வன்முறையை உடனடியாக நிறுத்துங்கள்

ஆக்கம்: கலாநிதி குமார் ரூபசிங்க
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வருகின்ற பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் சொல்லொணாத் துயரங்களை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. யுத்தப் பிரதேசமான வடக்கு - கிழக்கிற்கு வெளியேயும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன. விசேடமாக, மேல் மாகாணத்திலே அண்மைக் காலமாக ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் அதிகரித்திருக்கின்றன.

ஆட்கடத்தல்கள், காணாமல் போதல் மற்றும் படுகொலைகள் என்பவை எல்லாம் இலங்கைக்கு ஒன்றும் புதினமான விடயங்கள் அல்ல. 1971 மற்றும் 1988/1989 காலப்பகுதிகளில் தென்னிலங்கையிலேயே இவ்வாறான மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதைக் குறிப்பிடலாம். 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ். குடாநாட்டிலே காணாமல் போனோர் பற்றிய ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. இதுவரை கால உள்நாட்டு மோதல் இதுவரை 65,000 இற்கும் அதிகமான மக்களைப் பலி கொண்டிருக்கிறது.

1988/89 காலப்பகுதிகளில் இடம்பெற்ற மோசமான வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் காரணமாக, சர்வதேச சமூகம் இலங்கையை ஒரு `தீய நாடாக' பிரகடனப்படுத்தியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவிற்கு சென்று இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி எடுத்துரைத்து முறைப்பாடு செய்திருந்தார். இவ்வாறு மனித உரிமைகளுக்காக தனது அரசியல் வாழ்வில் பாடுபட்ட மகிந்த ராஜபக்ஷ இன்று நாட்டின் ஜனாதிபதியாக ஆகியிருப்பது இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு வாய்ப்பான நிலைமையாகும்.

ஆனால், அண்மைக் காலமாக குறிப்பாக வடக்கு - கிழக்கில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக அதிகரித்திருப்பதைக் காண்கிறோம். தற்போதைய `வன்முறை நடத்தைக்கு' குறிப்பாக கருணா குழுவினரே காரணமாக இருப்பதாக செய்திகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அரச ஆதரவுடைய இத்தகைய துணைக்குழுக்களின் வன்முறைகள் உச்சளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்களைக் கருத்தில் எடுக்கின்ற போது, இராணுவ ஆதரவுடைய கருணா குழு, விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை இராணுவம் ஆகியவை சமீபத்தைய காணாமல் போதல், ஆட்கடத்தல் மற்றும் கொலைகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில், விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தனது சென்றாண்டு மாவீரர் நாள் தின உரையிலே, யுத்தம் தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டிருந்தார். அவரது மாவீரர் தின உரையின் பின்னர் ஆரம்பமான வன்முறைகள் இதுவரை நூற்றுக்கணக்கான இராணுவம், புலிகள் மற்றும் பொது மக்களைப் பலி கொண்டிருக்கிறது. குறிப்பாக, விடுதலைப்புலிகளின் ஆதரவில், மக்கள் படையால் மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் தாக்குதல்கள் சுமுக நிலைமையைப் பாதித்தது.

வடக்கு, கிழக்கிலே இடம்பெற்ற சில வன்முறை நிகழ்வுகள் முழு உலகையும் உலுக்கும் வகையில் அமைந்திருந்தன. திருகோணமலையில் மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை, மன்னார் படுகொலை, அல்லைப்பிட்டி படுகொலை, ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் கொலைச் சம்பவங்களைக் குறிப்பிடலாம். வடக்கு - கிழக்கிற்கு வெளியே. அவிசாவளையில் ஐந்து தமிழ் இளைஞர்களின் தலையற்ற உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டமையும் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தகவல்களின் பிரகாரம் கடந்த டிசம்பர் முதல் இதுவரையான காலப்பகுதியில் யாழ். குடாநாட்டில் மட்டும் 420 இற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். குறிப்பாக, ஆகஸ்ட் 11 இல் முகமாலை முன்னரங்க காவல் நிலைகளில் மோதல் வெடித்ததன் பின்னர் குடாநாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதன் பின்னரேயே், இந்த ஆட்கடத்தல்களும், காணாமல் போதல்களும், படுகொலைகளும் கூடுதலாக அதிகரித்திருக்கின்றன.

யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவைச் சேர்ந்த றெமீடியாஸின் தகவலின்படி, அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படுகிறது. அங்குள்ள அபாயகரமான சூழ்நிலையில் தனது பாதுகாப்பு குறித்தே பெரும் சந்தேகத்தை றெமீடியாஸ் கொண்டிருக்கிறார். 19 வயதுடைய மாணவன் ஒருவர் கடத்தப்பட்டு மறுநாள் காங்கேசன்துறை வீதியில் அவரது சடலம் வீசப்பட்டுக் கிடந்ததாகவும் இதுபற்றி அறிந்த அவரது நண்பி தற்கொலை செய்து கொண்டதாகவும் அறிய முடிகிறது. அதேபோல பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த தியாகராஜா என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார். இவ்வாறு ஆட்கடத்தல்களும், கொலைகளும் அங்கே தினமும் இடம்பெறுகின்றன. இவை ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கைங்கரியம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

தென்னிலங்கையில் வத்தளை, நீர்கொழும்புப் பகுதிகளிலும் அண்மையில் பலர் கடத்தப்பட்டிருக்கிறார்கள். கொழும்பு நகரத்தின் பல பகுதிகளில் குறிப்பாக புறக்கோட்டை பகுதியில் பல தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பல மில்லியன் ரூபா வரை கப்பமாக அறவிடப்படுகிறது. இதனைக் கண்டித்தும் இதனைத் தடுக்க அரசாங்கத்தை வலியுறுத்துகின்ற வகையிலும் அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் கதவடைப்புப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் நிலைமை ஏற்பட்டது.

சில தசாப்தங்களுக்கு முன்னர், விசேடமாக 1987/88 காலப்பகுதியில் மனித உரிமை மீறல்களுக்கெதிராக குரல்கொடுத்து, பாடுபட்டவர்கள் தான் இன்று கதாநாயகர்களாக நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்பாக இருப்பதைக் காண்கிறோம். அப்படியான ஒரு நிலை இருந்தும், இன்று மனித உரிமைகளுக்காக பாடுபடுபவர்களை புலி ஆதரவாளர்கள் எனவும் தேசத் துரோகிகள் எனவும் முத்திரை குத்தித் தூற்றுகின்ற துரதிர்ஷ்ட வசமான நிலை காணப்படுகிறது.

ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் இந்த விதமான மனித உரிமை மீறல்களை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. விடுதலைப்புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கெதிராக அரசாங்கமும் பழிக்குப்பழியாக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. ஆனால், இன்று அரசாங்கம் அப்படித்தான் நடந்து கொள்கிறது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் வரையறையின் அடிப்படையை வழங்குகின்ற, ஐக்கிய நாடுகள் சாசனம், ஜெனீவா உடன்பாடுகள் மற்றும் ஏழு முக்கிய சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் இலங்கையும் ஒப்பமிட்டிருக்கிறது. இதன் காரணமாக, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், உள்நாட்டு முரண்பாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற பொழுதிலும், மனித உரிமை சட்டங்களுக்கும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் தராதரங்களுக்கு அமைவாக செயற்படுவதற்கும் இலங்கை கட்டுப்படுகிறது. அண்மைய ஆண்டுகளில், மனித உரிமைகளை மதிப்பதும் பொது மக்களைப் பாதுகாப்பதும் பல்வேறு பாதுகாப்பு சபை தீர்மானங்களின் ஒரு தேவையாக ஆகியிருக்கிறது.

மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டங்களின் ஒரு அமைப்பே மனித உரிமைகள் சட்டமாகும். போர்க் குற்றங்கள், மனிதாபிமானத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள் போன்ற மனித உரிமை மீறல்களைப் பாதுகாக்கின்ற பல்வேறு உடன்படிக்கைகளை மனித உரிமைகள் சட்டம் உள்ளடக்குவதுடன் அரசாங்கத்தினால் இத்தகைய மீறல்களுக்கெதிரான தண்டனையையும் வலியுறுத்துகிறது. இத்தகைய குற்றங்களை அரசாங்கம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க தவறுகின்றபோது, பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளடங்கலாக சர்வதேச பொறிமுறைகளினூடாக நீதி கேட்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

இன்று இலங்கையில் இடம்பெறுகின்ற வன்முறைகளைப் பார்க்கின்ற போது, ஒரு நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனமான நாடாக இலங்கை ஆகிவிட்டிருப்பதாகவே தோற்றுகிறது. சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு இலங்கை கட்டுப்பட்டிருக்கின்ற நிலையில், பல்வேறுபட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இலங்கை நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

சில தினங்களுக்கு முன்னர் தான், " சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்தவும், மக்களைப் பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது" என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் பொறுப்பாளர் லூயிஸ் ஆர் பௌர் குற்றஞ்சாட்டியிருந்தார். " பல வழக்குகளில் விசாரணைகள் நடத்தப்படாமல் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் பாதிக்கப்படுவோருக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகம் கண்காணிப்பது முதன்மையானதும் அவசரமானதுமாகும்" என்று அவர் கூறியிருந்தார்.

அமெரிக்க வெளிநாட்டமைச்சின் 2006 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையின்படி, மத சுதந்திரத்தை மீறுகின்ற நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இவை இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. இதனை நாம் சரி செய்தாக வேண்டும்.

உள்நாட்டு மோதல் கடந்த 23 வருடங்களாக தொடர்கின்ற போதிலும், எந்தவொரு இணக்கப்பாட்டையும் காண முடியவில்லை. சர்வதேச அனுபவங்களைப் பார்க்கின்ற போது, மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அரசாங்கங்களும் கிளர்ச்சிக் குழுக்களும் உடன்படிக்கைகளை செய்து கொண்டமையையும், இந்த உடன்படிக்கைகள் இறுதியில் சமாதான உடன்படிக்கைக்கு இட்டுச் சென்ற வரலாறுகளையும் பார்க்கிறோம்.

விசேடமாக தென்னாபிரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட கோல்ட் ஸ்ரோன் ஆணைக்குழு (Gold Stone Commission) காணப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு தேசிய சமாதான உடன்படிக்கை தென்னாபிரிக்காவில் ஏற்படுத்தப்பட்டது. சமாதான உடன்படிக்கையின் கீழ் இடம்பெறும் வன்முறைகளை கண்காணிப்பதற்காக கோல்ட் ஸ்ரோன் ஆணைக்குழுவும் அப்போது ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. 1992 இன் இறுதியிலும் 1993 இன் ஆரம்பத்திலும் இடம்பெற்ற வன்முறைகளை இந்த ஆணைக்குழு விசாரிக்க முடிந்தது. 1992 டிசம்பரில் இரகசிய இராணுவ புலனாய்வு தலைமையகத்திற்கு திடீர் விஜயம் செய்து விசாரணை செய்த இந்த ஆணைக்குழு, வன்முறைகளுக்குக் காரணமான பல இராணுவ உயர் அதிகாரிகளை இனம் கண்டது. இதனையடுத்து, ஜனாதிபதி டி கிளார்க் 23 உயர் இராணுவ அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தார்.

ஏற்கனவே, யுத்தநிறுத்த உடன்படிக்கை இலங்கையில் உள்ள நிலையில், வன்முறைகளைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதற்காக கோல் ஸ்ரோன் போன்ற அதிகாரமளிக்கப்பட்ட ஒரு ஆணைக்குழு இலங்கைக்கு அவசியம்.

அண்மையில், கிழக்கில் 10 முஸ்லிம்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட கோர சம்பவத்தின் பின்னர், வன்முறைகளைக் குறைக்க விசேட திட்டம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டம் பலவீனமானதும், பல ஓட்டைகளைக் கொண்டதும் என்பதால் இத்தகைய திட்டங்கள் எந்தளவிற்கு வினைத்திறன் மிக்கவையாக இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறது. அதனால், மிகவும் சக்திமிக்க சட்ட ஒழுங்கு முறைகளை நாம் ஏற்படுத்த வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில், வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, மூன்று நீதியரசர்கள் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஆலோசனை கூறுகிறேன். ஆனால், இலங்கையைப் பொறுத்த வரையில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் மீது பொது மக்களுக்கு நம்பிக்கை எதுவும் இல்லை. அதனால், உத்தேச ஆணைக்குழுவானது முன்னைய ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் இருந்து விலகி, அந்த ஆணைக்குழுக்களுக்கு நேர்ந்த கதி எதுவும் ஏற்படாது இருப்பதற்கும், சுதந்திரமாக செயற்படுவதற்குமான உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Please Click here to login / register to post your comments.