சம்பூர் மீதான ஆக்கிரமிப்பு அரசு தலையில் ஆபத்து

ஆக்கம்: சிறீ இந்திரகுமார்
யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டிருக்கும் படையினரைப் பாதுகாக்க வேண்டுமானால் புலிகளின் ஒன்று திரட்டப்பட்ட படைப்பலத்தை சிதைக்கும் பட்சத்திலேயே யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து பாதுகாக்கவும், அங்கு தரித்துள்ள படையினரின் உயிர்களைக் காப்பாற்றவும் முடியுமென்ற நிலைக்கு சிறிலங்கா அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் சிறிலங்கா அரசு வடபாகத்தில் சிக்குப்பட்டிருக்கும் பெரும் படைவளத்தைப் பாதுகாக்கக் கிழக்கில் ஒரு போர் வாசலைத் திறந்து புலிகள் இயக்கத்தை அதற்குள் வீழ்த்த முயன்ற போதும் புலிகள் இயக்கம் தனது மூலோபாயத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படாத வகையில் தன்னைப் பாதுகாத்துச் சிறிலங்கா இராணுவம் அகலக்கால் பதிக்க அனுமதித்துள்ளது. ஏற்கெனவே மூன்றாம் கட்ட ஈழப்போர் காலத்தில் ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலமாக அகலக்கால் பதித்த சிறிலங்கா இராணுவம் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் தனது இராணுவ மேலாண்மையை புலிகள் இயக்கத்திடம் பறிகொடுத்துத் திணறியது. அத்தோடு கிழக்கில் இப்போது கைப்பற்றியிருக்கும் சம்பூர் மற்றும் இதர நிலப்பகுதியையும், மட்டக்களப்பில் பெரும் பகுதியையும் புலிகள் இயக்கத்திடம் இழந்திருந்தது.

எனவே சிறிலங்கா அரசின் சம்பூர் வெற்றிச்செய்தியின் பின்னால் அரசுக்கிருக்கும் ஆபத்தை நாம் இந்தத்தருணத்தில் புரிந்துகொள்வது அவசியம்.

ஏனெனில், புலிகள் இயக்கம் யாழ்ப்பாணம் மீது ஒரு பெரும் தாக்குதலைத் தொடுக்க முற்படும்போது சிறிலங்கா அரச படைகளுக்குத் தேவையான மேலதிக படைகளைக் கிழக்கிலிருந்து எடுக்க வேண்டிய நிர்ப்பந்தமே சிறிலங்கா அரசிற்கு ஏற்படும்.

அவ்வாறு சிறிலங்கா இராணுவம் மேலதிக படைகளைக் கிழக்கிலிருந்து எடுக்க முற்படும் போது மீண்டும் கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் தாம் ஆக்கிரமித்திருக்கும் நிலங்களிலிருந்து வெளியேற வேண்டியேற்படும்.

அப்போது, புலிகள் இயக்கம் சம்பூரிலிருந்து வெளியேறிய இராணுவ பரிமாணத்தைச் சிறிலங்கா அரசு மட்டுமல்ல தமிழ் மக்களும் கூடப் புரிந்து கொள்வர்.

திருக்கோணமலையின் சம்பூர்ப்பகுதியை சிறிலங்காப்படைகள் ஆக்கிரமித்த செய்தியை முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அவரது அரசின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் அனுருத்த ரத்வத்தையும் யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்ததை பெருவெற்றியாகப் பிரகடனப்படுத்தியது போன்று தற்போதைய சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் சம்பூரைக் கைப்பற்றிய செய்தியைத் தனது கட்சிப் பிரமுகர்கள் மத்தியில் பெரு வெற்றிச் செய்தியாகப் பிரகடனப்படுத்தியிருக்கின்றார்.

புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப் புறம்பாகப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த சம்பூர்க் கிராமத்தை சிறிலங்காப்படைகள் கைப்பற்றியதன் மூலம் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசு இராணுவ, அரசியல் ரீதியாகப் பெரும் நெருக்கடிக்குள் சிக்குப்பட்டிருக்கும் அதேவேளை அதைப் பெருவெற்றியாக வெளிப்படுத்த முனைந்திருப்பது சிறிலங்கா அரசு உள்ளார்ந்த ரீதியில் அது பெரும் நெருக்கடிக்குள் நிரந்தரமாகச் சிக்கிவிட்டதையே காட்டுகிறது.

ஏனெனில், சிறிலங்கா அரசைப் பொறுத்த வரையில் என்ன தான் நியாயப்பாடுகளை வலிந்து கூறினாலும் புரிந்துணர்வு உடன்படிக்கை உத்தியோகபூர்வ அமுலாக்க நிலையிலிருந்த தருணத்தில் அதனை மீறிப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை ஆக்கிரமிப்புச் செய்திருப்பதன் மூலம் சிறிலங்கா அரசே சமாதான முயற்சியைக் குழப்பியடித்துள்ளது.

அதாவது, சிறிலங்கா அரசு சம்பூரைக் கைப்பற்றுவதற்குக் கூறும் காரணமான திருக்கோணமலைத் துறைமுகத்தை பாதுகாக்கவும், மற்றும் வெளிநாட்டு முதலீடுகளான பிறிமா ஆலை, இந்திய எண்ணெய்க்குதம், டோக்கியோ சீமெந்துத் தொழிற்சாலை என்பவற்றை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனக் கூறி புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் நியாயப்படுத்திவிட முடியாது.

ஏனென்றால், அரசும்- புலிகளும் நோர்வே அனுசரணையாளர்களின் அனுசரணையுடன் செய்துகொண்டுள்ள இந்த சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து அரசு விலகாத நிலையில் புலிகளின் நிர்வாகப்பகுதிகளை ஆக்கிரமிக்க முடியாது.

இதனைச் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசு புரிந்து கொண்டதால்தான் சம்பூர் கைப்பற்றியது தொடர்பாக விளக்கமளிக்க முற்பட்டிருப்பதுடன் அரசு அளித்துள்ள விளக்கத்திலும் 'பூகோள ரீதியாக எந்தப் பகுதியையும் ஆக்கிரமிக்கும் நோக்கம் அரசுக்குக்கிடையாது" என விளக்கமளிக்க முற்பட்டிருப்பதுடன் சம்பூர் கைப்பற்றலானது சர்வதேச முதலீடுகளுக்கான ஒரு பாதுகாப்பு முன்னேற்பாடு போன்று காட்டப்படாதபாடுபடுகிறது.

இதேவேளை அரசு சம்பூரை ஆக்கிரமித்திருப்பதன் மூலம் இராணுவ ரீதியாக எதிர்காலத்தில் பெரும் நெருக்கடியைச் சந்திக்கப் போகிறது.

ஏனெனில் சிறிலங்கா இராணுவத்தைப் பொறுத்தவரையில் வடபகுதியில் புலிகளின் பகுதிக்குள் ஒரு படை நடவடிக்கையைச் செய்வதாக இருந்தாலும் சரி, புலிகளின் வலிந்த தாக்குதல் ஒன்றை முறியடிப்பதாக இருந்தாலும் சரி இராணுவத்தின் முக்கால் பங்கிற்கு மேற்பட்ட பலத்தை வடபகுதியில் பிரயோகிக்க வேண்டிய தாழ்வான இராணுவ பலத்தையே அரசு கொண்டிருக்கிறது.

இதனைப் புரிந்து கொள்வதற்கு சிறிலங்கா இராணுவத்தின் போரிடும் படைப்பிரிவுகள் முன்னரங்குகளில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் நிலையை புரிந்து கொள்வதன் மூலம் இதனை விளங்கிக் கொள்ளலாம்.

அதாவது சிறிலங்கா இராணுவத்திலுள்ள போரிடும் நிலையிலுள்ள 21, 22, 23, 51, 52, 53, 54, 55, 56 ஆகிய ஒன்பது டிவிசன் படைப்பிரிவுகளில் ஏறத்தாழ ஏழு டிவிசன் படைப்பிரிவுகளை வடபோர்முனையில் அரசு நிறுத்திவைக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்தான் இருக்கிறது.

இந்த நிலையில் வடபோர்முனையைப் பொறுத்தவரையில் வட பாகத்தில் சிறிலங்கா இராணுவத்தின் 51, 52, 53, 54, 55 ஆகிய டிவிசன்கள் நிலைகொண்டிருக்கும் அதேவேளையில் மன்னாரிலிருந்து மணலாறு வரை 21, 56 மற்றும் 22 ஆம் டிவிசனின் ஒரு பகுதி ஆகிய படைத்தொகுதிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு வடபோர்முனையின் வட பாகத்திலும் தென் பாகத்திலுமாக ஏறத்தாழச் சிறிலங்கா இராணுவத்தின் போரிடும் திறனுள்ள முக்கால் பங்கு படையினரை நிறுத்தியும் தற்காப்பு நிலையிலேயே தொடர்ந்தும் இருக்கவேண்டிய சிறிலங்கா இராணுவம் சம்பூரைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் மேலும் தனது படையின் பெரும்பகுதியை சம்பூரைத் தொடர்ந்தும் தக்க வைத்திருப்பதற்காக ஈடுபடுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முகமாலைப் பகுதியில் நடந்து முடிந்த குறுஞ்சமரில் சிறிலங்கா இராணுவத்தின் விசேட படைகள் மற்றும் கொமாண்டோக்களைக் கொண்ட 53 ஆவது டிவிசனை பெரும் இழப்போடு களத்திலிருந்து புலிகள் இயக்கம் அடித்து விரட்டியுள்ளது.

அத்தோடு, பலாலியிலிருந்த இராணுவ கட்டளைப்பீடத்தை காரைநகருக்கு மாற்றுமளவுக்கு நெருக்கடியையும் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் முகமாலை முன்னரங்கில் நடைபெற்ற குறுஞ்சமரானது சிறிலங்கா இராணுவத்தை ஆழமாகச் சிந்திக்க வைத்திருக்கும் என்பதுடன் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் படையினரின் நிலை குறித்து அச்சத்தையும் தோற்றுவித்திருக்கிறது.

எனவே சிறிலங்கா அரச படைகள் சம்பூர் மீதான ஆக்கிர மிப்பின் மூலமாகப் புலிகள் இயக்கத்தை பலவீனப்படுத்திவிடவோ அல்லது புலிகள் இயக்கம் பலவீனமாகிவிடவோ இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

உண்மையில் இப்போது சிறிலங்கா அரசும், சிறிலங்கா இராணுவமும் புலிகள் இயக்கம் விரித்துள்ள அரசியல் இராணுவப் பொறிக்குள் சிக்குப்பட்டுள்ளது என்பதே உண்மை.

இதனை மிகக் குறுகிய காலத்தில் சிறிலங்கா அரசு நிச்சயம் உணர்ந்துகொள்ளும்.

இதை இன்னும் சிறிது காலத்தில் நிச்சயம் புரிந்துகொள்ள முடியும்.

Please Click here to login / register to post your comments.