சிறுபான்மைச் சிந்தனைக்கு முடிவு கட்டுவோம்

இலங்கையிலுள்ள சிறுபான்மையினரின் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படுவதுடன், அவர்களும் எல்லோரும்போல சமத்துவமாக நடத்தப்படவேண்டும் என்று அனைத்துலக நாடுகள் இலங்கையை மீண்டும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளன.

வடக்கில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. என்பன இந்தக் கோரிக்கையை விடுத்து வருகின்றன. ஓய்வுபெற்றுச் செல்லும் இலங்கையின் நீதியரசர் சரத் என் சில்வாவும் சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்ற செய்தியையே கடைசியாக இந்த நாட்டுக்குச் சொல்லிச் சென்றுள்ளார்.

இலங்கையில் சிறுபான்மையினர் என்று சொல்லும்போது பொதுவாக அது வடக்கு, கிழக்குத் தமிழர்களைத்தான் ஆரம்பத்தில் குறித்து வந்தது. காலப்போக்கில், முஸ்லிம்கள், மலையக மக்கள் ஆகியோரும் இதற்குள் சேர்க்கப்பட்டுவிட்டனர். இந்த ஒவ்வொரு பிரிவினரும் தமக்கெனத் தனித்துவமான சில பிரச்சினைகளைக் கொண்டிருப்பதால் அவை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு, அவற்றுக்குத் தீர்வு காணப்படுவது அவசியம்தான். ஆனால், இதற்கு ‘சிறுபான்மை’ என்ற அடையாளம் அவசியம்தானா?

ஜனநாயக அரசியலில் சிறுபான்மையும், பெரும்பான்மையும்

மேற்குலக ஜனநாயகப் பாரம்பரியத்தில் தேர்தல் வாக்குகள் விடயத்திலேயே சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகிறது. தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர், அல்லது பெற்ற கட்சியே வெற்றிபெற்றதாகக் கணிக்கப்படுகிறது. இங்கே இந்தப் பெரும்பான்மை வாக்குகள் என்பது, எந்த இனத்தினதோ, மதத்தினதோ, இனக்குழுமத்தினதோ வாக்குகளாக அன்றி, நாட்டின் நலனை முன்னிறுத்தி, பொருத்தமான தலைமையை, கட்சியை தெரிவுசெய்யும் அடிப்படையிலேயே நோக்கப்படுகிறது.; இந்த ஜனநாயக தேர்தல் பாரம்பரியத்தை அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க, இந்தியத் தேர்தல்களில் காண முடிந்தது.

தேர்தல் வெற்றிக்கான பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதே இந்தத் தேர்தல்களில் கட்சிகளும், தலைவர்களும் கடைப்பிடித்த வியூகம் மற்றும் பிரசாரங்களின் பிரதான இலக்காக இருந்தது. நாட்டின் நலனை முன்னிறுத்திய தமது திட்டங்களை முன்வைப்பதன் மூலம் மக்களது பெரும்பான்மை வாக்குகளை வெல்வதற்கு அமெரிக்காவின் ஒபாமா, மக்கேய்ன் மேற்கொண்ட முயற்சிகளும், இந்தியாவில் காங்கிரஸ் கூட்டணி, எதிரணிகள் மேற்கொண்ட முயற்சிகளும் இந்த ஜனநாயகப் பாரம்பரியத்தையே வெளிப்படுத்துகிறது(சில தில்லுமுல்லுகள் நீங்களாக).

குறுக்கு வழி

ஜனநாயக தேர்தல் வெற்றிக்காக மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறுவதற்கு, பெரும்பான்மையாக இருக்கும் ஒரு குழுவின் அல்லது இனத்தின் வாக்குகளை இலக்கு வைப்பது சுலபமான ஒரு குறுக்கு வழியாகும். சுதந்திரத்துக்குப் பின்னர் மேலைத்தேய ஜனநாயக அரசியலைப் பின்பற்றித் தொடங்கிய இலங்கையில் நடந்தது இதுதான்.

பெரும்பான்மையினராக இருந்த சிங்கள இனத்தவரைக் கவரும் விதமாக, அவர்களது மொழி, மத உணர்வுகளை முன்னிறுத்திய (‘சிங்களம் மட்டும்’, ‘பௌத்தம் பிரதான மதம்’ போன்ற) தேர்தல் வாக்குறுதிகள், பிரசாரங்களை முன்னெடுத்து தமது வெற்றியைப் பெறுவதற்கு பண்டாரநாயகா, ஜெயவர்த்தனா போன்ற அரசியல்வாதிகள் மேற்கொண்ட முயற்சிகளே, சிறுபான்மை, பெரும்பான்மை என்ற சிந்தனை, இனம் சார்ந்த ஒன்றாக இலங்கையில் வளருவதற்குக் காரணமாகியது.

சிறுபான்மை தாழ்வுச் சிக்கல்

இலங்கையில் வரலாற்று ரீதியாக இருந்துவந்த சிறுபான்மைத் தாழ்வுச் சிக்கல் மனப்பாங்கு இதற்கு மேலும் கைகொடுத்தது. இலங்கையிலுள்ள எல்லா இனத்தவருமே ஏதோ காரணங்களுக்காக தம்மைச் சிறுபான்மையினராகக் கருதும் மனப்போக்கை நீண்ட நாட்களாகக் கொண்டிருந்துள்ளனர். அண்டை நாடான இந்தியாவின் தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் இலங்கைத் தமிழர்களின் சனத்தொகையைச் சேர்த்துக் கணக்குப் பார்த்து இந்தப் பிராந்தியத்தில் தாம் சிறுபான்மையினராக இருப்பதாக சிங்களவர்கள் கருதினர்(இலங்கை மீதான இந்திய மன்னர்களின் படையெடுப்புக்கள் பற்றிய வரலாற்று அனுபவம் - இதையே மகாவம்சமும் வலியுறுத்துகிறது - சிங்கள மக்களின் இந்த உணர்வுக்கு அடிகோலியது). சிங்களவர்களின் இந்தச் சிறுபான்மைத் தாழ்வுச் சிக்கல் அரசியல்வாதிகளின் இன அடிப்படையிலான தேர்தல் வியூகத்துக்கு வாய்ப்பாக அமைந்தது.

இந்தத் தேர்தல் தந்திரோபாயத்தின் வெளிப்பாடுகள், இலங்கை என்ற நாட்டு எல்லைக்குள் தாம் சிறுபான்மையினர் என்ற தாழ்வுச் சிக்கலை தமிழ் மக்களுக்கு உண்டாக்கியது. இதனை எதிர்கொள்ளும் விதமாக தமிழர்கள் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள், வடக்கு, கிழக்கில் தாம் சிறுபான்மையினர் என்ற தாழ்வுச் சிக்கல் மனப்பாங்கை முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தியது.

ஆக மொத்தம், இலங்கையில் வாழும் அனைத்து இனத்தவருமே தம்மை ஏதோ ஒரு வகையில் சிறுபான்மையினர் என்று கருதியே நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்துள்ளனர். இவர்களது அரசியலில் இதுவே பிரதிபலித்து வந்துள்ளது. இலங்கையில் இனங்களை அடிப்படையாகக் கொண்ட முரண்பாடுகள் வளர்ச்சியடைய இந்தச் சிறுபான்மைத் தாழ்வுச் சிக்கலே பிரதான காரணமாகியது.

இந்தத் தாழ்வுச் சிக்கலுடன், அரசியல் வாதிகளின் தேர்தல் வெற்றி வியூகங்களும் இணைந்துகொள்ள, பிரச்சினை பூதாகரமானது. உளவியல் ரீதியாக இவ்வாறான தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தக்கூடிய விபரீத விளைவுகளே, இலங்கையில் இரத்த ஆறு ஓடவும் காரணமாகிவிட்டது.

ஆனால், இந்தச் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற கணக்கெடுப்புக்கள் எல்லாம் ஏதோ ஒரு புவியியல் வரையறை சார்ந்ததாகவே இருக்கிறது. பிராந்தியம், இலங்கை, வடக்கு - கிழக்குப் பிரதேசம் என்ற எல்லைகளின் அடிப்படையிலேயே இந்தச் சிறுபான்மைச் சிந்தனை உருவாகிறது. இந்த வரையறைகளைக் கடந்து சிந்தித்தால் பிரச்சினைக்கான தீர்வு தானாகக் கிட்டிவிடும்.

தீர்வு என்ன?

இந்தச் சிறுபான்மைத் தாழ்வுச் சிக்கல்களிலிருந்து விடுபடுவதும், ஜனநாயக தேர்தல் பாரம்பரியத்தில் பெரும்பான்மை வாக்குகளை இனம்சார்ந்து பெற்றுக்கொள்ள முயலும் அணுகுமுறைகளுக்கு முடிவு கட்டுவதும் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணக்கூடிய வழிவகைகளில் ஒன்றாக அமைய முடியும். 2005 ஜனாதிபதி தேர்தலில் நாட்டில் அமைதியையும், பொருளாதார சுபீட்சத்தையும் வேண்டி நின்ற இலங்கையின் பெரும்பாலான மக்கள் இனரீதியான சிறுபான்மை, பெரும்பான்மை என்ற அடையாளங்களுக்கு அப்பால், அமைதியையும், பொருளாதார சுபீட்சத்தையும் முன்னிறுத்தி தேர்தலில் வாக்களித்திருந்தமை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்களை வாக்களிக்கவிடாமல் புலிகள் தடுத்திருக்காவிட்டால், இன, மத உணர்வுகள் கடந்து பெரும்பான்மை வாக்குக்கள் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்குக் கிடைத்திருக்கும். இவை ரணிலுக்கு அளிக்கப்பட்டிருக்கக்கூடிய வாக்குகள் என்பதைவிட, அமைதிக்கும், பொருளாதார சுபீட்சத்துக்குமாக இன, மத பேதங்களுக்கு அப்பால் நாட்டு மக்கள் வழங்கிய மக்களாணையாக இருந்திருக்கும்.

தேர்தல் முடிவுகளில் இந்த மக்களாணை வெளிப்படுவதற்கு அனுமதிக்கப்படாவிட்டாலும், அமைதியையும், பொருளாதார சுபீட்சத்தையும் வேண்டி நிற்கும் மக்களின் உணர்வுகள் அப்படியே இருக்கிறது. 2005 தேர்தலில் வெற்றிபெற்ற தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதைப் புரிந்துகொண்டிருப்பார் என்று நம்பலாம். ஆனால், மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றும் பணியை அவர் வேறு வழியிலேயே முன்னெடுத்தார் எனலாம்.

போருக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டதாக நாட்டு மக்களுக்கு அண்மையில் அறிவித்தபோது, ‘இந்த நாட்டில் யாருமே சிறுபான்மையினர் இல்லை’ என்ற ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். சிறுபான்மைத் தாழ்வுச்சிக்கல் மனப்பாங்கிலிருந்து இந்த நாடும், மக்களும் விடுபடுவதற்கு இந்தச் சிந்தனை ஒரு திறவுகோலாக அமைய முடியும். இந்த நாட்டில் இதுவரை காலமும் நிலவிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான புதிய சாத்தியப்பாடுகளை இது வழங்க முடியும்.

இராஜதந்திரம்?

ஜனாதிபதியின் இந்த வாதம், சிறுபான்மையினரின் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்ற அனைத்துலகின் அழுத்தங்களிலிருந்து தந்திரமாக நழுவும் ஒரு இராஜதந்திரக் காய்நகர்த்தலாகவும் நோக்கப்படலாம் (சிறுபான்மையினர் என்று யாருமே இல்லை என்றால், பிறகென்ன சிறுபான்மையினரின் பிரச்சினையும், அதற்குத் தீர்வும்?). இந்த நாட்டுப் பிரச்சினைக்கு இந்த நாட்டிலிருந்தே தீர்வு கண்டுபிடிக்கப்படும் என்றும், வெளியிலிருந்து திணிக்கப்படும் எந்தத் தீர்வும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் ஜனாதிபதி மேலும் கூறியிருக்கும் கருத்துக்களை, அவரது இந்த வாதத்துடன் இணைத்து நோக்கும்போது, அதிலிருக்கக்கூடிய அரசியல் இராஜதந்திர நோக்கங்கள் பற்றிய சந்தேகங்கள் மேலும் வலுப்பெற இடமுண்டு.

ஆனால், அவர் என்ன நோக்கத்துடன் இதைச் சொல்லியிருந்தாலும், சிறுபான்மை என்ற தாழ்வுச் சிக்கல் கடந்து, அனைத்து இன மக்களிடையேயும் ஒரு புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு அடிப்படையாக இந்தச் சிந்தனை பயன்படுத்தப்படலாம். அதை முன்னிறுத்தி தீர்வுக்கான சாத்தியங்களை விரிவாக்கலாம்.

அரசியலில் யாருடைய கருத்துக்களும் உள்ளத்திலிருந்து சத்தியமாக வெளியாவதில்லை. அரசியல்வாதிகளின் எந்த வார்த்தைகளும் பல்வேறு இராஜதந்திர நோக்கங்களை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கும். ஜனநாயக அரசியல் பாரம்பரியம் செழித்தோங்கும் தேசமாக வர்ணிக்கப்படும் அமெரிக்க தேசத்தின் ஒபாமாவாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளான ஜெயலலிதா, கருணாநிதி, வை.கோ., திருமாவளவன் போன்றோராக இருந்தாலும் சரி, அரசியலில் எல்லாமே இராஜதந்திரம்தான். ஆனால், அதன் சாதக அம்சங்களை முன்னிறுத்திய பதில் இராஜதந்திரத்தின் மூலம் நல்லவைகள் நடக்கச் செய்வது சாத்தியமே. இதற்கு உலக அரசியல் வரலாற்றில் பல முன்னுதாரணங்கள் உண்டு.

எனவே, ஜனாதிபதி என்ன கருதி இவ்வாறு சொல்லியிருந்தாலும், அதனை சரியான கோணத்தில் அணுகிப் பயனுடையதாக்கக்கூடிய சாத்தியங்கள் நிறைய உள்ளன. இதனை இன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நுட்பமான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளாமல், அரசியல் இராஜதந்திரச் செயற்பாடுகளை அதன் ஒற்றை அர்த்தத்தில் மட்டும் புரிந்கொண்டு மல்லுக்கட்டியதன் விளைவுகளை தமிழ் சமூகம் நன்கு அனுபவித்துள்ள இன்றைய காலகட்டத்தில், இவ்வாறு சாத்தியமான புதிய இராஜதந்திர நகர்வுகள் பற்றிச் சிந்திப்பது ஒரு மாற்று அணுகுமுறையாக அமைய முடியும்.

Please Click here to login / register to post your comments.