உலகின் மிகப்பெரிய இராணுவ இரகசிய அம்பலம்

இவ்வாரம் "விக்கி லீக்ஸ்" என்ற இணையத்தளம் அம்பலப்படுத்தியிருக்கும் ஆவணங்கள் அமெரிக்க சரித்திரத்தில் மாத்திரமல்ல, உலக சரித்திரத்திலேயே வெளிப்படுத்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய இராணுவ இரகசியங்கள் என்று வர்ணிக்கப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் (நேட்டோ) படைகள் நடத்திவருகின்ற போர் பற்றிய சுமார் 92 ஆயிரம் செய்திக் குறிப்புகளும் இரகசியச் செய்திப் பரிமாற்றங்களும் புலனாய்வுத் துறையின் அவ்வப்போதைய தகவல்களும் இராணுவ நடவடிக்கைகள் பற்றிய இரகசியங்களும் இந்த ஆவணங்களில் காணப்படுகின்றன. இவை தொடர்பில் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே அமெரிக்காவும் பிரிட்டனும் அதிர்ச்சியுடனும் ஏமாற்றத்துடனும் அவற்றின் பிரதி

பலிப்புகளை வெளியிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இணையத் தளத்தில் வெளியான ஆவணங்களை அமெரிக்காவின் நியூயோர்க் ரைம்ஸ், பிரிட்டனின் கார்டியன், ஜேர்மனியின் டெர் ஸ்பீகெல் பத்திரிகைகள் பெரும் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்திருக்கின்றன.

இராணுவ இரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் அமெரிக்காவினதும் அதன் நேச அணிகளினதும் துருப்புகளுக்கான ஆபத்து அதிகரிக்கக்கூடும் என்று வெள்ளை மாளிகை கவலை தெரிவித்திருக்கிறது. தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் தெரிவித்திருக்கிறார். இதேபோன்ற அபிப்பிராயத்தையே பிரிட்டனும் வெளியிட்டிருக்கிறது. ஆனால், அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டுப் படைகளின் நடவடிக்கைகளினால் ஆப்கானிஸ்தானில் குடிமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து அமெரிக்க மக்களுக்கும் உலக மக்களுக்கும் மறைத்தமைக்காக வருத்தம் தெரிவித்து வாஷிங்டனோ லண்டனோ ஒருவார்த்தை கூடப் பேசவில்லை. பதிலாக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா சரியான தந்திரோபாயத்தையே கையாளுகிறது என்றும் அதே தந்திரோபாயத்தைத் தொடரப் போவதாகவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இரகசிய ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்ட மறுநாள் இந்தியப் பத்திரிகையொன்றில் தீட்டப்பட்டிருந்த ஆசிரிய தலையங்கத்தில் "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்கிற பழமொழி கச்சிதமாகப் பொருந்துவது பாகிஸ்தானுக்கா அல்லது அமெரிக்காவுக்கா என்று சர்வதேச அளவில் ஒரு பட்டிமன்றமே நடத்தி விவாதித்தாலும் கூட முடிவுகாண முடியாது%27 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. விக்கி லீக்ஸ் இணையத்தளம் அமெரிக்காவினதும் பாகிஸ்தானினதும் இரட்டை வேடத்தைக் கலைத்து விட்டிருக்கிறது. நேட்டோ அமைப்பின் சர்வதேசப் படைகள் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக நடத்திவரும் போரில் அமெரிக்காவின் கூட்டாளியாகத் தன்னை இணைத்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் தனது புலனாய்வு அதிகாரிகளை இரகசிய இடங்களில் தலிபான் தீவிரவாதிகளைச் சந்திக்க அனுமதித்திருப்பதாக ஆவணங்களின் மூலம் தெரியவந்திருக்கிறது. ஆனால், அமெரிக்கா இதுவரை அந்த விவகாரம் குறித்து இஸ்லாமாபாத்துடன் பிரச்சினை கிளப்புவதற்கு முன்வரவில்லை. இது ஆப்கானிஸ்தான் நெருக்கடியைப் பொறுத்தவரை வாஷிங்டன் எதிர்நோக்குகின்ற திரிசங்கு நிலையைப் பிரகாசமாக வெளிக்காட்டுகிறது.

இராணுவ இரகசியங்கள் அம்பலமான விவகாரத்தை ஒபாமா நிருவாகம் அமெரிக்க உள்நாட்டுச் சட்டமீறலாகக் குறுக்கிப் பார்ப்பதற்கே முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாக நோக்குகையில், ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் பிரசன்னம் அந்த நாட்டை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருப்பதுடன் தலிபான்களையும் பலமடையச் செய்து கொண்டிருக்கிறதே தவிர, வேறு எதையுமே சாதிக்கவில்லை. இந்த நிலைவரம் தொடர்பிலான சர்வதேச விசனம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால், அமெரிக்கா அதை அலட்சியம் செய்து கொண்டேயிருக்கிறது. கடந்த 8 வருடகாலத்தில் ஆப்கானிஸ்தானில் போருக்கு அமெரிக்கா 30,000 கோடி டொலர்களைச் செலவு செய்துவிட்டதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், போர்த்திசை தடுமாறிக்கொண்டே செல்கிறது. 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்ற பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் படுமோசமான மனிதஉரிமை மீறல்களையும் போர் தொடர்பான சர்வதேச சட்ட விதி மீறல்களையும் மூடிமறைப்பதற்கான வசதியான போர்வையாக மாத்திரமே இருந்து

வருகிறது என்பதை விக்கி லீக்ஸ் வெளியிட்டிருக்கும் ஆவணங்கள் அம்பலப்படுத்தி நிற்கின்றன!

Please Click here to login / register to post your comments.