சிங்கள தேசம் விரும்புவதை தலைமேல் கொண்டு செயற்படும் புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள்

ஆக்கம்: இரா.துரைரத்தினம்
தமிழீழ தேசிய தலைவர் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை புலம்பெயர்ந்த தமிழர்களிடம் ஒப்படைத்திருக்கிறார் என தங்களை தமிழ் தேசியவாதிகள் என சொல்லிக் கொள்பவர்கள் இப்போது அடிக்கடி சொல்லி வருகின்றனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட போராட்டத்தை இவர்கள் முன்னெடுக்கிறார்களா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

அதற்கு மாறாக புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என சிங்கள தேசமும் அதற்கு தலைமை தாங்கும் மகிந்த ராஜபக்சவும் விரும்புவதை தங்களை தமிழ் தேசிய ஊடகங்கள் என்றும் புலம்பெயர்ந்த தமிழ் தேசியவாதிகள் என்றும் கூறிக்கொள்பவர்கள் தலைமேல் கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.

முன்னர் எல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களையும் தமிழீழத்திற்கு ஆதரவான செயற்பாடுகளையும் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் பெருந்தொகையான நிதியை செலவு செய்து பெரும் செயற்திட்டங்களை மேற்கொண்டு வந்தது.

உதாரணமாக ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள இலங்கை தூதரங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடுகளை தடுப்பதற்கு என தனியான பிரிவுகளை அமைத்து பெருந்தொகையான நிதிகளை செலவழித்து பிரசாரங்களை மேற்கொண்டு வந்தது. அந்தந்த நாடுகளில் உள்ள ஊடகங்கள் ஊடாகவும் மேற்குலக நாடுகளில் இலங்கை அரசாங்கத்திற்கு சார்பாக இயங்கும் தமிழ் இணையத்தளங்கள் மற்றும் ஒலி ஒளி ஊடகங்கள் ஊடாகவும் இந்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்போது அதற்கான தேவை இல்லாமல் போய்விட்டதாகவும் இதனால் இலங்கை அரசாங்கத்திற்கு பெருமளவு நிதி மிச்சப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களும் நபர்களும் செய்து வந்த வேலையை இப்போது தமிழ் தேசிய ஊடகங்கள் தமிழ் தேசியவாதிகள் என்று தங்களை கூறிக்கொள்பவர்கள் செய்து வருகின்றனர்.

இதை நான் கூறுகின்ற போது தமிழ் தேசியவாதிகள் என தங்களை சொல்பவர்களுக்கும் சரி சிங்கள தலைமைகளான மகிந்த ராஜபக்ச தரப்புகளுக்கும் சரி என்மேல் பெரும்கோபம் ஏற்படலாம். முடிந்தால் மண்டையில் போடவேண்டும் என்று கூட துடிக்கலாம். ஆனால் சிங்கள தரப்பு விரும்புவதைத்தான் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் தேசியவாதிகள் செய்கிறார்கள் என்பதுதானே உண்மையாக இருக்கிறது.

சிங்கள தேசம் விரும்புவதை தமிழீழ தேசியவாதிகள் என தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் செய்கிறார்கள் என்பதற்கு இங்கு இரு உதாரணங்களை மட்டும் சொல்கிறேன். ஏனைய விடயங்களை வேறு ஒரு சந்தரப்பத்தில் கூறலாம் என நினைக்கிறேன்.

முதலாவது முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பின் 2009 மே 19 க்குப்பின் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட வேண்டும் என சிங்கள தேசம் விரும்பியது.

இரண்டாவது மீண்டும் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகும் என காரணம் காட்டி தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என கருதும் கரையோரப் பிரதேசங்களை பாதுகாப்பு உயர்வலயமாக்கி அப்பிரதேசங்களில் மீள் குடியேற்றங்களை தடுப்பது. பெரும்கடல்வளங்கள் தமிழர் கைகளுக்கு செல்லாமல் தாங்களே அதை அபகரித்து கொள்வது.

இலங்கையின் முதலாவது விருப்பத்தை தற்போது புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் உள்ள சிலரும், இரண்டாவது விடயத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் என சொல்லிக்கொள்ளும் பழ.நெடுமாறன், வைகோ போன்றவர்கள் இலங்கை அரசுக்கு உதவி வருகிறார்கள் என்பதுதான் உண்மை.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பின் 2009 மே 19 க்கு பின் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட வேண்டும் என சிங்கள தேசம் விரும்பியது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்த குழப்பங்களுக்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரண செய்தி தொடக்கம் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டது வரை சில விடயங்களை இலங்கை அரசாங்கம் மிக கனகச்சிதமாக செய்திருக்கிறது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என ஒரு தரப்பும், இல்லை அவர் உயிரோடுதான் இருக்கிறார். மீண்டும் வருவார். போராட்டம் தொடரும் என ஒரு தரப்பும் கூறி ஒருவருக்கு ஒருவர் மோதவேண்டும், குழப்பம் அடையவேண்டும், அதனால் இரண்டு மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு தங்களுக்குள் மோதி அழிந்து போகவேண்டும் என்றுதான் இலங்கை அரசாங்கம் விரும்பியது.

அதற்காகவே பிரபாகரனின் மரணச்செய்தியையும் படங்களையும் வெளியிட்ட போது மாறுப்பட்ட முன்னுக்கு பின் முரணான செய்திகளை வெளியிட்டது. சிலர் சொல்லலாம் இலங்கை அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக மாறுபட்ட செய்திகளை வெளியிடுகிறது. முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிடுகிறது என. ஆனால் அதுவல்ல உண்மை. இலங்கை அரசாங்கம் அனைத்தையும் மிகத்தெளிவாக தெரிந்துகொண்டு முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிடும் போதுதான் தமிழர்கள் குழப்பம் அடைவார்கள் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு செயற்பட்டது என்பதுதான் உண்மை.

இந்த உண்மைகளை சரியாக புரிந்து கொண்டு தமிழர்கள் குழப்பம் அடையாமல் தங்களுக்குள் மோதிக்கொள்ளாமல் யதார்த்தங்களை உணர்ந்து செயற்பட்டிருந்தால் இலங்கை அரசாங்கத்தின் எண்ணம் விரும்பம் தோல்வியடைந்திருக்கும்.

ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்தார்கள் இலங்கை அரசாங்கம் விரும்பியது போல எதிர்பார்த்தது போல அரசாங்கம் வெளியிட்ட தகவல்களை வைத்துக்கொண்டு தங்களுக்குள் மோத ஆரம்பித்தார்கள். ஒன்று இரண்டு என பல பிரிவுகளாக பிளவுபட்டுப் போனார்கள். இப்போது எத்தனை பிரிவோ எனக்கு தெரியவில்லை. ஆனால் அத்தனை பிரிவும் இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்தைத்தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தது கே.பியின் விடயம். கே.பி கைது செய்யப்பட்டாரா, காட்டிக்கொடுக்கப்பட்டாரா, சரணடைந்தாரா, என்பது எனக்கு தெரியாது. அவருக்கு ஆதரவாகவோ எதிராகவோ வாதிடுவதும் எனது நோக்கமல்ல. ஏனெனில் கே.பி. என்ற நபரின் அடிமுடி பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

ஆனால் கே.பி என்ற நபரை கைது செய்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்த பின் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் எத்தகைய குழப்பங்கள் ஏற்பட வேண்டும் என சிங்கள தேசம் விரும்பியதோ அதை புலம்பெயர்ந்த தமிழர் சமூகம் செய்து வருகிறது என்பதுதான் வேதனையான விடயம்.

கே.பியை வைத்து மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் இலங்கை அரசாங்கம் குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதை தமிழர் சமூகம் புரிந்து கொண்டு செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதிர்மறையான விடயங்கள்தானே இங்கு நடைபெற்று வந்திருக்கின்றன.

கே.பி கைது செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்ட பின் மேற்குலக தமிழர் சமூகம் அவர் பற்றி பேசுவதை நிறுத்தியிருக்க வேண்டும், புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் அவர் பற்றி இலங்கை அரசாங்கம் வெளியிட்ட தகவல்களை வெளியிடாது விட்டிருக்க வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கே.பி அதை சொன்னார், இதைச்சொன்னார் என தினமும் இலங்கை அரசாங்கம் தகவல்களை வெளியிட்டுவந்தது. இலங்கை அரசாங்கத்தின் இந்த பிரசாரத்திற்கு இலங்கை அரச ஊடகங்களை விட தமிழ் தேசிய ஊடகங்கள் என தம்மை சொல்லிக்கொள்பவர்கள்தான் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டனர்.

கே.பி. அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கப்போகிறார் அல்லது தலைகீழாக நிற்கப்போகிறார் என இலங்கை அரசாங்கம் சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும். அதை கேட்டு குழம்புவர்களும் துரோகி அது இது என குய்யோ முறையோ என கத்தி திரிவதும்தான் மிகப்பெரிய தவறு. இவ்வாறு குழம்பவேண்டும் என இலங்கை அரசாங்கம் விரும்பியது. இதனால்தான் நான் சொல்கிறேன். இலங்கை அரசாங்கம் விரும்புவதை புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்கிறார்கள் என.

கே.பி பற்றி இலங்கை அரசாங்கம் வெளியிடும் எந்த செய்திகளையும் கணக்கில் எடுக்காமல் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அல்லது அவற்றைக்கேட்டு மேற்குலக நாடுகளில் தங்களுக்குள் மோதிக்கொள்ளாமல் இருந்தால் உண்மையில் இலங்கை அரசுக்கு பெரும் தோல்வியாக அமைந்திருக்கும். அந்த தோல்வியை தேடிக்கொடுக்கும் சந்தர்ப்பத்தை சாதுரியத்தை தமிழர்கள் ஏன் சரியாக கையாளவில்லை?

அடுத்தது மீண்டும் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகும் என காரணம் காட்டி தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என கருதும் கரையோரப் பிரதேசங்களை பாதுகாப்பு உயர்வலயமாக்கி அப்பிரதேசங்களில் மீள் குடியேற்றங்களை தடுப்பது.

கடல்வளங்கள் தமிழர் கைகளுக்கு செல்லாமல் தாங்களே அதை அபகரித்து கொள்வது என்ற இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு மேற்குலக நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களும் தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் என சொல்லிக்கொள்பவர்களும் துணைபோய் கொண்டிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட போது அதை தடுக்க முடியாமல் இருந்த தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மீண்டும் ஆயுதப்போராட்டம் வெடிக்கும், 5ஆம் கட்ட ஈழப்போரை தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் தலைமை ஏற்று நடத்துவார் என ஐயா நெடுமாறன், வைகோ, தம்பி சீமான் போன்றவர்கள் கூறுவதை கேட்டு மெய்சிலிர்க்கிறது என உங்களில் பலர் சொல்லாம். ஆனால் இந்த வீராவேச வசனங்கள் இலங்கை அரசுக்கு சாதகமான அமைந்திருக்கிறது என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்?

அண்மையில் மீள்குடியேற்றம் பற்றி நடந்த மகாநாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நாகர்கோவில் தொடக்கம் சுண்டிக்குளம் வரையான 11 கிராமங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பலவன்பொக்கணை தொடக்கம் கொக்குத்தொடுவாய் வரையான 12 கிராமங்களுமாக மொத்தம் 23 கரையோர கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்ய முடியாது என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கு பாதுகாப்பு தரப்பினர் கூறிய ஒரே காரணம். தமிழ்நாட்டில் மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டிலிருந்து விடுதலைப்புலிகள் கடல்மார்க்கமாக ஊடுருவுதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே நாகர்கோவிலிருந்து கொக்குத்தொடுவாய் வரையான 90 கிலோ மீற்றர் தூரமுள்ள கரையோர பிரதேசங்களில் மீள்குடியேற்றத்திற்கு இப்போதைக்கு அனுமதிக்க முடியாது என கூறியிருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் கடல்மார்க்கமாக ஊடுருவுவார்கள் என கூறி இந்த பிரதேசங்களை பாதுகாப்பு உயர்வலயமாக பிரகடனப்படுத்தி மீள்குடியேற்றங்களை தடுக்க நினைக்கும் பாதுகாப்பு படைத்தரப்பினருக்கு தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ உணர்வாளர்கள் என கூறிக்கொள்ளும் பழநெடுமாறன், வைகோ சீமான் போன்றவர்கள் 5ஆம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என பகிடிக்குத்தான் சொல்கிறார்கள். அதை நம்பி மீள்குடியேற்றத்தை தடுக்க வேண்டாம் என எப்படி பாதுகாப்பு படையினருக்கு கூறுவது?

தமிழ்நாட்டில் உள்ளவர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் மீண்டும் ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என கூற வேண்டும். அதை வைத்து கரையோரப் பிரதேசங்களில் மீள்குடியேற்றத்தை நிறுத்த வேண்டும், கடல்வளங்களை தாங்களே அபகரித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் சிங்கள தேசத்தின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்புக்கு துணைபோவர்கள் வேறு யாரும் இல்லை. தமிழ்நாட்டிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள தமிழீழ உணர்வாளர்கள் என சொல்லிக்கொள்பவர்கள்தான்.

ஐயா தமிழீழ உணர்வாளர்களே ஆயுதப்போராட்டத்தை தொடங்க வேண்டாம் என நான் சொல்லவில்லை. தொடங்குங்கள். முதலில் புதுடில்லியில் ஆயுதப்போராட்டத்தை தொடங்குங்கள். ஏனெனில் அவர்கள்தானே தமிழர்களை அழித்ததில் பெரும் பங்கு வகித்தவர்கள். அதை விட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை படுகொலை செய்யும் போது புதுடில்லி தானே ஆதரவாக செயற்படுகிறது.

எனவே நீங்கள் தொடங்கப்போகும் 5ஆம் கட்ட ஈழப்போரை புதுடில்லியில் தொடங்குங்கள். புதுடில்லியை கைப்பற்றிவிட்டால் இலங்கையை கைப்பற்றுவது சின்னவிடயம் அல்லவா?

R.Thurairatnam
thurair@hotmail.com

Please Click here to login / register to post your comments.