ஸ்ராலின்கிராட்டின் ஆவி

ஆக்கம்: பி.ராமன்
கிளிநொச்சி யுத்தத்தில் சிறியதொரு வடிவம்?இலங்கை இராணுவத்திற்கு எதிரான மோதலை இன்னும் அதிகவாரங்களுக்கு தக்க வைக்க முடியுமென்று விடுதலைப்புலிகள் கணிப்பிடுகின்றனர். புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் உறுதியான வெற்றியை ஈட்டுவதற்கான இலங்கை இராணுவத்தின் மகிழ்ச்சியான பகற்கனவை ஜெனரல் மொன்சூனும் (Gen.Monsoon) (பருவ மழை)சி ஜெனரல் ரிசெஸ்சனும் (Gen.Recession) (பொருளாதார வீழ்ச்சி) என்பவற்றால் முடிவுக்கு கொண்டு வரப்படுமென அவர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.

இந்தக் கணிப்பீடுகள் சரியானதோ தவறானதோ என்ன நடைபெற்றாலும் ஒரு விடயம் சாத்தியமானதாக தென்படுகின்றது. அதாவது திட்டவட்டமான வெற்றியோ அல்லது தோல்வியோ இடம்பெற்று வரும் இந்த யுத்தத்தில் எந்தவொரு தரப்பிற்கும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறு இந்திய அரசின் ஓய்வுபெற்ற அமைச்சரவை செயலாளரும் உள்ளூர் விடயங்கள் தொடர்பான கற்கை நிறுவன பணிப்பாளருமான பி.ராமன் தெரிவித்துள்ளார்.

"ஸ்ராலின்கிராட்டின் ஆவி' ( The Spectre of stalingrad)என்று தலைப்பிடப்பட்டு பி.ராமனின் இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தம் தொடர்பாக "அவுட்லுக்' சஞ்சிகை கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

மரபு ரீதியான யுத்த வரலாற்றில் போர்க்களத்தில் பெருந்தொகையான இழப்புகளையும் குருதிப்பெருக்கையும் ஏற்படுத்தியதொன்றாக ஸ்ராலின்கிராட் யுத்தம் கருதப்படுகிறது.

அந்த யுத்தத்தின் போது ஸ்ராலின்கிராட்டுக்குள் அதீத நம்பிக்கையுடன் நாஜி இராணுவம் முன்னேறியபோது மிகவும் கவனமாக வகுக்கப்பட்ட திட்டத்துடன் சோவியத் இராணுவம் உக்கிரமான தாக்குதலை நடத்தியது. இதனால் நாஜி இராணுவத்துக்கு பாரதூரமான இழப்புகள் ஏற்பட்டன. சோவியத் இராணுவத்தால் கொல்லப்பட முடியாத நாஜி இராணுவத்தினர் பலர் ஜெனரல் வின்ரரால் (Gen.Winter) (மாரிகாலம்) கொல்லப்பட்டனர். "ஜெனரல் வின்ரரின்' உதவியுடன் நாஜிக்களின் ஆறாவது இராணுவம் முழுவதும் சோவியத் படையினரின் பொறிக்குள் சிக்குண்டு அழிக்கப்பட்டன.

1942 ஜூலை 17 இல் இந்த மோதல் ஆரம்பமானது. உடனடியாக ஸ்ராலின்கிராட் வீழ்ச்சியடையப் போகின்றதென்றும் சோவியத் இராணுவம் நிலைகுலையப் போகின்றதென்றும் ஐயுறவில்லாமல் இருந்த ஜேர்மன் மக்களுக்கு சொல்வதற்கு நாஜிக்களின் தவறான தகவலை வெளியிடும் இயந்திரம் ஓயாமல் கூறிக்கொண்டிருந்தது."இருநாட்களில்' ஸ்ராலின்கிராட் வீழ்ந்துவிடுமென்று அவர்களுக்கு கூறப்பட்ட செய்திக்காக ஜேர்மன் மக்கள் காத்திருந்தனர். இருநாட்கள் இருவாரங்களாகின. இருவாரங்கள் இரு மாதங்களாகின. இரு மாதங்கள் ஏழு மாதங்களாகின. 1943 பெப்ரவரி 2 இல் நாஜிக்களுக்கு பேரழிவுடன் யுத்தம் முடிவுக்கு வந்தது. இரண்டாவது உலகமகா யுத்தத்தின் போது இது நாஜிக்களின் கனவுகள் முடிவுக்கு வந்த ஆரம்பமாக குறிப்பிடப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைமையகமான கிளிநொச்சியில் இடம்பெறும் யுத்தத்தில் ஸ்ராலின்கிராட்டின் சிறியதொரு வடிவத்தை ஒருவரால் பார்க்க முடியும்? யுத்த முனையிலிருந்து கிடைக்கும் சிறியளவிலான தகவலின் அடிப்படையில் எதனையும் கூறுவது கடினமானதாகும். இந்தச் சிறிய தகவலில் இருந்தும் கூட இரு விடயங்கள் தெளிவானவையாகும். முதலாவதாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான மோதலில் வெற்றி உணர்வுடன் செயற்படும் இலங்கை இராணுவம் சிறப்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனாலும் இராணுவம் உரிமை கோரும் அளவுக்கு அது சிறப்பானதாக இல்லை. இரண்டாவதாக விடுதலைப்புலிகள் நன்றாக செயற்படவில்லை, ஆயினும் இலங்கை இராணுவத்தின் பிழையான தகவல் இயந்திரத்தினால் தயாரிக்கப்பட்ட அளவுக்கு புலிகள் சிறப்பாக செயற்படவில்லை என்றில்லை. இன்னமும் அதிகளவு சண்டை இருக்கின்றதென்பதை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தியுள்ளனர். திரும்பவும் அறிந்து கொள்வதற்குரிய புலனாய்வையும் புதிய சிந்தனைகளையும் அவர்கள் வெளிக்காட்டியுள்ளனர்.

ஆனால், புலனாய்வு நுட்பமும் புதிய கண்டுபிடிப்பு சிந்தனைகளும் மட்டும் இருந்தால் மாத்திரம் போதியளவு போருடன் தொடர்புடைய வளங்களின்றி யுத்தங்களில் வெற்றி பெற முடியாது. இந்த இரு விடயங்களிலும் புலிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. ஆனால் புலிகள் அமைப்பானது ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு போன்று அதிர்ஷ்டமற்ற தன்மையிலிருந்தும் துரிதமாக மீட்சி பெறும் தன்மையை கொண்டுள்ள அமைப்பென்பதை வெளிப்படுத்தியுள்ளது.

2003 இல் தலிபான்களை முழுமையாக அழித்துவிட முடியுமென்று அமெரிக்கர்கள் கருதினர். ஆனால் அந்த கணிப்பீடு தவறானது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கல்லறையென தெரிவிக்கப்பட்டதிலிருந்து தலிபான் மீள் எழுச்சி பெற்றுள்ளது. உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த விமானப்படையின் தாக்குதல்களாலோ உலகின் வல்லமை வாய்ந்த ஆட்லறி தாக்குதல்களாலோ தலிபானின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோவின் சிரேஷ்ட தளபதிகள் தலிபான்களுக்கு எதிரான யுத்தம் வெற்றி கொள்ள முடியாததொன்று என்று ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருப்பதுடன் இருதரப்பும் வெற்றி கொள்ள முடியாததொன்றுக்கு அரசியல் தீர்வு காண வேண்டுமென கூறத் தலைப்பட்டிருக்கிறார்கள். வெற்றியடைய முடியாததாக இது உருவானதற்கு தந்திரோபாயத்தில் ஏற்பட்ட பாரிய தவறுகள் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் உலகிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதித்துறை பின்னடைவுகள் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதும் காரணமாகும்.

இலங்கை இராணுவத்திற்கு எதிரான மோதலை மேலும் சில மாதங்களுக்கு தக்க வைக்க முடியுமென புலிகள் கணிப்பிடுகின்றனர். புலிகளுக்கு எதிரான இந்த நீண்டகாலப் போரானது நேட்டோ சக்திகளால் தலிபான்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் யுத்தம்போன்று இலங்கை ஆட்சியாளருக்கு வெற்றி கொள்ள முடியாத, தாங்கிக்கொள்ள முடியாத நீண்ட யுத்தமாக உருவாகலாம். தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அபிப்பிராயத்தினால் எழுந்திருக்கும் அழுத்தத்தால் தங்களுக்கு உதவுவதை இந்திய அரசாங்கம் நிறுத்தினால் தங்களை காப்பாற்ற சீனாவும் பாகிஸ்தானும் முன் வருமென இலங்கை ஆட்சியாளர்கள் நினைப்பார்களேயானால் அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கின்றனர் என்று அர்த்தப்படும். பாகிஸ்தானின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கிறது. பாகிஸ்தானை நண்பனென அழைக்கும் சீனா, இஸ்லாமாபாத்துக்கு உதவுவதற்கு தயங்குகின்றது. அண்மையில் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி சர்தாரி இந்தக் கவலையை உணர்ந்திருக்கிறார். தலிபான்கள் தொடர்பாக பாகிஸ்தான் இராணுவம் பின்னடைவை கண்டு வருகிறது. இலங்கைக்கு பாகிஸ்தான் இராணுவம் விரைந்து வரும் என்று நினைத்தால் அது மடைமைத்தனமானதாகும்.

அமெரிக்காவின் பொருளாதாரப்பின்னடைவால் தமது கைத்தொழில் துறை குறித்து சீனர்கள் அதிகளவுக்கு கவலையடைந்துள்ளனர். சீனத்தயாரிப்புகள் அமெரிக்காவின் சந்தைவாய்ப்பில் அதிகளவுக்கு தங்கியுள்ளன. அத்துடன், சர்தாரிக்கு திட்டவட்டமான உறுதிமொழியை வழங்க சீனர்கள் தயங்கியுள்ளனர். 1930 களின் பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடியை உலகு எதிர் கொள்ளும் நிலமை உருவாகியுள்ளது. சீனா உட்பட ஒவ்வொரு நாடுகளும் தங்களால் முடிந்த அளவுக்கு ஒவ்வொரு சதத்தையும் சேமிப்பதில் ஆர்வமாகவுள்ளன. வெளிநாட்டில் வீரதீர செயலைக்காட்ட எவரும் விரும்பவில்லை. அவ்வாறு காட்டுவது அவர்களின் வளங்களை விரயமாக்கிவிடும். இந்தியா உதவுவதை நிறுத்தினால் சீனா விரைந்து வர முயற்சிக்குமென இலங்கை இராணுவம் நிலைக்குமானால் அது ஏமாற்றமாக அமையும்.

விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்திற்கு எதிரான போரை மேலும் சில வாரங்களுக்கு தக்க வைக்க முடியுமென மதிப்பிடுகின்றனர். புலிகளுக்கு எதிரான உறுதியான வெற்றியென்ற இலங்கை இராணுவத்தின் கனவு "ஜெனரல் மொன்சூன்' மற்றும் "ஜெனரல் ரீ செஸன்' ஆகியவற்றால் முடிவுக்கு கொண்டு வரப்படலாம். சரியானதா? தவறானதா? என்பதை புலிகளின் கணிப்பீடுகள் நிரூபிக்குமா? என்ன நடைபெற்றாலும் ஒருவிடயம் சாத்தியமானதாக தென்படுகிறது. இடம் பெற்றுவரும் யுத்தத்தில் எந்தத்தரப்பும் திட்டவட்டமான வெற்றியையோ அல்லது தோல்வியையோ பெற்றுக்கொள்ளப்போவதில்லை.

Please Click here to login / register to post your comments.