செலுத்தப்பட்ட விலை என்ன?

இலங்கையில் பல தசாப்த காலங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததை உலகம் வரவேற்கிறது. அதேசமயம், இந்த மோதல் எவ்விதம் முடிவிற்கு வந்தது என்பது தொடர்பாக துரதிர்ஷ்டவசமாக கேள்விகள் வெளிக்கிளம்பியுள்ளன. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டனவா என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என கொழும்பு அரசாங்கம் நிராகரித்துள்ளது.

விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்குமானால் விசாரணைகள் தேவைப்படுகின்றன. எந்தத் தரப்பு பொறுப்பாளிகள் என்பது விடயமல்ல, குற்றவாளிகளை பதிலளிக்கும் கடப்பாடுடையவர்களாக செய்வதே அவசியமானதாகும். சட்ட விதிக்கு அரசாங்கமோ அல்லது கிளர்ச்சிக் குழுவோ விதிவிலக்கல்ல என்ற நம்பிக்கை ஏற்படுவது அவசியமாகும் என்று "ஜப்பான் டைம்ஸ்' பத்திரிகை நேற்று திங்கட்கிழமை ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. "செலுத்தப்பட்ட விலை என்ன?' என்ற தலையங்கத்தில் "ஜப்பான் டைம்ஸ்' மேலும் தெரிவித்திருப்பதாவது;

இலங்கை மோதலானது நீண்டகால உள்நாட்டு யுத்தமாகும். இது 80 ஆயிரம் தொடக்கம் 1 இலட்சம் பேர் வரையான உயிரிழப்புகளை பலி எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு இரு தரப்புமே கண்மூடித்தனமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஆட்லறி மற்றும் வான்பலம் மூலம் அரசாங்கம் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அத்துடன், கெரில்லாக்கள் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியுள்ளன.

மோதலின் இறுதிக் காலங்களின் போது பொதுமக்கள் இழப்புகள் அதிகரித்திருந்தன. புலிகளின் பகுதி குறுகி இருந்தபோது இவை இடம்பெற்றுள்ளன. அரச படைகளுக்கு அஞ்சியே பொதுமக்கள் தங்களுடன் இணைந்துகொண்டதாக புலிகள் தரப்பு தெரிவித்திருந்தது. அதேவேளை, துப்பாக்கி முனையில் அகதிகள் கொண்டுசெல்லப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. பொதுமக்கள் தங்கியிருந்த பகுதிகள் மோதல் சூனியப் பகுதிகள் எனவும், அங்கு கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை எனவும் அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால், அந்த உறுதிமொழி மீறப்பட்டதாக புலிகள் தெரிவித்திருந்தனர். பல்வேறு விதமான ஆதாரங்களை தமது குற்றச்சாட்டுகளுக்குச் சான்றாக அவர்கள் முன்வைத்திருந்தனர். இந்த மோதலானது முடிவை எட்டியபோதும் திட்டவட்டமான அத்தாட்சி எதுவும் கிடைக்கவில்லை. யுத்த வலயத்திற்கு பத்திரிகையாளர்கள், மனித உரிமைக் குழுக்கள் செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. புலிகள் தெரிவிப்பவை சந்தேகத்துடனும் அதேசமயம், பிரசாரம் எனவும் நிராகரிக்கப்பட்டது.

மோதல் முடிவுற்றதும் சுயாதீன அவதானிகள் யுத்த வலயத்தை பரிசீலிக்கக்கூடியதாக இருந்தது. அவர்கள் அங்கு கண்டவை குழப்பத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. குறுகிய கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இழப்புகள் ஏற்பட்டதை குழிகள் சுட்டிக்காட்டுகின்றன. இவை மிகப்பெரிய செல்லினால் ஏற்பட்டதன் விளைவு என்று நிபுணர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பொதுமக்களின் இழப்பு பட்டியல் நீண்டதாக அதிகரித்து வருகின்றது. 2 இலட்சத்து 65 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அகதிகளாக உள்ளனர். சிலர் இது 3 இலட்சம் என்று கூறுகின்றனர். இதேபோன்று, மரணமடைந்தோரின் எண்ணிக்கையும் குழப்பகரமானதாக உள்ளது. பொதுமக்கள் இழப்புகள் தவிர்க்க முடியாததென்று அரசாங்கம் கூறுகிறது. அதேசமயம், கனரக ஆயுதங்களை இராணுவம் பயன்படுத்தவில்லை என்று அரசாங்கம் தெரிவிக்கின்றது. புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாகவும், அவர்களை புலிகள் கொன்றதாகவும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

மோதலின் இறுதிக்கட்டத்தின் போது 7 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உத்தியோகமற்ற முறையில் இத்தொகை 20 ஆயிரத்திற்கும் அதிகமென தெரிவிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் வேறுபாடுகள் போர்க்குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றதா என்பது தொடர்பான விசாரணைக்கு அழைப்பு விடும் நிலைமையை தோற்றுவித்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பியிருப்போருக்கு நீதியும் நிவாரணமும் வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியிருக்கிறார். நிரூபிக்கப்பட்டிருக்கும் தரவுகள் முக்கியமானவை எனவும் மோதலில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரதும் செயற்பாடுகள் குறித்து நேரடியாக பதிவு செய்வதற்கு இவை முக்கியமானவையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் ஆணையாளரும் இணைந்துள்ளார்.

தனது நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு விமர்சனத்தையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. தாங்கள் பாராட்டப்பட வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். உலகத்தின் மிகவும் மோசமான கிளர்ச்சியை தாங்கள் முடிவுக்கு கொண்டுவந்ததற்காக பாராட்டப்பட வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோஹன குற்றச்சாட்டுகளை உறுதியாக நிராகரித்திருக்கிறார். ""இந்த யுத்தத்தை பல மாதங்களுக்கு முன்னரே நாங்கள் முடிவுக்கு கொண்டுவந்திருப்போம். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கவனத்தில் எடுக்காதிருந்தால் இந்த யுத்தம் பல மாதங்களுக்கு முன்னரே முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கும்' என்று அவர் கூறியுள்ளார். சம்பந்தமற்ற சர்வதேச அமைப்புகள் வீடு செல்ல வேண்டும் என கூறுவதற்கான நேரம் வந்துவிட்டதாக உள்ளூர் பத்திரிகைகள் கூறியுள்ளன.

இராஜதந்திர ரீதியான பதில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய அரசாங்கங்கள் பிரேரணை ஒன்றை கொண்டுவந்தனர். இரு தரப்பினராலும் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டனவா என்பது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்து இந்த பிரேரணையை அவை சமர்ப்பித்திருந்தன. அதற்குப் பதிலாக அரசாங்கத்தின் வெற்றியைப் பாராட்டி பேரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அத்துடன், சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டுமென்று பேரவை வலியுறுத்தி இருக்கிறது.

Please Click here to login / register to post your comments.