சலுகைகளுக்காக ஏமாறும் முஸ்லிம் தலைமைகள்

ஆக்கம்: எஸ்.கே
சிங்களப் பேரினவாத சித்தாந்தத்தை கருப்பொருளாகக் கொண்ட தென்னிலங்கைக் கட்சிகளை முஸ்லிம் அரசியல் கட்சிகள் முழுக்க முழுக்க நம்புவதும் அவர்களது அடிசார்ந்து நிற்பதும் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நட்பு றவில் வரட்சியை ஏற்படுத்தும் என்பது தெளிவு.

வடக்குக் கிழக்கில் மொழியால், நிலத்தொடர்பால் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இணைந்திருக்கின்றன.

முஸ்லிம்கள் தனித்துவமான இனம். அவர்களது மதகாலசாரங்கள் வேறானது. அல்லது தனித்துவமானதாக அமைந்தாலும் அவர்கள் பேசுகின்ற மொழி தமிழ் மொழியாக இருப்பதால் இரு இனங்களும் இணைந்து வாழ வேண்டியது கட்டாயமானது.

ஆனால் தமிழினம் தமது உரிமைகளை அகிம்சை வழிமுறையில் கேட்டுப் போராடிய போது சிங்களப் பேரினவாதம் காட்டிய கடுமையான இனவாதம் காரணமாக தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் சிறிலங்கா அரசியல் தலைமைகளுக்கும் இடையிலான உடன்படிக்கைகள் கிழித்தெறியப்பட்டன.

பண்டா - செல்வா உடன்படிக்கை, டட்லி - செல்வா உடன்படிக்கை என பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு அவை கிழித்தெறியப்பட்டும், நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே தமிழினம் தமது ஆயுதவழிமுறையை ஆரம்பித்தது.

இன்று தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பலம் அடைந்து விட்டது. வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் தான் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரித்திருக்கிறது.

இந்த நிலையில் தமிழ் பேசும் சமூகங்கள் இணைந்திருப்பதும் தங்களது பிரச்சினைகளை பரஸ்;பரம் புரிந்துணர்வோடு பேசித் தீர்வு காண வேண்டியதும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும்.

தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவு என்பது என்றும் நிலைத்திருக்க வேண்டியது அவசியமானது. கடந்த காலங்களில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே உறவை சீர்குலைப்பதற்கான பல்வேறு முயற்சிகளை சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்டது.

சில கசப்பான சம்பவங்களும் நடைபெற்றன. ஆயினும் தமிழ் முஸ்லிம் சமூக உறவு வளர்க்கப்பட வேண்டும் என்பதில் விடுதலைப்புலிகள் மிகுந்த கரிசனை அக்கறை காட்டி வருகின்றனர்.

இதில்தேசியத் தலைவர் உறவை வளர்ப்பதில் மிக அவதானத்துடனும் விருப்புடனும் இருக்கிறார்.

வடக்கைப் பொறுத்தவரை இன்று முஸ்லிம் மக்கள் மீள் குடியேறியிருக்கின்றனர். தமிழ் முஸ்லிம் சமூக ஒற்றுமை துளிர்விட்டு செழுமை அடைந்து வருகின்றது.

இதன் எடுத்துக்காட்டாக யாழ் குடா நாட்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் கூட்டமைப்புச் சார்பாக முஸ்லிம் பிரதி நிதியும் உள்வாங்கப்பட்டு போட்டியிடுகிறார் என்றால் அது பெருமைக்குரிய விடயம்.

அதே வேளை தமிழ் மக்கள் எவ்வாறு யாழ்குடா நாட்டில் சிங்கள இராணுவ வன்முறைகளால் துன்பங்களை எதிர்நோக்குகிறார்களோ அதே வன்முறைகளை முஸ்லிம் மக்கள் எதிர் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ் மக்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட துன்பங்களை உணரக்கூடியதாக உள்ளதுடன் தமிழ் மக்களுடன் இணைந்து அரச பயங்கரவாதத்துக்கு எதிராக முஸ்லிம் சமூகமும் குரல் கொடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் கிழக்கைப் பொறுத்தவரை இன்னும் இவ்வாறான சூழல் உருவாகவில்லை என்று தான் கருத வேண்டியுள்ளது. பிட்டும், தேங்காய்பூவும் போல் இரு சமூக உறவுகளும் பலப்பட வேண்டும் என்பதில் விடுதலைப்புலிகள் அக்கறையாக செயற்பட்டு வருகின்றனர்.

முஸ்லிம் பிரதிநிதிகள், பிரமுகர்களை அழைத்து சந்திப்புக்கள், கலந்துரையாடல்களை விடுதலைப்புலிகள் நடத்தி வருகின்றனர். சமூக உறவு ஒரு குறிப்பிட்டளவு தக்கவைக்கப்பட்டுள்ள போதிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் பிரமுகர்கள் பேரினவாதக் கட்சிகளின் காலடியில் அடிமைப்பட்டுக் கிடப்பதும் அவர்களது சலுகைகளைப் பெற்றுக் கொள்வதிலும் குறியாய் இருப்பதால் விடுதலைப் புலிகளுடனான உறவைப் பேணுவதில் முஸ்லிம் பிரமுகர்கள் ஆர்வம் காட்டிய போதிலும் அவை மந்த கதியையடைகிறது.

குறிப்பாக இந்தப் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முஸ்லிம் அரசியல் கட்சி சார்ந்திருப்பதால் கட்சிக ளின் கருத்துக்களுக்கு கட்டுப்பட்டு செயற் படமுனைவதால் தமிழ் முஸ்லிம் உறவில் தொய்வு நிலை ஏற்படுகின்றது. தற்போதைய நிலையை அவதானிக்குமிடத்து சகல முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தற்போது ஆளும் தரப்புடன் சார்ந்திருப்பதைக் காணக்கூடியதாகவு ள்ளது.

பேரியல் அணி, அதாவுல்லா அணி, ஹக்கீம் அணி, என ஒட்டுமொத்த முஸ்லிம் கட்சிகளும் ஆளும்தரப்பு அடி மைகளாக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் உடன்படிக்கையினைச் செய்து கொண்டு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரம சிங்காவை வாய்நிறைய புகழ்ந்து தள்ளியது. ஆனால் உள்@ராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட எடுத்த தீர்மானமானது ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விடுபடுவதற்கான ஒரு நடவடிக்கைதான் என அரசியல் விமர்சகர்கள் அபிப்பிராயம் தெரிவித்திருந்தனர்.

எனினும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளுராட்சி சபைத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கலில் எதிர் நோக்கிய பிரச்சினையும் பின்னர் நீதிமன்றம் மூலம் கிடைத்த சாதகமான தீர்ப்பும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆதரவுக்கு அடித்தளமிட்டது. ஆரம்பத்தில் ஊடகங்களில் கசிந்த செய்திகளை மறுதலித்து வந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுதியாக வெளியிட்ட அறிக்கையில் ஜனாதிபதி அவர்களுக்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்கப் போவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றுக்குள்ளும் அரச தரப்பு ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஹக்கீம் தெரிவித்திருப்பதானது விரைவில் முஸ்லிம் காங்கிரஸ் முழுமையாக அரசாங்கத்துடன் இணைந்து விடும் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தியுள்ளது.

இதுவரை நாட்களும் எதிரணி வரிசையில் நின்று முஸ்லிங்கள் தொடர்பாக அரச தரப்புச் செயற்பாடுகளை விமர்சனம் செய்து வந்த முஸ்லிம் காங்கிரசும் தற்போது, அரசுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்திருப்பதிலிருந்து இன்றைய அரசாங்கத்தை விமர்ச்சிக்கக் கூடிய நிலையில் முஸ்லிம் கட்சிகள் எவையுமில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியில் நீண்ட நாட்களாக இருந்து வந்தவரும் ஐ.தே.கட்சியின் நம்பிக்கைக்குரியவருமான அஸ்வர் அரச தரப்புடன் இணைந்து கொண்டதால் ஜனாதிபதி அவருக்கு ஊடகத்துறை சார்ந்த மிகப் பொறுப்பு வாய்ந்த பதவி ஒன்றை வழங்கியிருக்கிறார் மகிந்தர்.

இவ்வாறான சூழலை அவதானிக்கின்ற போது ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் கொழும்பு அரசியலையும் சிங்கள அரசியல் கட்சிகளையும் சுற்றி நிற்பது தமிழ் முஸ்லிம் சமூக உறவில் விரிசல் நிலையையே ஏற்படுத்தும்.

அதே வேளை கொழும்பு அரசை நம்பி முஸ்லிம் கட்சிகள் ஆதரவுக் கரத்தை நீட்டி வந்தாலும் அவர்களது அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டதா? என்றால் விடை பூச்சியமே.

எனவே தமிழினம் சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்டே தமது விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் மற்றுமொரு சிறுபான்மையினமான முஸ்லிம் சமூகத்தை இன்று சிங்கள இனவாத சக்திகள் தங்களது சுயலாபத்துக்காக சலுகைகளை வழங்கி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

Please Click here to login / register to post your comments.