தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளும் இந்திய நலனும் ஒரு புள்ளியில் சந்திக்குமா?

ஆக்கம்: சி.இதயச்சந்திரன்

இந்திய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் அந்நாடு பிளவடைந்து போகாமல் இருப்பதற்கும் தமிழ் மக்களின் அதிகபட்ச அரசியல் அபிலாஷை, இடையூறாக இருப்பது போன்றதொரு கருத்து நிலை உலவ விடப்பட்டுள்ளது.

இந்திய நலனிற்கு இசைவானதொரு அரசியல் நியாயத்தை ஈழத் தமிழ் மக்கள் முன்வைத்து, அதனடிப்படையில் ஓர் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்தால் இந்திய ஆளும் வர்க்கத்தின் அனுசரணையும் ஆசீர்வாதமும் அப்போராட்டத்திற்கு முழுமையாகக் கிடைக்குமென்று சில புதிய சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள்.

இந்தியா உடையாமல் இருப்பதற்கு ஈழத் தமிழினத்தின் பங்களிப்பு எவ்வகையில் அமைய வேண்டுமென்பதை விட, தாயகக் கோட்பாட்டையும், தன்னாட்சிக் கோரிக்கையினையும் தவிர்த்து, மாகாண சபைகளை ஏற்றுக் கொண்டால் போதுமென்பதே, இந்திய கொள்கை வகுப்பாளர்களின் விருப்பமாகவிருக்கிறது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக அத்தகைய தீர்வொன்றினையே 1987 இல் இந்தியா திணிக்க முற்பட்டது. இந்நிலையில் நாடு கடந்த அரசொன்றினை உருவாக்கும் அரசியல் போராட்டப் பாதையின் எந்தப் புள்ளியிலும் மாகாண சபைத் தீர்வினை முன்வைக்கும் இந்திய நலன்கள் சந்திக்கும் வாய்ப்பு சாத்தியமற்றதாகவே அமையும்.

ஜனாதிபதி வழங்கும் அரசியல் தீர்வினை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சிவ்சங்கர் மேனன் அண்மையில் தெரிவித்த கருத்தினை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

அடுத்ததாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை, தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து விடுமென்று கவலை கொள்பவர்கள், நாகலாந்து, அசாம் மாநிலங்களின் நடைபெறும் பிரிவினைப் போராட்டங்கள் குறித்துப் பேசுவதில்லை. சாருமஜிம்தார் உருவாக்கிய நக்சலைட் இயக்கம், ஆயுதப் புரட்சியின் ஊடாக சோசலிச இந்தியாவை உருவாக்கப் போராடுகிறதே தவிர, நாட்டைப் பிளவுபடுத்துவதற்கல்ல என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

ஆகவே, அசாம், நாகலாந்து பிரிவினைப் போராட்டங்களிற்கும் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கும் முடிச்சுப் போட முடியாது. இந்தியா உடைந்து போகுமானால் அதை ஈழத் தமிழர்களால் தடுக்க முடியாது.

அங்கு விடுதலைக்காகப் போராடும் தேசிய இனங்களிற்கும் இந்திய ஆளும் வர்க்கத்திற்குமிடையே பகை முரண்பாடாக மாற்றமடையும் அரசியல் களமே அதனைத் தீர்மானிக்கும். இவைதவிர, தமிழர் தாயகக் கோட்பாட்டு அரசியல் வடக்கு,கிழக்கில் நிலைநாட்டப்பட்டால் தமிழ்நாடு பிரிந்து சென்று விடுமென்கிற வாதம் அபத்தமானது.

பிரிந்து செல்வதற்கான போராட்ட சூழல் உருவாகாமல், தமிழ்நாடு பிரிந்து சென்று விடுமென்று கூறுவது, சமூக இயங்கியல் போக் கிற்கு எதிரானது.

அடுத்ததாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் கேந்திர பாதுகாப்புக் குறித்த கேள்வியொன்று எழுப்பப்படுகிறது. இதில் தென்பகுதியைத் தவிர, இந்தியாவின் ஏனைய பகுதிகள் யாவற்றிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு பலகாலமாகி விட்டது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மாரில் அமைந்துள்ள துறைமுகங்களினூடாக முத்துமாலை தொடுத்து, இந்தியாவைச் சுற்றி வியூகம் அமைத்துள்ள சீனா, அம்பாந்தோட்டையிலும் கால்பதித்து தெற்காசியாவில் தனது பிடியை இறுக்கியுள்ளது. இதில் சீனாவின் கடல் வணிகநலன்கள் உறுதிப்படுத்தப்படுவது, இந்தியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்கிற விவாதத்தில் தமிழ் மக்களின் அரசியல் நியாயம் எத்தகைய பாதிப்பினை உருவாக்க முடியுமென்பதை ஆராய வேண்டும். அமெரிக்காவின் உலகளாவிய ஏகபோக பொருண்மியக் கட்டமைப்பில் ஏற்பட்ட சிதைவின் பின்னர், ஆசியாவில் எழுந்து வரும் வல்லரசாளர்களின் நிமிர்வு, நிச்சயம் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

புதிய உலகக் கோட்பாட்டின் மாறுதல்களும், சீனா இந்தியாவின் சிதைவுறாத பொருண்மிய எழுச்சியும், தமிழர் அரசியலில் பெரும் தாக்கத்தினைச் செலுத்துமென்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனைய பகுதிகளைவிட, தென்னிந்தியாவிலுள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் கடல் வணிகப் பாதைகளே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் பொருண்மியத்திற்கும் ஆதாரம் மிக்க மையங்களாக இருக்கின்றன.

இங்குதான் கேந்திர முக்கியத்துவம்மிக்க மையச் சூழல் சக்தியாக, இலங்கை என்கிற தேசம் இந்தியாவால் உணரப்படுகின்றது.

தற்போது முன்னெடுக்கப்படும் சேது சமுத்திரத் திட்டம், கடல் வணிகப் பாதையின் நீளத்தைக் குறைக்கலாம். ஆனால், இப்பிராந்தியத்தில் மையம் கொள்ளும் பிராந்தியப் போட்டியாளர்களும் அக்கடல் பகுதிகளில் நடமாடும் அல்லது தரித்து நிற்கும் அணு ஆயுதம் தாங்கிய போர்க் கப்பல்களாலும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்.

நேபாளம், மியன்மார் உட்பட பல இடங்களில் வாய்ப்பான தருணங்களைத் தவறவிட்ட இந்தியா, இப்போதுதான் மாலைதீவில் தளம் அமைக்க ஓடிச் செல்கிறது. ஆனாலும் "மாறோ' தீவில் சீனாவின் கடற் கண்காணிப்பு மையம் ஏற்கெனவே நிறுவப்பட்டு விட்டது.

அதேவேளை, சீனாவின் முதலீட்டுப் பலத்தோடு இந்தியாவால் போட்டியிட முடியாதென்கிற உண்மையினையும் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய ஓருலக நாயகன் பதவியை நோக்கி, வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் சீனாவுக்கு தென்னிலங்கையை ஒட்டிய கடற் பாதை, எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்கிற விடயம் இந்தியாவுக்குத் தெரியும்.

இங்குதான், ஈழத் தமிழர்களின் அரசியல் நியாயத்திற்கு ஆதரவு தெரிவித்து, இலங்கை அரசினைப் பகைத்துக் கொள்ளக் கூடாதென்று இந்தியா எடுத்த நிலைப்பாட்டினை விளங்கிக் கொள்ளலாம்.

போரும், சமாதானமும், உலகப் பொருளாதாரச் சீரழிவினால் புறந்தள்ளப்பட்டு விட்டன.

பொருளாதாரச் சரிவிலிருந்து நிமிர்வதும் இவ்வழியில் தாக்குப் பிடித்து ஸ்திரத்தன்மை பேணும் நாடுகளை பிளவுபடுத்துவதும் மோத விடுவதும் தற்போதைய இராஜதந்திர செயற்பாடுகளாக அமைந்து விட்டன.

இதில் சீனாவிற்கும் இந்தியாவிற்குமிடையே நிகழும் ஆதிக்கப் போட்டியில் வீழ்ந்து கிடக்கும் முன்னாள் உலக நாயகரின் பங்கு கணிசமான அளவில் பிரயோகிக்கப்படுகின்றது.

8 ரில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறையில் சிக்குண்டுள்ள அமெரிக்கா, ஜப்பானின் ஆட்சி மாற்றத்தால் சற்று தடுமாறிய நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உலகப் பயங்கரவாதத்திற்கெதிரான போரென்று பல நாடுகளை அச்சுறுத்தி, தமது மேலாண்மையை நிலைநாட்ட முயன்ற அமெரிக்கா, தனது உலகளாவிய போரினை இன்று ஆப்கானிஸ்தானுக்குள் முடக்கியுள்ளது.

அமெரிக்க அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் சீன முதலீட்டை எதிர்பார்க்கும் நாடுகளே தற்போது அதிகளவில் உள்ளன. இலங்கை அரசும் இப்பட்டியலில் உள்ளடங்கும். வடக்கு கிழக்கைவிட, முழு இலங்கையுமே இந்தியாவின் பிராந்திய ரீதியிலான பாதுகாப்புக்கு உறுதுணையாக அமையுமென்று இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றார்கள்.

இதனடிப்படையிலேயே ஆயுதம் தாங்கிய தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கெதிரான நிலைப்பாட்டினை இந்தியா முன்னெடுத்து, இலங்கை அரசிற்கு தனது பூரண ஆதரவினை வழங்கியது.

ஆகவே, இந்திய எதிராளிகளின் ஆதிக்கம் இலங்கையில் உச்சம் பெறும் வரை, இந்திய நலனும், தமிழினத்தின் அரசியல் அபிலாஷையும் ஒரு புள்ளியில் சந்திக்க வாய்ப்பேயில்லை.

Please Click here to login / register to post your comments.