அரசியல் போர்க்களத்தில் குதிப்பாரா ஜெனரல் சரத் பொன்சேகா?

ஆக்கம்: இதயச்சந்திரன்

எதிர்பார்த்த அளவுக்குப் பெரும் வெற்றிகளைக் கொடுக்காத தென் மாகாண சபை தேர்தலைத் தொடர்ந்து, அடுத்த வருட முற்பகுதியில் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை நடத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இதனை நோக்கிய அணி சேரல்கள், தேர்தல் கூட்டுக் காய்நகர்த்தல்கள், எதுவித அரசியல் கோட்பாடுகளுமற்ற திசை நோக்கி நகர்கின்றன.

இதில் வருகிற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான ஏகமனதான தெரிவாக யாரைக் களமிறக்கலாமென்கிற போட்டியில், எந்தக் கட்சியையும் சாராத ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தினால் அவருக்கு ஆதரவளிப்போமென்று சிங்களக் கடும் போக்காளர்கள் கூறுகின்றார்கள்.

தான் போட்டியில் குதித்தால் தோல்வி நிச்சயமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவாகத் தெரியும்.

ஆனாலும், இராணுவ வெற்றியை பெரும் அரசியல் முதலீடாகக் கொண்டிருக்கும் தற்போதைய ஆட்சியாளர்களைத் தோற்கடிக்க அப்போரில் பங்காற்றிய முக்கிய புள்ளியை முன்னிறுத்துவதே, சரியான தெரிவாக இருக்குமென்று எதிர்க்கட்சியினர் நம்புவதில் தவறேதுமில்லை.

ஏனெனில், ஜனாதிபதிக்கு எதிராக களமிறங்கக் கூடிய மக்களாதரவு பெற்ற ஆளுமை கொண்டவர், எதிர்க்கட்சியில் இல்லையென்பதே உண்மை.

ஆகவே, ஜே.வி.பி. மற்றும் புதிய சிஹல உறுமய போன்ற போர் ஆதரவுக் கட்சிகளின் துணையோடு ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்படுவாரென ஐ.தே.க. நம்புகிறது. இந்த நம்பிக்கை, நிஜமாகக் கூடிய சாத்தியப்பாடு, ஜெனரல் சரத் பொன்சோகவின் தீர்மானத்திலேயே தங்கியிருக்கிறது.

அவ்வாறு சரத் பொன்சேகா, தேர்தலில் குதிக்கத் தீர்மானித்தால் யுத்த வெற்றியின் இன்னுமொரு மிக முக்கிய பாத்திரமான மஹிந்த ராஜபக்ஷ மீது எவ்வகையான எதிர்ப்பு அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கலாமென்கிற சிக்கல் அவருக்கு நிச்சயம் ஏற்படும்.

போர் உத்திகளை வகுப்பதில் நீண்ட அனுபவமிக்க ஜெனரல் சரத் பொன்சேகா, அரசியல் போரில் எவ்வாறு வெல்வாரென்பது கேள்விக்குறியே.

ஜெனரல் சரத் பொன்சேகா குறித்து சிங்கள மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அண்ணாந்து பார்க்கும் பிரமாண்டத் தோற்றம், ஏனைய அரசியல் தலைவர்கள் மத்தியில் கலக்கத்தை உருவாக்கியுள்ளதென்னவோ உண்மைதான்.

இந்த யுத்த வெற்றியைத் தமதாக்கிக் கொள்ள முனைபவர்களுக்கு இவரின் அரசியல் பிரவேசம், எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்யும்.

ஆனாலும் யுத்தம் முடிவுற்ற பின்னர், அரசியல் ஓட்டப் பந்தயத்தில் குதித்துள்ள சில இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர், ஈழப் போர் நான்கில், ஜெனரல் சரத் பொன்சேகாவின் பங்கு சிறிதளவென சித்திரிக்க முயல்கிறார்கள்.

அண்மைக் காலமாக இவர்கள் வெளியிடும் கருத்துகள், அதனால் ஏற்படும் புதிய சூழ் நிலைகள், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சாதகமாக இல்லை.

டிசம்பர் 2009 இல் ஜெனரலின் பதவிக் காலம் முடிவடைவதால் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அது அவரின் ஆளுமையைச் சிறுமைப்படுத்தும் செயலெனச் சிலர் விமர்சித்தனர்.

தென்னிலங்கை ஊடகப் பரப்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் குறித்து, தொடர்ச்சியான ஊகங்களும் ஆய்வுகளும் வெளிவரும் நிலையில் அதற்கான மறுப்பினையும் அவர் தெரிவித்த வண்ணமுள்ளார்.

இவர் இராணுவத் தளபதியாக போரை முன்னின்று நடத்திய காலத்திலும் ஊடகங்கள் மத்தியில் ஒரு முரண் நிலை மனிதராகவே உருவகிக்கப்பட்டார்.

தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று விமர்சித்து தன்னையொரு சிங்களத் தேசியவாதியாக அடையாளப்படுத்திட இவர் பின்னின்றதில்லை.

இவை தவிர செப்டெம்பர் 2008, "கனடா நெஷனல் போஸ்ட்' இற்கு வழங்கிய நேர்காணலில், ""இந்த நாடு சிங்கள மக்களுக்கு உரித்துடையதெனவும் பெரும்பான்மையின மக்கள் 75 சத வீதமாக வாழும் இந்நாட்டில் ஏனைய சமூகத்தவர்களும் எம்மோடு வாழலாம். ஆனால் தேவையற்ற விடயங்களை உரிமை கோரக் கூடாதென தெரிவித்திருந்தார்.

ஆகவே, இவரின் இனப்பிரச்சினை குறித்த அரசியல் பார்வையில் அன்னை பூமியை இணைத்த மன்னன் துட்டகெமுனு பற்றியதான ஈர்ப்பு பரந்து கிடப்பதை அவதானிக்கலாம்.

இவர் இலங்கையின் இராணுவத் தளபதியாக 2005 டிசம்பர் 6 இலிருந்து 2009 ஜூலை 15 வரை பதவி வகித்தார்.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதியன்று தற்கொலைத் தாக்குதல் ஒன்றிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் முற்றுகைக்கு உள்ளான ஆனையிறவு படைத் தளத்தைக் காப்பாற்றுவதற்கு இவர் தலைமை வகித்த சிங்க படைப் பிரிவின் 6 ஆவது பற்றாலியன் பெரும் பங்கு வகித்தது.

இதேபோன்று 1993 ஆம் ஆண்டு யாழ். கோட்டை நீண்ட முற்றுகையிலும் தற்போதைய பாதுகாப்புச் செயலரும் அன்றைய லெப். கேணலுமாக விளங்கிய கோத்தõபய ராஜபக்ஷவுடன் இணைந்து "நள்ளிரவுக் கடுகதி' (Mடிஞீணடிஞ்டt உதுணீணூஞுண்ண்) என்கிற முற்றுகைத் தகர்ப்பு படை நடவடிக்கையை ஜெனரல் முன்னெடுத்தார். இவை தவிர "யாழ் தேவி' படை நகர்வில் காயமுற்ற சரத் பொன்சேகா, டிசம்பர் 1995 இல் முன்னெடுக்கப்பட்ட யாழ். மீட்பு "ரிவிரச' படை நடவடிக்கையில் பங்காற்றியிருந்தார்.

இத்தகைய நீண்டதொரு களமுனை அனுபவம் கொண்ட சரத் பொன்சேகா தான் வகித்த இராணுவத் தளபதிப் பதவிக்கு லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவை சிபாரிசு செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் போர் வெற்றிப் பங்களிப்பிற்காக ஜனாதிபதியினால் அனைத்துப் படைத் துறைகளின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ""உலகின் தலை சிறந்த இராணுவத் தளபதி'' இவரென்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

தமது நிகழ்ச்சி நிரலை திறம்பட நடத்தியதற்காக இந்திய சார்பாக நாராயணன் இந்த வாழ்த்தினை தெரிவித்திருக்கலாம். இருப்பினும் தேர்தலை எதிர்நோக்கியுள்ள இக் கால கட்டத்தில் அடுத்து வரும் ஆட்சி பீடத்தில் தமது நலன்களுக்குச் சார்பானவர்கள் அமர வேண்டுமென பிராந்திய சர்வதேச வல்லரசாளர்கள் அக்கறை கொள்வதை அவதானிக்கலாம்.

மீண்டும் ரணில் ஆட்சி பீடமேறுவதை மேற்குலகம் விரும்பக்கூடும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் தோல்வியடைய விடுதலைப் புலிகள் விடுத்த தேர்தல் புறக்கணிப்பு, ஒரு முக்கிய காரணியென மேற்குலகம் இன்னமும் நம்புகிறது. ஆனால் ரணில் சார்பாக சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்பட்டால் தமிழ் வாக்காளர்களின் புறக்கணிப்பு இயல்பாகவே நிகழக்கூடிய சாத்தியப்பாடு உண்டு.

அண்மையில் யாழ். மாநகர சபைத் தேர்தலில் 78 சத வீதமான மக்கள் வாக்களிக்கவில்லையென்கிற விவகாரத்தையும் இங்கு கவனிக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா, நிறுத்தப்பட்டால் தமது ஆத ரவு வாபஸ் பெறப்படுமென்று மனோ கணே சன் தெரிவித்த கருத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மன உணர்வை பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம்.

ஜெனரல் ஆட்சியதிகாரத்தில் அமர்வதில் இந்தியாவுக்கும் பெரிய உடன்பாடு இருக்குமா என்பது தெரியவில்லை. சீன ஆதிக்கம் அதிகரிக்குமென்கிற அச்சம் இதற்கான காரணியாக இருக்கலாம்.

ஆனாலும் இராணுவ வெற்றி தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்படும் வரையிலேயே சரத் பொன்சேகாவைச் சுற்றி நிகழ்த்தப்படும் அரசியல் காய் நகர்த்தல்கள் நீடிக்கும்.ஆகவே இவ்வாறான இழுபறி நிலை நீடிக்கும் இவ்வேளையில் அரசியல் போர்க் களத்தில் ஜெனரல் குதிப்பாராவென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Please Click here to login / register to post your comments.