மேற்குலகம் - சிறீலங்கா: கூர்மையடைந்துவரும் இராஜதந்திர மோதல்கள்

ஆக்கம்: வேல்ஸ் இல் இருந்து அருஷ்

மேற்குலகத்திற்கும் சிறீலங்காவுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் முரண்பாடுகள் மேலும் மேலும் கூர்மையடைந்து வருகின்றன. கடந்த வாரத்தின் இறுதிப்பகுதியில் சிறீலங்கா அரசு ஐ.நாவின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) கொழும்புக்கான பிரதம பேச்சாளர் ஜேம்ஸ் எல்ட்டன் என்பவரின் நுளைவு அனுமதியை இரத்து செய்து அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டிருந்தது.

எதிர்வரும் ஆண்டு ஜுலை மாதம் வரை சிறீலங்காவில் தங்கியிருப்பதற்கான அனுமதியை கொண்டுள்ள Nஐம்ஸ் அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர். தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள், வன்னியில் நடைபெற்ற மோதல்கள் மற்றும் தடை முகாம்களில் தங்கியுள்ள சிறுவர்கள் மீதான வன்முறைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் தொடர்பாக கருத்து கூறியதே Nஐம்ஸ் செய்த குற்றமாகும்.

அவரை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என சித்தரித்துள்ள அரச தரப்பு நாடுகடத்த முற்பட்டுள்ளது மேற்குலகத்தை அதிக சீற்றமடைய வைத்துள்ளது. இது தொடர்பில் ஐ.நா தனது கண்டணத்தை தெரிவித்துள்ள போதும் சிறீலங்கா அதனை காதில் வாங்கி கொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து ஐ.நாவிற்கான சிறீலங்காவின் நிரந்தர பிரதிநிதியாக புதிதாக நியமனம் பெற்றுள்ள சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சகத்தின் செயலாளர் பாலித கோகன்னாவின் பிரித்தானியாவுக்கான நுளைவு அனுமதியை சிறீலங்காவுக்கான பிரித்தானியா தூதரகம் நிராகரித்துள்ளது. அது மட்டுமல்லாது, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அர்சுணா ரணதுங்காவிற்கும் பிரித்தானியா தூதரகம் நுளைவு அனுமதியை நிராகரித்துள்ளது.

சிறீலங்காவுக்கும் மேற்குலகிற்கும் இடையில் உக்கிரம் பெற்றுவரும் மோதல்களின் அடுத்த கட்ட நகர்வாக உலகில் போரியல் குற்றங்களை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவையும் இணைத்து கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐ.நாவின் ஊடக மையமான இன்ன சிற்றி பிரஸ் (ஐnநெச ஊவைல Pசநளள) தெரிவித்துள்ளது.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணையாளர் லூயிஸ் மொரினோ ஒகம்போ அவர்களின் கோப்புக்களிற்குள் இருந்த உலக வரைபடத்தில் உலகில் போரியல் குற்றங்களில் ஈடுபட்ட நாடுகளிற்கு பச்சை நிற புள்ளிகளும், போரியல் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றுவரும் நாடுகளிற்கு சிவப்பு நிறப்புள்ளிகளும் (நான்கு ஆபிரிக்க நாடுகள்) இடப்பட்ட வரைபடம் காணப்பட்டுள்ளது.

அந்த வரைபடத்தில் இந்தியாவுக்கு கீழே பச்சை நிற புள்ளியுடன் சிறீலங்கா காணப்பட்டதாகவும் இன்னசிற்றி பிரஸை சேர்ந்த மத்தியூ ரசெல் லீ தெரிவித்துள்ளார். போரியல் குற்றங்களை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் சிறீலங்கா, சிம்பாபே மற்றும் பர்மா ஆகிய நாடுகள் தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த விடயம் தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளிவருவதற்கு மேலும் கால அவசாகம் தேவை.

சிறீலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல்கள் உக்கிரமடைந்த 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறீலங்காவில் வடக்கு, கிழக்கு மற்றும் தலைநகர் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்து அதிகளவான பொதுமக்கள் காணாமல் போனதுடன், பெருமளவானோர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுமிருந்தனர்.

அந்த காலப்பகுதியில் சிறீலங்காவில் அதிகரித்த வன்முறைகளை தொடர்ந்து சிறீலங்கா அரச அதிகாரிகளுக்கும், படை அதிகாரிகளுக்கும் நுளைவு அனுமதி வழங்குவதில் சில கட்டுப்பாடுகளை கொண்டுவருவதற்கு மேற்குலகம் முயன்றிருந்தது. ஆனால் பின்னர் அதனை அவர்கள் நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. ஆனால் தற்போது அவர்கள் அதனை நடைமுறைப்படுத்த முற்படுவது போலவே நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

யப்பான் சென்றிருந்த சிறீலங்கா பிரதமரின் விரல் ரேகைகளை யப்பான் நாட்டு குடிவரவு அதிகாரிகள் பதிவு செய்திருந்தனர். சிறீலங்கா அரச தலைவர் தனது குழுவுடன் ஐ.நாவுக்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த விஜயமும் இறுதிநேரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. மகிந்தாவுடன் பயணம் மேற்கொள்ளவிருந்த 80 பேர் அடங்கிய குழுவில் இடம்பெற்றிருந்த அதிகளவிலானவர்களுக்கு நுளைவு அனுமதி கிடைக்கவில்லை.

மேலும் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்பவர்களில் “ராஜபக்சா“ என்ற குடும்ப பெயரை கொண்டிருப்பவர்கள் மீது அமெரிக்காவின் குடிவரவு அதிகாரிகள் அதிகளவிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அது மட்டுமல்லாது அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்த்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் சிறீலங்காவுக்கான தூதரகங்கள் நுளைவு அனுமதிக்கான விண்ணப்ப படிவங்களில் புதிய கேள்வி ஒன்றையும் இணைத்துள்ளனர். “உங்களின் குடும்ப உறுப்பினர்கள் யாராவது படையில் உள்ளனரா?“ என்ற கேள்வி புதிதாக அந்த படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவுக்கு அனைத்துலக நாணயநிதியம் வழங்கும் கடன் தொடர்பாகவும் அமெரிக்காவும், பிரித்தானியாவும் கடும் போக்கை கடைப்பிடித்திருந்தன. அனைத்துலக நாணயநிதியத்தின் வாக்கெடுப்பையும் அவர்கள் புறக்கணித்திருந்தனர். இந்த நடவடிக்கையானது சிறீலங்கா அரசின் தலைக்கு மேலாக தீர்க்கப்பட்ட எச்சரிக்கை வேட்டாகவே கொள்ளப்பட்டது.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போரியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் விடுத்த வேண்டுகோளின் பின்னனியிலும் பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமுமே இருந்ததாக சிறீலங்கா நம்புகின்றது.

இந்த நிலையில் வனியாவில் தடுப்பு முகாம்களில் உள்ள தமிழ் மக்களின் நிலை தொடர்பாக பிரித்தானியாவின் சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் மேலும் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. செல்லிடபேசியின் மூலம் எடுக்கப்பட்ட அந்த ஓளிப்படம் தமிழ் மக்களின் மனிதப்பேரவலம் தொடர்பான தகவல்களை வெளியுலகிற்கு படம்பிடித்து காட்டியுள்ளது.

அதனை சிறீலங்கா அரசு மறுத்துள்ள போதும் தடை முகாம்களின் தரம் குறித்து அறிந்து கொள்வதற்கு ஏன் ஐ.நா அதிகாரிகளை அல்லது மனிதாபிமான பணியாளர்களை முகாம்களுக்கு அனுமதிக்க கூடாது என்ற கேள்விகளிற்கு சிறீலங்கா அரச அதிகாரிகளினால் உரிய விளக்கங்களை கொடுக்க முடியவில்லை.

அனைத்துலக மட்டத்தில் சிறீலங்கா தொடர்பாக வலுவான ஒரு கருத்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை ஏற்படுத்திய காரணிகளில் முக்கியமானவையாக வன்னியில் நடைபெற்ற மனிதப்பேரவலங்களும், புலம்பெயர் நாடுகளில் நடைபெற்றுவரும் போராட்டங்களும் அடங்கும்.

மேலும் தமிழ் மக்களிற்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் சிறீலங்காவில் நிலவும் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் எனவும் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துக்களில்; தளர்வுகள் எதனையும் மேற்குலகம் ஏற்படுத்தவில்லை.

சிறீலங்காவில் இனப்பிரச்சனை என்பது இல்லை என சில சந்தர்ப்பங்களில் சிறீலங்கா அரச தலைவர்கள் தெரிவித்திருந்த போதும் அது மேற்குலகத்தின் கருத்துக்களில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.

இருந்தபோதும் மேற்குலகத்தின் தற்போதைய நகர்வுகளை நோக்கும் போது சிறீலங்காவின் அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டுவர அவர்கள் முயல்கின்றார்கள் என்ற கருத்துக்களும் தோன்றியுள்ளன. அதாவது அங்கு ஒரு ஆட்சி மாற்றத்தை அவர்கள் விரும்புகின்றனர்.

ஆனால் மேற்குலகத்தின் இந்த இராஜதந்திர நகர்வினை பலப்படுத்துவதன் மூலம் தமது அரசியல் பிரச்சனைக்கான தீர்வை வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கைகள் அனைத்துலகிலும் பரந்துவாழும் ஈழத்தமிழ் மக்களிடம் வலுப்பெற்று வருகின்றது. அதற்கான அடித்தளங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

Please Click here to login / register to post your comments.