சத்தமின்றி நடைபெறும் பொருளாதார யுத்தம்

ஆக்கம்: சி.இதயச்சந்திரன்

வன்னியில் யுத்தம் தீவிரமடைந்திருந்த இறுதி காலகட்டத்தில் "சுடர் ஒளி' ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டாரா இல்லையேல் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டாராவென பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன.

மே மாதம் 18 ஆம் திகதிக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் உள்ளாராவென்கிற அலசல்களும் ஆய்வுகளும் ஊடகப் பரப்பை ஆக்கிரமித்திருந்தன. இன்னமும் இந்த விவாதம் முற்றுப் பெறாமல் நீடிக்கையில் புதிய சர்ச்சையொன்றும் இம்மாத ஆரம்பத்தில் வெளிக்கிளம்பியுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலராக பிரகடனப்படுத்தப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதனின் கைது குறித்து வெளிவரும் ஊகங்களும் வதந்திகளும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் முக்கியமான பேசுபொருளாகவுள்ளன.

ஏற்கனவே உராய்வு நிலையில் இருக்கும் இணையத்தள மின்னஞ்சல் மோதல்கள், கே.பியின் கைது, கடத்தலுக்குப் பின்னர் தீவிரமாகியுள்ளதென்றே கருத வேண்டும். கே.பியை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களின் பட்டியலில், ஊடகவியலாளர்களின் பெயர்களையும் இணைத்து வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையொன்று, தமிழாக்கமும் செய்யப்பட்டது.

இத்தகைய ஆரவாரங்களில் தமது ஐம்புலன்களையும் செலுத்தி மக்கள் சக்தியினை மழுங்கடிக்கும் காரியங்களில் காலத்தை செலவிடும் அதேவேளை, தாயகத்தில் நடைபெறும் திட்டமிட்ட அவலங்களை இனங்காண இச்சக்திகள் மறுப்பதாக உணரப்படுகிறது.

நிலத்தை இழந்து, வெளிச்சத்தை உள்வாங்கிக் கொள்ளும், கண்ணை விற்று சித்திரம் பெறும் நிலையினை திருமலையில் காணக் கூடியதாகவிருக்கிறது.

இம்மாத இறுதிக்குள் இந்திய இலங்கை கூட்டு முதலீட்டு ஒப்பந்தமொன்று, சம்பூர் அனல் மின் நிலையத்திற்கும் கடலடி மின் கம்பி இணைப்பிற்கும் ஆக (க்ணஞீஞுணூ ண்ஞுச் ணீணிதீஞுணூ ஞிச்ஞடூஞு டூடிணடு) கைச்சாத்திடப்படப் போவதாக உறுதியான தகவல்கள் வெளிவருகின்றன.

யுத்தம் முடிவடையும் வரை, "பொறுத்திருந்து பார்த்த' இந்திய தந்திரோபாய நகர்வு, இப்போது இயங்க ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் காங்கேசன்துறை துறைமுகம் மீள்கட்டுமான மற்றும் நிர்வாகப் பொறுப்பினை இந்தியா கையேற்கவிருப்பதாகவும் அதன் முதல் நகர்வாக, பலாலி விமான ஓடு பாதை புனரமைப்பிற்கு 117 மில்லியன் ரூபாய்களை இந்திய தூதுவராலயம் இலங்கைக்கு அண்மையில் வழங்கிய விவகாரமும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை இந்தியக் கம்பனியிடம் தாரை வார்க்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

தொழிற்சாலையில் உற்பத்தியாகும் சீமெந்தினை ஏ9 பாதையூடாகவும் (புகையிரதம் மூலம்) அல்லது துறைமுகம் ஊடாகவும் வெளியே கொண்டு வரலாம்.

ஆனாலும் சீமெந்து தொழிற்சாலை மற்றும் அனல் மின் நிலையத்திற்கு தேவையான எரிபொருட்களை (நிலக்கரி உட்பட) இறக்குவதற்கு துறைமுகங்களின் அவசியம் உணரப்படுகிறது. இதனடிப்படையில் காங்கேசன்துறை துறைமுகத்தின் நிர்வாகப் பொறுப்பினை இந்தியா கையேற்பதும், இயற்கைத் துறைமுகமான திருகோணமலையில் அனல் மின் நிலையம் அமைப்பதும் வழங்கல் பாதையை இலகுவாக்கும்.

சீனன் குடாவில் பிரித்தானியரால் இரண்டாம் உலக யுத்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, 2003ஆம் ஆண்டு இந்தியன் எரிசக்தி கூட்டுத்தாபனத்தால் சுவீகரிக்கப்பட்ட 99 நிலத்தடி எண்ணெய் சேமிப்புக் கிணறுகளை பராமரிப்பதற்கும் இந்த திருமலைத் துறைமுகம் மிகவும் அத்தியாவசியமானதொன்றுதான்.

திருமலையில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டம், மே 2002 இல் இந்தியாவால் முன்வைக்கப்பட்டது. இதற்கான இடத்தெரிவு, சீனன்குடா விமான நிலையத்திற்கு அருகிலும், உயர் பாதுகாப்பு வலயத்தின் உள்ளேயும் அமைந்திருந்தது.

ஆனாலும் நிலக்கரி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த அனல் மின் நிலையத்தின் புகைக்கூடு (இடடிட்ணஞுதூ) மிக உயரமாக அமைவதால் சீனன் குடா தளத்தில் ஏறி இறங்கும் விமானங்களுக்கு இப் புகைக்கூடு இடையூறாக அமையுமென்பதை வலியுறுத்தி, அந்த இடத்தெரிவு அரசால் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிராகரிப்பிற்கான உள் நோக்கம், பேரினவாதச் சிந்தனையின் அடிப்படையைக் கொண்டிருப்பதாக பல அரசியல் விமர்சகர்கள் அன்று தமது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதாவது சீனன்குடாவின் தென்மேற்கில் அமைந்துள்ள சிங்களவர்கள் அதிகமாக வாழும் கந்தளாய் பிரதேசம், இவ் அனல்மின் நிலையம் வெளித் தள்ளும் கரிப்புகை மற்றும் நச்சுத் துகள்களாய் மாசு படுத்தப்படும் அபாயத்தை உணர் ந்தே இந்த இடம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

செப்டெம்பர் 2006 இல் யுத்தத்தினால் சம்பூர் பிரதேசத்தை ஒட்டிய 30 கிராமங்களில் வாழ்ந்த 30,000 தமிழ் மக்கள் வாகரையை நோக்கி விரட்டப்பட்டதால், அனல்மின் நிலையம் அமைப்பதற்கு உகந்த இடமாக சம்பூரை அரசு தெரிவு செய்தது. மூதூர் கிழக்கிலுள்ள சம்பூர், சேனையூர், கடற்கரைச்சேனை, இலக்கந்தை, சூடைக்குடா, கூனித்தீவு, பாட்டாளிபுரம் ஆகியவை உயர் பாதுகாப்பு வலயமாக பின்னர் அரசால் அறிவிக்கப்பட்ட நிகழ்விற்கும் அனல்மின் நிலைய இடத் தெரிவிற்கும் பலத்த தொடர்பு உண்டென்பதை இன்று காணக் கூடியதாகவிருக்கின்றது.

அதேவேளை இந்த அலை மின் நிலைய நிர்மாணிப்பினால் சம்பூரை அண்டிய கொட்டியாரக் கடற்கரையெங்கும் நிலக்கரியை சேமித்து வைக்கும் தளங்களும் உருவாக்கப்படும். இத்திட்டத்திற்கு ஏறத்தாழ 500 ஏக்கர் மக்கள் குடியிருப்பு நிலங்கள் சுவீகரிக்கப்படலாம். அத்தோடு சம்பூரிலும் சிறிய இறங்குதுறையொன்று கட்டப்படும்.

திட்டமிட்ட குடியேற்றங்களிலிருந்து தப்பி, இற்றைவரை தமது பூர்வீக நிலங்களில் வாழ்ந்து வரும் தமிழ்மக்கள், இந்த அனல்மின் நிலையம் வெளியே கக்கும் நிலக்கரித் துகள்களாலும் நச்சு வாயுக்களாலும் பாதிப்படைவார்கள். இதற்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டங்களையும் அரசு செவிமடுக்கவில்லை. ஏற்கனவே இதே போன்று மக்களின் எதிர்ப்புணர்வுகளையும் பொருட்படுத்தாது, சீன உதவியில் புத்தளம் நுரைச்சோலையில் அனல் மின் நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தால் சூழலை மாசுபடுத்தி, வெளியேறும் கழிவுகள் கடல்வளத்தை அழித்து, காபனீரொட்சைட் வாயுவினை காற்று வெளியெங்கும் பரப்பி, ஓசோனில் ஓட்டையும் போடப்படலாம். பணம் படைத்தோர் அணுமின் நிலையத்தையும், வசதி குறைந்தோர் அனல் மின் நிலையத்தை ஏற்றுக் கொள்ளும் ஏகாதிபத்திய நிர்ப்பந்தங்கள், சந்தைப் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.

உலகளவில் நிலக்கரியின் பயன்பாடு குறைவடைந்து வரும் நிலையில் வறிய நாடுகளின் தலையில் பொருளாதார உதவி என்கிற போர்வையில் இவ் எரிசக்தி மூலப் பொருட்களை கட்டிவிடும் நாடகங்களையே நாம் இப்போது பார்க்கிறோம். இம் மின்நிலையங்களின், பயன்பாட்டு ஆயுட்காலம் ஏறத்தாழ 60 வருடங்களே. அதற்கு முன்பாக முதலீட்டுப் பணத்தினையும் இலாபத்தினையும் இப்பன்னாட்டு கம்பனிகள் சுரண்டி விடுவார்கள். மக்களிடம் எஞ்சியிருக் கப்போவது அழிவுற்ற நிலமும், அசுத்தமான காற்றலைகளுமே.

இந்த இந்திய நிறுவனமானது, உலக சக்தி உற்பத்தியில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. சந்தை முதலீட்டுத் திரட்சி ஏறத்தாழ 25 பில்லியன் அமெரிக்க டொலராக கணிப்பிடப்படுகிறது. இன்னமும் 60 வருடங்களில் இது நான்கு மடங்காக வளர்ச்சியுறும்.

இதன் பெறுமதியானது அண்மையில் சர்வதேச நாணய சபை இலங்கைக்கு வழங்கிய கடனைப் போன்று பத்து மடங்கானது.

Please Click here to login / register to post your comments.