காலவரையறைகளைக் கடந்துவிட்ட கிளிநொச்சிக்கான சமர்

ஆக்கம்: ஜெயராஜ்

சிறிலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா கிளிநொச்சிப் படையெடுப்புக் குறித்து பிரகடனம் செய்து இரண்டு வாரங்கள் கழிந்துவிட்டன. கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு நாட்கணக்கில் காலம் குறித்த சிறிலங்காப் படைத்தரப்பின் தற்போதைய பேச்சு சற்றுக் குறைந்த ஸ்தாயிலே ஒலிப்பதாகவே கருதவேண்டியுள்ளது. கிளிநொச்சி நோக்கிய படைநகர்வு பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் சிறிலங்கா இராணுவம் கிளிநொச்சிக்கு நாலரைக் கிலோ மீற்றரில் உள்ளோம், மூன்றரைக் கிலோ மீற்றரில் உள்ளோம். இறுதியாக ஒன்றரைக் கிலோ மீற்றரில் உள்ளோம் எனக் கூறிக் கொண்டாலும் களமுனையில் குறிப்பிடத்தக்க தான மாற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

அவ்வாறு ஏதும் நிகழ்ந்திருக்குமானால், கிளிநொச்சி நோக்கியதான படைநகர்வு தீவிரம் பெற்றதாக இருந்திருக்கும். விலை அதிகமாக இருப்பினும் சிறிலங்காப் படைத்தரப்புத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியே இருந்திருக்கும். ஆனால் படை நடவடிக்கைகளில் தற்பொழுது அதாவது, கடந்த இருவாரங்கள் பெரிதும் தீவிரத்தன்மை பெற்றதாக இருக்கவில்லை. ஆனால், களமுனையில் முற்றாக மோதல்கள் தணிந்ததாகவும் கொள்வதற்கில்லை. சில படை நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டாலும் விடுதலைப்புலிகளினால் அவை முறியடிக்கப்படுபவையாகவே உள்ளன. இதனால், களமுனையில் நாளாந்தம் மோதல்கள் எதிர்பார்க்கப்படுபவையாகவும் உள்ளன.

ஆனால் இவற்றைக் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கையாகக் கொள்வதற்கு இல்லை. ஏனெனில், லெப். ஜெனரல் சரத்பொன்சேகா குறிப்பிட்ட கால எல்லைக்குள் கிளிநொச்சியை மீட்பதற்கான படை நடவடிக்கைக்குரிய பரிமாணத்தைக் கொண்டவையாக அவை இல்லை. இதனால், கிளிநொச்சியைக் கைப்பற்று வதற்கான தாக்குதல் முயற்சியை இராணுவம் கைவிட்டுவிட்டுதாகவோ, அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை என்றோ கொள்வதற்கில்லை. மாறாகக் கிளிநொச்சி மீதான நடவடிக்கை குறித்துச் சிறிலங்காப் படைத்தரப்பின் மதிப்பீடு தவறாகிவிட்டது என்பதே அதன் அர்த்தமாகும்.

வன்னிப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியூடாக சிறிலங்கா இராணுவம் வடக்கு நோக்கிச் சற்று வேகமாக முன்னேறிவந்தபோது விடுதலைப் புலிகளுக்கும்- இராணுவத்திற்கும் இடையிலான இராணுவச் சமநிலை குறித்துச் சற்று குழப்பமான மதிப்பீடுகள் எழத்தொடங்கின. இதற்குச் சிறிலங்கா இராணுவமும், அரசாங்கமும் மேற்கொண்ட தீவிர பிரச்சாரமும் காரணமாகும். இதன் காரணமாக இராணுவச் சமநிலை முற்றிலுமாகவே இராணுவத்திற்குச் சாதகமானதொன்றாக மாறிவிட்டதாக விமர்சகர்கள் பலரும் அபிப்பிராயப்பட்டனர். தற்போதைய நிலையை நோக்கும்போது இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவும் அத்தகையதொரு மதிப்பீட்டிற்குச் சென்றதாகவே கொள்ளவேண்டியுள்ளது.

அவ்வாறு இல்லாதுவிடில், விடுதலைப்புலிகளுடன் நீண்ட போரியல் அனுபவம் கொண்ட அவர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக நாட்கணக்கில் கெடுவிதித்திருக்கமாட்டார். விடுதலைப் புலிகளின் பின்வாங்கலுக்கும் இராணுவச் சமநிலைக்கும் இடையில் தொடர்பு இருக்கவில்லை என்பதை நாச்சிக்குடாவிலும் வன்னேரியிலும், அக்கராயனிலும் சுமார் இரண்டு மாதங்கள் வரையில் இராணுவம் தரித்து நிற்க வேண்டியதான நிலை உணர்த்தியிருக்கும் என்றே நம்பலாம். அத்தோடு, இராணுவத்தரப்பு தற்பொழுது வெளியிட்டுவரும் நாளாந்த களநிலை அறிக்கைகளும் இதனை வெளிப் படுத்துபவையாகவே உள்ளன.

2007 இன் ஆரம்பத்தில் வன்னியின் மேற்கில் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது - சிறிலங்காப் படைத்தரப்பு வெளியிட்ட நாளாந்தக் களமுனை அறிக்கை கள் பெரும் பிரதேசங்களை இராணுவம் கைப்பற்றியதாகவும் முன்னேறிச்சென்று கொண்டிருப்பதாகவுமே இருந்தது. இதில் இராணுவம் எத்தனை கிலோ மீற்றர் தூரம் முன்னேறியது, எத்தனை சதுரகிலோ மீற்றர் தூரத்தைக் கைப்பற்றியது போன்றதான அறிவிப்புக்களும் இருந்தன. அதன் பின்னர் இராணுவம் வெளியிட்ட அறிக்கைகளில், கிராமங்களைப் பிடித்தோம், குளங்களைப் பிடித்தோம் என்பதாக இருந்தது. இவ் அறிவிப்புக்களின் போது ஒரு கிராமத்தைப் பல தடவையும், ஒரு குளத்தைப் பல தடவையும் பிடித்ததும் உண்டு. எடுத்துக்காட்டாக, அடம்பன், ஆட்காட்டி வெளி, பரப்புக்கடந்தான் போன்ற கிராமங்களை இராணுவம் பலதடவை கைப்பற்றியதாக அறிவித்ததுண்டு. ஆனால் உண்மையில் பல மாதங்கள் கடந்தே அவை ஆக்கிரமிக்கப்பட்டன.

அதன் பின்னரும் ஒரு தடவை அக்கிராமங்கள் கைப்பற்றட்டதாக அறிவிக்கப்பட்டதுண்டு. ஆனால் பின்னர் பிரதேசங்கள் போய், கிராமங்கள் போய், சிறு குறிச்சிகள், விடுதலைப் புலிகளின் தளங்கள், முகாம்கள் என்பன கைப்பற்றப்பட்டதான அறிவிப்புக்கள் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக மல்லாவி, துணுக்காய்ப் பகுதிகளில் நடந்த மோதல்களின் போது இத்தகைய அறிவிப்புக்கள் வெளிவரத் தொடங்கின. தற்பொழுது இந்நிலையும் மாற்றம் கண்டுள்ளது. அதாவது பிரதேசங்கள், கிராமங்கள், குறிச்சிகள், முகாம்கள் என்பன மாறிப் புலிகளின் காவலரண்களில் இரண்டைப் பிடித்தோம், மூன்றைப் பிடித்தோம் என்ற அளவில் இராணுவத்தின் களமுனை அறிக்கைகள் வெளிவந்தவண்ண முள்ளன.

அதாவது கிளிநொச்சி மீதான பாரிய படை நடவடிக்கைக்கான பிரகடனத்தையும் கால நிர்ணயத்தையும் செய்த சிறிலங்கா இராணுவத் தரப்பு தற்பொழுது கிளிநொச்சிக்கு அப்பால் சுமார் ஏழு - எட்டு கிலோ மீற்றர் தொலைவிற் கப்பால் நின்று கொண்டு புலிகளின் பதுங்கு குழிகளில் இரண்டைப் பிடித்தோம், மூன்றைப் பிடித்தோம் என அறிக்கை வெளியிட்டவண்ணமிருப்பது இராணுவ ஆய்வாளர்கள் மத்தியில் சில குழப்பங்களையும், கடந்த காலத் தமது மதிப்பீட்டில் தவறுகள் நிகழ்ந்துள்ளனவா என்பதைச் சிந்திக்கவும் வைத்துள்ளது. இதில், இரண்டு முக்கிய விடயங்கள் அவர்களால் தீவிரமாகச் சிந்திக்கப்படும் விடயங்களாகவுள்ளன. 01.சிறிலங்கா இராணுவத் தரப்புப் பிரச்சாரப்படுத்தியதுபோன்று இராணுவச் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டதா? 02.விடுதலைப்புலிகள் சிறிலங்கா இராணுவத்தைத் தமது மூலோபாய அடிப்படையில் பொறி ஒன்றிற்குள் சிக்கவைத்துவிட்டார்களா? சிறிலங்கா இராணுவத்தரப்பின் பிரச்சாரத்தின் படி விடுதலைப்புலிகள் மரபுவழி இராணுவமாகச் செயற்படும் சக்தியை இழந்து விட்டார்கள்.

இன்னமும் 3500 வரையிலான விடுதலைப்புலிகளே உள்ளனர். அதிலும் பலர் போரிடும் வலுவற்றவர்கள் என்பது இராணுவத் தளபதியின் கூற்றாகும். இதனைச் சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சும் ஊர்ஜிதம் செய்வதாகவே இருந்தது. அதாவது சிறிலங்காவின் முப்படைகளும் ஆளணி மற்றும் ஆயுத தளவாடம் என்பனவற்றில் விடுதலைப்புலிகளைவிட மேம்பட்ட தான நிலையிலேயே உள்ளன. ஆகையினால் விரைவில் போரில் வெற்றி கிட்டிவிடும் என்பது அவர்களின் மதிப்பீடாகும். இதனைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் தனது பேச்சில் உறுதி செய்திருந்தார். ஆனால், களத்தின் நிலை அவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் இருப்பதாகத் தெரியவில்லை.

அதாவது விடுதலைப்புலிகள் மரபுவழி இராணுவமாகச் செயற்படும் ஆற்றலை இழந்துவிட்டதாக இராணுவத்தளபதி கூறுகையில், கிளிநொச்சியைச் சூழ ஒரு மரபுவழிச் சமருக்குப் புலிகள் தயாராக இருப்பதையே களத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. அதாவது விடுதலைப்புலிகள் பெரும் பாதுகாப்பு அரண்கள் அமைத்து, பதுங்கு குழிகளை அமைத்துப் பெரும் படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதற்கு ஏற்ற வகையில் மரபுவழிப் படையணிகளுக்குரிய நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைச் சிறிலங்காப் படைத் துறை ஆய்வாளர்களும், சில வெளிநாட்டுப் படைத்துறை விமர்சகர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையானது எவ்வாறு விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாகச் செயற்படும் ஆற்றலை இழந்துவிட்டார்கள் - இராணுவச் சமநிலையை இழந்துவிட்டார்கள் எனக் கொள்ளமுடியும் என இராணுவ ஆய்வாளர்கள் மத்தியில் கேள்வியை எழவைத்துள்ளது. இரண்டாவதாக விடுதலைப்புலிகள் தமது மூலோபாயத்திற்கு ஏற்ப இராணுவத்தை கிளிநொச்சியின் எல்லையோரம் வரையில் முன்னேறவைத்து பெரும் நெருக்கடிக்குள் சிக்க வைத்துள்ளார்கள் என்பதாகும். இத்தகையதொரு கேள்வி எழுவதில் அர்த்தம் இல்லாமலும் இல்லை. அவ்வாறு இல்லாதுவிடில், இராணுவம் தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப கிளிநொச்சியைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும். அதாவது வன்னியில் மாரிகாலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் கிளிநொச்சியை அது அடைந்திருத்தல் வேண்டும்.

ஆனால், இன்று இராணுவமோ ஒரு முடக்கத்திற்குள்ளானது போன்றதொரு நிலையிலேயே உள்ளது. அதாவது விடுதலைப் புலிகளின் ஒரு சில பதுங்கு குழிகளை பிடிப்பதற்காக அது போரிட்டுக் கொண்டிருக்கின்றது. அதிலும் பதுங்கு குழிகள் பிடிக்கப்பட்டனவா? அதற்காக இராணுவம் கொடுக்கும் விலையென்ன என்ற கேள்விகளும் எழவே செய்கின்றன. ஏனெனில் இராணுவம் கைப்பற்றியதாக அறிவித்துள்ள காவலரண்களின் எண்ணிக்கையைக் கூட்டிப்பார்த்தால் புலிகளின் தற்போதைய முன்னணி நிலைகளே இருந்திருக்கமாட்டாது. அடுத்ததாகப் படையினர் கொடுக்கும் விலைகுறித்த கேள்வியை மாதாந்தம் சிறிலங்கா பாராளுமன்றத்தில் அவசர காலச் சட்ட விவாதத்தின் போது - சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிடும் தகவல்களே எழவைக்கின்றன.

அதாவது பெரும் நகர்வுகள் இன்றித் தரித்து நிற்கும் இராணுவத்திற்கு ஏற்படும் இழப்புக்கள் அதிகரித்த ரீதியில் செல்வதானது இராணுவம் களத்தில் முன்னேற்றம் இன்றிப் பெரும் விலை கொடுத்து வருகின்றது என்பதையே வெளிப்படுத்துவதாயுள்ளது. இவையே சிறிலங்காப் படைத்தரப்பின் மதிப்பீட்டை மட்டுமல்ல, பல இராணுவ ஆய்வாளர்களின் மதிப்பீட்டையும் இன்று குழப்பத்திற்கு உள்ளாக்குவதாக மாற்றம் கண்டுள்ளது.

ஜெயசிக்குறு நடவடிக்கை பின்னர் ரணகோவாக மாறிய பின்னர் வோட்டர் செட்டாக விரிந்தபோதும் இத்தகையதொரு மதிப்பீடே விடுதலைப் புலிகள் பற்றி இருந்தது. அதாவது புலிகள் பலவீனப்பட்டு விட்டார்கள் எனவும், இராணுவச் சமநிலை அற்றுப் போ ய்விட்டதாகவும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், ஓயாத அலைகள் மூன்று, நிலைமையைத் தலை கீழாக மாற்றியது. ஓயாத அலைகள் மூன்றின் பின்பே விடுதலைப்புலிகள் ஒரு மரபுவழி இராணுவமாகச் செயற்படும் ஆற்றல் கொண்டவர்கள் என ஏற்றுக்கொண்ட இராணுவ ஆய்வாளர்களும் கூட உண்டு. அந்த அளவிற்கு புலிகள் குறித்த மதிப்பீட்டில் பலருக்குக் குழப்பம் எப்பொழுதுமே இருந்து வந்ததுண்டு.

நன்றி: சங்கதி

Please Click here to login / register to post your comments.