கிழக்கு மாகாண சபையும் முஸ்லிம் காங்கிரஸும்

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பொத்துவில், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை ஆகிய முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம் காங்கிரஸிலிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்தும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள். நிந்தவூர் கிராமத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே வேட்பாளரை நிறுத்தியது. மு.கா. வின் செயலாளர் எம்.ரீ. ஹஸன் அலியே நிந்தவூரின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். நிந்தவூரிலும் வேறு கிராமங்களிலும் ஹஸன் அலிக்கு இருக்கின்ற செல்வாக்கின் காரணமாக நிந்தவூரில் வேறு ஒருவரும் போட்டியிட முன்வரவில்லை என்பதே இப்பிரதேச மக்களின் அபிப்பிராயமாகும்.

மேலே கூறப்பட்ட கிராமங்களில் இறக்காமத்தை (இதுவொரு சிறிய கிராமமாகும்) தவிர மற்ற எல்லாக் கிராமங்களும் மாகாண சபை உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டன. அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, மருதமுனை ஆகிய கிராமங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் பொத்துவில், நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேசங்கள் முஸ்லிம் காங்கிரஸிலும் கிழக்கு மாகாண சபைக்கான உறுப்பினர்களை பெற்றுக் கொண்டன. இதனால் தமது பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து கிழக்கு மாகாண சபையிலும் எடுத்துக் கூறி, குறைந்த பட்சம் ஒரு சில அபிவிருத்திகளையாவது பெற்றுக் கொள்ள முடியும் என கிழக்கு மாகாண சபையில் ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்களைக் கொண்ட பிரதேச மக்கள் எண்ணத் தொடங்கினர். இப்பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை துறந்து நாடாளுமன்ற உறுப்பினரானதன் பின்னர் அக்கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸன் அலியும் தமது கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் பதவியை துறந்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார். கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் பதவியை எம்.ரீ. ஹஸன் அலி இராஜினாமாச் செய்ததையடுத்து அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டவர்களானார்கள்.

ஏனெனில், கிழக்கு மாகாண சபை முஸ்லிம்கள் தான் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற முஸ்லிம்களை விடவும் அதிக இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் இம் மக்களின் துயரங்களையும், பிரச்சினைகளையும் புள்ளி விபரங்களுடன் அறிந்து வைத்துள்ள எம்.ரீ. ஹஸன் அலியின் மூலம் கிழக்கு மாகாண சபையில் ஒரு முஸ்லிம் குரல் ஒலிக்கப் போகின்றதென எண்ணி நம்பிக் கொண்டிருந்த மக்களுக்கு, எம்.ரீ. ஹஸன் அலி கிழக்கு மாகாண சபையை விட்டும் வெளியேறியுள்ளமை பெரும் அதிர்ச்சியுடன்கூடிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதென்றால் மிகையாகாது. எம்.ரீ.ஹஸன் அலியின் பிறந்த ஊராகிய நிந்தவூரில் அவருக்கு சுமார் 90 சதவீதமானோர் ஆதரவு வழங்கினார்கள். மற்றைய கிராமங்களும் இவருக்கு வாக்களித்ததனால் தான் சுமார் 56 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்றார். அம்பாறை மாவட்டத்தில் ஏனைய மாகாண சபை உறுப்பினர்களை விடவும் அதிக வாக்குகளைப் பெற்றவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொள்ளும் வகையில் மக்கள் வாக்களித்தனர்.

வாக்களிக்கின்ற மக்களின் விருப்பத்தினைப் பெற்றுக்கொள்ளாமல் அல்லது கலந்தலோசிக்காமலே தமது பதவியை பயன்படுத்தி கொள்வதென்பது அரசியல்வாதிகளைப் பொறுத்தரை ஒன்றும் பெரிதானதல்ல.

கிழக்கு மாகாண சபைதான் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைக்கு முரணானது என்ற போதிலும், அக்கட்சிக்காரர்கள் கூறுகின்ற முஸ்லிம் அதிகார அலகு என்பது இந்தக் கிழக்கு மாகாண சபையில்தான் இருக்கின்றதென்பதை புரிந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் முஸ்லிம்களின் செல்வாக்கு வெகுவாகக் குறைந்து வருமென்று கருதித்தான் முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழக்கு முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட மரணசாசனமாக வர்ணித்தது என்பது நினைவு கூரத்தக்கது. முஸ்லிம் காங்கிரஸ் அவ் ஒப்பந்தத்தை எதிர்த்தாலும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அம் மாகாண சபையின் எதிர்க்கட்சி வரிசையில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.

அப்போது வடக்கும் கிழக்கும் இணைந்திருந்தாலும் பிரிந்திருந்தாலும் அது முஸ்லிம்களுக்குத் தீர்வாகாது. முஸ்லிம்களுக்கு தனித்துவமிக்க முஸ்லிம் அதிகார அலகே தீர்வாகும் என்றும் கூறியது. இதனை கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வரைக்கும் கூறினார்கள். இணைந்த வடக்கு கிழக்கில்தான் முஸ்லிம் காங்கிரஸ் கனவு காண்கின்ற அதிகார அலகுள்ளது, தனி அலகைப் பற்றி விவாதித்து அதனை பெற்றுக் கொள்வதற்காகவே முஸ்லிம் காங்கிரஸ் அன்றைய வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டது. இது போன்றுதான் கிழக்கு மாகாண சபையினைப் பற்றியும் முஸ்லிம் காங்கிரஸ் சிந்திக்க வேண்டும். "பிசாசுகளின் கூட்டம் என்றாலும் அங்கும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களை ஓரளவிற்காவது அறிந்து கொள்ள முடியும்'' என்ற கருத்துப்பட முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் கூறியுள்ளார் என்பது முஸ்லிம் காங்கிரஸின் தீவிர ஆதரவாளர்களினால் மறுக்கப்பட முடியாதொன்றாகும்.

ஆகவே, கிழக்கு மாகாண சபையை முஸ்லிம்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தவும் அவற்றை பெறுவதற்கான ஒரு களமாகவும் கருதி முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட வேண்டும் என்பதே அக்கட்சியின் புத்திஜீவிகள் பெரும்பாலானோர் மத்தியிலுள்ள கருத்தாகவுள்ளது. ஆதலால் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் காத்திரமான பங்களிப்பைச் செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். கிழக்கு மாகாண சபையின் ஆயுள் நீடிக்காதென்று தமது முக்கிய ஆதரவாளர்களிடம் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் கூறிக் கொண்டிருப்பதனைப் போன்று எண்ணிவிடவும் முடியாது. இக்கிழக்கு மாகாண சபையின் ஆயுள் எவ்வளவு காலத்திற்கு என்பது முக்கியமல்ல. அதன் ஆயுட் காலத்தில் முஸ்லிம்களைப் பற்றி என்னென்ன பேசப்பட்டன என்பது முக்கியமாகும். அதுவே முஸ்லிம்களின் கோரிக்கைகள் பற்றிய போராட்டத்திற்கானதொரு சிறந்த ஆதாரமாகவும் அமையும். இதனால் இச் சபையில் முஸ்லிம்களைப் பற்றி கருத்துக்களை கூறுவதற்கு ரவூப் ஹக்கீம், எம்.ரீ. ஹஸன் அலி போன்றவர்கள் முக்கியம் என்ற பெரும்பான்மை முஸ்லிம்கள் எண்ணத்திற்கு விழுந்த ஏமாற்றமாகவே அவர்களின் ராஜினாமா பார்க்கப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் தமது கிழக்கு மாகாண உறுப்பினர் பதவிகளை துறந்துவருவது அக்கட்சியின் ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது முக்கிய உறுப்பினர்களில்லாத நிலையிலேனும் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் சாதிக்கும் போதுதான் முக்கியஸ்தர்கள் ஓரளவிற்கு பதில் கூறக் கூடியதாய் இருக்கும்.

Please Click here to login / register to post your comments.