இலங்கைக்கான 2.6 பில்லியன் டொலர் கடனும் மக்கள் மீது சுமத்தப்படவுள்ள பொருளாதார சுமைகளும்

ஆக்கம்: வ.திருநாவுக்கரசு
சென்ற வாரம் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எவ்) இலங்கை அரசாங்கத்திற்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தொகையினைக் கடனாக வழங்குவதற்கு இணங்கியதானது கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த வெற்றியின் பின்னர் கிடைத்த இரண்டாவது வெற்றியென அரச தரப்பினரால் போற்றிப் புகழப்படுகிறது.அரசாங்கம் 1.9 பில்லியன் டொலர் பணத்தொகை மட்டுமே கோரியிருந்ததாயினும் ஐ.எம்.எவ். உயர்மட்டத்தினர் தாமாகவே 2.6 பில்லியன் டொலர் பணத்தொகையினை அங்கீகரிப்பதற்குத் தலைப்பட்டமை அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக அரசாங்க உயர் மட்டத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஐ.எம்.எவ். விதித்த நிபந்தனைகள்

உண்மையில் இலங்கை அரசாங்கம் தனது வெளிநாட்டுச் கையிருப்புகளைப் பலப்படுத்துவதற்கு மற்றும் இதர கொடையாளிகளிடமிருந்து போருக்குப் பிந்திய புனர்நிர்மாண வேலைகளுக்கு நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை உருவாக்குவதற்கான தேவைபற்றி அலசியதை அடுத்தே 2.6 பில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு ஐ.எம்.எவ். தீர்மானித்ததாக அறியக்கிடக்கிறது.

மறுபுறத்தில் இக் கடனுதவி தொடர்பாக ஐ.எம்.எவ். விதித்துள்ள நிபந்தனைகள் நாட்டின் இறைமைக்குப் பங்கம் விளைவிப்பதாகத் தெரிகிறது. அதாவது,(அ) வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகை 2010 இல் (தேசிய மொத்த உற்பத்தியில்) 7% ஆகவும் 2011 இல் 5% ஆகவும் குறைக்கப்படவேண்டும்.(ஆ) வருமானம் அதிகரிக்கப்படவேண்டும்.(இ) வரிவிதிப்பு முறைமை விரிவாக்கப்படவேண்டும்.(ஈ) வரிவிலக்கு எல்லை சுருக்கப்படவேண்டும் போன்ற நிபந்தனைகளே விதிக்கப்பட்டுள்ளன. மேலும், குறிப்பாக இலங்கை மின் சாரசபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் திறைசேரி மானியம் நிறுத்தப்படவேண்டியது மட்டமல்லாமல் இவை 2011 அளவில் இலாபம் ஈட்டும் நிலையங்களாகவும் மாற்றியமைக்கப்படவேண்டும்.

எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்ப்போமானால் ஐ.எம்.எவ். பிரதி முகாமைத்துவ இயக்குநர் ரக்கோற்றசி கேற்றோ கடன் வழங்குதல் தொடர்பாக முதலில் விளக்கியிருந்தது போல இலங்கை அரசாங்கம் "கடினமான பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை' மேற்கொள்ள வேண்டியுள்ளது. மற்றும் முன்னைய கடன்களை இறுக்குவதற்காக அதிக வட்டி கொடுத்து வெளிவாரியான கடன்களைப் பெற்றுக்கொள்ளக்கூடாது. அத்தோடு ஐ.எம்.எவ். தற்போது கடன் வழங்கும் 20 மாத காலப்பகுதிக்குள் வேறு வட்டாரங்களிலிருந்து 1.71 பில்லியன் டொலர் தொகைக்கு மேலாக கடன் பெற்றுக் கொள்ளப்படமாட்டாதென அரசாங்கம் உறுதியளித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், சென்ற ஜூன் மாத இறுதிவரையிலான 20 மாத காலப்பகுதியில் ஹொங்கொங் சங்காய்(ஏகுஆஇ) வங்கியிடமிருந்து அதிக வட்டியில் எடுத்த 500 மில்லியன் டொலர் தொகை அடங்கலாக மொத்தம் 2 பில்லியன் தொகை கடன் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அரசாங்கம் பலத்த கடன் பளுவுக்கு முகம் கொடுத்து நிற்பதைக் காணமுடிகிறது.

மக்கள் மீது தாங்க முடியாத சுமைகள் காத்திருக்கின்றன

நிற்க தற்போதைய 2.6 பில்லியன் கடன் சம்பந்தமாக விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளின் பிரகாரம் சாதாரண பொதுமக்கள் மீது தாங்கமுடியாத சுமைகள் வைக்கப்படப்போகின்றன என்பது புலனாகிறது. வரிகள் விதிப்பது ஒருபுறம்,மறுபுறத்தில் மின்சாரக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் அதிகளவில் உயர்த்தப்பட இடமுண்டு.இதனால், குறிப்பாக ஏழை எளிய மக்களின் வயிற்றில் பலத்த அடிவிழப்போகிறது. அத்தோடு மேலும், கூடுதலான நாட்டு மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்படும் நிலை உருவாகவும் இடமுண்டு.

வரிஉயர்வுகள் மற்றும் வரிவலைப்பின்னல் விரிவாக்கம் முதலிய விடயங்களைப் பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக உடனடியாகவே பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் தலைமையில் 10 பேர் அடங்கிய வரி நிர்ணய ஆணைக்குழுவொன்றினை ஜனாதிபதி ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

ஆக, இந்த வகையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல நாட்டின் இறைமைக்குப் பங்கம் ஏற்பட்டுள்ள அதேநேரத்தில், "மகிந்த சிந்தனை'யும் குறிப்பிடத்தக்களவு புறந்தள்ளப்பட்டுள்ளதைக் காணலாம். அதாவது, குறிப்பாக பெரிய பரிமாண பொருளாதார ((Macro- economic)) முகாமைத்துவத்தைப் பொறுத்தவரை வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை எனும் அம்சத்தினை எடுத்துக் கொண்டால் "மகிந்த சிந்தனை' கொள்கைத் திட்ட வரைபில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

"பொதுமக்கள் சார்பில் மேற்கொள்ளவேண்டிய செலவீனங்களைக் குறைப்பதன் மூலம் வரவுசெலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையினைக் குறைத்துக் கொள்ள முற்படுவதானது புத்திசாதுரியமான நிதி முகாமைத்துவ குணாம்சம் எனக் கொள்ளமுடியாது'.

எனவே, மேற்படி அம்சமானது ஐ.எம்.எவ். விதித்துள்ள நிபந்தனையின் மூலம் செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அதேநேரத்தில், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக "மகிந்த சிந்தனை'யை ஐ.எம்.எவ். ஏற்றுக் கொண்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்றால் கூறியுள்ளமை கேலிக் கூத்தாயுள்ளது.

ஆக, ஒட்டுமொத்தமாகப் பார்ப்போமானால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடியானது நாட்டை ஆட்டிப்படைக்கும் அதேவேளை, நாடு நித்திய கடனாளி என்ற நிலை தொடரக்கூடிய அபாயம் "டமொசின்ஸ்' வாள் போல் தலைமேல் தொங்கிக் கொண்டிருப்பதை நாட்டுப் பற்றாளர்கள் என தம்பட்டம் அடிப்பவர்கள் மறந்து விடக் கூடாது.

தேசிய இனப்பிரச்சினை தீர்வு கிட்டாததன் விளைவுகள்

மாறிமாறிப் பதவி வகித்து வந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் தேசிய இனப்பிரச்சினை விடயமாகக் கடைப்பிடித்து வந்த சிங்கள மேலாதிக்கக் கொள்கை காரணமாக நாடு பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளதொன்றும் புதிய விடயமல்ல. இவ் யதார்த்தத்தினை அறிவும் அறமும் கொண்ட எவராலும் மறுக்க முடியாது. பெரும்பான்மை மேலாதிக்க சிந்தனையால் உந்தப்பட்டு வந்துள்ள இரு ஆளும் கட்சிகளும் தமிழ் மக்களை ஓரம்கட்டி அடக்கி ஒடுக்கி இறுதியில் ஒரு யுத்தத்தையே தமிழர் மீது திணித்ததன் காரணமாகவே நாடு இன்று ஐ.எம்.எவ். கீறிய கோட்டிற்குள் சிக்குண்டிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய திரிசங்கு நிலையில் கூட மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தான்பிடித்த முயலுக்கு மூன்று காலென ஒற்றைக்காலில் நிற்பது நிச்சயமாக நாட்டுக்கு நன்மை தரப்போவதில்லை. அது நாட்டுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி விடுவது திண்ணம் . "அவர்களின் (தமிழர்களின்) பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் போன்ற வெளியார்கள் எனக்கு உபதேசம் செய்யத் தேவையில்லை. தமிழர் எனது மக்கள். நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் அநீதி விளைவிக்கப்படுவதை என்னால் சகிக்க முடியாதது போலவே தமிழ் மக்களுக்கு அநீதி விளைவிப்பதையும் நான் சகித்துக்கொள்ளமாட்டேன். எனது குடும்பம் தமிழருடன் கலப்புத் திருமணம் செய்திருக்கிறது. எனது மந்திரி சபையில் தமிழர் அங்கம் வகிக்கின்றனர். விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த பிராந்தியங்களுக்கு வெளியே தெற்கிலும் மேற்கிலும் 70%மான எமது தமிழ் மக்கள் சௌஞன்யமாகவும் சுபிட்சமாகவும் எப்போதும் வாழ்ந்து வந்துள்ளனர்'என்றெல்லாம் ஜனாதிபதி ராஜபக்ஷ சென்றவாரம் இந்திய சஞ்சிகையாகிய "ரெஹெல்கா' வுக்கு வழங்கிய செவ்வியில் கூறிவைத்துள்ளார்.

இத்தகைய கூற்றுகள் வெளிப்படுத்தப்படுவது முதல் தடவையல்ல. இவை நிச்சயமாக வரவேற்புக்குரியவையாயினும் நடைமுறையிலான பலாபலன்கள் எதனையும் காண முடியவில்லை என்பதை இன்னோரன்ன பாதிப்புகளுக்கும் தாங்கொணா அவலங்களுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கும் மக்கள்தான் அறிவர். தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். இங்கே இன்னொரு அம்சம் என்னவென்றால், வடக்கு, கிழக்கு ஒரு தமிழர் பெரும்பான்மைப் பிராந்தியம் என்பதற்கு மூடு திரைபோடும் வகையில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் தென்னிலங்கையில் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர் எனப் பல சிங்கள அரசியல்வாதிகள் வாய்ப்பாடாகக் கூறிவருவதுண்டு. இத்தகைய கபட நாடகங்கள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியவையாகும்.

சுயநிர்ணய உரிமை

சுயநிர்ணய உரிமை என்பது பிரிவினைதான் என்று தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டுவருவதைக் காண்கிறோம். இது ஒன்றில் விளக்கமில்லாமல் அல்லது விசமத்தனமாக நடைபெற்று வருகிறது எனலாம். எனினும், சிங்கள மக்கள் மத்தியில் அன்று தொடக்கம் விசமத்தனமான பிரசாரம் செய்யப்பட்டு வருவது கண்கூடு. சமஷ்டி என்றால் பிரிவினை. சுயநிர்ணய உரிமை என்றால் பிரிவினை, 13 ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப்பகிர்வு என்றால் பிரிவினை என்றெல்லாம் சிங்கள மக்கள் மத்தியில் பித்துவிதைக்கப்பட்டதன் காரணமாகவே தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வின்றி நாடு தொடர்ந்து பின்நோக்கிச் சென்று தொடர்ந்து பிச்சாபாத்திரம் ஏந்தி நிற்கிறது.

தற்போது, உள்ளக சுயநிர்ணய உரிமை அடங்கலான தீர்வுத்திட்ட வரைபு ஒன்றினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைக்கவுள்ளதாக அதன் தலைவர் இரா.சம்பந்தன் பா.உ. தெரிவித்துள்ளார். ஐ.எம்.எவ்.கடன் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள படுபாதகமான நிபந்தனைகள் பற்றி மூச்சு விடாமலிருக்கும் சிங்களப் பேரினவாத சக்திகள் மற்றும் கடும் போக்காளர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது கூட பிரிவினைதான் எனக்கூச்சல் இடுவார்கள் எனலாம். அவ்வாறான எதிர்மாறான சக்திகளை ஜனாதிபதி ராஜபக்ஷ தோற்கடிப்பாராயின் அது நிச்சயமாக ஒரு பாரிய வெற்றியாக அமையும். ஏனென்றால் ஒன்று ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதேச சுயாட்சி முறைமை ஏற்படுத்தப்படுவது ஒரு சாதாரண ஜனநாயக உரிமையே ஒழிய வேறொன்று அல்ல. மற்றது அதுதான் நாட்டில் உண்மையான உபயோகமான ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையாயிருக்க முடியும். அதனை ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வதுதான் சாலச் சிறந்ததாகும். அவ்வாறாகவே நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த பங்களிப்பினைப் பெற்று நாட்டைச் சுபிட்சப்பாதையில் இட்டுச்செல்ல முடியும். அவ்வாறாகவே நாட்டின் இறைமையைப் பந்தாடிக் கொண்டு கழுத்தையும் நெரிக்கும் கடன் பொறியிலிருந்தும் நாட்டை விரைந்து மீட்க முடியும்.

Please Click here to login / register to post your comments.