களமுனைக்கு வெளியே நகரும் போர்

ஆக்கம்: லண்டனிலிருந்து வன்னியன்
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் போராட்டம் ஒரு இராணுவ நெருக்கடி மிகுந்த காலகட்டத்தினுள் பிரவேசிக்கின்ற போதோ அல்லது இனப்படுகொலை மிகத்தீவிரமடைகின்ற போதெல்லாம் ஈழத்தமிழினத்தையும் அவர்களது விடுதலைப் போராட்டத்தினையும் பாதுகாப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான வெகுஜனப் போராட்டங்களை நிகழ்த்தி ஒரு தற்காலிக சர்வதேச அழுத்தத்தினை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தி இனப்படுகொலையின் தீரத்தை தணிப்பதும் அது பின்னர் மறக்கப்படுவதும் வழக்கமாகியிருந்தது.

ஆனால் கடந்தகாலங்களில் நிகழ்ந்த வெகுஜனப் போராட்டங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்ததைவிட தற்போது மேற்கொள்ளப்படுகின்ற வெகுஜனப் போராட்டங்கள் சற்று வித்தியாசமானவையாகவும், அதேநேரம் மிகச் சக்தி வாய்ந்ததொன்றாகவும் காணப்படுகிறது. களமுனையில் ஏற்பட்டிருக்கின்ற மிக இறுக்கமான பேரினைப் போல் களமுனைக்கு வெளியே வெகுஜனப் போராட்டம் என்றவடிவில் ஈழவிடுதலைப் போர் நகர்ந்து கொண்டிருக்கின்றது எனச் சொல்வதே தற்போதைய நிலையில் பொருத்தமானது.

வன்னிக்களமுனை நடவடிக்கையில் படைத்தரப்புக்கு ஏற்பட்டிருக்கின்ற தேக்கநிலையும், படைநடவடிக்கைக்கு எதிராக புலிகள் மேற்கொள்ளும் உக்கிரமான வழிமறிப்புச் சமரும், படைத்தரப்பின் தாக்குதல் சக்தியினை படிப்படியாகக் குறைத்துவருவதனை அவதானிக்க முடிகிறது. மேற்குவன்னியில் படைத்தரப்பு முன்பு எதிர்பார்த்ததைப் போலல்லாமல் மிகக்கடுமையான நெருக்கடியை சந்திக்கத் தொடங்கிவிட்டன.

வன்னியில் பருவமழை ஆரம்பித்துவிட்டதனால் மேற்குவன்னியில் களநிலையிலும் மாறுதல்கள் தென்படத் தொடங்கிவிட்டன. இராணுவம் கைப்பற்றிய பிரதேசங்களினுள் ஏற்பட்டிருக்கின்ற இராணுவச் செறிவின்மையைப் பயன்படுத்தி புலிகளின்அணிகள் உள்ளே ஊடுருவி நிலைகொண்டிருப்பதாக அறியமுடிகிறது. அத்தோடு முன்னரங்கத்துக்கான வழங்கல் பாதைகளும் நெருக்கடி மிகுந்ததொன்றாக படைத்தரப்பிற்கு மாறிவருவதனையும் அவதானிக்க முடிகிறது.

எனவே படைத்தரப்பு எதிர்கொள்ளும் நெருக்கடியானது. யாழ்பாணத்துக்கான தரைவழிப் பாதைதிறப்பு என ஆரம்பித்து கிளிநொச்சி கைப்பற்றுதல் என மாறி தற்போது வன்னியில் புலிகளை அழித்தல். என்ற நிலைக்கு படைத்தரப்பைத் தள்ளியுள்ளது புலிகளின் வழிமறிப்புத் தாக்குதல்கள்.

தொடர்ச்சியாக மூர்க்கமான படைநடவடிக்கைகளுக்கு தந்திரமான பின்வாங்கல்களைச் செய்த புலிகள் தற்போது பின்வாங்கல்களின் எல்லைக்கோட்டை அடைந்துவிட்டார்கள் என்றே சொல்லாம். எனவேதான் நாச்சிக்குடா தொடக்கம் திருமுறிகண்டி வரையான முன்னரங்கப்பகுதியில் எவ்வகையான மூர்க்கமான தாக்குதலுக்கும் ஈடு கொடுத்து பலமான எதிர்த் தாக்குதலை மேற்கொண்டு படையினரை முன்னகரவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் விளைவுதான் கிளிநொச்சி நோக்கிய படையெடுப்பிற்கான இராணுவத் திட்டத்தை ஏற்படுத்திற்று எனலாம்.

இருப்பினும் கிளிநொச்சி நோக்கிய படையெடுப்பில் அரசதரப்பு காலக்கெடுக்களை குறிப்பிடுவதும், கிளி நகரத்திற்கான தூரத்தை அளவிட்டுக் கூறுவதும் தென்பகுதி மக்களை சமாதானப்படுத்த அல்லது இனவாத அரசியலுக்குள் முடக்கிவைக்க உதவுமேயன்றி களமுனையில் தற்போதைய நிலையில் பெரிதாக மாற்றமெதனையும் ஏற்படுத்தப் போவதில்லை. மொத்தத்தில் மேற்கு வன்னியிலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற படை நடவடிக்கைக்கு எதிராக காத்திடமான பதிலடியைப் புலிகள் கொடுக்கத் தயாராகி விட்டனர் இதனாலேதான் மேற்கு வன்னியில் இருந்த போர்மையம் தற்போது வடக்கு முன்னரங்கம் நோக்கியும் கிழக்கே மணலாற்றுப் பகுதி நோக்கியும் திரும்பியிருக்கிறது.

வடக்கு முன்னரங்க நிலையான முகமாலைப் பிரதேசத்தில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றமுயற்சிக்கும் விடுதலைப் புலிகள் பலத்த பதிலடி கொடுத்து முறியடித்திருக்கின்றனர் அவ்வாறே கிழக்கு முன்னரங்கப் பகுதியிலும் அதாவது நாயாற்றிலிருந்து தண்ணிமுறிப்புக் குளத்தின் பின்பகுதி வரையாக நீண்டிருக்கின்ற முன்னரங்கப் பகுதியில் தண்ணிமுறிப்புக் குளத்தை அண்டியதான பிரதேசத்தில் 59வது டிவிசன் படையினர் மேற்கொண்ட முன்னகர்வும் புலிகளால் முறியடிக்கப் பட்டிருக்கின்றது. இவ்விரண்டு தாக்குதல்களையும் முன்னேற்ற முயற்சி என்று குறிப்பிட்டாலும் கூட இவையிரண்டும் புலிகளின் நாடியைப் பிடித்துப் பார்ப்பதாகவே தோன்றுகிறது.

ஒரு போர்முனை இறுக்கமடைகின்ற போது பிறிதொரு போர்முனையைத் திறப்பதுவும், அதுவும் சரிப்பட்டு வராதபோது இன்னுமொன்றைத் திறப்பது என்கின்ற உத்தியை படைத்தரப்பு தொடர்ச்சியாக மேற்கொண்டு. இதுஒரு சுற்றுவட்டத்தில் மீண்டும் முன்னைய போர்முனையில் நகர்வதுமான இராணுவ வியூகத்திற்குப் புலிகள் பழக்கப்பட்டுவிட்டதால் இனிவரும் காலங்களில் பல்முனை நகர்வுகள் பயனளிக்கமாட்டா என்றே சொல்லாம். அவ்வாறே இராணுவம் இதுவரை வன்னிக் களமுனைகளில் மேற்கொண்டுவந்த பெட்டியடித்தல் அல்லது பட்டியடைத்தல் முறையிலான இராணுவவியூகத்திற்கும் புலிகள் பழக்கப்பட்டுவிட்டதால் இவ்வியூகத்திற்கும் புலிகள் ஆப்பு வைத்துவிட்டனர்.

மேலும் கிளிநொச்சிமீதான படைநடவடிக்கையில் கிளிநொச்சியை அடைவதென்பது தற்போதைய அரசியல் இராணுவ நிலையில் சாத்தியமற்றதொன்றாகவே கருதவேண்டியுள்ளது. ஏனெனில் ஜயசிக்குறூய்க் காலத்தில் புளியங்குளம் கிராமத்தை மூன்று பக்கமும் இராணுவம் சூழ்ந்திருந்த வேளையிலும் அக்கிராமத்தைப் பாதுகாப்பதற்காக விடுதலைப் புலிகள் நான்கு மாதங்கள் அங்கு முகாம் அமைத்து தங்கியிருந்தனர். இவ்வாறு புளியங்குளத்தையே தக்கவைக்கப் போரிட்டவர்கள் அவர்களின் ராஜதந்திர நகரத்தை சும்மா விட்டுவிடுவார்களா என்ன?

வன்னிமீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கையினால் கிழக்கு வன்னியில் ஏற்படுக்கும் மிகப்பெரிய மனித அவலம் உலகின் கண்களுக்கு தெரியத் தொடங்கி விட்டது. வன்னிமீது மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இராணுவப் பொருளாதார முற்றுகையினால் இடம்பெயர்ந்த அகதிகளாக்கப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமற்று சொல்லணாத் துன்பங்களை அனுபவித்து உணவுத் தட்டுப்பாட்டினால் பட்டினிச் சாவுஎன்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் மனித அவலத்தினை தடுப்பதற்கு உலகளாவிய ரீதியில் அரசுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே வன்னிக்கான உணவு விநியோகத்தை அனுமதித்திருக்கிறது இருந்தும் சீரான வழங்கலைத் தடுப்பதற்கான மாற்றுவழிகளை; படைத்தரப்பு மேற்கொண்டிருப்பதனை அவதானிக்கமுடிகிறது.

வன்னிக்கான போக்குவரத்திற்கான பாதுகாப்பான பாதையாக ஏ9 வீதியை அறிவித்த அரசு பின்னர் ஏ9 வீதியில் மாங்குளம் வரை சென்று அங்கிருந்து மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியில் பயணித்து அங்கிருந்து புதுக்குடியிருப்புச் செல்லும் வீதியை பயன்படுத்தவும் அனுமதித்திருந்தது தெரிந்ததே. ஆனால் தற்போது அவ்வீதியையும் பாதுகாப்பற்றதெனக் கூறி ஏ9 வீதியில் உள்ள புளியங்குளத்திலிருந்து முல்லைத்தீவு செல்லும் வீதியில் நெடுங்கேணி வரை பயணித்து அங்கிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் வீதியில் பயணித்து ஒட்டுசுட்டான் ஊடாகப் புதுக்குடியிருப்புச் செல்லும் வீதியைப் பயன்படுத்தும் படி கூறியிருக்கின்றது.

இருந்தும் புளியங்குளம், நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் ஊடாக புதுக்குடியிருப்புச் செல்வதற்கான வீதிகளில் இருக்ககின்ற முக்கியமான ஆற்றுப்பாலங்களான சன்னாசிபரந்தனில் இருக்கின்ற கனகராயன் ஆற்றின் மேலுள்ள பாலத்தையும் (நெடுங்கேணி - புளியங்குளம் வீதி), காதலியார் சமளங்குளத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தையும் (நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதி), ஏற்கனவே படைத்தரப்புத் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சேதப்படுத்தப்பட்ட பாலத்தின் மீது பயணிப்பது எவ்வாறு பாதுகாப்பானதென்பது கேள்விக்குரியதே

இவ்வாறு வன்னியில் ஏற்பட்டிருக்கின்ற மனிதப் பேரவலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இன்னொரு பரிணாமத்திற்குள் இட்டுச்சென்றிருக்கிறது. அதாவது ஈழத்திற்கு வெளியே ஈழத்தமிழர்களுக்கான குரல்கள் மிகஉரத்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது என்றே கூறலாம். தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகம் வாழ் தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காக வெகுஜனப் போராட்டங்களை மேற்கொள்வதும், அவை பின்னர் மெல்ல மெல்ல மழுங்கிப் போவதும் வழக்கமாயிருந்தது. இவ்வெகுஜனப் போராட்டங்கள் பற்றி நோக்குவோமானால் 1983 யூலை கலவரகாலகட்டத்திலும், பின் 87களில் வடமராட்சி ஆக்கிரமிப்பு மற்றும் இந்திய - புலிகள் போரின் போதும,; பின் 1995 இல் யாழ் இடப்பெயர்வின் போதும், அடுத்து செஞ்சோலைச் சிறார்களின் படுகொலையின் போதும், விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் படுகொலையின் போதும், உலகம் வாழ் தமிழர்கள் குறிப்பாக தமிழகத் தமிழர்களின் வெகுஜனப் போராட்டங்கள் உலகின் கவனத்தை ஈர்ந்ததோடு இந்திய அரசினையும், அதன் கொள்கை வகுப்பாளர்களையும் மிகப்பெரும் நெருக்கடியில் தள்ளியிருந்தது.

மேலும் தமிழீழப் பிரச்சனையினைச் சர்வதேச மயப்படுத்தும் பாதையின் திறவுகோல் என்பது தமிழகத் தமிழர்களிடம் தான் உள்ளது. என்பது மறுப்பதற்கில்லை. எனவேதான் உலகத்தமிழர்களின் வெகுஜனப் போராட்டங்களில் தமிழகத் தமிழர்களின் வெகுஜனப் போராட்டங்கள்தான் உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடிய மிகப்பெரும் சக்தி. எனவே தான் கடந்த காலங்களில் ஏற்பட்ட தமிழகத் தழிழர்களின் எழுச்சியினை மழுங்கடிப்பதற்கு இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும், இந்தியப் புலனாய்வுத் துறையான "றோ" அமைப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்ததனை கடந்த கால நிகழ்வுகளிலிருந்து அவதானிக்க முடியும். இதற்கு நல்ல உதாரணமாக செஞ்சோலைப் படுகொலைக்குப்பின் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியினை மழுங்கடிப்பதற்கு தமிழகத்தில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றியதாகவும் தமிழக மீனவர்களை புலிகள் கடத்தியதாகவும் ஆயுதங்கள் தமிழகத்திலிருந்து கடத்தப்படுவதாகவும், அதனைத்தாம் கைப்பற்றியதாகவும் றோ அதிகாரிகள் அரங்கேற்றிய நாடகங்களை நாம் குறிப்பிட்டுச் சொல்லாம்.

எது எப்படியிருப்பினும் கடந்த காலத்தில் ஏற்பட்ட தமிழகத்தின் எழுச்சியினைவிட தற்போது ஏற்பட்டிருக்கின்ற எழுச்சியானது தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுதிரண்டு இந்திய மத்திய அரசை ஆட்டங்காணச் செய்யக்கூடிய வகையில் அவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிகத் தொடங்கிவிட்டது. வழக்கமாக சில தமிழக அரசியற் கட்டசிகளே ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தநிலை மாறி இந்தியக் கமியூனிஸ் கட்சி ஆரம்பித்துவைத்த போராட்டம் இன்று தமிழக ஆளும் கட்சி தீர்க்கமான ஓர் முடிவை எடுக்கும் நிலைக்கு வந்ததோடு டில்லியைப் பணிய வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பாராளுமன்றத்தில் 40 ஆசனங்களைக் கொண்டிருக்கின்ற தமிழக அரசு மத்திய அரசுக்குக் கொடுக்கின்ற அழுத்தமானது ஒரு செயல் வன்மை மிக்க முடிவுக்கு மத்திய அரசை இட்டுச் செல்லும். என்பது மறுப்பதற்கில்லை.

ஆறரைக் கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழகம். எழுச்சி பெறுகின்ற போது அதுவும் சனத்திரள் அரசியலுக்குப் பழக்கப்பட்ட தமிழகம். கட்சி வேறுபாடுகளின்றி ஒன்று திரண்டிருக்கின்ற போது புதுடில்லி பணிவதைத் தவிர வேறு வழி இருக்க முடியாது.

ஏனெனில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சரிவுச் சூழ்நிலையில் உடனடியாக இன்னுமொரு இந்தியத் தேர்தலை சந்திக்க இந்திய அரசு விரும்பாது. அப்படி விரும்பினாலும் கூட பெரிய மாற்ற மெதனையும் தேர்தலின் பின்னரும் கூட எதிர்பார்க்க முடியாது. ஆகவே தமிழகக் கட்சிகள் தமது அரசியல் கட்சி லாபங்களைக் கடந்து ஒரு செயற்திறன் மிக்க வெகுஜனப் போராட்டங்களை நடத்தி இந்திய கொள்கை வகுப்பாளர்களும், றோ அதிகாரிகளும் மேற்கொள்ளவிருக்கும் ராஜதந்திர நகர்வுகளை தமிழக சனத்திரள் வெள்ளத்தில் அமிழ்த்தினால் சென்னைக்கு டில்லி பணியவேண்டியது தவிர்க்க முடியாததாகின்றது.

எது எப்படியிருப்பினும் வன்னிக் களமுனையில் புலிகள் மேற்கொண்ட தந்திரப் பின்வாங்கல்களும், அதனால் ஏற்பட்ட மக்கள் இடப்பெயர்வும், கிழக்கு வன்னியில் ஏற்பட்டிருக்கின்ற மனிதப் பேரவலமும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை சர்வதேச மயப்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கியதோடு சர்வதேசப் பாதைக்கான திறவுகோலாக இருக்கும் தமிழகத் தமிழர்களின் பேரெழுச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போர்க்களம் இன்று களத்திற்கு வெளியே நகர்ந்து சென்னை நோக்கி மையம் கொண்டிருக்கின்றது. என்று சொல்வதே இன்றைய அரசியல் இராணுவச் சூழ்நிலையில் பொருத்தமானது.

Please Click here to login / register to post your comments.