முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பும் முஸ்லிம் தலைமையின் முரண்பாடும்

ஆக்கம்: எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் மோசமான சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்தை மிக ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுவனவாகவே அமைந்துள்ளன. மூதூர் சம்பவங்களின் வேதனை அகன்றுவிடுவதற்கு முன்னர் பொத்துவில் இளைஞர்களின் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இத்தனையையும் இனவாதச் சக்திகளே பின்னணியில் நின்று செய்திருப்பது இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ள நிலையிலும் அரசாங்கம் விவகாரத்தை திசைதிருப்பி முஸ்லிம் சமூகத்தை முட்டாள்களாக்கப் பார்க்கின்றது. இதற்கு அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சில முஸ்லிம் தலைமைகளும் கொடி தூக்குவது முஸ்லிம் சமூகத்தை மேலும் வேதனைக்குள் தள்ளியுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் இருப்பையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டுமானால் இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் வலியுறுத்தி இருப்பது வரவேற்கக்கூடியதும் காலத்தின் தேவையாகவும் கருதக் கூடியதாகும்.

வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் முன்னொரு போதுமில்லாத வகையில் தற்போது மிக மோசமான பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தினதும், முஸ்லிம் கட்சிகளினதும் பொறுப்பாகும். இந்த நிலையில் அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒரு பொதுக் கூட்டமைப்பில் செயற்பட முன்வர வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தின் பேரால் எமக்கிடையேயான முரண்பாடுகளை மறந்து அவற்றிலிருந்து விடுபட்டு சமூகத்தின் பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொண்டு முஸ்லிம் தலைமைகளும், கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று பஷீர் சேகுதாவூத் பகிரங்க அழைப்பை விடுத்திருக்கின்றார்.

இலங்கை இனப்பிரச்சினைவிடயத்தில் சர்வதேச சமூகம் இதுவரை காலமும் கடைப்பிடித்து வந்த இராஜதந்திர அணுகுமுறைகளில் கூட மாற்றங்கள் ஏற்படலாம். போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிலிருந்து ஐரோப்பிய நாடுகள் வெளியேறியதன் மூலம் சர்வதேச சமூகம் முழுமையாக வெளியேறிவிடும் என எதிர்பார்க்க முடியாது. ஏதோவொரு வகையில் சர்வதேச பலாத்காரம் பிரயோகிக்கப்படக் கூடிய நிலைமை கூட தோன்றலாம். சர்வதேச அமைதிப்படை வந்தால் கூட வியப்பதற்கில்லை. எனவே முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, பாதுகாப்புபோன்ற விடயங்களில் முஸ்லிம் தலைமைகளும், கட்சிகளும் ஒன்றுபட்டு சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதையும் பஷீர் வலியுறுத்தி இருக்கின்றார்.

உண்மையிலேயே பஷீர் சேகுதாவூதின் கருத்துக்கள் முஸ்லிம் சமூகமும், அரசியல் தலைமைகளும் சிந்தனைக்கு எடுக்க வேண்டியவையாகவே காணப்படுகின்றன.

முஸ்லிம் சமூகம் இனவாதச் சக்திகளால் தாக்குதலுக்குள்ளாவதைவிடவும் மோசமானதொரு நிலையில் சமூகம் பிளவு பட்டிருப்பதை காணமுடிகிறது. சுயநல முஸ்லிம் தலைமைகளாலும், குழுக்களாலும் சமூகம் துண்டாடப்பட்டுள்ளது.

ஒரே ஊரில் பல முஸ்லிம் குழுக்கள் காணப்படுகின்றன. இந்தக் குழுக்களின் செயற்பாடுகள் பேரினவாதச் சக்திகளுக்கு சமுதாயத்தைக் காட்டிக் கொடுப்பதாகவே அமைகின்றன. ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய ஒரு சிறுபான்மைச் சமூகம் சில்லறை நலன்களுக்காக சமுதாயத்தை விலைபேசும் வெட்கங் கெட்ட செயற்பாட்டுக்குள் தள்ளிவிட்டுள்ளது.

இனியாகிலும் முரண்பாடுகளை புறந்தள்ளி முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட முன்வர வேண்டும், கட்சிகள் ஒன்றிணைந்து தேசியகூட்டமைப்பொன்றை உருவாக்கும் முயற்சிகளில் உடனடியாக களமிறங்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம். காலத்தின் தேவை, கருதி இந்த அழைப்பைவிடுத்த முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அவர்களே முன்னின்று முயற்சிகளை மேற்கொண்டால் முஸ்லிம் புத்தி ஜீவிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுத்தர நாம் தயாராக இருப்பதையும் சொல்லிவைக்கிறோம்.

இது இவ்விதமிருக்க பொத்துவில் இளைஞர் படுகொலைகளுக்குப் பின்னர் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள நிலைமைகளை ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான மயோன் முஸ்தபா தெரிவித்திருக்கும் கருத்துகளும் எம்மைச் சிந்திக்க வைப்பதாகவே காணப்படுகின்றன.

முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க அரசாங்கம் தவறிவிட்டதாகவும், வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு திட்டமிடும் இனவாதச் சக்திகளின் பின்னணியிலேயே பொத்துவில் படுகொலைகள் இடம்பெற்றிருப்பதாக அவர் அடித்துச் சொல்கிறார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் சர்வதேச விசாரணைக் குழுவின் கோரிக்கை நியாயமானதெனவும், சர்வதேச விசாரணைக்குழு அமைக்க அரசு ஏன் தயக்கம் காட்ட வேண்டும் எனவும் மயோன் முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தால் இன்று வடக்கு, கிழக்கில் நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதமேந்தும் நிலைக்குத் தள்ளப்படும் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும் மயோன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மூதூர் பகுதி மக்கள் பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மாவிலாறு அணைக்கட்டு மீட்புக்கான தாக்குதல் நடவடிக்கைகளின் போது மூதூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர முயற்சி எடுக்கையில் மீண்டும் முஸ்லிம்களை வெளியேறுமாறு கோரி துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி முஸ்லிம் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இடம்பெயர்ந்து கிண்ணியா பகுதிக்கு வந்த மக்களை அரசாங்கப்படைகள் பாடசாலைகளில் அனுமதிக்கவில்லை. கிண்ணியாவில் அமைந்துள்ள பாடசாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் நீர் வசதியும் நிறுத்தப்பட்டுள்ளது. ஏன் இவ்வாறு முஸ்லிம் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்? அரசாங்கம் முஸ்லிம் மக்களை பாதுகாக்க முழுமையாக தவறிவிட்டது.

இதேவேளை, பொத்துவில் பகுதியில் அப்பாவி முஸ்லிம் மக்கள் கொலை செய்யப்பட்டனர்-ஆனால் அரசாங்கமும் புலிகளும் மாறி மாறி எதிர்த்தரப்பை குற்றஞ்சாட்டி வருகின்றன. அப்பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி ஒருவருக்கு இந்தக்கொலைச் சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் அங்குள்ள விசேட அதிரடிப்படையினரை வெளியேற்ற புலிகள் இதனை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஏன் சர்வதேச விசாரணைக் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தயங்குகின்றது? நாங்கள் யார் மீதும் பழிசுமத்தவில்லை. மாறாக நீதியான விசாரணைகளை நடத்துமாறு தானே கேட்கிறோம். இதனைச் செய்ய அரசாங்கம் ஏன் தயக்கம் காட்டவேண்டும்.

அண்மையில் நான் பொத்துவில் பகுதிக்குச் சென்ற போது அங்குள்ள முஸ்லிம் இளைஞர்கள் என்னிடம் ஆயுதங்களைக் கேட்கின்றனர். அப்படியொரு நிலை ஏற்பட்டால் அதன் பின் விளைவுகளை அரசு சிந்திக்க வேண்டும்.

அரசாங்கத்தின் தவறான அணுகுமுறையால் பொத்துவில் பகுதியில் சுமார் 20 ஆயிரம் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றனர் என்பதை தெரிவிக்கவிருப்புகின்றேன்.

2002 ஆம் ஆண்டில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் முஸ்லிம் மக்கள் வடகிழக்கில் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமரத் தொடங்கினர். ஆனால் தற்போது பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் நடந்து கொண்டிருப்பதால் இந்த மக்கள் மீண்டும் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இரு பக்கங்களாலும் முஸ்லிம் சமூகம் நசுக்கப்படுகின்றது. முஸ்லிம் சமூகம் உதை பந்தாக அடிபட்டு கொண்டிருக்கின்றது. இதனை சுயநல முஸ்லிம் அரசியல் தலைமைகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று மயோன் முஸ்தபா கடும்தொனியில் கருத்துகளை அள்ளி வீசியுள்ளார்.

முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் தலைமைகளும் தன் சமூகத்தின் பொறுமையை இன்னும் சோதித்துப் பார்க்கப் போகின்றனரா அல்லது சமூகத்தின் எதிர்காலத்துக்காக தலைமைகள் வெளியே வந்து ஒன்று பட்டுச் செயற்படப் போகின்றனரா? என்ற கேள்வியை இப்போதைக்குக் கேட்டு வைக்கின்றோம். உங்கள் பதில்களில் தான் சமுதாயத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது என்பதையும் சொல்லி வைக்கின்றோம்.

Please Click here to login / register to post your comments.