நாடு கடந்த அரசாங்கமும் அரசியல் தீர்வு முயற்சிகளும்

ஆக்கம்: கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்
இலங்கையில் தமிழ் அரசியல் என்பது சுவையானதும் முக்கியமானதுமான ஒரு காலகட்டத்தில் இருப்பதினாலும், தென்னிலங்கையில் கூறிக்கொள்ளக்கூடிய நிகழ்வுகள் எதுவும் இன்மையினாலும் தவிர்க்க முடியாதபடி தமிழ் அரசியல் பற்றியே கவனம் செலுத்த வேண்டிய ஒரு அவசியம் காணப்படுகின்றது. தமிழ் அரசியல் செயற்பாடுகளின் எதிர்காலம் அல்லது எதிர்கால செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்று அவசியப்படுகின்ற பின்னணியில் இவ்விடயம் பற்றிய ஆவுகள் பயனற்றவையாக இருக்கப்போவதில்லை.

2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழ் சமூகத்தினுள் காணப்பட்ட மாற்றுக் கருத்துகள் மென்மையான ஒரு முறையிலேயே முன்வைக்கப்பட்டிருந்தன. மாற்றுக் கருத்துகள் உரத்துக் கூறப்படவில்லை அல்லது அவ்விதம் கூறக்கூடிய சூழ்நிலை ஒன்று காணப்பட்டிருக்கவில்லை. இதன் கருத்து என்னவெனில் குறைந்தது மிக அடிப்படையான பிரச்சினைகளில் பெரும்பான்மை அபிப்பிராயம் ஒருமுகப்படுத்தப்பட்டதாக இருந்தது. இந்நிலை இன்று காணப்படவில்லை. அடிப்படையான பிரச்சினைகளில் தமிழ் அபிப்பிராயம் பாரிய அளவிற்குப் பிளவுபட்டுள்ளது போன்றே தோன்றுகின்றது. தேசிய மட்டத்தில் இவ் அபிப்பிராயம் வேறுபாடு வெளிப்படுத்தப்படுகின்றதோ இல்லையோ சமூக மட்டத்தில் தெளிவானதாகவே உள்ளது. இதற்குப் பல்வேறு உதாரணங்கள் சுட்டிக்காட்டப்படலாம்.

அவ்வகையில் பிரதானமான ஒரு விடயம் அரசியல் இலக்கு என்பது பற்றி இலங்கையில் தற்போது வாழ்ந்துவரும் தமிழர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இடையிலான அபிப்பிராய வேறுபாடு அல்லது வேறுபட்ட நிலைப்பாடு ஆகும். இவை இரண்டும் முழுமையாக வேறுபட்ட திசைகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளது போல் தோன்றுகின்றது. சுருக்கமாகக் கூறுவதாயின் உள்ளூர் அபிப்பிராயம் ஒன்றிணைந்த இலங்கையினுள் அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டை நோக்கி நகரத் தொடங்குகின்றபோது புலம்பெயர்ந்த தமிழர்கள் தனிநாடு என்ற நிலைப்பாட்டை கைவிடாதிருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவே நாடு கடந்த அரசாங்கம் என்கின்ற வாசகம், அல்லது கோஷம்.

முதலில் உள்ளூர் அபிப்பிராயத்தை எடுத்துக் கொள்வோமாயின், நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போன்று தற்போது அவர்களது அரசியல் எதிர்பார்ப்பும் தன்நம்பிக்கையும் பாரியளவில் நகர்ந்துள்ளது. இதன் காரணமாக எதைக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்ற ஒரு சாரார் காணப்படவே செய்கின்றனர். இன்னுமொரு சாரார் இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று கருதப்பட்ட 13 ஆவது திருத்தத்தை வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். உண்மையில் இன்று பேசப்படுகின்ற 13 ஆவது திருத்தம் 1987 ஆம் ஆண்டு பேசப்பட்டதிலும் குறைவானதாகும். ஏனெனில் 87 ஆம் ஆண்டு வடக்கும் கிழக்கும் இணைந்த பொதியையே நாம் சட்டமாக்கியிருந்தோம். இன்றைய நிலை அதுவல்ல.

தமிழ் ஈழம் என்பது உரத்துக் கூறப்பட்ட காலத்திலேயே இலங்கை வாழ் தமிழ் மக்களிடையே சமஷ்டி, (அதாவது ஒன்றிணைந்த இலங்கையினுள் தீர்வு) என்பதற்கு பாரிய ஆதரவு காணப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே 2002 ஆம் ஆண்டு ஒஸ்லோவில் சமஸ்டி பற்றிய இணக்கம் காணப்பட்டபோது அதற்கு தமிழ் மக்களிடையே பாரிய வரவேற்பு இருந்தது. ஆயினும் இந்த தமிழ் சமூகத்தினுள் இருந்து சமஸ்டி என்ற பதத்தை பார்ப்பதோ கேட்பதோ கடினமானதாக மாறிவிட்டுள்ளது. இது அவர்களது அரசியல் தன்னம்பிக்கையில் ஏற்பட்ட தளர்வின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. இருப்பினும் தெரிவு ஒன்று வழங்கப்படுமாக இருப்பின் அவர்கள் சமஸ்டி தீர்வு ஒன்றை நாடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. இதன் கருத்து ஒன்றிணைந்த இலங்கை என்ற எண்ணக் கருவினுள் வழங்கப்படக் கூடிய தீர்வு இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்கள் மட்டில் ஏற்புடையதாகவே இருக்கும் என்பதாகும்.

இதன் மறுபக்கம் என்னவெனில் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களிடையே தனிநாடு என்ற எண்ணக்கரு பலவீனமானதாகவே காணப்படுகின்றது. இலங்கையில் தமிழ் மக்களுக்கான தனியான ஒரு நாடு என்ற எண்ணக்கரு என்றுமே நடைமுறைச் சாத்தியமான அரசியல் இலக்காக இருக்கவில்லை. அன்று அது பிராந்திய அரசியல் யதார்த்தங்களினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. உதாரணமாக 1980 களில் இந்தியா, தமிழ் இராணுவர் குழுக்களுக்கு ஆதரவு வழங்கிய செயற்பாடே கூட ஈழ எதிர்ப்பு கொள்கையின் மீதே தோற்றுவிக்கப்பட்டிருந்தது. புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட போது சட்டரீதியாகக் கூறப்பட்ட காரணம் தனிநாடு எனும் புலிகளின் அரசியல் இலக்கு இந்திய தேசிய நலனுக்கு எதிரானது என்பதே ஆகும்.

செப்டெம்பர் 11 தாக்குதலும், அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச யுத்தமும் இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த ஒரு பாகத்திலும் அரசுக்கு எதிரான போராட்டங்களை, குறிப்பாக வன்முறைப் போராட்டங்களை வெற்றி பெற முடியாதவையாக மாற்றி இருந்தன. இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்ட சமூகங்களில் தந்திரோபாயங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் கூடியளவான அரசியல் இலாபத்தை அடைந்து கொள்ளும் செயன்முறை தோற்றுவிக்கப்பட்டிருந்தது. துரதிஷ்ட வசமாக இலங்கையில் இந்த யதார்த்தம் புரிந்துகொள்ளப்படவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட அரசியல், சமூக நட்டங்கள் சாதாரணமானவை அல்ல.

யுத்தத்தில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை இராணுவம் சந்தேகத்திற்கிடமற்ற வகையில் நிரூபித்துள்ள ஒரு விடயம் இலங்கையில் தமிழர்களுக்கு தனியான ஒரு நாடு சாத்தியமற்றது என்பதாகும். இதுவும் ஒன்றிணைந்த இலங்கையினுள் தீர்வு என்பதற்கான ஆதரவு அதிகரிப்பதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.

இத்தகைய ஒரு நிலையிலேயே புலம்பெயர்ந்த தமிழர்களிடையே இருந்து நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் ஏற்கனவே, குறிப்பாக தென்னிலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விமர்சனங்களுக்கு அப்பால், இந்த யோசனை உள்ளூர் ரீதியாக பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

இதுதொடர்பில் நோக்கப்பட வேண்டிய பிரதானமான விடயம் நாடுகடந்த அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பதாகும். பொதுவாக நாட்டிற்கு வெளியிலான அரசாங்கங்கள் குறுகிய எதிர்காலத்தில் நாடு திரும்பி உண்மையான அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்திலேயே தோற்றுவிக்கப்படுகின்றன. இலங்கையில் அவ்விதமான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான கோட்பாட்டு ரீதியான, நடைமுறை ரீதியான சாத்தியம் இல்லை என்பது தெளிவாகப் புரிகின்றபோது நாடுகடந்த அரசாங்கத்தின் நோக்கம் பற்றிய கேள்விகள் நியாயமானவையாகவே காணப்படும்.

அதேசமயம், யோசனை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வரலாற்றில் இருந்து சரியான பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லையோ என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கின்றது. நடைமுறை சாத்தியமற்ற இலக்கு மீதான பற்று பல அரசியல் தவறுகளுக்கு இட்டுச் சென்றுள்ள பின்னணியில் இது முக்கியமானதொரு கேள்வியாக அமைந்து விடுகின்றது. இதன் கருத்து நடைமுறை சாத்தியமான இலக்குகளை வகுத்துக் கொள்வது சகல தரப்பினருக்கும் நலன்களைக் கொண்டுவரும் என்பதாகும். உதாரணமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் நாடுகடந்த அரசாங்கமாக அன்றி தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை அடைந்து கொள்வதற்கான இயக்கமாக செயற்படுகின்றபோது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சாத்தியம் அதிகமாகும்.

இருப்பினும், நாடுகடந்த அரசாங்கத்தினால் உள்ளூர் ரீதியாக ஏற்படக்கூடிய பிரதான பிரச்சினை என்னவெனில், அது உள்ளூர் ரீதியாக அரசியல் தீர்வு ஒன்றை தேடுகின்ற செயன்முறையைக் கடினமானதாக ஆக்கிவிடக்கூடும். இச் செயன்முறையில் இரு பிரதானமான காரணிகள் காணப்படுகின்றன. ஒன்று தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் தீர்வு ஒன்றைத் தேடுவதற்கான ஆர்வம் காணப்படவேண்டும். நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக தனிநாடு பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை அதிகரிக்கின்றபோது தீர்வை தேடும் நாட்டம் குறைந்து விடலாம். இரண்டாவது நியாயமான அரசியல் தீர்வு ஒன்றின் மூலம் பெறப்படுகின்ற அதிகாரங்களும், நலன்களும் தமிழர்களினால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற நம்பிக்கை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுவது அவசியம். இந்த நம்பிக்கை அதிகரிக்கின்றபோது தீர்வின் மூலம் பெறப்படுகின்ற கட்டமைப்பின் அதிகாரங்கள் உறுதியாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமானவையாகும்.

இருப்பினும், தனிநாடு என்கின்ற சுலோகமும் கடல்கடந்து செயற்படுகின்ற அரசாங்கம்போன்றதொரு குழுவும் விஸ்வரூபமெடுத்து நிற்கின்ற போது சிங்கள மக்களிடையே இந்த நம்பிக்கை ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவானதாகும். எனவே, நாடு கடந்த அரசாங்கம் என்கின்ற எண்ணக்கரு தென்னிலங்கையில் அரசியல் தீர்விற்கான எதிர்ப்பியக்கத்தை உறுதிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம், இராணுவ வெற்றியை அடிப்படையாகக் கொண்டு சிறுபான்மையினர், குறிப்பாக தமிழர்கள் ஒடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அபிப்பிராயம் ஒன்றும் காணப்படுகின்றது. இவ்வித அடக்கி ஆளும் செயற்றிட்டத்தை நாடுகடந்த அரசாங்கம் போன்ற எண்ணக்கருக்கள் இலகுபடுத்தி நியாயப்படுத்திவிடக் கூடும்.

நாடு கடந்த அரசாங்க யோசனை ஏற்படுத்திய நடைமுறை ரீதியான சிக்கல்களுக்கு ஒரு உதாரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் உள்ளூர் முகவராக செயற்படும் என்று அறிவித்தமையாகும். புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து த.தே.கூட்டமைப்பை தனிமைப்படுத்துவதற்கான முயற்சி ஒன்று காணப்பட்டிருந்தது. இது அவர்கள் புலிகளின் முகவர்களாக செயற்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டினடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சி ஆகும். ஆயினும் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தின் பின்னணியில் தலைமைத்துவத்தை வழங்குவதில் த.தே.கூட்டமைப்பிற்கு முக்கிய பங்கு ஒன்று காணப்படுகின்றது. இப்பங்கு தம்மை கடந்த காலத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு சுயாதீனமான அரசியல் கட்சியாக மாறுவதன் மூலமே பூர்த்தி செய்யப்படலாம். இதனை அறிவிப்பு நிச்சயமாகப் பாதித்திருந்தது. உண்மையில் இவ் அறிவிப்பு த.தே.கூட்டமைப்பை தனிமைப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்பட்டிருகக்கூடும். எனவே, த.தே.கூட்டமைப்பு இவ் அறிவிப்பிற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்நிலைப்பாடு கட்சியின் எதிர்கால செயற்பாட்டிற்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம், தற்போதைய நிலையில் அனைத்து தமிழ் அரசியல் குழுக்களுமே வன்முறையை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிச்சயமாக இது அகிம்சை பயனளிக்கும் என்ற நம்பிக்கையினால் ஏற்பட்ட நிலைப்பாடு அல்ல. மாறாக தமிழ் மக்களைப் பொருத்தவரை வேறு மாற்றுவழி ஒன்று காணப்படவில்லை. ஜனநாயகக் கட்டமைப்பினுள் அமைந்த ஒன்றிணைந்த இலங்கையினுள் நியாயமான தீர்வு ஒன்றை அடைந்து கொள்வதற்கான வன்முறை அற்ற இயக்கம் புதிய நண்பர்களை உருவாக்கக் கூடும் என்பது முக்கியமானது.

Please Click here to login / register to post your comments.