாரன், யோகி ஆகியோர் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

Lankafirst.com என்ற இணையத்தளம் 2009 மே 31ஆம் திகதி இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தை ஆதாரமாக கொண்டு வெளியிட்ட செய்தியில் பின்வருவோர் இரட்டைவாய்க்கால் நந்திக்கடல் பகுதியில் வைத்து 53ஆவது இராணுவ படையணியிடம் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகளின் பொருண்மியப் பொறுப்பாளரும் முன்னாள் மட்டக்களப்பு அரசியல் பொறுப்பாளர் கரிகாலன், முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் யோகரத்தினம் யோகி, ஈரோஸ் தலைவரும், விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினருமான வே.பாலகுமாரன், முன்னாள் விடுதலைப்புலிகளின் பேச்சாளர் திலகர், விடுதலைப்புலிகளின் துணை அரசியல் பொறுப்பாளர் தங்கன், யாழ் அரசியல்துறை பொறுப்பாளர் இளம்பருதி, திருமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன், விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் பாப்பா, விடுதலைப்புலிகளின் நிர்வாகத்துறை பொறுப்பாளர் பூவண்ணன், பிரதி சர்வதேச பொறுப்பாளர் ஞானம் ஆகியோர் 53ஆவது படையணியிடம் சரணடைந்துள்ளனர் என்றும் இவர்கள் தற்போது இராணுவ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என அரசாங்க தகவல் திணைக்களத்தை ஆதாரம் காட்சி Lankafirst.com என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

அதேபோன்று 2009 யூன் 11ஆம் திகதி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பத்திரிகையான தினமின முன்பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் வவுனியாவில் உள்ள தடுப்பு முகாமில் வைத்து பாலகுமாரன் விசாரணைக்காக இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்தி வெளியிட்டிருந்தது.

மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் 2009 டிசம்பர் மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் பாலகுமாரனும் அவரது மகன் சூரியதீபனும் இரட்டைவாய்க்கால் நந்திக்கடல் பகுதியில் 2009 மே 16ஆம் திகதி 53ஆவது படையணியிடம் சரணடைந்ததாக தெரிவித்திருந்தது.

மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் யோகி, கரிகாலன், திலகர், தங்கன், இளம்பரிதி, எழிலன், பூவன்னன், தமிழினி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாக தெரிவித்திருந்தது.

பாலகுமாரன் கைது செய்யப்பட்டு இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட படம் ஒன்றும் இராணுவத்தினரின் இணையத்தளத்தில் அப்போது வெளியிடப்பட்டிருந்தது. அது சில நாட்களில் அந்த இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டு விட்டது.

இலங்கை அரசாங்கத்தின் ஊடகங்களே யோகி, பாலகுமாரன் ஆகியோர் சரணடைந்ததையும் அதன் பின் அவர்கள் இராணுவ விசாரணைக்காக முகாமிலிருந்து கொண்டு சென்றதையும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. ஆனால் இப்போது அவர்கள் தங்களிடம் இல்லை என விடுதலைப்புலிகளை தடுத்து வைத்திருக்கும் முகாம்களுக்கு பொறுப்பான அதிகாரி கூறியிருக்கிறார்.

இது மட்டுமல்ல விடுதலைப்புலிகளின் இராணுவபிரிவு தளபதிகளில் ஒருவரான பிரபா, இராணுவப்பேச்சாளர் மார்ஷல் என்று அழைக்கப்படும் இராசையா இளந்திரையன், சரணடைந்த 400க்கும் மேற்பட்ட முக்கிய பொறுப்பாளர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

காயமடைந்த நிலையிலிருந்த இளந்திரையனை அவரது மனைவி அழைத்து சென்று இரட்டைவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினரிடம் ஒப்படைத்ததார். இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட இளந்திரையனுக்கு அதன் பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று ரொபின்சன் என்ற முக்கிய போராளி ஒருவர் 2009ஆம் ஆண்டு டிசம்பர் வரை தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டவர் தற்போது தங்களிடம் அவர் இல்லை என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

2009 மே 19 ஆம் திகதிக்கு பின்னர் 15ஆயிரம் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. இச்செய்தியை அரசாங்க ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. ஆனால் தற்போது 11686பேர் மட்டுமே தங்களிடம் சரணடைந்ததாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் ரணசிங்க தெரிவித்திருகிறார்.

அவ்வாறானால் மிகுதி 3500பேருக்கும் என்ன நடந்தது என பிரிகேடியர் ரணசிங்கவிடம் கேள்வி கேட்தற்கு யாரும் இல்லாத சூழலே இலங்கையில் காணப்படுகிறது.

இராணுவத்தினரிடம் சரணடைந்த, இராணுவத்தினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த யோகி, பாலகுமாரன் , கரிகாலன், தங்கன், திலகர், உட்பட சரணடைந்த போராளிகள் தங்களிடம் இல்லை என இலகுவாக அரசாங்கம் தப்பிக்கொள்ள முடியாது.

சரணடைந்தவர்களை படுகொலை செய்வது சர்வதேச மனிதாபிமானச்சட்டங்களை மீறும் செயல் மட்டுமல்ல மிகப்பெரிய போர்க்குற்றமும் ஆகும். இலங்கையின் போர் குற்றம் பற்றி பேசுபவர்கள் இந்த விடயங்களை ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

யோகி, பாலகுமாரன், கரிகாலன் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள் என்பதையும் பின்னர் விசாரணைக்காக முகாமிலிருந்து கொண்டு செல்லப்பட்டார்கள் என்பதையும் அரசாங்கம் மறுக்க முடியாது. அவ்வாறு மறுப்பதாக இருந்தால் சரணடைந்ததாக செய்தி வந்தபோது அல்லது விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டதாக செய்தி வந்தபோது அரசாங்கம் அதை மறுத்திருக்க வேண்டும். இராணுவ அதிகாரிகளையும் தகவல் திணைக்கள அதிகாரிகளையும் ஆதாரம் காட்டியே அரசாங்க பத்திரிகையான தினமின உட்பட இலங்கையில் உள்ள பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இலங்கையில் உள்ளவர்கள் இந்த விடயங்கள் பற்றி பேச முடியாவிட்டாலும் இலங்கைக்கு வெளியில் இருக்கும் மனித உரிமை அமைப்புக்கள் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர் அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றவாளியாக்குவதற்கு சரியான ஒரு ஆயுதமாக இந்த விடயத்தை கையில் எடுக்க வேண்டும்.

தினமின மற்றும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கை என்பனவற்றை ஆதாரமாக வைத்து சரணடைந்தபின்னரே விடுதலைப்புலி உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற போர்க்குற்றத்தை நிரூபிக்க வேண்டும்.

தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்காமல் இன்னொருவர் பெயர்களில் அறிக்கை விட்டுக்கொண்டிருக்காமல் இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றவாளியாக்குவதற்கான ஆதாரங்களை சர்வதேசத்தின் முன் சமர்ப்பிப்பதற்கான உருப்படியான வேலைகளை செய்ய வேண்டும்.

போரினால் அழிந்து போன மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் அவர்களுக்கு நீதியான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்க வேண்டுமானால் இலங்கை அரசு ஒரு போர்க்குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட வேண்டும். எனவே இதுபோன்ற ஆதாரங்களுடன் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் உலகநாடுகளின் இராஜதந்திரிகள், ஐக்கிய நாடுகள் சபை போன்ற உயர்மட்டங்களை சரியாக அணுக வேண்டும்.

அந்த உருப்படியான காரியங்களை மேற்குலக நாடுகளில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்பவர்கள் செய்வார்களா?

thurair@hotmail.com

Please Click here to login / register to post your comments.