இலங்கைத் தமிழர்கள் மன அமைதி பெற உதவும் வாழும் கலை அமைப்பு

போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் மன அமைதி பெறுவதற்கு உறுதுணை புரியும் வகையில், வாழும் கலை (Art of Living ) அமைப்பு பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக வாழும் கலை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், " உலகம் முழுவதும் வாழும் தமிழ் இந்துக்களுக்கு ஆடி மாதம் பல்வேறு மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்ளும் மாதம். இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் முடிவடைந்ததையடுத்து வந்த ‘'ஆடி அமாவாசை' (முன்னோர்களை நினைவு கூரும் நாள்) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தற்போது சுமார் 2,75,000 தமிழர்கள் வீடுகளை இழந்து வடக்கு இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளாக விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடைபெற்ற போரில் உயிரிழந்த தங்கள் குடும்பத்தினரையும், நண்பர்களையும் அம்மக்கள், ஆடி அமாவாசையான ஜூலை 21-ம் தேதி நினைவு கூர்ந்தனர்.

போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த 'வாழும் கலை அமைப்பு' அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகின்றது. இந்த அமைப்பின் ஆசிரியர் குழு நூற்றுக்கணக்கான மக்களுக்கு தியானம், மூச்சுப்பயிற்சி, தெய்வீக இசை மற்றும் பஜனை நிகழ்ச்சிகளை நடத்தியதோடு, இறந்தவர்களுக்குக்காக சடங்குகளை நடத்தி மரியாதை செலுத்தவும் ஏற்பாடுகளை செய்திருந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (வாழும் கலை அமைப்பின் நிறுவனர்) இலங்கையில் அமைதியும், சந்தோஷமும் நிலவ பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார். போருக்கு பின் இலங்கையில் 'மனதையும், உள்ளத்தையும் ஒருமுகப்படுத்துதல்' என்ற நிகழ்ச்சியினை வாழும் கலை அமைப்பு வவுனியா தமிழர்களுக்கு நடத்தி வருகின்றது.

இலங்கை தமிழர்களுக்காக அரிசி, உணவு, பால்பவுடர், மருந்துகள் மற்றும் துணிமணிகள் போன்ற உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் கிழக்கு பகுதியில் உள்ள திரிகோணமலை பகுதியிலும், சுமார் 10,000 தமிழர்களுக்கும் இந்த உதவி வழங்கப்பட்டு வருகின்றது. ஜூலை 21ம் தேதி வவுனியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியால் மக்கள் தங்களது மன உளைச்சல்கள் மற்றும் துக்கங்களிலிருந்து விடுபட உதவிகரமாய் இருந்தது.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் ஏராளமானோர் தங்களது அன்பையும், நன்றியினையும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜிக்கு தெரிவித்தனர். துயரமான ஓர் உலகிலிருந்து ஒரு புதிய வாழ்க்கைக்கு தாங்கள் செல்ல வாழும் கலை அமைப்பின் ஆசிரியர் குழு உதவியதாகவும் அவர் கூறினர்," என்று வாழும் கலை அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please Click here to login / register to post your comments.