ஏன் அகதிகள் ஆனோம்?

ஆக்கம்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்
1983 ஜூலை 23ஆம் நாள் யாழ்ப்பாணத்துத் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் தாக்கி 13 படை வீரர் இறந்தனர்.

அன்று அவர்களின் உடலங்கள், கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டன. கொழும்பில் உள்ள கனத்தை மயானத்தில் நல்லடக்கத்திற்காகக் கொண்டு சென்ற வேளையில் மயானத்தின் அருகே உள்ள பகுதியில் தொடங்கிய தமிழருக்கு எதிரான கலவரம், சிங்களவரின் தாயகமெங்கும் பரவியது.

நான்கைந்து நாட்கள் தொடர்ச்சியாகச் சிங்களவர் கொடூரமாகத் தமிழரைத் தாக்கி வந்தனர். கறுப்பு வெள்ளிக் கிழமை என அழைத்த ஒரு நாளில் மட்டும் கொழும்பு நகரின் தமிழ்ப் பகுதிகள் தீப்பற்றி எரிந்தன.

சிங்களத் தாயகத்தில் உள்ள 5 ஆயிரம் தமிழர்கள் வரை கொல்லப்பட்டனர். மலையகத் தமிழர், ஈழத் தமிழர், இஸ்லாமியர் என வேறுபடுத்தாது வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு தொகுதிதோறும் தமிழர் வீடுகளைத் தேடிய சிங்களக் காடையர் கூட்டம், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, தீ வைப்பு எனக் கட்டுக்கடங்காத வெறியுடன் அலைந்தது.

காவல் துறையும் படைப் பிரிவுகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. சிறைகளில் வாடிய தமிழ்க் கைதிகளைச் சிங்களக் கைதிகள் கொலை செய்தபொழுது, சிறைக் காவலர்கள் வேடிக்கை பார்த்தனர். 58 சிறைவாசிகளை வெலிக்கடைச் சிறையில் கொன்றமை அந்நாள்களில் நிகழ்ந்தன.

'தவத்துறை மாக்கள், மிகப்பெருஞ் செல்வர், ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர், முதியோர் என்னான்; இளையோர் என்னான்; கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்ப' (மணிமேகலை)

ஏறத்தாழ 25 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பலாயின. பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளைத் தமிழர் இழந்தனர். பள்ளிகளிலும் கோயில்களிலும் முகாம்களிலும் தமிழர் தஞ்சம் புகுந்தனர். தமிழரின் மரபு வழித் தாயகத்திலும் சிங்களப் படையின் கொடூரத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. தலைமன்னாரில் இருந்து மீனவப் படகுகளில் ஏறித் தனுஷ்கோடிக்கும் இராமேஸ்வரத்திற்கும் மண்டபத்திற்கும் ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்தனர்.

அந்தக் காலத்தில் வரத் தொடங்கிய அகதிகளைத் தமிழக அரசு இரு கரம் நீட்டி வரவேற்றது. புகலிடம் கொடுத்தது; வாழ்வாதாரங்களை வழங்கியது; கல்விக் கூடங்கள், தொழிலகங்கள், மருத்துவமனைகள் எனத் தமிழகத்தின் வசதிகள், வாய்ப்புகள் தஞ்சம் கோரியோருக்கு ஆயின.

அப்பொழுது எம்.ஜி.இராமச்சந்திரன், முதலமைச்சர். கலவரம் நடந்துகொண்டிருந்த பொழுதே ஈழத் தமிழரை நோக்கி ஆறுதல் சொற்களைக் கூறினார். வானொலியில் அவர் ஆற்றிய உரை, ஈழத்தில் துன்பப்பட்டோரின் நெஞ்சில் மருந்தாகியது.

தமிழகத்திலும் அங்கிங்கெனாதபடி எங்கும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக மக்களின் எழுச்சியைக் காண முடிந்தது. மும்பையில், தில்லியில், கொல்கத்தாவில், பெங்களூரில், ஐதராபாத்தில், திருவனந்தபுரத்தில் வாழ்ந்த தமிழர்கள் ஈழத் தமிழருக்காக இடையறாது குரல் கொடுத்தனர்.

வந்தடைந்த அகதிகளைச் சொந்தங்களாகக் கருதிய தமிழக அரசு எந்திரம், விதிகளைத் தளர்த்தி, அகதிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது. 1983இல் தொடங்கிய அகதிகள் வருகை, 1987 வரை நீடித்தது.

1987இல் இராஜீவ் - ஜெயவர்த்தனா உடன்பாடு கண்ட பின்பு இவ்வாறு வந்த அகதிகள், அரசு உதவியுடன் ஈழத்திற்கு மீண்டனர். ஐ.நா. அகதிகள் ஆணைக் குழுவும் இவ்வாறு மீள்வோருக்குத் தமிழகத்திலும் ஈழத்திலும் வசதிகள் செய்து கொடுத்தது.

1987 ஆனியில் இந்திய அமைதிப் படை தமிழர் மரபு வழித் தாயகத்திற்குச் சென்றது. மூன்று மாதங்கள் கடந்தன. 1987 ஆவணிக் கடைசியில் அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் முரண்பாடுகள் தோன்றின. இந்த முரண்பாடுகள் போருக்குக் காரணமாயின.

இயல்பு வாழ்க்கையைப் போர் பாதித்தது. தமிழர் மரபு வழித் தாயகத்தில் முதன் முறையாகத் தமிழ் மக்கள் தம் வீடுகளை விட்டுக் கோயில்களிலும், பள்ளிக் கூடங்களிலும், பொது மண்டபங்களிலும் தங்கும் நிலை ஏற்பட்டது. ஈழத்தின் ஏழு மாவட்டங்களில் உள்ள மக்கள் அனைவரும் நிர்க்கதிக்கு உள்ளாயினர்.

சிங்களவரின் தாயகத்தில் பாதுகாப்பு இல்லாத பொழுது, தமிழர் தாயகத்திற்குக் கப்பல்களில் வந்தனர் ஈழத் தமிழர். 1958, 1977, 1983 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் இக்கதிக்கு அவர்கள் ஆளாயினர்.

சிங்களக் காவல் துறையும், சிங்களப் படையும் தாக்குதலைத் தொடங்கியதால் அப்பாவி மக்கள் 1983இல் தமிழகத்திற்குப் புலம் பெயர்ந்தனர். பாதுகாப்புத் தேடிப் படகுகளில் பயணித்தனர்.

1987இல் இந்தியப் படை, விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல்களைத் தொடங்கியதும் பாதுகாப்பு தேடித் தமிழகத்திற்கு ஏராளமானோர் புலம் பெயர்ந்தனர். வல்வெட்டித் துறையின் சந்தி முனையில், தெருவோரங்களில், கடற்கரையில் இந்தியப் படையின் தேடுதல் வேட்டையில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பிணங்களாயினர். படையினரால் மானபங்கத்திற்கு ஆளான பெண்கள், தற்கொலை செய்துகொண்டனர். வியட்நாமில் அமெரிக்கப் படைகள் நடத்திய மயிலாய் கொடூரம் போன்றது என இதனை உருவகித்தனர். மட்டக் களப்பில், அம்பாறையில் இத்தகைய தேடுதல் வேட்டையின் பேரில் அப்பாவி மக்களை உடலங்களாக்கின. பொறாத மக்கள் தமது தாயகத்துள்ளேயே புலம் பெயர முடியாமல் பாதுகாப்புத் தேடித் தமிழகம் வந்தனர்.

1990 பங்குனியில் இந்தியப் படை முற்று முழுதாக வெளியேறியதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் இடையே போர் மூண்டது. தமிழர் மரபு வழித் தாயகம், இலங்கை அரசு விதித்த பொருளாதாரத் தடையால் காய்ந்தது. சிங்களப் படை ஒரு பக்கம்; பொருளாதாரத் தடை மறு பக்கம். தாங்க முடியாத ஈழத் தமிழ் மக்கள், மலையகத் தமிழ் மக்கள், தமிழகத்திற்குப் புலம் பெயர்ந்தனர்.

1958இல் வசதியான தமிழ்க் குடும்பங்கள் தமிழகம் வந்தன. 1977இல் அகதிக் கப்பலையே திசை திருப்பித் தமிழகத்திற்கு விடலாமா என்ற முனைப்பு, 1983இல் கண்ணீரும் கம்பலையுமாய், பசியும் படைகளும் துரத்த வெறுங்கையராய், காயமுற்ற உடம்புகளுடன் தமிழகத்திற்கு அகதிகள் வரத் தொடங்கினர்.

1991 தொடக்கம் மீண்டும் தமிழகத்திற்கு அகதிகள் படகுகளில் வந்தனர். சிங்களப் படைகள் தமிழர் மரபு வழித் தாயகத்தில் வந்து, நிலை கொண்டு ஈழத் தமிழர்களைத் தாக்கினர்.

நான்காண்டுக் காலம், இக்கொடூரம் நிகழ்ந்தது. 1995இல் சந்திரிகா ஆட்சிக்கு வரும் வரை அப்பாவித் தமிழ் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்றனர். உயிரச்சம் கொண்ட ஈழத் தமிழர்கள் பாதுகாப்புத் தேடித் தமிழகம் வந்தனர். 1995இல் சந்திரிகா வந்ததும் சிறிய இடைவெளி. பேச்சு வார்த்தைக்காக இந்த இடைவெளி.

வழமை போலச் சிங்கள அரசு, பேச்சுவார்த்தையை முறித்தது. 1995 ஆவணியில் யாழ்ப்பாணக் குடா நாட்டை விட்டு, பத்து இலட்சம் தமிழர்கள் வன்னிக் காடுகளுள் அடைக்கலம் தேடினர். அவர்களுள் பலர் தலைமன்னார் வந்து படகுகளில் ஏறித் தமிழகம் வந்து சேர்ந்தனர்.

இக்காலத்தில் தமிழகம் வந்த படகுகளைத் தமிழகக் காவல் துறையினர் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தமை அகதிகள் வருகையைக் குறைத்தது. ஆனாலும் படகோட்டிகளுக்கு இந்த இழப்பையும் ஈடு செய்யக் கூடிய தொகைகளை வழங்கி, நெருக்கமாகப் படகுக்குள் அடுக்கிக்கொண்டு தமிழகக் கரை சேர்ந்தனர். சில படகுகள் வழியில் கடலுள் மூழ்கியதால் பலர் இறந்தனர்.

இந்த இழப்புகளைத் தெரிந்துகொண்டே ஈழத் தமிழர்கள் பயணங்களை மேற்கொண்டனர். தமிழகத்திற்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் அகதிகளாக வந்தனர்.

கடலில் ஒரு கல்லறை

'பெற்ற நிலம் துறந்து பிரியமுடன் வாழந்திருந்த சுற்றம் துணை பிரிந்து, தோணி துணையாகக் கடல் தாண்டி வேறு நிலக் கரை சேர்ந்து வாழ்வமெனும் திடமோடு வாழ்வில் ஒரு திருப்பத்தைக் காண்பமெனும் கனவோடு வந்தவர்கள்; காலமெலாம் ஓயாத இனவாதப் போர்க்களத்தின் எரியினிலே வெந்தவர்கள் வாடி உயிர் மெலிந்து, வாழ்வில் சுவை இழந்து வீடிழந்து காடுகளில் விலங்கென்றும் ஓம்பி மனிதம் எனும் பண்பனைத்தும் மறந்து விட்ட ஆட்சியினில் புனிதங்கள் என்பவெலாம் பொசுங்கிவிட்ட சூழ்நிலையில் தாங்குவதன் எல்லையெலாம் தாண்டிவிட்ட வேதனையில் யாங்கேனும் யாங்கேனும் யாக்கையினைக் காப்பமென எண்ணியர்; தம் இனத்தார் இருக்கின்ற மண்சேர நண்ணியவர்; ஐயகோ நடுக்கடலில் பேரலையின் கோரப் பிடியினிலே குமைந்து குமைந் (து) ஆவி தீரப் பிரிந்தனர்; இச்செய்தியினைப் பார்த்த கணம் எரிமலைகள் ஆயிரம்வந் தென்னுள்ளே சேர்ந்தாங்கு பொறிபரப்பி வெம்மையில்இப் பூமியினைத் தீய்ப்பதுபோல் பொங்குதடா நெஞ்சம்; இந்தப் பூவுலகில் யாழ்மாந்தர்க்(கு) இங்கும் ஒரு கல்லறையா? இப்படியோர் வையகமா?

நிலமும் பகையாயின் நீரும் பகையா? தம் புலம் பெயர்ந்து வையகத்தில் பூமியுள பக்கமெலாம் நாடுடைய பண்டை இனம் நாடோடி வாழ்வினராய் ஓடுவதும், கால்வைக்க உரிமை எதும் இல்லாது வாடுவதும் காணுகிறோம்; மனித உரிமைகளை நாடுபவர், மேடையெலாம் நாள்தோறும் வாய்கிழயப் பேசுபவர்; ஈழவரின் பெருந்துயரம் காணுதற்குக் கூசுவதேன்? வையமிது கொடிது கொடியதடா!

தோணி கவிழ்ந்த கணம், துணையின்றி நின்ற கணம் பேணியவை அத்தனையும் பிரியும் பெருஞ்சோகம் மின்னலென அங்கமெலாம் விரவுகின்ற நேரத்தில் என்ன நினைத்தாரோ? எதற்காக ஏங்கினாரோ? சடங்கொன்று அறியாது, தமர் சூழ்ந்து அழுகாது அடங்கிய இவ் ஆவிகளின் ஆசைகளை யாரறிவார்?'

(நன்றி,

குலோத்துங்கன் கவிதைகள் இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி வந்த பதினான்கு அகதிகள் கடலில் மூழ்கி இறந்தது பற்றிய செய்தியின் எதிரொலி. தினமணி கதிர், 9, ஆகஸ்ட், 1998)

2002 தொடக்கம் 2006 வரை அகதிகள் வருகை குறைந்தது. மீண்டும் 2007இல் சிங்களப் படைகள் வாகரையில் தொடக்கிய போர், 2009 வைகாசியில் முள்ளிவாய்க்காலில் முடிவடையும் வரை தமிழகம், அகதிகளுக்குப் புகலிடம் கொடுத்தது.

முள்ளிவாய்க்கால் போர், 2009 வைகாசியில் ஒரே நாளில் ஐம்பதினாயிரம் உடலங்களைச் சிங்களப் படை, எமனுக்குக் கொடையாக்கியது.

'உடற்கழு தனையோ? உயிர்க்கழு தனையோ? உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரோ?'

(மணிமேகலை, சிறைவிடு காதை)

அந்த உடலங்கள் மீது மிதித்துக்கொண்டு 3 அல்லது 4 இலட்சம் தமிழர்கள் பாதுகாப்பு ஓடைகள் வழியே வவுனியா நோக்கி நகர்ந்தனர். உயிரை மட்டும் கையில் தாங்கி, மானத்தை உடை காக்க, தாகத்தோடும் பசியோடும் நோயோடும் காயங்களோடும் வலிகள் துரத்த, வவுனியாவுக்குள் வந்தோரை முள்வேலிகள் அமைத்து, முகாம்களுக்குள் அடக்கியது சிங்களப் படை.

சிங்களப் படை வீரர், முகாமிற்குள் வருகிறார். சிங்களத்தில் பேசுகிறார். இரண்டு இலட்சம் ரூபாய் தந்தால் முகாமுக்கு வெளியே அனுப்புவேன் என்கிறார். தலைக்கு இரண்டு இலட்சம் ரூபாய் அவருக்குக் கையூட்டாகக் கொடுத்து முகாமை விட்டுத் தப்பியவர்கள், நூற்றுக்கணக்கானோர்.

வவுனியா நகரம் வந்து கொழும்புக்குப் பயணமாகி, மீண்டும் தலைக்கு ஓர் இலட்சம் ரூபாய் கையூட்டாகக் கொடுத்து, இலங்கைக் கடவுச் சீட்டும், இந்திய நுழைவு அனுமதியும் பெற்று கொழும்பு காவல் நிலையங்களில் கெடுபிடிகளில் இருந்து தப்பி, விமானத்தில் ஏறித் திருச்சியிலும் சென்னையிலும் வந்திறங்கியோர் நூற்றுக் கணக்கானோர்.

பச்சிளம் குழந்தை, முகமெங்கும் பருக்களும், புண்களும், கையில் கட்டு, என்னவென்று கேட்டால், சிங்களப் படை வீசிய கந்தக மழையின் காற்றுப் பட்டதால் குழந்தையின் தோல் கருகிப் புண்ணானதாகக் கண்ணீர் வடித்தாள் தாய். காற்றுப் பட்டதற்கே தோல் கருகியிருந்தால், கந்தக மழை விழுந்த இடத்தில் எத்தனை பேர் மண்ணாகி இருப்பார்கள்?

தமிழக மருத்துவர்களுக்கு இது புதிய நோயாகத் தெரிந்தது. அதனால் கந்தகக் காற்றால் தோல் கருகி வந்திருக்கும் நூற்றுக்கணக்கானோருக்காகப் புதிய மருந்து வகைகளைக் கொண்டு வரச் செய்தனர். இத்தனையும் மீறித் தான் அகதிகளானோம்.

கிளிநொச்சி மாவட்ட ஆட்சியர், இலங்கை அரசுப் பணியாளர். போரினால் தப்பி வருகிறார் வவுனியாவிற்கு; கைது செய்கிறது இலங்கை அரசு. இச்செய்தி செவிக்கு வந்தவுடனேயே அவருடன் பணிபுரிந்த பலர் மாயமாயினர். கொழும்பில் பதுங்கினர். கையூட்டுக் கொடுத்தனர், கடவுச் சீட்டுப் பெற்றனர். இந்திய நுழைவுச் சீட்டு வாங்கினர்; இந்தியாவிற்கு அகதிகளாக வந்தனர்.

ஈழத் தமிழர், இந்தியக் குடியுரிமைக்காக ஏங்கி இந்தியா வரவில்லை. ஈழ மண்ணில் தொடர்ந்து வாழும் விடாப்பிடியான எண்ணத்துக்குப் பல்வேறு உயிரச்சத் தடைகள் வந்ததால் கடல் கடந்து வந்தனர். ஈழத்துக்கு அவர்கள் மீள்வதற்கு அங்கு இயல்பாக வாழ்வதற்கு இந்திய உதவ வேண்டும்.

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீருடன் வந்தவருக்குப் பாதுகாப்புக் கொடுத்த தமிழகத்துக்கு நன்றியுடன் வாழும் ஈழத் தமிழர், விரைந்து தத்தம் வாழ்விடங்களுக்குத் திரும்வே விழைவர்.

Please Click here to login / register to post your comments.