உலகை ஏமாற்றுவதற்கே சர்வகட்சிக் குழு: அது வெறும் புகைமண்டலம்- மங்கள சமரவீர

இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவானது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு புகைமண்டலம் என இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

டெய்லி மிறர் பத்திரிகையின் ஊடகவியலாளர் சகுந்தலா பெரேராவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மங்கள சமரவீர இவ்வாறு கூறியிருந்தார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு உருவாக்கப்பட்டபோது அதில் தானும் ஒரு பங்குதாரராக இருந்ததால் அது ஏன் உருவாக்கப்பட்டது என்ற உண்மையக் கூறமுடியும் எனக் குறிப்பிட்ட மங்கள சமரவீர, சர்வதேசத்தை பிழையாக வழிநடத்துவதற்கே இது உருவாக்கப்பட்டதுடன், சர்வதேச சமூகத்திடம் அனைத்தையும் முடிமறைக்கும் ஒரு புகைமண்டலமே இந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு எனக் கூறினார்.

“இதற்கு சிறந்த உதாரணம், 2006ஆம் ஆண்டு அரசாங்கத்தின் பிரதிநிதியாக நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது நடைபெற்ற சம்பவத்தைக் கூறலாம். இந்தியா சென்ற குழுவில், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தொடர்பாக கலாநிதி. ரோஹான் பெரேரா இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். அதன்மூலம் இந்தியத் தலைவர்கள் கவரப்பட்டிருந்தனர். ஆனால், நாங்கள் நாடு திரும்பியதும் தேவையானதிலும் பார்க்க கூடுதலான அதிகாரங்களைப் பரிந்துரைத்துவிட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கலாநிதி. பெரேரா அந்தப் பதவியிலிருந்து அரசாங்கத்தால் நீக்கப்பட்டார்” என மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

சார்க் மாநாடு நடத்தப்படும்போது அல்லது அரசாங்கக் குழுவினர் அமெரிக்கா செல்லும்போது சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு குறித்து அதிகம் பேசப்படும். இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வொன்றை மாத்திரமே இந்த அரசாங்கம் விரும்புகிறது என மங்கள சமரவீர தெரிவித்தார்.

தீர்வுக்கான வழிகள்

அரசியலமைப்பை மாற்றியமைத்து அதன்மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முதலாவது படியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவதாக, ஜனாதிபதிக்குக் காணப்படும் மேலதிகமான அதிகாரங்களை இல்லாமல் செய்யவது எனவும், மேலதிகமான அதிகாரங்கள் இருக்குமாயின் அது மஹிந்த ராஜபக்ஷவாக இருந்தாலும், ரணில் விக்ரமசிங்கவாக இருந்தாலும் பிழையான வழியில் செல்வதற்கே முயற்சிப்பார்கள் எனவும் மங்கள சமரவீர கூறினார். அதற்கு அடுத்ததாக பொதுச் சேவைகள் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்படவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அனைத்து சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றையே இனப்பிரச்சினைத் தீர்வாக முன்வைக்கவேண்டும். ஏன் பல அனைத்துக் கட்சிக் குழுக்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்பது எனக்குப் புரியாத விடயமாக உள்ளது. உயர்மட்டத்தில் ஒரு அரசியல் குழு இருக்குமாயின் பல அனைத்துக் கட்சிகள் அவசியமில்லை. தேவையற்ற விடயங்களில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது அவசியமற்றது என நான் கருதுகிறேன். நாம் பார்க்கும் பகுதிகளைப் பற்றித் தீர்மானித்து அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டும்” என மங்கள சமரவீர கூறினார்.

ஆட்சிக்கு வருவதற்காக பல்வேறு கட்சிகளுக்கு வாக்குறுதிகளை வழங்குவதைவிட, நாட்டுக்குச் சரியானதை அமுல்படுத்தும் தைரியம் இந்த நாட்டின் தலைமைத்துவத்திடம் இருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கக் கூடிய அதிகாரப்பரவலாக்கல் திட்டமே சிறந்தமுறையெனவும், இந்தியா பின்பற்றும் அதிகாரப்பகிர்வு முறையே தேவையானது எனவும் மங்கள சமரவீர தனது செவ்வியில் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள்

கடந்த 25 வருடங்களாக எவ்வாறு மோதல்கள் முன்னெடுத்துச்செல்லப்படுகின்றன என்பது பற்றி அனைவரும் அறிந்த விடயம் எனச் சுட்டிக்காட்டிய அவர், டி.பி.விஜயதுங்கவின் ஆட்சிக்காலத்தில் கிழக்கு இராணுவத்தினரால் மீட்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டதாகவும், 1995ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் கிளிநொச்சி மீட்கப்பட்டதாகவும் கூறினார். அதன் பின்னர் கிளிநொச்சியை மீட்பதற்கு பல உயிர்கள் தியாகம்செய்யப்படுவதாக அவர் கூறினார்.

“எமது இராணுவத்தினரின் நடவடிக்கைகளால் நாங்கள் பல இராணுவ வெற்றிகளைப் பெற்றுள்ளோம். ஆனாலும் மோதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சொந்த மக்களுக்கு எதிராக எவ்வாறு மோதலில் வெற்றிபெறமுடியும்? வெளிநாட்டு சக்திகளாலேயே மோதல்கள் துண்டுப்படுகிறது எமது மக்களால் அல்ல. எமது ஆட்சிக்காலத்தில் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட அதேசமயம் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. அரசியல் தீர்வொன்றுக்கான தேவையை முன்நிலைப்படுத்தியிருந்தோம். சிறுபான்மையினருக்கு நேர்மையாக அதிகாரங்களைப் பகிர்ந்துகொடுக்கும் அரசியலமைப்பொன்றை முன்வைப்பதே விடுதலைப் புலிகளைக் கையாளக்கூடிய ஒரு சிறந்த வழி. அன்றையதினமே விடுதலைப் புலிகளை முற்றாக அழித்த தினமாக அமையும்” என மங்கள சமரவீர தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு எதிராக கூட்டணி

ஐக்கிய தேசியக் கட்சி தனது உள்வீட்டுப் பிரச்சினைகளை மறந்து அரசாங்கத்துக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணியொன்றை ஏற்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும், உள்வீட்டுப் பிரச்சினைகளை மறந்து ஐக்கிய தேசியக் கட்சி அதற்குத் தலைமைப்பொறுப்பை ஏற்கவேண்டுமெனவும் மங்கள சமரவீர தனது செவ்வியில் கூறினார்.

“ஐக்கிய தேசியக் கட்சி தற்பொழுது இருக்கும் நிலையிலேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் 1991ஆம் ஆண்டு இருந்தது. ஆதன் பின்னர் சின்னத்தை மறந்து கூட்டுக்களை உருவாக்கியதன் மூலம் ஆட்சிக்கு வந்தது. அதேபோல ஐக்கிய தேசியக் கட்சியும் செயற்படவேண்டிய தேவை தோன்றியுள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Please Click here to login / register to post your comments.