சமாதான உடன்படிக்கையை திருத்தும் முயற்சியில் மகிந்தர்

ஆக்கம்: பரணி

ஜெனிவாவில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 19,20,21 ஆம் திகதிகளில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுமென முதலாம் கட்டப் பேச்சுவார்த்தையில் முடிவாகியிருந்தது. முதலாம் கட்;டப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு துணை ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்தாகும். சமாதானத்திற்கு எதிரியே இந்த ஒட்டுப்படைகள்தான் இவ் ஆயுதக்குழுக்களைப் பயன்படுத்தி ஆயுதங்களற்று அரசியல் பணி செய்த விடுதலைப் புலிகளைப் படுகொலை செய்தல் தமிழ் உணர்வாளர்களைக் கொல்வது எனப் பலவித அடாவடித்தனங்களைச் செய்து சமாதான உடன்படிக்கையை கேள்விக்குறியுள்ளாக்கினர்.

எனவேதான் இந்த ஒட்டுப்படைகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். எனப் புலிகள் வலியுறுத்தினர். ஒட்டுப்படைகள் எதுவும் கிடையாது எனக் கூறிய அரசதரப்பினர் புலிகள் அங்கு வைத்த நீண்ட பட்டியலைக் கண்டதும் திகைத்துவிட்டனர். இதைவிட போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினரும் ஆயுதக் குழுக்கள் இருப்பதை பலமுறை உறுதிப்படுத்தியிருந்தனர். எனவேதான் பேச்சுவார்த்தை மேசையில் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவதாக ஒப்புக்கொண்டனர். ஆனால் பெப்ரவரி 23 இல் உறுதியளித்த ஆயுதக் களைவை இதுவரை நிறைவேற்றவில்லை. முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தாத நிலையில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் எதைப் பற்றிப் பேசப்போகின்றார்கள், என்ன பேசப் போகின்றார்கள் என்பதே பெரிய கேளிவிக்குறியாகிவிட்டது.

முதல் சுற்றுப் பேச்சுவாத்;தை நடந்துகொண்டிருந்த போது இராணுவத்தினரும் ஒட்டுப்படைகளதும் கெடுபிடிகள் சற்றுக் குறைந்திருந்தன. ஆனால் நாள் செல்லச் செல்ல அவர்களது அடாவடித்தனங்கள் அதிகரிக்கவே செய்தன.

ஆயுதக் குழுக்கள் இருந்தால் அவற்றின் ஆயுதங்கள் களையப்படும் என்று ஜனாதிபதி அடிக்கடி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தார். ஆயுதக் குழு என்பதற்கு வரைவிலக்கணம் தேடிக் கொண்டிருந்தார் பொலிஸ்மா அதிபர் ஆயுதக் குழுக்கள் எதுவும் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இல்லை என்று கூறிக்கொண்டிருந்தார் இராணுவத் தளபதி எனவே ஆட்சியாளர்களின் உள்ளத்தில் இந்த ஒட்டுப்படைகளின் ஆயுதங்களைக் களைவதில் சிறிதும் அக்கறை இல்லை என்பதே உண்மையாகும்.

முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின் பொழுது சற்றுக் குறைந்திருந்த அரசாங்கத்தின் ஏவுதல்கள் திருமலையின் குரலாக ஒலித்த விக்கினேஸ்வரனைப் படுகொலை செய்யும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்தது. தென்தமிழீழத்தில் ஒட்டுக்குழுக்கள் பகிரங்கமாகவே இராணுவத்தினரது உதவியுடன் செயற்படத் தொடங்கினர். இராணுவத்தினர் சுற்றிவளைத்து மக்களைப் பிடித்துக்கொடுக்க அவர்களுக்கு கூட்டம் வைத்தனர்.

இவ்வாறு பயமுறுத்தல்கள் கொடுத்தும், எச்சரித்தும் தமிழ் மக்கள் நடந்து முடிந்த உள்ளுராய்சி மன்றத் தேர்தலில் தமது விடுதலை வேட்கையை நிதர்சனமாகத் தெரியப்படுத்தியிருந்தனர். ஆயுத பயமுறுத்தலுக்கு அடிபணியமாட்டோம். என்று அம்பறையிலும், திருகோணமலையிலும் தமிழ் மக்கள் அளித்த தீர்ப்பை பொறுக்க முடியாதவர்கள் தான் சிங்கள ஆக்கிரமிப்பை அமைதி வழியில் எதிர்க்க மக்களை அணிதிரட்டிய விக்கினேஸ்வரனைக் கொன்றார்கள். இவ்வாறான கொலை புரிவதற்கென்றே இந்த ஆயுதக் குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அதே நேரம் விடுதலைப் புலிகளுக்கு வேறு விதமாக நெருக்கடிகள் கொடுக்கவும் ஆட்சியாளர்கள் திட்டங்கள் போட்டிருந்தனர். விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன்னர் களத்திலுள்ள தளபதிகளுடன் கலந்து பேசவேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் பிராந்தியத் தளபதிகளின் போக்குவரத்துக்கு இடைய+று கொடுப்பதன் மூலம் அவர்களைச் சந்திக்க விடாது தடுப்பது அல்லது போர்நிறுத்த உடன்படிக்கையில் ஏற்றுக்கொல்லப்பட்ட விதி முறைகளுக்கு மாறான முறையில் சில நிபந்தனைகளை விதிப்பது அவ்வாறு நிபந்தனை விதிப்பதன் மூலம் போர் நிறுத்த உடன்படிக்கையில் மாற்றங்களைக் கொண்டுவர மறைமுக முயற்சிகளை மேற்கொள்ளுதல் இந்த நயவஞ்சக முயற்சியே பிராந்தியத் தளபதிகளின் பயணத்தடை என்பதை விடுதலைப் புலிகள் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் தெளிவாக விளக்கியுள்ளார்கள்

ஜெனிவாவில் முதற்கட்டப் பேச்சுவார்த்தை நிறைவடைந்து சமாதான உடன்படிக்கையைச் செம்மையாக நடைமுறைப்படுத்துவதாக ஒப்புக்கொண்டு அறிக்கை விட்டவர்கள், நாடு திரும்பியதும் சமாதான உடன்படிக்கையில் திருத்தம் செய்வதாக் கூறியவர்கள் தற்பொழுது எப்படியாயினும் அதில் திருத்தங்களை மேற்கொள்ளவே ஆட்டம் போடுகின்றனர். ஆனால் விடுதலைப் புலிகள் நிதானமாகவும், உறுதியாகவும் தெரிவித்துவிட்டனர். அரசு பாதுகாப்பு உத்தரவாதம் தரத் தவறும் பட்சத்தில் தங்கள் சொந்தப் பாதுகாப்புடன் பயணம் செய்யப் போவதாக. இது மிகவும் இக்கட்டான நிலைக்குப் போர்நிறுத்தத்தை இட்டுச் செல்லும் என்பதை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் புரிந்து கொண்டனர்.

அதனால் மாற்று ஏற்பாடுகள் பற்றிப் பேசி புலிகளுடன் ஒரு சமரசத்துக்கு வந்தனர்;. இறுதியில் சிறிலங்கா அரசு அதையும் குழப்பியடித்துவிட்டது.

சிங்களத் தலைவர்கள் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாது இருந்தாலும் தமிழ் மக்களுடன் செய்த உடன்பாடுகளை என்றுமே மதித்து நடந்ததில்லை. அதே பாணியில் மகிந்தரும் ஜெனிவாவில் எட்டப்பட்;ட உடன்பாட்டை நடைமுறைப்படுத்தாது தமிழ் மக்களை மாத்திரமல்ல சர்வதேசத்தையும் ஏமாற்ற முட்பட்டுள்ளார். முன்பு ஆட்சியாளர் ஒப்பந்தம் செய்த பொழுது சர்வதேச சமூகம் சம்பந்தப்படவில்லை. ஆனால் இன்று சர்வதேச சமூகம் இதில் ஈடுபாடு காட்டுகின்றது. எனவே சர்வதேசத்தை ஏமாற்றவேண்டிய திட்டங்களையும் தீட்டவேண்டியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் தமிழர் பகுதிகளில் வன்முறைகளைக் கட்டவிழத்து விட்டு அதனைத் தமிழ்த்தரப்பில் சுமத்தி விடுவதே அதன் திட்மாகும்.

திருகோணமலையில் நடந்த குண்டுவெடிப்பு இத்தகை ஒன்று என செய்திகள் தெரிவிக்கின்றன. விக்கினேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட பொழுது கூட தமிழ் மக்கள் அமைதிகாத்தனர். சிங்கள மக்கள்மேல் தாக்குதல் மேற்கொள்ளவில்லை. எனவே இனவன்முறையை எதிர்பாத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தநிலையில் நன்கு திட்டமிட்டு சிங்களக் காடையர்களை வாகனங்களில் கொண்டுவந்து இறக்கிவிட்டு மரக்கறிச்சந்தையில் குண்டுவெடிப்படை நடத்தி உள்ளனர். இதன் பின்னர் கொண்டுவந்து குவிக்கப்பட்ட குண்டர்கள் தங்கள் கைவரிசையைக்காட்டியுள்ளனர். தமிழர்கள் கொல்லப்பட்டும் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் உள்ளன. மீண்டும் ஓர் 83ஐ நினைவுபடுத்தியதாக சில பத்திரிகையாளர்கள் இவ்வன்முறையைப்பற்றி எழுதி உள்ளனர்.

இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்திவிட்டு அதன் பழியை புலிகள் மேல் சுமத்துவது அரச படைகளின் திட்டமாகும். ஆனால் இவைபற்றி போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் அரசியற்துறைப் பொறுப்பாளர் விலாவாரியாக தெளிவுபடுத்தியுள்ளார் என்பது தெரிகின்றது. சர்வதேசம் அரசின் கபடநோக்கங்களை புரிந்து கொள்ளவேண்டும் ஆனால் புரிந்து கொள்ளுமா? என்பதுதான் தமிழ் மக்களிடம் இன்று எழுந்துள்ள கேள்விக்குறியாகும்.

Please Click here to login / register to post your comments.