மாறிவரும் உலக ஒழுங்கிற்கமைய தற்காலிகமாக ஏற்பட்டுள்ள சார்பு நிலையினை நிரந்தரமானதாக்கி சுதந்திர தமிழீழம் காண்போம்

ஆக்கம்: இரா.மயூதரன்
ஈழத்தமிழர்களது பாதுகாப்பு அரனாக முப்பதாண்டுகளிற்கு மேல் விளங்கிய தமிழீழ அரசும் அதன் கட்டுமானங்களும் கடந்த மே 17ம் திகதியுடன் அழிக்கப்பட்டதாக கூறி வெற்றிக் கொண்டாட்டங்களில் திழைத்துவந்த சிங்கள, இந்திய அரசுகள் தற்போது தமது கூற்றுக்களை மறுதலிக்க முற்பட்டுள்ளன. கதிகலங்கி நிற்கும் சிங்களம்

தமிழீழ விடுதலைப்புலிகளது தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது நிழலைக்கூட நெருங்க முடியாத சிங்கள பிராந்திய ஆக்கிரமிப்புப் படைகள் ஊடகங்கள் மூலமாக தினமும் ஒவ்வொரு விதமாக கொன்று இதுநாள் வரையில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.

இவை வெறும் செய்திகள் அல்ல. களத்திற்கு அப்பால் அவர்களால் எட்டமுடியாத தூரத்திலிருக்கும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களாகிய எம்மை நெருங்கிவந்து எமக்கே தெரியாது எம்மை கொல்லும் நாசகார சதித்திட்டம்.

களத்திலே புலிகளை முற்று முழுதாக அழித்துவிட்டதாக மார்தட்டி நிற்கும் சிங்களம் உள்ளுர கதிகலங்கிய நிலையிலேயே இருக்கின்றது.

இவ்வளவு காலமும் புலிப்படைகளின் தாக்குதல்களை களத்திலே எதிர்பார்த்த வண்ணமிருந்தனர். ஆனால் இன்று எங்கிருந்து எந்த வடிவத்தில் அடுத்த கட்டபாய்ச்சல் இடம்பெறப் போகின்றது என்பது தெரியாது சித்தம் கலங்கி நிற்கின்றது சிங்களப் படை.

காட்டுக்குள் வனவாசம் செய்யும் கரிய வேங்கைகள் எப்போது வெளிப்படும் அல்லது நாடு கடந்து இருக்கும் மறவர் படை எப்படியான இடிகளை இறக்கப்போகின்றது எனத் தெரியாது திகைத்து நிற்பதன் வெளிப்பாடாகவே குக்கிராமங்களில் கூட குண்டு துளைக்காத கண்ணாடியால் அமைக்கப்பட்ட மேடையில் நின்று மகிந்த ராஜபக்ச தனது வீராவேச பேச்சுக்களை நிகழ்த்தி வருவதும், விமானநிலையத்தின் ஊடாக நாடு திரும்பும் தமிழ் இளைஞர், யுவதிகளை இலக்குவைத்து துரோகிகள் துணையுடன் கயவர் படை காத்திருக்கின்றமையும் வெளிப்படுத்துகின்றன.

காடு மேடுகளாய் காட்சி தந்த வன்னிப் பெருநிலப்பரப்பில் மயான பூமியாக காணப்பட்ட முக்கிய நகரங்களை வளப்படுத்தி தலை வணங்கா தேசமாக கட்டியெழுப்பி தனி அரசு நடாத்தி இறுமாந்திருந்தோமே! இன்று முன்பைவிட சர்வநாசமாய் போய் கற்குவியலை விஞ்சும் பிணக்குவியல்களாய் காட்சிதரும் அந்த மண்ணை வளப்படுத்தி மீண்டும் அரசமைப்பதற்கு சாம்பல் மேட்டில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்சு பறவைகள் போன்று புறப்பட்டுவரும் புதிய புலிப்படையை எப்படி எதிர்கொள்வதென்று வழிதெரியாது விழி பிதுங்கி நிற்கின்றது சிங்களப்படை.

ஆனால் நாம், தலைவரது இருப்பு பற்றிய, எதிரிகளாலும் துரோகிகளாலும் பரப்பப்பட்டுவரும் பொய் செய்திகளை ஆராய்வதில் எமக்குள் அடிபட்டுக் கொண்டும் அல்லது முரண்பட்டுக் கொண்டிருப்பதிலும் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம்.

எமது தேசியத்தலைவர் அவர்கள் உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களது நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் பெரும்தலைவர். அதனால் ஏற்பட்ட சலசலப்பாக இருந்தாலும் எதிரிகளும் துரோகிகளும் எந்த நோக்கத்துடன் இவ்வாறான செய்திகளை பரப்பி வருகின்றனவோ அதனை ஈடேற்றுவது போன்றே எமது செயற்பாடுகள் அமைந்து விடுகின்றன.

தர்மத்தின் வழி நிற்கும் போராட்டம். நிச்சயம் வெற்றி நமதே.

தர்மத்திற்கும் அதர்மத்திற்கும், வாய்மைக்கும் பொய்மைக்கும் யுகங்கள் கடந்தும் யுத்தம் நடைபெற்று வந்தாலும் ஈற்றில் தர்மமும், வாய்மையுமே வெற்றி பெற்றுள்ளது என்பதனை எம்மவர்கள் இவ்விடத்தில் நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

எமது தலைவனும் தர்மத்தின் வழிநின்றே எமது விடுதலையை வென்றெடுக்க போராடி வந்தார்,வருகின்றார். அதனால்தான் எதிரிகளை மட்டுமே இனம் கண்டு யுத்தம் புரிந்து வந்தார்.

அப்பாவி சிங்களவர்களது வாழ்விடங்களை அழிக்கவில்லை, பள்ளிக்கூடங்கள், வழிபாட்டிடங்களை குண்டு வீசி அழிக்கவில்லை. அவர்களை அகதிகளாக்கி ஒரு வேளை கஞ்சிக்கும் ஒருவாய் தண்ணீருக்கும் வரிசையில் நிற்கும் அவல நிலைக்கு தள்ளவில்லை. ஏன் அவர்கள் மீது உலகில் தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை வீசி கொல்லவில்லையே..!

அவ்வாறு செய்வதற்கு முடியாமலில்லை. அதற்கு சிங்களப் படைகளைவிட தமிழீழ விடுதலைப்புலிகளுக்கே அதிக வாய்ப்புக்கள் இருந்ததை மறுக்கமுடியாது.

இருப்பினும் தமிழர்களது சுதந்திர வாழ்விற்கு இடையூறாகவும் அச்சுறுத்தலாகவும் விளங்கிய சிங்கள அரச போர் இயந்திரங்களுக்கு எதிராகவே யுத்தம் செய்தார்கள் புலிகள்.

இது மனிதநேயம் பற்றி வாய்கிழிய பேசிவரும் மேற்குலக நாடுகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தும் ஈழ மண்ணில் ஏனோ கண்ணாமூச்சி ஆடிவிட்டனர்.

பல வல்லரசுகள் உள்ளடங்கலாக இருபதிற்கு மேற்பட்ட நாடுகளது நேரடி ஆளணி, ஆயுத தளவாட உதவிகள், தொழில் நுட்ப உதவிகள் என்பவற்றிற்கும் மேலாக உளவு தகவல் பரிமாற்றம் மூலமாகவும் அதீத பலம் பெற்ற சிங்களப்படை சுமார் ஒரு இலட்சம் தமிழ் மக்களை கொன்றொழித்தது போதாதென்று தற்போதும் இடைவிடாது கொன்று குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சில பல காரணங்களுக்காக சிங்கள அரசுடன் கைகோர்த்து ஈழத்திலே இரத்த வேட்டை நடாத்திய உலக நாடுகள் தற்போது தமது நிலைபாட்டை மாற்றியமைக்க முற்பட்டு வருகின்றன.

சிங்களத்தின் பிதற்றல்…

தேசியத்தலைவர் அவர்களை பல்வேறு வடிவங்களில் கொலை செய்ததாக செய்திகள் பல வெளிவந்த நிலையில் தற்போது ஐரோப்பாவில் பாதுகாப்பாக உள்ள தேசியத்தலைவர் வரும் மாவீரர் நாளில் வெளிப்படுவார் என புதுக்கதை சொல்லி வருகின்றது சிங்களம்.

தலைநகரிற்குள் ஊடுருவியுள்ள தற்கொலைப்படை பிரிவைச் சேர்ந்த கரும்புலி வீரர்களால் பாரிய தாக்குதல் நடத்தப்படலாம் என எதிர்வு கூறிவருகின்றது சிங்களப்படை.

இறுதிக்கட்டப் போரில் இருந்து தப்பித்துப் போன விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள், போராளிகள் பலர் நாட்டைவிட்டு தப்பித்துப் போயுள்ளதாக அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வருவதுடன் நாட்டைவிட்டு தப்பி ஓடும் நோக்கத்துடன் கொழும்பிலும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் தலைமறைவாக இருந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை கைது செய்துள்ளதாகவும் செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

இவை போதாதென்று, இலங்கையில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட போதிலும் மேற்குலக நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் மீண்டும் ஒன்றிணைந்து வலுமிக்க ஒரு போராட்ட அமைப்பை உருவாக்க கூடிய அபாயம் இருப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் எம்.கே.நாராயணன் கட்டியம் கூறியுள்ளார்.

இதுபோன்ற செய்திகள் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகள் பலமான கட்டமைப்புடன் தற்போதும் இருப்பதான தோற்றப்பாட்டை உறுதி செய்வதற்கு விளைகின்றது இலங்கை அரசு. முன்னர் முற்றுமுழுதாக அழித்தொழித்து விட்டதாக கூறி தேசிய வெற்றி விழா கொண்டாட்டங்கள் மேற்கொண்டு வந்த சிங்கள அரசு தற்போது இவ்வாறு கூறுவதற்கான காரணங்கள் வெளிப்படையானவையே.

இறுதிப்போரில் தம்மோடு அணிசேர்ந்து நின்ற பல மேற்கத்தேய நாடுகள் தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதோடில்லாது நேரடி மறைமுக அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றமையின் வெளிப்பாடே ஆகும்.

மாற்றமடையும் மேற்குலக நாடுகளது அணுகுமுறை.

இறுதிப்போரிற்கு பின்னரான தீர்வுத்திட்டம் குறித்து உறுதியளிக்கப்பட்டதற்கு ஏற்ப இலங்கை அரசு இதுவரை எந்தவித ஆக்கபூர்வமான முயற்சிகளையும் எடுக்காததனால் ஏமாற்றமடைந்த மேற்குலக நாடுகள் தமது நிலைப்பாட்டினை மாற்ற முட்பட்டுள்ளன.

இவைதவிர அண்மையில் சர்வதேச ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்ட, தமிழ் இளைஞர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லும் காணொளி காட்சிகள் மூலம் சிங்களப் படைகள் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் நிர்வாண நிலையில் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும், வவுனியா தடுப்பு முகாம்களில் முற்றுகைக்குள் வைக்கப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கிலான தமிழ் மக்களது அவலங்களும் தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுவரும் சூழ்நிலையில் இலங்கை அரசுடன் சேர்ந்து தாமும் அப்பழியை ஏற்கும் நிலையில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ் உலக நாடுகள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முன்வந்ததாக கருத வேண்டியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கும் மேற்குலக நாடுகளிற்கும் இடையிலான உறவு முன்பை போன்று ஒட்டுதல் இல்லாது விரிசல் நிலையிலையே காணப்படுகின்றது.

இலங்கையின் அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், படை அதிகாரிகள், ஆளும்கட்சி பாளுமன்ற உறுப்பினர்கள் என மேற்குலக நாடுகளால் விசா வழங்க மறுக்கப்பட்டவர்களது பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

நடைபெற்று முடிந்த அய்க்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக மகிந்த ராஜபக்சேவுடன் அமெரிக்க செல்வதற்கு விண்ணப்பித்த தமிழினத் துரோகி கருணா உள்ளிட்ட இலங்கை படை அதிகாரிகளுக்கு விசா மறுக்கப்பட்டது.

இப்பயணத்தின் மூலமாக தமிழன துரோகி கருணாவிற்கும் இறுதிப்போரில் களப்பணியாற்றிய இராணுவ அதிகாரிகளுக்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்றுக்கொடுக்க முயன்ற ராஜபக்சவிற்கு பெரும் எமாற்றம் ஏற்பட்டிருப்பது நிச்சயம்.

கனடாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள முயன்ற இலங்கை இராணுவப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெலவிற்கும் விசா மறுக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் இங்கிலாந்து நாடும் பெரும் கெடுபிடிகளை விதித்து இலங்கை அரச பிரதிநிதிகளுக்கான விசா வழங்க மறுத்து விட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடித்தளமாக விளங்கும் புலம் பெயர்வாழ் ஈழத்தமிழர்களது செயற்பாட்டினையும் முடக்கி முற்றுமுழுதாக தமக்கான அச்சுறுத்தலை போக்கி கொள்வதற்கு முயற்சிக்கும் சிங்களப் பேரினவாத அரசிற்கு இது பெரும் அடியாகவே அமைந்துள்ளது.

பல்வேறுபட்ட உயர்மட்ட சந்திப்புக்களை மேற்கொண்டு திரும்பத் திரும்ப தமது கருத்துக்களை திணித்து எவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது உலகளவில் தடையை ஏற்படுத்தினார்களோ அது போன்று தற்போதும் முயன்று புலம் பெயர்வாழ் ஈழத்தமிழர்களதும், தலைமையினதும் முயற்சிகளை தோற்கடித்து விடலாம் என நினைத்திருந்தது சிங்களம்.

மாறிவரும் உலக ஒழுங்கிற்கேற்ப இம்முயற்சி தற்காலிகமாக தோற்கடிக்கப்பட்டிருப்பினும் இவ் அச்சுறுத்தல் முற்றிலுமாக எம்மை விட்டு அகலவிலை.

அடிமடியில் கைவைக்கும் நிதிவழங்கும் நாடுகள்.

தமது நாட்டிற்கு வருகைதருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதோடில்லாது நிதி உதவி வழங்குவதிலும் பெரும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன மேற்குலக நாடுகள். மூன்று மாதங்களிற்கு ஒருமுறை நிலைமைகள் குறித்து ஆராயப்பட்ட பின்னரே பகுதி பகுதியாக நிதி உதவி வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியமும் கடிவாளத்தை தன் கையில் எடுத்துள்ளது.

தென்பகுதியில் இலட்சக்கணக்கிலான இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிவரும் தைத்த ஆடை ஏற்றுமதிக்கான வரிச்சலுகையினை ஐரோப்பிய ஓன்றியம் விலக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை அழித்தொழித்து விட்டு பின்னர் ஏதாவது காரணங்களை கூறி சர்வதேச நாடுகளை ஏமாற்றிவிடலாம் என நினைத்து செயற்பட்டு வந்த சிங்கள பேரினவாத அரசிற்கு மேற்கூறியவை பெரும் அபாய செய்திகளாகவே அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

இறுதிப்போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் செய்மதி படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்திருக்கும் வல்லரசு நாடுகள் இவ்வாறு சிறிலங்காவிற்கு எதிரான நிலைப்பாட்டில் நிற்பது ஒருவகையில் எமக்கு சாதகமானதே.

விலகும் இந்திய திரை.

மேற்குலக நாடுகள் இவ்வாறான போக்கை கடைப்பிடிக்கும் நிலையில் இந்தியாவும் தனது நிலைப்பாட்டில் மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளதாகவே தோன்றுகின்றது. இறுதிவரை இலங்கைக்கான முழுமையான பாதுகாப்பு கவசமாக இந்தியா செயற்பட்டுவந்தமை யாவரும் அறிந்த ஒன்றே.

இலங்கையின் இனப்படுகொலை செயற்பாட்டிற்கு எதிரான தீர்மாணங்கள் பலதடவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானங்கள் நிறைவேறாது தடுத்த பெருமை இந்தியாவையே சாரும்.

வெளிப்படையான இலங்கைக்கு ஆதரவான நிலைப்பட்டின் மூலம் மேற்குலகிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு திரையாக இந்தியா செயற்பட்டுவந்த நிலையில் தற்போதைய மேற்குலக நாடுகளது நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றமை இந்தியா எனும் பாதுகாப்பு திரை விலகுவதையே எடுத்துக்காட்டுகின்றது.

இருந்தும் சர்வதேசம் நிதி உதவிகளை நிறுத்தியும் நிறுத்த முற்பட்டுள்ள நிலையிலும் இந்தியா யாமிருக்க பயமேன் என்பது பேல தடையற்ற நிதி உதவியையும் வழங்கிவருகின்றமை முழுமையாக தமது ஆதிக்கம் அற்றுப்போவதை விரும்பாததையே எடுத்துக்காட்டுகின்றது.

சீனாவுடனான காதலால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சிங்களம்.

தமிழின அழிப்பு போரில் இலங்கையுடன் ஓரணியில் நின்ற மேற்குலக நாடுகளும் இந்தியாவும் எதிர் நிலைப்படு எடுப்பதற்கு, முற்றுமுழுதாக சீனாவின் பக்கம் சாயும் இலங்கையின் நிலைப்பாடே முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

இதன் வெளிப்பாடகவே, தனது வதிவிட உரிமையினை மீள் உறுதி செய்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ள இலங்கையின் முன்னால் இராணுவத் தளபதியும் இன்னால் கூட்டுப்படை கட்டளைத் தளபதியுமான சரத் பொன்சேகா மீது கிடுக்குப் பிடி போட்டுள்ளது ஒபாமா அரசு.

இறுதி யுத்தம் நடைபெற்றபோது இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல் செயற்பாடுகள் என்பனவற்றிற்காக பொன்சேகாவிடம் விளக்கம் கோரியுள்ளது ஒபாமா அரசு.

இப்போர் குற்றங்கள், மனிதஉரிமை மீறல் சம்பவங்களுடன் இலங்கையின் பாதுகாப்புதுறை செயலாளரும் ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சவும் தொடர்பு பட்டுள்ளநிலையில் அவர் மீதும் போர்க்குற்ற விசாரணையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இவ்விசாரணையில் கோத்தபாயவிற்கு எதிராக சாட்சியமளிக்கவும் பொன்சேகா பணிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் மகிந்தவிற்கு மாற்றாக சரத் பொன்சேகா களமிறக்கப்பட இருக்கும் நிலையில் அமெரிக்க அரசினது பிடியில் பொன்சேகா இருப்பது ராஜபக்ச அரசிற்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.

இதன் வெளிப்பாடாகவே இலங்கை அரசாங்கம் இச் செயற்பாட்டிற்கு தனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.

அன்மைகாலமாக சீனாவின் வழிகாட்டுதலில் இயங்கிவரும் சரத் பொன்சேகா தலைமையில் மாற்று அணி ஒன்று இலங்கையில் ஏற்படுவதை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்து வந்த அமெரிக்காவிற்கு இச்சந்தர்ப்பம் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளதாகவே நோக்கப்படுகிறது.

தமது சார்பாக செயற்பட வைப்பதற்கான கடிவாளமாகவே இப் போர்குற்ற விசாரணையை அமெரிக்கா பார்ப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

தெற்காசியப்பிராந்தியாத்தில் தற்போது இலங்கையை விட்டால் வேறு ஒரு களம் கிடைக்கப் போவதில்லை. அதனால் இவ்விடயத்தை தமது பூகோள நலன்களை முன்னிறுத்தி அமெரிக்கா கையாளப் போகின்றதா அல்லது இதயசுத்தியுடன் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுக்கொடுக்கும் வரை தொடரப் போகின்றதா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

எது எவ்வாறாயினும் இவ் விசாரணை செல்லும் பாதையை தீர்மாணிக்கும் சக்தியாக நாமும் விளங்குவது பெரும் பாய்க்கியமாகும்.

தலைவன் கட்டளையினை ஏற்று களம் காண புறப்படுங்கள்.

மாறிவரும் உலக ஒழுங்கு சிறிலங்காவிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்தாலும் அதனை நிரந்தரமானதாகவும் பொருளாதார தடை ஏற்படுத்தும் நிலைக்கு கொண்டு வரும் பொறுப்பு எம்முடையதாகும்.

எல்லாமே முடிந்துவிட்டதாக எண்ணி மூலையில் முடங்கி இருக்கும் அளவிற்கு என்ன ஆகிப் போய்விட்டது. முன்பிலும் வீரியமாக போரட்டக்களத்தில் அணிவகுக்க வேண்டிய காரண காரியங்கள் இருக்கும் போது ஏன் இவ்வாறு முடங்கிப் போயுள்ளீர்கள் என்று விளங்கவில்லை.

யாவற்றையும் முன்னுனர்ந்த தேசியத் தலைவரே அடுத்த கட்டத்திற்கான போராட்டத்தை எம்மிடம் ஒப்படைத்திருந்தார்.

தலைவன் கட்டளையை ஏற்று களம் காண புறப்பட வேண்டிய நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்?

எமக்காகவும் உங்களுக்காவும் உங்களது உறவுகளுக்காகவும் தான் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் தம்மையே தந்துள்ளார்கள்.

முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களதும் விடுதலைப் போரில் பெரும் துணையாக நின்று சாவடைந்த இலட்சக்கணக்கிலான பொதுமக்களதும் கனவான சுதந்திர தமிழீழத்தை அடைவதே அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறாகும்.

முன்பைவிட வீச்சாக எமது போராட்டங்களை கூர்மைப்படுத்தி இலங்கை அரசின் மனித உரிமை மீறல் செயற்பாட்டை அம்பலப்படுத்தி சிங்கள இனவாத அரசிற்கு அனைத்துலகளவில் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும்.

கால மாற்றத்திற்கு எம்மை உட்படுத்தி புதியவர்களாக உலகம் வியக்கும் வண்ணம் பேரெழுச்சி கொள்வோம்.

முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களதும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களதும் கனவுகளை நனவாக்குவதும், நடைபிணங்களாக கொடிய வதைமுகாம்களில் வாடும் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உடன்பிறப்புக்களை மீட்டு நல் வாழ்வு வாழ வைக்க வேண்டிய பொறுப்பும் எம் ஒவ்வொருவரதும் தோள்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பணியாகும்.

சர்வதேச ஊடகங்களை சேர்ந்தவர்களே கட்டுப்ப்hடுகளையும், தடைகளையும் மீறி இலங்கையின் மனித உரிமை மீறல்களை வெளிச்சம் போட்டு காட்டிவரும் நிலையில் அவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுத்து சர்வதேச நாடுகளை இயங்கு நிலையில் வைத்திருக்க வேண்டிய மகத்தான பணியும் எம்முன் உள்ளது.

இலங்கை அரசபிரதிநிதிகளுக்கு தடைவிதித்து வரும் நாடுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்க செயற்குழு உறுப்பினர்களை அனுமதித்துள்ளதுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளமை மாபெரும் வெற்றியாகும்.

வரலாறு திரும்பும் என்பதற்கினங்க மிக மிக விரைவாகவே எமக்கு எதிரான களத்தில் சிங்களத்துடன் கைகோர்த்திருந்த நாடுகள் எம்மை ஆதரிக்க முற்பட்டுள்ளமை சிறந்த புறச்சூழலை ஏற்படுத்தியுள்ளது.

வீர சபதமேற்போம் வாரீர்.

உலகத்தமிழர்களெல்லாம் உவகை கொள்ளும் நாளாகவும் பேரெழுச்சி கொண்டு அணிதிரண்டு வீர சபதம் ஏற்கும் நாளாகவும் நவம்பர் 26,27ம் நாள்கள் அமைந்துள்ளன.

இப்புனித நாட்களில் நமது இருப்பிற்கும் சுதந்திரமான வாழ்விற்கும் வழிகாட்டி சென்ற மாவீரத் தெய்வங்களது வழி நின்று வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளது சூழ்ச்சிகளை முறியடித்து சுதந்திர தமிழீழத்தை அடையும்வரை ஓயப்போவதில்லை என்றும் தடைகளை தகர்த்தெறிந்து தமிழீழம் காண்போம் என்றும் உறுதி ஏற்போம்.

எத்தடை வரினும் இப்படை தோற்காது.

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

Please Click here to login / register to post your comments.