தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத நடவடிக்கைகள் இரு தேசிய இனங்களும் கைகோர்க்கத் துணை நிற்குமா?

எதிர்பாராத விதமாக இந்நாட்டின் ஏழு மாவட்டங்களிலும் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள், சொத்திழப்புகள், இடப்பெயர்வுகள் உட்பட பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கும் எனது மனப்பூர்வமான அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன், அவர்களின் இயல்பு வாழ்வு வெகு விரைவில் திரும்பவேண்டும் எனப்பிரார்த்தித்துக்கொண்டு எனது கன்னி உரைய ஆரம்பிக்கின்றேன்.

தென்னிலங்கை மக்கள் முகங்கொடுக்கும் அவலங்களுக்காக மனம் நெகிழும் நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எமது மக்கள் அனுபவித்த அவலங்களையம் இன்றுவரை அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் இங்கு நினைவுகூராமல் இருக்கமுடியாது. கடந்த வருடம் இதே காலப்பகுதியில் நாற்பதினாயிரத்துகும் மேற்பட்ட எமது மக்கள் கொல்லப்பட்டனர்.ஆயிரக்கணக்கானோர் ஊனமுற்றவர்களாக்கப்பட்டனர். ஏராளமானோர் காணாமற்போயினர். பலகோடி பெறுமதியான சொத்துகள் அழிக்கப்பட்டன. இறுதியில் சுமார் 4 இலட்சம் மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டனர்.

அதேவேளை, பல ஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.இப்போரில் தங்கள் உயிர்களை இழந்த படைவீரர்களுக்காக வெற்றி வாரம் கொண்டாடி அவர்களை நினைவு கொள்கிறீர்கள். 18 ஆம் திகதி விளக்கேற்றி அவர்களை அஞ்சலி செலுத்துகிறீர்கள். நாட்டுக்காக உயிரிழந்தவர்களைப் போற்றுவது ஒரு முக்கியமான தேசிய கடமையாகும்.

இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் நாம் எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையை இழந்துள்ளோம். எமது மக்கள் உயிரிழந்த நிலையில் புதைக்கப்பட்டும் புதைக்கப்படாமலும் சடலங்களாகக் கைவிடப்பட்ட முள்ளிவாய்க்கால் இன்று தடை செய்யப்பட்ட பிரதேசம். நாம் அங்கு சென்று அஞ்சலி செலுத்த முடியாது.அதுமட்டுமன்றி எமது மக்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்த எமது இளைஞர்களின் கல்லறைகள் இடித்து நொறுக்கப்பட்டுவிட்டன.இவை இருந்த பிரதேசங்கள் முள்வேலியிடப்பட்டுத் தடுக்கப்பட்டுவிட்டன.அதாவது எமது மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டுவிட்டது.

இத்தகைய எமது உணர்வுகளை மதிக்காத கொடூரமான பாரபட்ச நடவடிக்கைகள் இந்நாட்டில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவர உதவுமா? தமிழ் மக்கள் தாம் அடக்கி ஒடுக்கப்படவில்லை என்ற உணர்வை ஏற்படுத்த உதவுமா? இந்நாட்டின் சுபிட்சத்தை நோக்கிய பயணத்தில் எம் இரு தேசிய இனங்களும் கரம் கோர்த்து நடைபயிலத் துணைநிற்குமா?

இக்கேள்விகளைத் தங்களின் மேலான சிந்தனைக்கு விட்டு விடுகிறேன். நாங்களும் உங்களைப் போன்று சகல உரிமைகளும் பெற்ற மக்களாக இந்தத் தேசத்தைக்கட்டி எழுப்பும் பணியில் இணைந்துகொள்ளும் எங்கள் அபிலாஷையை நியாய பூர்வமாகவும் திறந்த மனதுடனும் பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இலங்கைச் சட்டசபையில் சிங்களம் மட்டுமே அரச கரும மொழியாக இருக்கவேண்டும் என பிரேரணை கொண்டுவரப்பட்டபோது தமிழும் சிங்களமும் ஆட்சி மொழிகளாக இருக்கவேண்டும் எனத் திருத்தம் கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா, அதுமட்டுமன்றி இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி வேண்டுமென அங்கு வாதிட்டவரும் அவரே, சந்தர்ப்ப வசத்தால் அவர் 1956 இல் தனிச் சிங்களச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியபோதும் தமிழ்மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு மதிப்பளித்து பண்டாசெல்வா ஒப்பந்தத்தை உருவாக்கினார். துரதிர்ஷ்டவசமாக இனவாதிகள் கொடுத்த நெருக்கடிகள் காரணமாக அவரே அதைக் கிழித்தெறிய நிர்ப்பந்திக்கப்பட்டார். பண்டாசெல்வா ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த நாடு சந்தித்துவிட்ட பேரவலங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படாமல் போயிருக்கும். இந்தச் சின்னஞ்சிறு தீவு இப்படியானதொரு கொடிய பெரும் போரைச் சந்திக்க வேண்டிய தேவை எழுந்திருக்காது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அவரால் நிறைவேற்ற முடியாமல் போனாலும் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமான, நிரந்தரமான ஒரு தீர்வு காணப்பட வேண்டுமென்பதை அவர் மனப்பூர்வமாக விரும்பினார் என்பது வரலாற்றில் மறுக்க முடியாத ஓர் உண்மையாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தது உட்பட அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தோளோடு தோள் நின்று செயற்பட்டவர் தங்கள் தந்தையார் அமரர் டி.ஏ.ராஜபக்ஷ என்பதை இங்கு தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அமரர்களான எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்க, ராஜபக்ஷ ஆகியோரும் அரசியல் பாரம்பரியத்தில் வழிவந்த நீங்களும் உங்கள் சகோதரர்களும் ஜனாதிபதியாகவும் பொருளாதார அமைச்சராகவும் பாதுகாப்புச் செயலாளராகவும் சபாநாயகராகவும் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய அதிகார பீடங்களில் வீற்றிருக்கிறீர்கள்.

தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களின் பாரம்பரிய நிலப்பிரதேசம் அங்கீகரிக்கப்பட்டு நியாயமான உரிமைகள் வழங்கப்பட்டு ஒரு நிரந்தரமான ஐக்கியப்பட்ட சமாதானத்தை உருவாக்கத் தேசத்தை வளம்கொழிக்கும் பூமியாக மாற்றும் உரிமையும் கடமையும் வேறு எவரையும் விடத் தங்களுக்கு அதிகமாகவேயுள்ளது. அத்தகையதோர் அரியவாய்ப்பை சரியான முறையில் தாங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே எமது பெரும் விருப்பமாகும்.

இதுவே, ஜனாதிபதியும் இச்சபையின் உறுப்பினர்களும் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கும் தங்கள் தந்தையாருக்கும் ஆற்றும் மிகப்பெரும் கடமையாகும். மீண்டும் மீண்டும் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் இனவாத ஒடுக்குமுறைகளும் பாரபட்ச நடவடிக்கைகளும் தமிழ்மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கருதும் மனப்பாங்கும் இந்தப் புனிதமான கடமையைப் பாழடித்துவிடும் என்பதைத் தாங்கள் கவனத்தில் கொள்ளவேண்டுமென்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

இன்றைய அரசமைப்பு எமது நாட்டுக்குப் பொருத்தமான முறையில் மாற்றப்பட வேண்டுமென்ற கருத்து இன்று மேலோங்கியுள்ளது. நாமும் இக்கருத்துடன் உடன்படுகிறோம். 1972 ஆம் ஆண்டிலும் 1978 ஆம் ஆண்டிலும் நிறைவேற்றப்பட்ட அரசியல் அமைப்புகள் தமிழ்மக்களின் ஒப்புதல் இன்றியே நிறைவேற்றப்பட்டவையாகும்.

உலகமயமாக்கல் என்ற வலைப்பின்னலுக்கு வல்லரசுகளுக்கு நிலவும் ஆதிக்கப் போட்டியின் மத்தியிலும் பிராந்திய வல்லரசின் மேலாதிக்க நோக்கங்களுக்கு இடையிலும் நாம் எமது இறைமையையும் தனித்துவத்தையும் பேணி நிமிர்ந்து நிற்கும் வகையில் எமது அரசமைப்பு இருக்க வேண்டியது அவசியமாகும்.சிங்கள மக்கள் தமது தனித்துவத்தையும் இறைமையையும் பேணும் வகையிலும் தமிழ்மக்களும் இறைமையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வகையிலும் அமையும் போதே நாம் ஐக்கியப்பட்ட மக்களாக எமது தேசத்தின் தனித்துவத்தையும் இறைமையையும் நிலைநிறுத்துவது சாத்தியமாகும்.மீண்டும் மீண்டும் தேசிய இனப்பிரச்சினையை காரணம் காட்டி அந்நிய தேசங்கள் எமது நாட்டிற்குள் தலையிடுவதைத் தவிர்க்க முடியும்.எனவே புதிய அரசமைப்பு இவ்விளக்கங்களைக் கருத்தில் எடுத்து வரையப்படும்போது தமிழ் மக்களின் சார்பில் எமது ஒத்துழைப்பு நிச்சயம் வழங்கப்படும் என்பதை இங்கு உறுதியாகக் கூறி வைக்க விரும்புகிறேன்.

இப்போரில் தமிழருக்கு ஏற்பட்ட தோல்வி சில பேரினவாத சக்திகள் மத்தியில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான ஓர் அலட்சியப்போக்கை ஏற்படுத்தலாம்.இப்போரின் தோல்வியானது எமது போராட்டத்தின் தோல்வியல்ல!இது போராட்ட வழிமுறை ஒன்றுக்கு கிடைத்த தோல்வி மட்டுமே என்பதைக் கூறி வைக்க விரும்புகிறேன்.

அமைச்சர் டியூ.குணசேகர ஒரு பத்திரிகை பேட்டியின் போது கூறியவற்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். "பிரபாகரன் தான் பிரச்சினை என்றால் பிரபாகரனின் இறப்புடன் பிரச்சினை முடிந்திருக்க வேண்டும். ஆனால், முடியவில்லை. பிரபாகரனுக்கு முன்பும் பிரச்சினையிருந்தது. பின்பும் இருக்கிறது. பிரபாகரன்கள் பிரச்சினையை உருவாக்குவதில்லை. பிரச்சினைகள் தான் பிரபாகரன்களை உருவாக்குகின்றன%27.

இவ்வாறு அவர் பிரபாகரனின் முடிவு பிரச்சினையின் தீர்வாகிவிடாது எனத் தெளிவுபடுத்துகிறாரோ அவ்வாறே நானும் போரின் முடிவு என்பது பிரச்சினைகளின் தீர்வாகிவிட முடியாது என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

போரின் முடிவு ஏற்கனவே இங்கு நிலவிய இறுக்கமான ஒரு சூழ்நிலையை தளர்த்தியது என்பதையும் சில கெடுபிடிகளை நீக்கியது என்பதையும் நாம் ஒப்புக்கொள்கிறோம். அண்மைக்காலமாக இங்கு நடைபெறும் சம்பவங்கள் ஒரு பயங்கர சூழலையும் நிம்மதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளமையை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளேன்.

இன்று வடக்கில் கடத்தல், கொலை, கப்பம் என்பன ஒரு தொடரும் அபாயங்களாக உருவாகியுள்ளன. இவை மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தையும் சில அரசியல் சக்திகள் பின்னணியில் இருக்கக்கூடும் என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எப்படியிருப்பினும், சில தீயசக்திகளின் கையில் இன்னமும் ஆயுதங்கள் இருப்பதே இதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்பதை மறுக்க முடியாது.

எனவே, சட்டவிரோதமான ஆயுதங்கள் அனைத்தும் களையப்பட வேண்டும் என்பதை இந்நேரத்தில் எமது மக்களின் சார்பில் வலியுறுத்த விரும்புகிறேன்.

நாம் இறைமையும் சுதந்திரமும் உள்ள மக்களாக எங்கள் நியாயமான உரிமைகள் அங்கீகரிக்கப்படும் நிலையிலேயே எமது தேசத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் பாதுகாத்து சுபீட்சம் நோக்கிய பாதையில் பயணிக்க உங்களுடன் ஒன்றிணைவோம்.

Please Click here to login / register to post your comments.