இராணுவமயமாகும் அரசியலும் அரசியல்மயமாகும் இராணுவமும்

ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, லங்காசமசமாஜக் கட்சி மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகியவற்றை உள்ளடக்கிய சோசலிச மக்கள் முன்னணி நேற்று முன்தினம் கொழும்பில் செய்தியாளர் மகாநாடொன்றை நடத்தி இலங்கை அரசியல் இராணுவமயமாகும் ஆபத்து தோன்றியிருப்பதாக எச்சரிக்கை செய்திருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராகக் களமிறங்கவிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகா தற்போது இராணுவ சீருடையில் இல்லாவிட்டாலும் அவரின் இராணுவ மனப்பான்மை மாறப்போவதில்லை என்றும் இராணுவத்தை அரசியலுக்குள் கொண்டுவர அவர் மேற்கொள்ளும் முயற்சி மிகவும் பாரதூரமான ஒரு விடயம் என்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருக்கிறார். ஜெனரல் பொன்சேகா தேர்தலில் வெற்றி பெறுவாரேயானால், இயல்பாகவே முப்படைகளினதும் பிரதம தளபதியாகப் பொறுப்பேற்பார் என்பதால் அரசியலை இராணுவமயப்படுத்துவதில் அவர் எந்தப் பிரச்சினையும் எதிர்நோக்கப்போவதில்லை என்று தெரிவித்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அரசியலமைப்பு விவகார, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருமான டியூ குணசேகர இராணுவத்தை அரசியல் மயப்படுத்துகின்றதும் அரசியலை இராணுவ மயப்படுத்துகின்றதுமான தற்போதைய போக்கு மக்களுக்கு ஆபத்தானது என்று கூறியிருக்கிறார்.

முன்னாள் இராணுவத் தளபதி அரசியலில் இறங்கி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து தனது அரசியல் செயற்பாடுகளையும் முன்னெடுக்க ஆரம்பித்திருப்பதையடுத்தே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரித் தலைவர்கள் அரசியல் இராணுவ மயமாகும் ஆபத்துக் குறித்து நாட்டுமக்களை எச்சரிக்க தலைப்பட்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இலங்கையில் இராணுவம் அரசியல் மயமாகும் போக்கும் அரசியல் இராணுவ மயமாகும் போக்கும் எப்போதோ ஆரம்பித்து விட்டதென்பதைப் புரிந்து கொள்ளாதவர்களாக இத்தலைவர்கள் நீண்டகாலமாக உறங்கு நிலையில் இருந்து திடீரென்று விழித்துக் கொண்டவர்கள் போன்று பேசுகிறார்கள்.

இலங்கையின் இனநெருக்கடி உள்நாட்டுப் போராக மாறத்தொடங்கிய காலத்தில் இருந்து இராணுவவாத முனைப்புடனான அரசியல் செயற்பாடுகளை சகல அரசாங்கங்களுமே முன்னெடுத்து வந்திருக்கின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாக உலகிற்கு காட்டிக் கொண்டு சகல அரசாங்கங்களுமே இராணுவத் தீர்வைக் காண்பதிலேயே உண்மையான அக்கறையைக் காட்டிவந்தன. சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளை மதிக்காத போக்கை தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் மத்தியில் காலங்காலமாக காணக்கூடியதாகவிருந்தபோதிலும், அது 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான காலகட்டத்தில் இருந்தே உக்கிரமடையத் தொடங்கியது. நோர்வேயின் அனுசரணையுடன் ரணில்விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் முன்னெடுத்த சமாதான முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை வலியுறுத்திக்கொண்டே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ போட்டியிட்டார்.

ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.), ஜாதிகஹெல உறுமய போன்ற பேரினவாத சக்திகளுடன் அணிசேர்ந்த ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரங்கள் சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான குரோத உணர்வுகளைத் மேலும் தூண்டிவிட்டன. அத்தகைய நச்சுத்தனமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டபோது பேரினவாத அரசியல்வாதிகளுடன் வாசுதேவ, டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண போன்ற இடதுசாரித் தலைவர்களும் ஒரேமேடையில் அமர்ந்திருந்ததை முழுநாடும் அறியும்.

அதற்குப் பிறகு இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதையடுத்து முற்றுமுழுதாக போருக்கு ஆதரவு அளிப்பதற்காகவே தென்னிலங்கை மக்கள் தயார்படுத்தப்பட்டார்கள். கிழக்கில் மாவில்ஆறில் தொடங்கிய இராணுவ நடவடிக்கை நான்காவது ஈழப்போரின் இறுதிக்கட்டமென்று வர்ணிக்கப்படுகின்ற முல்லைத்தீவு நந்திக்கடலில் முடிவடையும்வரையான சுமார் மூன்றரை வருட காலகட்டத்தில் ஒவ்வொரு கட்ட போர்வெற்றியையும் அரசாங்கம் எவ்வாறு கொண்டாடியது என்பதும் மாகாணசபைகளின் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கு இராணுவ வெற்றிகளை எவ்வாறு பயன்படுத்தியது என்பதும் அண்மைய வரலாறு. கடந்த மேமாத நடுப்பகுதிக்குப் பிறகு தென்னிலங்கையில் காணப்படக் கூடியதாக இருந்த போர் வெற்றிக்கொண்டாட்டங்கள் உள்நாட்டுப் போரின் விளைவாக இலங்கைச் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் ஆழமான இனப்பிளவை பிரகாசமாக வெளிக்காட்டியிருந்தன.

இராணுவ வெற்றிகளை மக்கள் மத்தியில் மட்டுமீறிப் பிரசாரப்படுத்தி தேர்தல்களில் வெற்றிபெறுவதில் காட்டிய தீவிரத்தின் எதிர்மறையான விளைவுகளை ஜனாதிபதி ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் தற்போது கணிசமான அளவுக்கு புரிந்து கொண்டிருக்கக்கூடும். போர் வெற்றிக்கு ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் ஏட்டிக்குப் போட்டியாக உரிமை கோரக்கூடிய ஒருவரை அரசியலுக்குக் கொண்டுவருவதைத் தவிர, அரசாங்கத்துக்கு பாரிய சவாலைத் தோற்றுவிக்க வேறு வழியே இல்லை என்று எதிரணிக் கட்சிகள் முடிவெடுக்க நிர்ப்பந்திக்கப்படுகின்ற அளவிற்கு தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தை இராணுவவாத உணர்வு ஆக்கிரமித்திருக்கிறது. போர் வெற்றிக் குதூகலத்தில் சிங்கள மக்களை மிதக்கவிட்டு அரசியல் அனுகூலமடைவதற்கு மேற்கொள்ளப்பட்டுவந்த செயற்பாடுகளின் விளைவாக அந்தமக்கள் மத்தியில் இன்று இராணுவவாத அரசியல் உணர்வே மேலோங்கியிருக்கிறது.

இத்தகையதொரு சூழ்நிலையே ஜெனரல் பொன்சேகா இராணுவ சீருடையைக் கழற்றிவிட்டு சிவிலுடைக்குள் புகுந்துகொண்டு ஒரு அரசியல்வாதியாக அரசாங்கத்துக்கு குறிப்பாக ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு சவால் விடுக்க வழிவகுத்திருக்கிறது. இந்த யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ளாமல் அரசியல் இராணுவமயமாகும் ஆபத்து தோன்றியிருப்பதாக இடதுசாரித் தலைவர்கள் அபாய சமிக்ஞை காட்டுவதைப் பார்க்கும்போது அவர்களின் அரசியல் அனுபவம் குறித்து உண்மையில் சந்தேகம் எழுகிறது.

அரசியல் ஏற்கெனவே இராணுவமயமாக ஆரம்பித்துவிட்டதன் தெளிவான அறிகுறிகளாகவே அரசாங்க நிருவாகம் மற்றும் இராஜதந்திர சேவையின் உயர் பதவிகளில் முன்னாள் படை அதிகாரிகளின் நியமனங்களை நோக்கவேண்டியிருக்கிறது. இலங்கைஇந்திய சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு அமைக்கப்பட்ட வடக்குகிழக்கு இணைந்த மாகாணத்தின் முதல் ஆளுநராக ஓய்வுபெற்ற இராணுவத்தளபதி நளின் செனவிரத்னவை அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா நியமித்திருந்தார். இடையிடையே குறுகிய காலகட்டங்கள் தவிர மற்றும்படி வடக்குகிழக்கு மாகாணத்தின் ஆளுநர்களாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளே தொடர்ச்சியாக பதவிவகித்து வந்திருக்கிறார்கள். வடக்கும் கிழக்கும் தனித்தனியாக இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டதன் பின்னர் தற்போதும் ஓய்வுபெற்ற இரு படையதிகாரிகளே பதவிகளில் இருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சிவில் அதிகாரிகளை ஆளுநர்களாக நியமிப்பதில் அரசாங்கங்கள் ஒருபோதுமே ஆர்வம் காட்டுவதில்லை.

முன்னரைக் காட்டிலும் தற்போதைய அரசாங்க நிருவாகத்தில் பல உயர் பதவிகளில் ஓய்வுபெற்ற படையதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மாகாண சபைகளின் தேர்தல்களில் ஓய்வுபெற்ற படை வீரர்களை அல்லது ஊனமுற்றபடை வீரர்களை வேட்பாளர்களாக அரசாங்கமும் எதிரணிக் கட்சிகளும் நியமித்தும் வந்திருக்கின்றன. இவ்வாறாக அரசியலை இராணுவமயப்படுத்துவதை அரசியல்வாதிகள் தான் ஏற்கெனவே ஆரம்பித்து வைத்தார்கள் என்பதை "அரசியல் இராணுவமயம்%27 குறித்து அச்சம் தெரிவிக்கும் இடதுசாரித் தலைவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதைவிடுத்து ஜெனரல் பொன்சேகா தேர்தலில் குதிப்பதால் அல்லது வெற்றிபெறுவதால் மாத்திரம் தான் அரசியல் இராணுவமயமாகும் ஆபத்து தோன்றும் என்று கூறுவது அரசியல் சந்தர்ப்பவாதமேயன்றி, வேறு ஒன்றுமில்லை!

Please Click here to login / register to post your comments.