உறவுகளை நம்பி வந்தவர்கள் சுதந்திரமான நடமாட்டமின்றி முட்கம்பி வலயங்களுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்

சுகாதார நலத்துறை, போசணை அமைச்சின் சட்டவாக்கம் மலேரியா சம்பந்தமான பிரேரணை இச்சபையிலே சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேளையில் இந்த நாட்டின் விசேடமாக வடக்கின் சுகாதாரம் சம்பந்தமாக பேச விரும்புகிறேன்.

நாட்டின் சுகாதாரத்துறையை நவீனப்படுத்துவதும் அதனை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வதும் இன்றைய காலத்தின் தேவையாகும். நோயால் பாதிக்கப்பட்டு பெரும் துயரங்களை அனுபவிக்கும் அனைத்து மக்களும் அரசாங்க வைத்தியசாலைகளையே முழுக்க முழுக்க நம்பியுள்ளார்கள். எனினும், நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கும் வைத்தியர்களுக்கும் வைத்திய தாதியர்களுக்கும் சிற்×ழியர்களுக்கும் தட்டுப்பாடு இருந்து கொண்டேயிருக்கிறது. இதனால், கிராமப் புறங்களில் வாழும் மக்கள், வசதி குறைந்தவர்கள் பெரும்பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக, வட பகுதியிலுள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் அத்தியாவசியமான மருந்து வகைகளுக்கு தொடர்ச்சியான தட்டுப்பாடு இருந்து வருவதுடன் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், சிற்×ழியர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

அத்துடன் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள நவீன வசதிகளுடன் கூடிய சத்திர சிகிச்சைக் கூடங்களும் இல்லாதிருக்கின்றன. இதனால், நோயாளர்கள் மாத்திரமின்றி வைத்தியர்களும் பாரிய கஷ்டங்களை சந்திக்கின்றனர். கட்டட வசதிகள் இல்லை, கட்டப்பட்ட கட்டடங்கள் முடிவுறாது சீரழிகின்றன. யாழ்ப்பாண குடாநாட்டைப் பொறுத்த மட்டில் நோயாளர்கள் தொடர்ச்சியாக மிகுந்த நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றார்கள். அவர்கள் மேலதிக சிகிச்சைக்காகவும் அவசர சிகிச்சைக்காகவும் தென் பகுதியை நோக்கி வரவேண்டிய நிலைமைகளே தொடர்ந்து வருகின்றன. போக்குவரத்துக்கள் சீர்குலைந்துள்ள இன்றைய சூழலில் ஒரு நோயாளி தென் பகுதிக்கு வருவதென்பதும் கொழும்பிலோ அல்லது பிற இடங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதென்பதும் அவ்வளவு சுலபமானதல்ல? பெருந்தொகையான பணமும் செலவாகிறது. ஏழை மக்களின் நிலைமை எப்படியிருக்கும். இதை சுகாதாரத்துறை சிந்திப்பதாகவில்லை. இவற்றை இலகுபடுத்த வேண்டுமென இச் சபையிலேயே நான் முன்பும் சுட்டிக்காட்டியுள்ளேன்.

அதேவேளை, வடக்கில் புலம்பெயர்ந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் வட பகுதி நோயாளர்களை பராமரிக்கவும் அவர்களின் துயரங்களைத் துடைக்கவும் வைத்தியர்கள் முன்வர வேண்டும். அதுவே மனிதாபிமான செயலாகும். அத்துடன், வட பகுதியின் வைத்தியசாலைகளை தரமுயர்த்தி அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டிலும் முன்நிலை அளிக்கப்பட வேண்டும். யுத்த நடவடிக்கைக்கு அப்பால் வட கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களும் இந்த நாட்டுப் பிரஜைகள் என்ற யதார்த்தத்தை மறந்து போகாது அனைத்து விடயங்களிலும் பேதமின்றி மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்.

வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கைகளை அடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து ஆங்காங்கே தற்காலிகமான சிறு சிறு கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. அவல வாழ்வே மேலோங்கியுள்ளது. இருப்பிடமின்மை சுத்தமான குடிநீர் இன்மை, சுகாதாரமான உணவு இன்மை, மருந்தும் மருத்துவ சேவைகள் இன்மை, மற்றும் மலசல கூட வசதியின்மை.

இந்த நிலையில், தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக இப்பிரதேசங்களில் தொற்றுநோய் வேகமாக பரவும் ஆபத்துக்கள் அதிகமாக உள்ளபோதும், அவற்றை உடனடியாக தடுப்பதற்கான தொற்றுநீக்கிகள் அறவே கிடையாதென சுகாதாரப் பகுதியினர் மிகவும் கவலையுடன் அறிவித்திருக்கிறார்கள்.

இதேவேளை, வன்னியில் இருந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள பொது மக்களில் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களால் வவுனியா வைத்தியசாலை நிரம்பி வழிகிறது. வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறைகளுக்கும் மத்தியில் இரவு பகல் பாராது வைத்தியர்களும் மற்றும் ஊழியர்களும் சேவையாற்றி வருகின்றனர்.

மேலும், வவுனியா வைத்தியசாலைகளில் நிலவுகின்ற இடநெருக்கடி காரணமாக விடுதிகளின் விறாந்தைகள், நடைபாதைகளிலும் நோயாளர்கள் படுத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய பரிதாபகரமான நிலைமைகள் காணப்படுகின்றன. யுத்த சூழ்நிலையிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தம் உறவுகளை நம்பி வந்தவர்கள், சுதந்திரமான நடமாட்டமின்றி முட்கம்பி வலயங்களுக்குள் முடங்கிக் கிடக்கின்றார்கள். இடம்பெயர்வு தொடர்பான பல சர்வதேச நியமங்களையும் அதேபோல் பல சர்வதேச மனித உரிமை நியமங்களையும் ஏற்றுக் கொண்ட நாடே இலங்கையõகும்.

ஆயினும் அவை ஏதும் வடக்கில் போர் சூழலில் வாழும் மக்களின் நலன்களுக்காக பிரயோகிக்கப்படுவதுமில்லை. மறுபுறமாக, அவற்றினை அனுபவிக்க முடியõத சூழ்நிலைகள் தான் மக்களுக்கு உருவாகியுள்ளது. இதை அரசும் உரிய கட்டமைப்புக்களும் உயரிய கவனத்தில் கொள்ள வேண்டும். வன்னியில் இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களுக்கு அரசு பூரண பாதுகாப்பு, சுதந்திரம், வாழ்வதற்கான சகல வசதிகளும் வழங்கிவருவதாக கூறி வருகிறது. சர்வதேச சமூகங்களுக்கு எமது மக்களை காட்சிப் பொருட்களாகவே காண்பிக்கிறார்கள். இவை யாவும் சர்வதேசங்களுக்கான கண் துடைப்பாகும். இவையாவும் உண்மையானால் அதே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களை எங்களது மக்களை பார்ப்பதற்கு ஏன் அனுமதிப்பதில்லை? அனுமதிக்க ஏன் அஞ்சுகிறீர்கள். இது எங்களுக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. நாட்டின் காலநிலை சீரற்று செல்லும் சந்தர்ப்பங்களில் தொற்று நோய்கள் மிக வேகமாக உருவாகும் நிலை சர்வசாதாரணமாக இருந்தாலும் இதனால் மரணங்கள் ஏற்படுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

வரும் முன் காக்கும் நடவடிக்கைதான் இன்று மிக மிக அவசியமாகும். அதிலும் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவனியா, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப் பிராந்தியத்தில் தொற்றுநோய் வேகமாக பரவும் அபாயம் உருவாகியுள்ளது. விநியோக பாதைகளின் தடை, உணவு, மருந்துப் பொருட்களின் தடை, சுகாதார ஊழியர்களுக்கான தடையும் பற்றாக்குறையுமே இதற்கு முக்கிய காரணமாகும். இதனால், வன்னியில் மலேரியா நோய்த்தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இவை அனைத்திற்கும் இந்த கொடிய யுத்தம் தான் காரணமென்றால் ஏன் இந்த கொடிய யுத்தத்தை நடத்தி எங்கள் மக்களை தினம் தினம் கொல்லுகின்றீர்கள்? யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தையின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணுங்கள். இந்த யுத்தத்தை அடுத்த சந்ததிக்கு விட்டு வைக்காது, சமாதான வழியில் அரசியல் தீர்வு தான் அவசியமென இந்த சபையிலே கேட்டுக் கொள்கிறேன்.

Please Click here to login / register to post your comments.