ஒன்றிணைந்த இலங்கைக்குள் சீனா இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியுமா?

ஆக்கம்: வேல்ஸிலிருந்து அருஷ்

சீனாவின் மூலோபாயத்தை முறியடிப்ப தற்கு இந்தியா அமெரிக்காவுடன் இணைந் துள்ளதாக இந்தியாவின் முன்னாள் இராஜ தந்திரியான எம் பத்ரகுமார் அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் தெரிவித்துள் ளார்.

அண்மைக்காலமாக இந்தியாவுடன் அமெ ரிக்கா நட்புறவை வளர்த்துக்கொள்வதற்கு காட்டிய அக்கறைகளும் அதனை தான் காட்டுகின்றன. ஆனால் இந்திய தரப்பு அதனை பயன்படுத்த தவறிவிட்டது என்றே கொள்ள முடியும். ஏனெனில் இலங்கையில் சீனா வலுவாக காலூன்றிவிட்ட நிலையில் எதிர்காலத்தில் இந்திய அமெரிக்க கூட்டுற வினால் ஏற்படப்போகும் பலாபலன்கள் குறைவானதே. அதற்கான பணி கடினமானது.

தென் ஆசிய பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இலங்கை அமைந்துள்ளது. அதற்கு மேலும் வலுச்சேர்ப்பதாக இயற்கை பாதுகாப்புக் கொண்டதும் இயற்கையாகவே ஆழமான கடல்பகுதியை உள்வாங்கிக் கொண்டதுமான திருமலைத்துறைமுகமும் அமைந்துள்ளது. இதுவே இலங்கை மீதான வல்லரசுகளின் பார்வையை அதிகரித்திருந்தது.

1942களில் சிங்கப்பூரில் அமைந்திருந்த பிரித்தானியாவின் கடற்படைத்தளம் ஜப்பானிடம் வீழ்ச்சி கண்ட பின்னர் திருமலைத்துறைமுகத்தின் முக்கியத்துவம் அதிகரித்திருந்ததுடன் பிரித்தானிய கடற்படையின் ஏழாவது கப்பல் தொகுதியின் நிலையிடமாகவும் திருமலை விளங்கியது.

இந்த முக்கியத்துவங்கள் 1980 களில் தான் அதிகம் பேசப்பட்டது. இதனை முதன்மையாகக் கொண்டு தான் 1987 களில் இலங்கை இந்திய ஒப்பந்தமும் எழுதப்பட்டது. இந்திய அமைதிப்படையினர் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கவே இலங்கை வந்துள்ளதாக பலரையும் நம்பவைக்கப்பட்ட போதும், உண்மை அதற்கு மறுதலையானது.

ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான இலங்கை அரசு மேற்குலகின் பக்கம் சாய முற்படுகின்றது என்ற அச்சம் இந்தியாவை ஆட்கொண்டிருந்தது. அதனை உறுதிப்படுத்துவது போலவே ஜயவர்தன 1985 களில் தெரிவித்த கருத்தும் அமைந்திருந்தது. அதாவது 1947 களில் பிரித்தானியாவுடன் இலங்கை மேற்கொண்டிருந்த பாதுகாப்பு உடன்பாடு உத்தியோகபூர்வமாக இரத்துச்செய்யப்படவில்லை என அன்றைய பிரித்தானிய பிரதமர் மாகிரட் தட்சருக்கு ஜயவர்த்தன தெரிவித்திருந்தார்.

மேலும் வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா (ஙணிடிஞிஞு ணிஞூ அட்ஞுணூடிஞிச்) என்ற வானொலி சேவையும் இந்தியாவை உளவு பார்க்கும் அமெரிக்க அரசின் திட்டமாகவே இந்தியா கருதிக்கொண்டது. அந்தக் காலப்பகுதியில் பிரித்தானியா, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைப் படையின ருக்கு பயிற்சிகளையும், ஆயுத விநியோகங் களையும் அதிகம் மேற் கொண்டிருந்தன.

அதாவது இலங்கையை தனது ஆளுமைக்குள் கொண்டுவரவே இந்தியா முயன் றிருந்தது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக இந்தியா அக்கறை கொள்ளவில்லை என்பதை பின்னர் அங்கு நடைபெற்ற சம்பவங்களும் எமக்கு தெளிவு படுத்தியிருந்தன.

ஆனால் தற்போது திருமலை துறைமுகத்தின் முக்கியத்துவம் எவ்வாறானது என்று பார்த்தால் அதன் முக்கியத்துவம் பல மடங்கு குறைந்துவிட்டது என்றே கொள்ளலாம். ஏனெனில் உலக நாடுகளின் படைப் பல கட்டமைப்புகளின் தொழில்நுட்ப வளர்ச்சியும், புலனாய்வு தகவல்களின் முக்கிய மையமாக செய்மதி தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படும் போது திருமலை துறைமுகத்தின் இயற்கை பாதுகாப்பு என்ற வாசகம் வலுக்குன்றி விடுகின்றது.

உள்ளே நிற்கும் கப்பல்களை மலைகள் மறைத்துவிடும் என நாம் முன்னர் எண்ணியதெல்லாம் தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்தப்போவதில்லை. காரணம் வானில் இருந்து செய்மதிகள் மூலம் துல்லியமாக தகவல்களை திரட்டிவிடலாம்.

எனவே திருமலைத் துறைமுகம் உலகில் சிறந்த துறைமுகமாகும் என பிரித்தானியாவின் கடற்படை தளபதிகளில் ஒருவரான அட்மிரல் ஹொராசியோ நெல்சன் (அஞீட்டிணூச்டூ ஏணிணூச்tடிணி Nஞுடூண்ணிண) 1940 களில் கூறிய கருத்துகள் தற்போதைய சூழ்நிலை யில் முற்றாக பொருந்த போவ தில்லை. அதாவது படைத்துறை ரீதியாக அதன் பாதுகாப்பு முக்கியத் துவம் குறைந்து போயுள்ளது.

மேலும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை எடுத்துக்கொண் டால் அதன் கேந்திர முக்கியத்துவம் தற்போது மேலும் அதிகமாகி உள்ளது என்பது உண்மை, ஆனால் திருமலை துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவம் பூச்சியமாகி உள்ளது என்பதே யதார்த்தமானது.

அதற்குக் காரணம் மிகவும் வலுவான துறைமுகம் ஒன்றை அம்பாந்தோட்டைப் பகுதியில் சீனா நிர்மாணித்துக்கொண்டது தான்.

சீனா தனது முழுவளங்களுடனும் அம்பாந்தோட்டையில் காலூன்றி யுள்ள போது இந்தியா திருமலை யில் இருப்பதும் ஒன்று தான் தமிழகத்தின் கரையோரத்தில் இருப் பதும் ஒன்று தான். ஏனெனில் சீனாவின் ஆளுமையற்ற இலங்கை மீதான இந்தியாவின் ஆளுமை தான் எதிர்காலத்தின் சீனாவின் பிரதான எரிபொருள் விநியோக பாதை மீது அழுத்தத்தை ஏற்படுத்தி ஒரு பேரம் பேசும் நிலையை ஏற்படுத்த வல்லது. ஆனால் சீனா அம்பாந்தோட்டையில் வலுவாக உள்ள போது இந்தியா திருமலையில் இருப்பது எந்த விதத்திலும் சீனாவுக்கு அழுத்தங் களைக் கொடுக்கப்போவதில்லை.

மேலும் ஒரு உறைக்குள் இரு கத்திகள் இருக்க முடியாது என்பது போல ஒன்றி ணைந்த இலங்கைக்குள் சீனா இந்தியா என்ற இரு பெரும் நாடுகள் ஆதிக்கம் செலுத்தவும் முடியாது. இந்தியாவை பொறுத்தவரையில் அதனை சூழ எதிரி நாடுகள் தான் அதிகம், பாகிஸ்தான், பங் களாதேஷ், நேபாளம், சீனா என அதனை எதிரிநாடுகள் சூழ்ந்துகொண்ட போதும் இந்து சமுத்திரத்தின் தென் பகுதியினூடாக இலங்கையை தனது பிடிக்குள் கொண்டுவர இந்தியா எடுத்த முயற்சிகளும் பலனைக் கொடுக்கவில்லை என்றே கூறமுடியும்.

திருமலைத் துறைமுகம் தொடர்பான ஆழ்ந்த கனவில் இந்தியா இருந்த போது அதற்கு மாற்றீடாக நவீன வசதிகள் கொண்ட பாரிய துறைமுகத்தையும், அதற்கு ஆதர வாக எண்ணெய்க்குதங்களையும் சீனா சத்தமின்றி நிர்மாணித்து வருவது திருமலை துறைமுகத்தின் கேந்திர பொருளாதார மற்றும் படைத்துறை முக்கியத்துவங்களை பல மடங்கு குறைத்துள்ளது.

சுருக்கமாக கூறினால் திருமலை துறை முகம் மீது சீனா தனது பார்வையை செலுத் தியிருந்தால் ஆரம்பத்திலேயே சீனாவின் அணுகுமுறைகள் வெளிச்சத்திற்கு வந்திருக் கும். ஆனால் சீனாவின் உத்தி மிகவும் நுண் ணியமானது. ஆழமான தென்னிலங்கையில் எவரினதும் கவனங்கள் தன் மீது அதிகம் திரும்பாத வண்ணம் சத்தமின்றி தனது பணியை மேற்கொண்டு வந்துள்ளது.

சீனாவின் இந்த அணுகுமுறைகள் தொடர்பாக மேற்குலகம் அறிந்து கொண்ட போதும் இந்தியாவின் தமிழ் மக்கள் மீதான விரோதப்போக்கு அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மாற்றப்படாத இந்தியாவின் வெளிவிவகார கொள்கைகள் பல

வழிகளில் சீன இலங்கை கூட்டுறவை வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பூரண நம்பிக்கையுடன் மேற்குலகுடன் கைகோர்க்கவும் முடியவில்லை, கீழிறங்கி வந்து ஈழத்தமிழ் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் விருப்பமில்லை. இந்த இரண்டு நிலைமைகளும் சீனாவின் "அமைதியான எழுச்சிக்கு' அனுகூலமாக அமைந்துவிட்டன.

நான் முன்னர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டது போல தன்னை பொருளாதார மற்றும் படைத்துறை ரீதியில் வலுப்படுத்தி கொள்வதற்கு ஏதுவாக சீனா தன்னை சூழவுள்ள பிரதேசங்களில் அமைதியையும், உறுதித்தன்மையையும் ஏற்படுத்த முயன்று வருகின்றது. பர்மாவிலும், பாகிஸ்தானிலும் அதனை தான் அது மேற்கொள்ள முயன்று வருகின்றது. ஏனெனில் அமைதியான பிராந்தியத்தில் யாரும் விரைவாக தலையிட முடியாது என்பதுடன் பொருளாதார மேம்பாட்டிற்கும் அது உறுதுணையானது.

இலங்கை விவகாரத்தில் கூட இந்தியாவின் துணையுடன் விடுதலைப்புலிகளை முற்றாக முறியடிக்க சீனா உத்வேகத்துடன் செயலாற்றியதும் அதனால் தான். தற்போது விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மௌனமாக்கி உள்ளதாக தெரிவித்து வருவதும், அவர்களின் மரபுவழியிலான படைக் கட்டமைப்புகள் பாதிப்புகளை சந்தித்துள்ளதும் சீனாவின் நோக்கங்களை ஓரளவு நிவர்த்தி செய்துள்ளன.

ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் ஏதிலியாக அல்லல்படுவது இந்திய தரப்பு தான். அண்மையில் இந்திய புலனாய்வு அமைப்பின் பிரதிநிதி ஒருவர் இலங்கை இராஜதந்திர வட்டாரங்களைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு தெரிவித்த கருத்தில் "இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கையில் எந்தவொரு தமிழ் கட்சியும் இல்லை' என தெரிவித்திருந்தார்.

அதாவது மீண்டும் இந்திய தரப்பின் போலியான வாக்குறுதிகளை நம்பி இலங் கையில் உறுதியற்ற தன்மையை தோற்று வித்து இந்தியா வலுவாக வடக்கு கிழக்கில் காலூன்ற தேவையான சூழ்நிலையை ஏற்படுத்தும் நோக்கங்களுக்கு இசைவான தமிழ் கட்சிகள் இல்லை என்பதே அதன் பொருள்.

எனவே தான் தற்போது தனக்கு ஆதரவான மாற்றுக்குழு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அதற்கு ஏதுவாக தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாம்களில் இருந்து இளைஞர்களை பலவந்தமாக இந்தியா உருவாக்கும் குழுவில் இணைத்தும் வருகின்றது.

மறுபுறம் அபிவிருத்தி, வர்த்தகம், விவசாயம் என பல துறைகளில் வடக்கு கிழக்கில் கால்பதிக்க முற்பட்டுவரும் இந்திய தரப்பு வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு என 1500 இந்திய படையினரையும் அனுப்பியுள்ளது. வடக்கு கிழக்கில் தனது ஆளுமையை அதிகரிப் பதன் மூலம் இலங்கை அரசிற்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த முடியுமே தவிர அதன் மூலம் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வைக் காண இந்தியா முற்படப்போவதில்லை என்பது தெளிவானது.

ஏனெனில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ள விடுதலைப்புலிகளுடனோ, தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடனோ இந்தியா வலுவான நட்புறவுகளை பேணுவதற்கு முன்வரவில்லை. தமிழ் மக்களின் உறுதியான ஆதரவு இன்றி இந்தியா வடக்கு கிழக்கில் வலுவாக காலூன்ற முடியும் என நம்பினால் அது மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை வருந்தி அழைத்துக்கொண்டதாகவே இருக்கும்.

பூகோள நலன் சார்ந்து இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டுள்ள கூட்டணிகளை நோக்கும் போது 1980 களில் இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டணி அமைத்திருந்தன. மேற்குலகம் அதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தது. இன்று சீனாவுடன் ரஷ்யா கூட்டு சேர்ந்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக் கைகளை சீனாவுடன் இணைந்து ரஷ்யாவும் கூட்டாக மேற்கொண்டிருந்தது.

சீனாவை பொறுத்தவரையில் மிக வேகமாக வளர்ந்து வரும் அதன் தொழில் துறைக்கு பல மடங்கு அதிகமாக தேவைப் படும் எரிபொருளின் விநியோகப்பாதை யின் பாதுகாப்பை அது விட்டுக்கொடுக்கப் போவதில்லை. எனவே எரிபொருட்களை சுமந்து செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடற்படை கப்பல்களுக்கு எரி பொருள் நிரப்பும் தேவைக்கும், ஓய்வுக்கும் அம்பாந்தோட்டைப் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள துறைமுகத்தை சீனா பயன்படுத் தும் என்பது தெளிவானது.

எரிபொருள் விநியோக கப்பல்களுக்கு வழித்துணை வழங்கும் சீனாவின் கடற்படை கப்பல்கள் அம்பாந்தோட்டை துறை முகத்தை தமது தேவைகளுக்கு பயன்படுத் தும் என சீன கடற்படை தலைமையகத்தின் பிரதிப் பணிப்பாளர் கேணல் சீயி டொன்ங்பி (இணிடூணிணஞுடூ ஙீடிஞு ஈணிணஞ்ணீடிஞு) அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் அது முற்றிலும் தொழில்நுட்ப துறையை சேர்ந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். அதற்கு வசதியாக அம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியில் திருமலை துறைமுகத்தில் உள்ளது போன்ற எண்ணெய் தாங்கி குதங்களையும் சீனா நிர்மாணித்து வருகின்றது.

எனவே தென்னிலங்கையில் சீனா உள்ளபோது இலங்கையில் ஆதிக்கத்தை தேடும் துரதிர்ஷ்டமான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவுக்கு இந்தியாவினூடாக ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த முனைந்த மேற்குலகமும் தற்போது அந்தரத்தில் தொங்குகின்றது.

இந்த நிலையில் உலகின் பலம்வாய்ந்த நாடுகள் இலங்கையை அனுசரித்துப் போகும் நிலை என்பது எதுவரை சாத்திய மானது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அதாவது ஒருங்கிணைந்த இலங்கை என்ற கோட்பாட்டின் கீழ் இந்தியா சீனா மேற்குலகம் என்ற சக்திகள் ஆளுமை செலுத்த முடியுமா என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.

எனவே உலகின் உச்சபலம் கொண்ட வல்லரசுகளின் மையப்புள்ளியாக மீண்டும் இலங்கை முனைவாக்கம் பெற்றுள்ளது என்பது தெளிவானது. ஆனால் இலங் கையில் தோன்றியுள்ள இந்த முனைவாக் கத்தை தமிழ் மக்களுக்கு அனுகூலமான தொரு நிலைக்கு நகர்த்துவதற்கு தமிழ் மக்களுக்கு ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பு தேவை.

Please Click here to login / register to post your comments.