இணைத் தலைமை நாடுகள் கிளப்பியுள்ள புதிய சலசலப்பும் லெபனான் - இலங்கை யுத்தங்கள் பற்றிய பி.பி.சி.யின் கருத்துரையும்

ஆக்கம்: பீஷ்மர்
இணைத் தலைமை நாடுகள் பிரசெல்ஸில் சந்திக்கும் போது என்ன பேசப்போகின்றார்கள் எதைச் செய்யப்போகிறார்கள் என்ற பதற்ற எதிர்பார்ப்புகளுக்கிடையே எரிக்சொல்ஹெய்ம் அகாஷியின் அனுசரணையுடன் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டார். அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் நிபந்தனையின்றி பேசுவதற்குத் தயார் பேச்சுகள் ஒக்டோபர் முற்பகுதியில் ஒஸ்லோவில் நடைபெறுவதற்கான வாய்ப்புகளுண்டு. இந்த விடயம் இந்தியாவின் ஒப்புதலையும் பெற்றுள்ளது என்ற கூற்று கொழும்பில் அரசாங்க நிலைப்பாட்டினை தலைகீழாக தூக்கியடித்தது. பாதுகாப்பு விடயங்களைப் பற்றிய பேச்சாளரான (அவர் அதற்கான அமைச்சர் அல்ல) ஹெகலிய ரம்புக்வெல கண்டதார் கேட்டதார் நோர்வேக்கு என்ன அதிகாரமுண்டு, இப்படிப் பேசுவதற்கு என்று பேசித்தீர்த்தார். அடுத்த நாள் காலை சிங்கள, ஆங்கில பத்திரிகைகளும் தங்கள் அர்ச்சனைகளை செய்தன. ஆனால், இங்கு ஹெகலிய ரம்புக்வெல போன்றவர்களுக்கு தெரியாமல் லண்டனில் இருந்து கலாநிதி ஹொகண்ணயும் ஜனாதிபதியும் ஒப்புதலைத் தெரிவித்திருக்கிறார்கள் போல, தெரிகிறது. ஜனாதிபதி ஹவானா நோக்கிச் செல்ல லண்டனில் தங்கியிருந்த ஹொகண்ண "விசயம் உண்மை. ஆனால் திகதி, இடம்பற்றி நாங்கள் ஒன்றும் சொல்லவில்லையே" என்று பி.பி.சி. சிங்கள சேவைக்கு கூறினார். அடுத்தநாள் காலை கௌரவ ரம்புக்வெலவும் சிங்களத்துவ ஊடகங்களும் கால்மாறி நடனமாட வேண்டிய தேவை ஏற்பட்டது. நோர்வே செய்தது பிழையாக இருந்தாலும் சமாதானத்துக்கான சந்தர்ப்பங்களை விடமாட்டோம் என்று ஜனாதிபதியையும் வாயாரப் புகழ்ந்து எழுதினர். விடுதலைப் புலிகள் எதுவும் பேசியதாக தெரியவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் தொய்வு காலம் தொடங்கிவிட்டதென இரத்தினதேரர் முதல் திருவாளர் ஆனந்தசங்கரி வரை தங்கள் அபிப்பிராயங்களை தெரிவித்தனர். யுத்தத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்று நிற்கின்ற ஜே.வி.பி.யும் பேச்சுவார்த்தைக்கு போகலாம். ஆனால் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டுமெனக் கூறியது.

சமாதான பேச்சுவார்த்தைகள் பற்றி மேலுமொரு சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டுவிட்டதென்று கூறலாம். ஆனால் சற்று நிதானமாக நோக்கும் போது முந்திய தடவைகளில் நடக்காத ஒரு பெரிய அதிசயம் இந்த முறையும் நடக்கப் போவதாக தெரியவில்லை.

சிங்கள பத்திரிகைகளில் அரசாங்கம் சம்பூரைக் கைவிடாது பேச்சுக்குப் போவதே மிகப்பெரிய வெற்றியென்று ஒளிவுமறைவின்றி கூறுகின்றன. இன்னும் இரண்டொரு நாட்களில் எரிக்சொல்ஹெய்ம் வரவுள்ளார். எரிக்சொல்ஹெய்மினது தொனியில் முன்னர் காணப்படாத ஒரு இறுக்கம் தெரிகின்றது.

கொழும்பில் இவை நடைபெற, வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியாவில் சாதாரண தமிழ் மக்கள் கேள்வி முறையின்றி கொல்லப்படுகின்றனர். ஊரடங்கு நேரங்கள் கூட பயன்படுத்தப்படுவதாக மக்கள் பயப்படுகின்றனர். தொடர்புகள் அறுந்துவிட்ட நிலையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இயலாமைகள் பூதாகரமான பீதியை தோற்றுவித்துள்ளன.

இலங்கைத் தமிழர்கள் என்கின்ற வகையில் இவை எம்மைப் பாதிக்கின்றன. எம்மை திக்கு முக்காட வைக்கின்றன. திணற வைக்கின்றன. விடுதலைப் புலிகள் ஏன் மௌனமாக இருக்கின்றார்கள்? அதற்கான காரணங்கள் யாவை? என்பதைப் பற்றிப் பேசுவதற்கும் தொடங்கிவிட்டனர். இந்தியாவினுடைய நிலைப்பாடுகள் பற்றியும் பேச்சுகள் உண்டு. போதும் போதாதற்கு தமிழகத்தில் கலைஞர் அவர்களை சந்திக்க முடியாது தவிக்கும் தமிழ்த் தேசிய கூட்டவைக் குழுவினர் பற்றியும் பேச்சுகள் அடிபடுகின்றன. இவையெல்லாம் எதைக் குறிக்கின்றன. சற்று நிதானமாக சிந்தித்தால் தோசைத் தயாரிப்புப் பற்றிய உவமானம் தான் காலுக்குள் தட்டுப்படுகின்றது. தணியாத நெருப்பினால் சூடாக விருக்கும் தட்டின்மேல் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அகப்பை, தோசைமாவை ஊற்றிச் சுழற்றும் பொழுது ஏற்படும் `சுரீர்' என்ற சத்தமும் அதனைத் தொடர்ந்து சத்தமின்மையும் திருப்பிப் போடுகையும் தான் நினைவுக்கு வருகின்றது. அடுத்த தோசைக்கான மா ஊற்றப்படும் வரை ஒருவகை நிசப்தம்.

இந்த சுழல் நடைமுறையை எவ்வாறு புரிந்து கொள்வது? இதற்கான பல்வேறு பதிவுகள் உள்ளன. இலங்கைக்கு வெளியே தென்கிழக்காசியாவுக்கு வெளியே நின்று பார்க்கும் பொழுது நமது சமாதான பேச்சுவார்த்தை நிலை, உலகத்தின் கண்களில் எவ்வாறு படுகின்றது என்கின்றதொரு வினா எழுவதைத் தடுக்க முடியாமலுள்ளது. கடந்த மூன்று, நான்கு நாட்களுக்கு முன் பி.பி.சி. ஆங்கிலச் சேவையில் நடந்த ` Over to You' என்கின்ற நேயர்கருத்து நிகழ்ச்சியில் யாரோ ஒருவர் பி.பி.சி. செய்திச் சேவையின் பாரபட்ச தன்மையைக் காட்டுவதற்காக ஒரு கேள்வி கேட்டிருந்தார். "கடந்த ஒன்றரை மாதங்களாக எதற்கெடுத்தாலும் லெபனான் யுத்தத்தையே முதன்மைப் படுத்திக் கூறுகிறீர்களே இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் யுத்தத்தின் உக்கிரம் உங்களுக்குத் தெரியவில்லையா?" என்ற வினா கேட்கப்பட்டது.

நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தவர் பி.பி.சி. உலகச் சேவையின் செய்திப் பணிப்பாளருடன் உடனே தொடர்பு கொண்டு இந்த வினாவில் நியாயமிருப்பதாகப் படுகின்றது. இதற்கு உங்கள் பதிலென்ன என்று கேட்டார். அதற்கு அந்த செய்திப் பணிப்பாளரின் பதில் பின்வருமாறு அமைந்தது, "லெபனான் யுத்தம் பற்றி நாம் அதிககூடிய தரவுகளைத் தந்தது உண்மையே. அதற்குக் காரணம் லெபனான் யுத்தத்துக்குள்ளே உள்ள பாரதூரமான அரசியற் சாத்தியப்பாடுகளாகும். ஒரு புறத்தில் இஸ்ரேல் மறுபுறத்தில் ஹிஸ்புல்லாக்கள் இடையில் லெபனான் அரசாங்கம், இஸ்ரேலுக்கு பின்னால் ஜோர்ஜ் புஷ், ரொனி பிளயர் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க நிலைப்பாட்டை ஏற்கவில்லை. இஸ்ரேலிய நிலைப்பாட்டை ஏற்கவில்லை. அளவுக்கு மீறிய உக்கிரமான போர் என்று பிரான்ஸ் சொன்னது. மத்திய கிழக்கு நாடுகளிடையே உள்ள பிளவு மிகத் தெட்டத்தெளிவாக தெரிந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ரஷ்யா, சீனா எடுத்துக் கொண்ட நிலைப்பாடு மேலும் பிரச்சினைகளை உருவாக்கிற்று, சுருக்கமாக சொன்னால் முழு உலகமுமே அந்தப் பிரச்சினைக்குள் வந்துவிட்டது. எப்பொழுது என்ன நடக்குமென்று தெரியாது.

அந்தப் பரபரப்பு நிலையை எமது நேயர்களுக்கு உணர்த்த வேண்டியது எமது கடமை. ஆனால், இலங்கையின் நிலைமைகள் என்ன? சண்டை நடப்பதும் உண்மை. உக்கிரமாக நடப்பதும் உண்மை. ஆனால் அதில் புதிய வளர்ச்சிகள் ஏதாவது ஏற்பட்டுள்ளனவா? மாற்றங்கள் ஏதாவது நடந்துள்ளனவா? சண்டைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதனால், பாரிய திருப்பங்கள் ஏற்படுவதற்கான சாத்தியமில்லை. எனவே தான் அவற்றைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், நடந்த சண்டைகளைச் சொன்னோம்".

இந்தப் பதிலுரைக்கான நியாயப்பாடுகள் பற்றிப் பேசுவதற்கு முன்னர் ஒரு உலகச் செய்திச் சேவை ஸ்தாபனம் எவ்வெவற்றை எதிர் பார்க்கிறது என்பது தெரிய வருகின்றது. பி.பி.சி.யின் செய்தி நிகழ்ச்சியைக் கூர்ந்து அவதானித்தால் அதன் மேல்நாட்டு மையநோக்கும் அதற்கும் மேலாக நடைமுறை நிலைமையில் ஏற்படும் நிலைகுலைவுகளுமே அதற்கு முக்கியமாகின்றன என்பது தெரியவரும்.

சூடான், கொங்கோ போன்ற நாடுகளிலே நிகழும் போராட்டங்களைப் பற்றியோ, ஹமாஸ் அல் - பாற்றா ஹிஸ்புல்லா ஆகிய இயக்கங்கள் பற்றியோ கூறப்படுவன போன்ற குறிப்புரைகளைக் கூறவில்லை. இலங்கை யுத்தத்தினை இன்னொரு ஆனால் முக்கியமான யுத்தமாக பார்த்தே அந்தக் குறிப்புரை கூறப்பட்டுள்ளது.

அதிலிருந்து ஒரு முக்கிய உண்மை புலனாகின்றது. இலங்கையின் தமிழர் உரிமைப் போராட்டமானது ஒரு புதிய தளத்துக்குக் கொண்டு செல்லப்படுவது அவசியமாகிறது. அவ்வாறு ஒரு புதிய கட்டநிலைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு எவையெவை செய்யப்பட வேண்டும் என்பது அடுத்த வினாவாகின்றது.

இவ்வகை தமிழர் உரிமைப் போராட்டத்தினை ஏற்கமறுக்கும் பல சக்திகள் உள்நாட்டிலும் தென்னாசிய பிராந்தியத்திலும் சர்வதேச நிலையிலும் இந்த உரிமைப் போராட்டத்தினை அதற்குரிய மக்கள் நிலைப்பட்ட அம்சங்களைக் காணவிரும்பாது. அதனை ஒரு விடுதலைப் புலிகளின் யுத்தமாகவே காட்ட முனைகின்றது. அதற்குள்ளும் ஒரு நியாயமுண்டு.

விடுதலைப் புலிகளின் சரி, பிழை ஒருபுறமிருக்க, அவர்களின் தலைமை இல்லாவிட்டால் போராட்டத்தின் முனைப்பே மழுங்கிவிடும் என்பதாகும். இப்படி நோக்கும் போது தான் கடந்த ஒரு மாத காலமாக யாழ்ப்பாணத்தில் உக்கிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு நடவடிக்கையின் அரசியல் முக்கியத்தவம் புலனாகின்றது. அதாவது பல்வேறு ஆட்கடத்தல்கள், கொலைகள் மூலமாக மக்களை பீதிக்குள் தள்ளிவிட்டால் மக்களைப் பயப்படுத்திவிட்டால் உரிமைப் போராட்ட அம்சத்தை சுலபமாக அகற்றிவிடலாம் என்ற ஒரு யுக்தி இதற்குள் இருக்கின்றது. அந்தத் துணிவிலே தான் அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கே இடமில்லாமல் யுத்தத்தை நிறுத்தாது தொடரவேண்டுமென்று ஜே.வி.பி., ஹெல உறுமய மாத்திரமல்லாமல் சிங்களத்துவ ஊடகங்களும் வலியுறுத்துகின்றன. நம்மை நாமே நிதானமாகப் பார்க்க வேண்டிய ஒரு கட்டம் வந்துள்ளது.

Please Click here to login / register to post your comments.