கூட்டணி எம்.பி.க்கள் எதிர்பார்ப்புகளும் சவால்களும்

ஆக்கம்: பீஷ்மர்
கடந்த சில நாட்களாக பாராளுமன்ற அவையினுள் கூட்டமைப்பு எம்.பி.க்கள் காட்டும் எதிர்ப்பு, சிங்கள ஊடகப் புறக்கணிப்பினூடேயும், ஒரு முக்கிய தேசிய பிரச்சினையாக மேற் கிளம்புகின்றது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கையின் இன்றைய தமிழர் நிலைப்பட்ட அரசியலில் போதுமானவற்றைச் செய்ய வேண்டிய முறையிலே செய்கின்றதா என்பது அரசியல் அவதானிகளின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய பிரச்சினையாக உருவாகிக்கொண்டு வருகின்றது.

வடக்கு, கிழக்கு எம்.பி.க்கள் என்ற வகையில் இவர்களது வகிபாகம் மிக முக்கியமாகியுள்ளது. தமிழர் உரிமைப் போராட்டம் இன்றைய நிலையில், விடுதலைப்புலிகளின் தலைமையினாலேயே மேற்கொண்டு செலுத்தப்படுகின்றது.

இன்னொரு வகையில் சொன்னால், விடுதலைப் புலிகளுடன் ஓர் இணக்கத்துக்கு வராது இலங்கையின் தமிழ் இனக் குழும பிரச்சினையையோ, யுத்தத்தையோ புறங்காண முடியாதென்பதை (விடுதலைப் புலிகளை விரும்பாத சக்திகளும் ஏற்றுக் கொள்கின்றன) அதாவது, தமிழர் உரிமைப்போராட்டத்தின் இன்றைய நிலையை விடுதலைப்புலிகளே ஏற்படுத்தியுள்ளனர் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

ஆனால், இதற்கு இன்னொரு புறமும் உள்ளது. பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவர்களது அனுசரணையுடன் ஒரு எம்.பி.யைத் தவிர, மற்றையவர்கள் ஒரு தேசிய கூட்டமைப்பாகவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவில் கூட்டமைப்பினருக்கு ஓர் பிரதிநிதித்துவ வலுவுள்ளது. இந்த பிரதிநிதித்துவம் இரண்டு நிலைகளில் மிகமிக முக்கியமாகவுள்ளது.

முதலாவது, யுத்தத்துக்கிடையேயும் அல்வவ்பிரதேச தேவைகளை நிர்வாக மட்டத்திலும் கொழும்பின் அரசியல் மட்டத்திலும் எடுத்துக்கூற வேண்டிய பொறுப்பு உண்டு.

(ஒரு இலங்கை எம்.பி.யிடமிருந்து அவர் சிங்களவராக இருந்தால் என்ன, தமிழராக இருந்தால் என்ன, முஸ்லிமாக இருந்தாலென்ன இதுவே சாதாரணமாக எதிர்பார்க்கப்படும் பணியாகும்).

இரண்டாவதாக, பாராளுமன்ற அங்கத்தவர்கள் என்கின்ற வகையில் இலங்கைத் தமிழர்களின் குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேச பிரச்சினைகளை இலங்கை முழுவதுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறும் பொறுப்பு இதன் மூலமேயே நடைபெறுகின்றது. அந்த அளவில் இவர்கள் வடக்கு, கிழக்கின் அரசியல் தூதுவர்களாகவும் விளங்குகின்றார்கள் என்பதே உண்மை நிலையாகும்.

இப்பொழுது மேற்கிளம்பும் வினா யாதெனில், இந்தப் பணியை எந்த அளவுக்குத் திருப்திகரமாக செய்கின்றார்கள் என்பதாகும்.

இந்த வினா இத்துணை முனைப்புடன் இப்பொழுது எழும்பியிருப்பதற்குக் காரணம், அண்மைய தமிழக, இந்திய விஜயத்தின் பொழுது, கூட்டமைப்புத் தலைமை நடந்து கொண்ட முறைமையாகும்.

முதல் கோணல், முற்றிலும் கோணல் என்கின்ற வகையில் இவர்கள் இந்த விஜயத்தை மேற்கொள்வதற்கான உந்துதலே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. உள் இரகசியம் என்னவோ நமக்குத் தெரியாது. ஆனால், வைகோவின் அழைப்பே பயணத்துக்கான மூலகாரணம் என்று பேசப்பட்டது. வைகோ என்ற பெயர் வந்தாலே போதும் கலைஞர் எப்படி நடந்து கொள்வார் என்பது தமிழக குழந்தைப் பிள்ளைகளுக்கும் தெரியும்.

தமிழகத்துக்கு சென்றதன் பின்னர் கருணாநிதியை இவர்கள் சந்திப்பதற்கு எடுத்துக்கொண்ட உண்மையான நேர்மையான முயற்சிகளின் விபரங்களை சென்ற வியாழன் அன்று தினக்குரல் வெளியிட்டது. ஆனால், கலைஞருக்கு இலங்கைத் தமிழ் போராட்டம் பற்றி வைகோ என்ற தனிமனித வெறுப்புக்கு மேலாகவும் பல மன அழுத்தங்கள் உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இவை எம்.ஜி.ஆர். காலத்து எச்சசொச்சங்கள்.

கலைஞரின் சொற் சாதுரியத்துக்கும் செயல் சாணக்கியத்திற்கும் எதிராக இவர்களால் நிற்க முடியாதென்பது உண்மையே. இலங்கைத் தமிழ் அகதிகள் வருகை, செஞ்சோலை சம்பவம் ஆதியன கிளப்பிய ஒரு பொதுவான தமிழகத்து அனுதாப அலையை கலைஞர் தடுக்க முனைந்தது மாத்திரமல்லாமல், அதனைத் திசைதிருப்பவும் முயன்றார்.

ராஜீவ் காந்திக்கு முன்னும் பின்னும், என்ற கோட்பாட்டையே எடுத்துப் பேசினார். விடுதலைப்புலிகளை ஜெயலலிதா எதிர்ப்பதற்கான காரணத்தை மிகுந்த அனுதாபத்துடன் எடுத்துக் கூறினார்.

இத்தகைய ஓர் சூழலில் டில்லிக்கு செல்வதற்கு முன்னர் இவர்கள் ஏன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவகர் டாக்டர் ராமதாஸை சந்திக்க முனையவில்லை. இலங்கை தமிழர் போராட்டத்தைப் பற்றிய பா.ம.க.வின் நிலைப்பாட்டையும் அதற்கு மேலாக, தி.மு.க., கூட்டணியில் உள்ள தலைவர்களிடையே டாக்டர் ராமதாஸையே கலைஞர் மிகுந்த கவனத்துடன் நடத்திவருவது இவர்களுக்குத் தெரியாதா?

டாக்டர் ராமதாஸ் மூலமாக அவர் மகன் மத்திய அரசின சுகாதார அமைச்சர் அன்புமணியோடு ஏதேனும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டனவா? இந்த ஒன்றே போதும் கூட்டமைப்பினர் இவ்விடயத்தில் வேண்டியன யாவற்றையும் செய்யவில்லையென தெரியவருகின்றது. இதற்கு மேல் இன்னுமொரு குறைபாடு இலைமறை காயாக தமிழகத்து அரசியல் மட்டத்திலே சொல்லப்படுகின்றது. இவர்கள் உரையாடிய இடங்களில் தாங்கள் சில "உந்துதலுக்கு" கட்டுப்பட்டே நடக்க வேண்டியுள்ளது. என்ற கருத்தை வாய்மொழிமூல மல்லாமல் உடல் மொழிகளால் காட்டிக் கொண்டார்கள் என்றும் பேசப்படுகின்றது. இதை நாங்கள் நம்பவுமில்லை. நம்ப விரும்பவுமில்லை. ஆனால், இப்படியான கதை வருவதற்கு இடம்கொடுக்காமல் இருப்பது முக்கியமானதாகும்.

டில்லியின் நிலைப்பாடுகள் புதியவையல்ல. வெளிநாட்டமைச்சின் சவுத் புளக் என்னும் பகுதியிலுள்ள "ஆராய்ச்சிப் பகுப்பாய்வு பகுதி"க்கு தெரியாமல் வெளிநாட்டமைச்சில் ஊசிகூட அசையாது.

இதற்கு மேலாக மன்மோகன் சிங் இன்றும் தான் தனக்கென ஓர் அரசியல் தளத்தைக் கொண்டுள்ள ஓர் அரசியல்வாதியல்லர். அவர் ஓர் நேர்மையான நிர்வாகஸ்தர். அவருக்குப் பின்னால் உள்ள அரசியல் பலம் சோனியாகாந்திதான். சோனியா காந்திக்கு இலங்கைத் தமிழரின் இன்றைய அரசியல் நிலைமைகளை எடுத்துக் கூறுவதற்கு ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா? எமக்கு தெரியாது.

உண்மையில் இதுபற்றிய முதல் முயற்சிகளை இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திலிருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும். நிருபம் சென் தொடக்கி வைத்த ஜே.வி.பி. யுடனான புதிய பெயல் (அளுத் வஸ்ஸ) நட்புறவு இப்பொழுது மாறியுள்ளது.

உண்மையில் கொழும்புத் தூதரக அலுவலகத்தின் வலுவான சிபாரிசு இருந்திருக்குமேயானால் மன்மோகன் சிங்கின் கதவுகள் இத்துணை இறுக்கமாக இருந்திருக்காது.

இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றி நமக்குள்ள மனக்குறை யாதெனில், இவர்கள் தமிழக, இந்திய விஜயத்தை சரியான முறையில், ஒழுங்கமைத்துக் கொள்ளவில்லை என்பதாகும்.

இதற்கு மேலாக இவர்களது தமிழக டில்லி விஜயத்தின் பொழுது இவர்களுக்கிடையேயுள்ள குத்துவெட்டோ இட்டிமுந்தலோ அதுவும் காணப்பட்டதாம். இப்பொழுது இல்லையென்று கூறலாம். ஆனால், அது சம்பந்தமாக மனக்கசப்புகள் இல்லையென்பதை மறைத்துவிட முடியாது.

இந்த சம்பவங்களையெல்லாம் மனதில் கொண்டு நோக்கும்போது, இவர்கள் "ஆட்டுவித்தால், யார் ஒருவர் ஆடாதாரோ" என்ற நிலையிலே தான் இயங்குகிறார்கள்.

விடுதலைப்புலிகளின் அனுசரணையுடன் இயங்குபவர்கள் என்னும் பொழுதே டில்லியில் பல கதவுகள் திறக்கப்படா. சற்று திறந்த கதவுகளும் முழுக்கத் திறக்கப்படா.

இந்த நிலைமை கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், சம்பந்தனுக்கும் சேனாதிராஜாவுக்கும் தெரியாதவையா இவை.

சற்று ஆழமாக சிந்திக்கும் பொழுது இவையாவும் பிரச்சினைகள் என்பதிலும் பார்க்க, பிரச்சினைகளின் வெளிப்பாடுகள் என்றே கொள்ள வேண்டும்.

அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால், விடுதலைப்புலிகள் கூட்டமைப்பு தொடர்பில் இன்னும் பூரண தெளிவு ஏற்படவில்லை என்பதைக் கூறவேண்டியுள்ளது. கூட்டமைப்பினைப் பார்க்கும் பொழுது அதற்குள்ளேயே இளம் தலைமுறை முது தலைமுறை? வேறுபாட்டை ஒழிக்க முடியவில்லை. இதைவிட ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். அலகுகள் வேறு. தமிழ்தேசிய கூட்டமைப்பினர் முன் ஒரு பெரிய சவால் உள்ளது. இவர்கள் தம்மை நன்கு ஒழுங்கமைத்துக் கொள்ளாவிட்டால் தமிழர் ஒருமைப்பாட்டை விரும்பாத சகல சக்திகளும் இவர்களுக்கு மாற்றாக யாரையோ, எவரையோ முன்னிறுத்தும் முயற்சியை நடத்தவே செய்யும். இதனை முக்கியமற்ற கரிசனையாகக் கொண்டுவிட முடியாது. ஏனெனில், சமாதான பேச்சுவார்த்தைகள் வேண்டுமென சொல்லும் பொழுது "இந்தியாவிலிருந்து கேட்கப்படும் குரலில்", சம்பந்தப்பட்ட எல்லோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். இதற்குள் நிச்சயமாக முஸ்லிம்கள் வருவார்கள். சவுத் புளக் வேறு யார் யாரை மனதில் வைத்திருக்கின்றது?

Please Click here to login / register to post your comments.