சமாதான பேச்சுவார்த்தையும் பயங்கரவாத கோஷ பயன்படுத்துகையும்

ஆக்கம்: பீஷ்மர்
ஆங்கிலத்தில் நெகோஷியேஷன் (Negotiation) எனும் சொல்லை `பேச்சுவார்த்தை' என்று மொழி பெயர்த்து விட்டு நாம் படும் துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. அந்த ஆங்கிலச் சொல்லின் உண்மையான கருத்து இசைவிணக்க நிலை காணுவதற்கான எத்தனிப்பு (தேடல்) என்பதே. அரசியல் பிரச்சினைகளில் இந்த எத்தனிப்பு பெரும்பாலும் பேச்சுவார்த்தை மூலம் நடைபெறுவதால் பேச்சுவார்த்தை என்றே மொழி பெயர்த்து விட்டோம். ஆனால், இலங்கையில் சமாதானத்தை நோக்கிய நடைமுறைகள் என்று சொல்லப்படுவதில் பேச்சுவார்த்தையிலும் பார்க்க `குட்டி முண்டுதல்களே' நடை பெறுகின்றன என்பதைக் கண்ட இணைத் தலைமை நாடுகள் தாங்களாகவே சில தீர்மானங்களை செயல் முறைக்கு கொண்டு வர விரும்புகின்றன என்பது இப்பொழுது நன்கு புலனாகிறது. நோர்வேயின் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வராமலே இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது.

நாம் சமாதானத்துக்கான இசைவிணக்க முயற்சிகளுக்கு தயாராக இருக்கின்றோம் என்று சொல்லும் அரசாங்கம் பயங்கரவாதம் பற்றிய சர்வதேச முனைப்பை பயன்படுத்திக் கொண்டு இலங்கை நிலையில் தனது ஆதரவு தளம் தன்னிடத்திலிருந்து எதிர்பார்க்கும் புலி வேட்டையை செய்து முடிப்பதற்கு தொடங்கியுள்ளமையும் கண்களுக்குத் தெரிகின்றன. ஆனால், வாய் விட்டு பேசப் பயமாக உள்ள உண்மையாகும். ஜனாதிபதி அவர்கள் ஹவானாவிலும் பின்னர் நியூயோர்க்கிலும் நின்ற போது இலங்கையில் அர சாங்கமும் விடுதலை புலிகளும் மனித உரிமை பிரச்சினைகளை கையாள்வது பற்றிய மிக கண்டிப்பான ஐ.நா. தீர்மானம் ஒன்று வெளிவந்தது.

இந்த நிலையில் ஜனாதிபதி ஐ.நா.வில் ஆற்றிய உரை முக்கியமானது. தனது அரசியல் வாழ்க்கை தொடக்கக் காலம் முதலே தான் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவன் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி இலங்கையில் விடுதலைப் புலிகள் மூலம் பயங்கர வாதத்தை எதிர் கொள்வதாகவும் அதனால், இலங்கை அரசாங்கம் கஷ்டப்படுவதாக கூறி சர்வதேச அரசியல் மட்டத்தில் பயங்கர வாதத்தை எதிர்கொள்ளும் நாடுகள் படும் இன்னல்களோடு தனது அரசாங்கத்தையும் இணைத்துக் கொண்டார்.

இதிலுள்ள சுவாரஸ்யம் என்னவென்றால், பாலஸ்தீன மக்களுடைய உரிமைப் போராட்டத்துக்காக தான் குரல் கொடுப்பதாகவும் பாலஸ்தீன போராட்டத்தின் நியாயப்பாடுகளை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறிக் கொண்டார். ஆனால், அமெரிக்கா, இஸ்ரேலைப் பொறுத்த வரையில் ஹமாஸும் பயங்கரவாதக் குழுவே!

விடுதலைப் புலிகளை பற்றி பேசும் போது விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் என்று கூறப்படுவனவற்றின் அரசியல் பின்புலம் பற்றியோ அதனிலும் மேலாக விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசாங்கம் இப்போது மேற்கொண்டுள்ள யுத்தம் பற்றியோ.. குறிப்பாக விமானத் தாக்குதல் பற்றியோ எதுவும் கூறாததில் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது.

ஆனால், இலங்கையில் வெளிநாட்டு தூதரக வைபவம் ஒன்றிலே பேசிய பிரதமர் அரசாங்கமானது நாட்டினது இறைமையை பாதுகாக்க வரையறுக்கப்பட்ட யுத்தம் செய்வதாகவும் ஆனால், அதே வேளையில் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு இவையெல்லாம் தெரியாமலில்லை.

ஆனால், இப்போது மேலோங்கி நிற்பது என்ன வென்றால் பயங்கர வாதம் எனும் கோஷமாகும். அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஒவ்வொன்றுமே பயங்கரவாதத்தின் தாக்கத்தை எதிர் கொண்டவையாகும். எதிர்கொள்பவையாகும். இந்தியாவில் நடைபெறுவது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் இலங்கையிலே காணப்படுகின்றனவா என்பது பற்றியோ? இஸ்லாமிய நாடுகள் தங்கள் தனித்துவத்தை பேண முனைவதை பயங்கரவாதம் என குறிப்பிடும் முயற்சிகளையோ கணக்கில் கொள்ளாமல் இலங்கையிலும் பயங்கரவாதம் உள்ளது என்று கூறும் போது அதற்கானவொரு கவர்ச்சி வலு இருப்பதை அரசாங்கம் நன்கு புரிந்துள்ளது.

பயங்கரவாதம் என்பதன் அடிப்படை மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி அல்லது பீதி ஏற்படத்தக்க காரியங்களைச் செய்து தமது அரசியல் இலக்கினை ஈட்டிக் கொள்ள விரும்புவது தான் பயங்கரவாதம் என்றால், இலங்கையில் இந்த குற்றச்சாட்டை ஒரு இடத்தை நோக்கி கூறிவிட முடியாது என்பதே நிச்சயமாகும்.

கடந்த மாதம் 11 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் நடந்து வரும் கொலைகள் பற்றியோ, பொத்துவில் விடயங்கள் பற்றியோ பேசாது, படைத் தளபதிகள் மீதான தாக்குதல் பற்றியோ மாவிலாறு பிரச்சினை பற்றியோ பேச முடியாத இக்கட்டு நிலை இலங்கையில் உண்டு.

தென்னிலங்கை அரசியலைப் பொறுத்த வரையில் குறிப்பாக ஜே.வி.பி., ஹெல உறுமய அரசியலைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் பற்றிய பிரசாரத்துக்கு இன்னுமொரு பரிமாணம் உண்டு.

அதாவது, அரசாங்கத்துக்கு எதிராக நின்ற மற்றைய தமிழ்ச் சக்திகளை போன்றல்லாது புலிகள் தனித்து நிற்பதும் தொடர்ந்து போராடுவதும் அவர்களை தோற்கடிக்க முடியாமல் இருப்பதும் பெரிய பிரச்சினையாக உள்ளது. எப்படியாவது விடுதலைப் புலிகளை தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதை ஒரு சிங்கள நிலைப்பாடாகவே கொண்டு வர அவர்கள் விரும்புகிறார்கள்.

அரசாங்கம் ஒரு புறமாகவும் அரசாங்கத்தை ஆதரிக்கும் சக்திகள் இன்னொருபுறமாகவும் இப்படி பயங்கரவாதம் பற்றி பேசிவிட்டு மீண்டும் அல்லது தொடர்ந்து விடுதலைப் புலிகளுடன் பேசத் தயார் என்று சொல்லும் கருத்து புரியவில்லை. இதனை ஜனாதிபதியும் சொல்கிறார், பிரதமரும் சொல்கிறார். இவ்வேளையில் மனதிலெழும் ஒரு நியாயமான கேள்வியை மறைக்க முடியவில்லை. இவர்கள் பயங்கரவாதியென்றால் இவர்களோடு ஏன் பேச வேண்டும். தமிழர்களிடையே தம்மை ஜனநாயகவாதிகள் எனக் கூறிக் கொள்பவர்களுடன் பேசி தீர்க்கலாமே. அதுதானே ஞாயம். இந்த கேள்வியை கேட்கும் போது தான் வாய்விட்டு கூறப்படாத ஒரு விடயம் கூறப்பட வேண்டுவதாகிறது. நாங்கள் விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன, யார் விரும்பினாலென்ன விரும்பாவிட்டால் என்ன இலங்கை தமிழர் உரிமைப் போராட்டத்திற்கான தலைமை இன்று விடுதலைப் புலிகளிடத்திலே உள்ளது. அந்த அளவில் அவர்கள் முக்கியமாகிறார்கள்.

ஆனால், அரசாங்கமோ இலங்கையில் இன்றைய இனக்குழுமை போராட்ட மட்டத்தை விடுதலைப் புலிகளின் யுத்தமாகவே எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் சொல்லுகிற முறையில் இது விடுதலைப் புலிகள் தங்களுக்காக நடத்தும் போர் என்றே ஆகிவிடுகிறது. ஆனால், இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்டத்தின் இன்றைய கட்டத்தில் விடுதலைப் புலிகளை அகற்றி விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்.

அதனிலும் மேலாக இந்த உரிமைப் போராட்டத்தின் எதிர்காலம் என்னவாகும், இது தான் பிரச்சினை. துரதிர்ஷ்ட வசமாக இந்த விடயங்களை இலங்கை மட்டத்திலும், தென்னாசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் வலுவுடன் எடுத்துக் கூறுவதற்கான ஆற்றலும் அதனிலும் மேலாக, நிதானமும் காணப்படவில்லை.

சாதாரண தமிழ் மக்களின் குரல் இதுபற்றி மேற்கிளம்பாத வரையில் எதுவும் நடக்கப் போவதில்லை. இதற்கான நல்ல உதாரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கு தமிழகத்திலும் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ள அனுபவங்களாகும். இந்த விடயம் பற்றி மிக விரிவாக ஆராய வேண்டும். ஆனால், அதற்கு முதல் அங்கு சென்ற எம்.பி.க்கள் இங்கு வந்து தங்களை தேர்ந்தெடுத்த தமிழ் மக்களுக்கு உண்மையை கூற வேண்டியது கடமையாகும்.

Please Click here to login / register to post your comments.