சீறும் சிங்கள நாகம்

ஆக்கம்: வேல் வீச்சு - தென் பாண்டிவீரன்
"பாலை ஊற்றி பாம்பை வளர்த்தாலும் அது பாய்ந்து கொத்தும்" என்பது ஆன்றோர் வாக்காகும். சிங்கள அரசைப் பொறுத்தவரை இது முழுக்க முழுக்க உண்மையாகிவிட்டது.

சிங்கள அரசுக்கு இந்தியா எத்தனையோ உதவிகளைச் செய்திருக்கிறது. இராணுவ ரீதியான உதவிகள் வளர்ச்சித்திட்டங்களுக்கான நிதிஉதவிகள் வணிக ரீதியான சலுகைகள் இன்னும் எத்தனையோ வகையில் சிங்கள அரசைத் திருப்திப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு இந்திய அரசு செயல்பட்டுவந்திருக்கிறது.

இலங்கை சுதந்திரம்பெற்றவுடன் 1949ம் ஆண்டில் இந்திய வம்சா வழியில் வந்த மலையகத் தமிழர்களின் குடியுரிமையை சிங்கள அரசு பறித்தது. பல தலைமுறைகளாக உழைத்து இலங்கையில் ரப்பர் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியவர்களை விரட்டியடித்தது. ஆனால் இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இந்திய சீன எல்லைப்போர் மூண்டபோது சீனாவுக்கு ஆதரவாக சிங்கள அரசு நின்றது.

வங்காள தேசப்போர் மூண்டபோது பாகிஸ்தான் இராணுவ விமானங்களும், போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகம் வந்து எரிபொருளை நிரப்பிக்கொண்டு வங்காள தேசம் சென்று இந்தியப் படைகளை எதிர்த்துப்போராட சிங்கள அரசு உதவியது. அரசின் உதவியோடு சிங்கள வெறியர்கள் ஈழத்தமிழர்களைத் தொடர்ந்து இனப்படுகொலை செய்தபோதிலும் இந்தியா அதைக் கண்டுகொள்ளவில்லை. சிங்கள இனவெறியர்களை எதிர்த்து தமிழர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தைத் தொடங்கியபோது. அதை ஒடுக்குவதற்கு இந்திய இராணுவத்தை அனுப்பி இந்தியா உதவி செய்தது.

உதவிக்குவந்த இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்று சிங்கள அதிபர் பிரேமதாசா அவமானப்படுத்தியபோதும் அதையும் இந்தியா சகித்துக்கொண்டது.

விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக ஆயுதங்களை இந்தியா அள்ளித் தந்தது. சிங்கள வெறியர்கள் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்காக அவர்களுக்கு இராணுவப் பயிற்சியும் கொடுத்தது.

விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயுதங்களைத் தடுத்து நிறுத்த இலங்கையைச் சுற்றி இந்தியக் கடற்படையைக் காவலுக்கும் இந்திய அரசு நிறுத்தத் தவறவில்லை.

தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து கொன்று குவித்தபோதிலும் அவர்களைச் சிறைப்பிடித்துச் சென்றபோதிலும் இந்தியக் கடற்படை வேடிக்கை பார்த்ததே தவிர சிங்களக் கடற்படையுடன் மோதவில்லை.

இப்படியெல்லாம் சிங்களரைத் திருப்திப்படுத்தும் வேலையை இந்திய அரசு தொடர்ந்து செய்தபோதிலும் சிங்கள நாகம் சீறுவதற்கும் கொத்துவதற்கும் ஒருபோதும் தயங்கவில்லை.

இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் தன்னை இந்திய அரசின் பிரதிநிதி என்று கருதுவதைவிட சிங்கள அரசின் பிரதிநிதியாகவே எண்ணிச் செயல்பட்டார். இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்களை மூளைச் சலவைச் செய்து சிங்கள அரசுக்கு ஆதரவு கொடுக்க வைப்பதில் முன்நின்றார். ஒருநாட்டின் தூதுவர் எப்படி நடந்துகொள்ளவேண்டுமோ அப்படி நடந்துகொள்ளாமல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்தார்.

இப்படியெல்லாம் சிங்களர்களுக்குத் தொண்டு ஊழியம் புரிந்த நிருபமாவையும் சிங்களர் நம்பவில்லை.

சிங்கள அமைச்சரான அனுரா பண்டார நாயக. அவரைக் கடுமையாகத் தாக்கி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். இலங்கை அரசியலில் இந்தியத் தூதுவர் தலையிடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அவசரம் அவசரமாக இந்தக் குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு இது தேவைதானா?

பாலை ஊற்றி சிங்கள நாகத்தை வளர்த்த, கூடாத செயலை இந்தியா செய்தபோது இந்தியத் தூதுவர் நிருபமா அதில் முன்னின்றார். இப்போது அதன் பலனை அனுபவிக்கிறார். சாதாரணமாக ஒருநாட்டின் தூதுவருக்கு இத்தகைய அவமதிப்பு நேர்ந்தால் அவர் உடனடியாகப் பதவி விலகுவார். ஆனால் நிருபமாவிற்கு அந்தத் தன்மான உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை.

Please Click here to login / register to post your comments.