கறுப்பு ஜூலை நினைவாக...

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராகத் தூண்டிவிட்ட இனவன்செயல்கள் இருபத்தியேழு வருடங்களுக்கு முன்னர் சரியாக இன்றைய தினத்திலேயே நாடு பூராவும் பரவத்தொடங்கின. 1983 ஜூலை 23 வெள்ளிக்

கிழமை இரவு யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலியில் தமிழ் இளைஞர்கள் மேற்கொண்ட கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் அரசாங்கத்திற்குள் இருந்த இனவெறிச் சக்திகள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு ஏற்கெனவே திட்டமிட்டிருந்த வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கு வசதியான வாய்ப்பாக அமைந்தது. இலங்கையின் வரலாற்றில் அந்த ஜூலை மாதம் ஒரு எல்லைக்கோடு. எதுவுமே மீண்டும் முன்னரைப் போன்று இருக்கப்போவதில்லை என்பதை உணர்த்திய அனர்த்தங்கள் மிகுந்த அந்த மாதத்தை காலஞ்

சென்ற பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா கறுப்பு ஜூலை என்று வர்ணித்திருந்தார். நேற்றைய தினம் கறுப்பு ஜூலை தொடர்பாக கொழும்பு ஆங்கில வாரப்பத்திரிகையொன்றில் கட்டுரையொன்றை எழுதிய சிங்கள அரசியல் விமர்சகர் ஒருவர் அந்த ஜூலைக்குப் பிறகு இலங்கையில் சகலதுமே கறுப்பாகவே இருந்து வருகிறது என்று குறிப்பிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் தலைவிரித்தாடிய வன்முறைகளின் கொடூரம், அதனால் விளைந்த உயிரிழப்புகள் மற்றும் சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் மனங்களில் வேரூன்றிய வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமும் உண்மையில் கணிப்பிடமுடியாதவையாகும். கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நீடித்த உள்நாட்டுப் போரில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளும் சொத்து அழிவுகளும் அதன் விளைவான அவலங்களும் கறுப்பு ஜூலையில் அவர்கள் அனுபவித்தவற்றை விட எத்தனையோ மடங்கு அதிகமானவை என்றபோதிலும், அந்த ஜூலையே தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் பெருகுவதற்கு வழிவகுத்து உள்நாட்டுப் போரை மூளவைத்தது என்பதால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் அதற்கு ஒரு பிரத்தியேகமான எதிர்மறைக் குறியீடு இருக்கிறது.

கறுப்பு ஜூலைக்குப் பின்னரான காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கெனக் கூறிக்கொண்டு இராணுவத்தீர்விலேயே அக்கறை காட்டின. சகல ஜனாதிபதிகளுமே உலக ஒப்பாசாரத்துக்கு அரசியல் தீர்வைப் பற்றிப் பேசினார்களேதவிர, இராணுவத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளுக்குத் தங்களாலியன்ற பங்களிப்பை வழங்கிவிட்டே சென்றார்கள். இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேச சமூகத்தின் பங்களிப்போ இலங்கையில் அரசியல் தீர்வொன்று காணப்படுவதற்கு உதவுவதற்குப் பதிலாக இராணுவத் தீர்வை நோக்கிய செயன்முறைகள் முனைப்படைவதை உறுதிசெய்ததையே காணக்கூடியதாக இருந்தது. இறுதியில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நிகழ்வுப் போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வன்னியில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்குக் கிடைக்கச் செய்தன. போரில் அரசாங்கப் படைகள் வெற்றி பெறுவதற்கு வழிவகுத்த உருப்படியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய ஒரே ஜனாதிபதி தானே என்று பெருமைப்படும் ராஜபக்ஷ போர் வெற்றியை அடிப்படையாகக் கொண்டே தனது சகல அரசியல் வியூகங்களையும் வகுத்து சிங்கள மக்கள் மத்தியில் உச்சபட்ச அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்திருக்கிறார்.

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபிறகு கறுப்பு ஜூலையை நாம் நினைவுகூருவது இது இரண்டாவது தடவையாகும். இச்சந்தர்ப்பத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் நிலை என்னவாக இருக்கிறது? கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் 10 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் போரின் விளைவான அவலங்களில் இருந்து இன்னமும் விடுபடமுடியாமல் பல்வேறு வகையான இடர்பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி புனர்வாழ்வு அளிப்பதற்கான பணிகளைக் கூட அரசாங்கம் வெளியுலகைத் திருப்திப்படுத்தும் நோக்குடன் அசமந்தமாக மேற்கொள்கின்றதேதவிர, சொந்த மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குப் பயனுறுதியுடைய செயன்முறைகளை முன்னெடுக்க வேண்டுமென்ற மானசீகமான அக்கறையை அதனிடம் காணமுடியவில்லை. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அவசியமான உருப்படியான மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளிலோ அல்லது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதை நோக்கிய அரசியற் செயன்முறைகளிலோ அரசாங்கத்துக்கு அக்கறையில்லை என்பதை சர்வதேச சமூகம் உணரத்தொடங்கியிருப்பதன் விளைவே இராஜதந்திர ரீதியில் அரசாங்கம் இன்று எதிர்நோக்கும் சிக்கல்கள். ஆனால், இலங்கையை வழிக்குக் கொண்டுவரக்கூடிய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் சர்வதேச சமூகம் இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

போரின் முடிவுக்குப் பிறகு தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவ மயத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகிறது. தமிழ்ப் பகுதிகளில் மேலும் கூடுதலான எண்ணிக்கையில் நிரந்தரமான இராணுவக் கட்டமைப்புகளை நிறுவுவதற்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டு வருகிறது. தமிழ்ப் பகுதிகள் அநேகமாக பரந்த இராணுவ கொத்தளங்களாகவே காட்சி தருகின்றன. தங்களது சொந்தப் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு அரசாங்க அனுசரணையுடனான குடியேற்றங்கள் மூலமாக குடிப்பரம்பலின் இனவிகிதாசாரம் பாரதூரமான முறையில் மாற்றியமைக்கப்படப் போகிறது என்று தமிழ் மக்கள் அஞ்சுகிறார்கள். இதைத் தடுக்கக்கூடிய அரசியல் வலு தமிழ் மக்களிடம் இன்று இல்லை. வெளிநாடுகளிடம் குறிப்பாக இந்தியாவிடம் செய்யக்கூடிய முறைப்பாடுகள் பயனளிக்குமென்ற நம்பிக்கையும் தமிழ் மக்களிடம் பெரும்பாலும் இல்லை.போர் முடிவுக்கு வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிவுக்குவரவில்லை. ஆனால், அரசாங்கத்தினதும் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தினதும் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் நோக்கும் போது இன்று இனப்பிரச்சினை என்ற ஒன்று இருக்கிறதென்று அவர்கள் நினைப்பதாக இல்லை!

Please Click here to login / register to post your comments.