இந்தியா: தேச நலனா? அரசியல் இலாபமா?

சார்க் மாநாட்டைச் சாக்காகக் கொண்டு இலங்கை வந்து சென்றிருக்கும் இந்திய உயர்மட்டக் குழுவின் விஜயம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், வாதங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கைக்கு இவர்கள் ஏன் வந்தார்கள், அரசாங்கத் தரப்புடன் என்ன பேசினார்கள், என்ன முடிவுகள் எட்டப்பட்டன என்பன தொடர்பாக ஊகங்களைத் தவிர வேறெதுவும் இன்னமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், இலங்கைக்கு ஆயுத உதவி வழங்க இந்தியா சம்மதம் தெரிவித்துவிட்டதாக சில கருத்துக்களும், இதன்மூலம் போருக்கு வலுவூட்டி ஈழத்தமிழர்களுக்கு இந்தியா துரோகம் இழைப்பதாகச் சில கருத்துக்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. ஈழத்தமிழர்களுக்கு உதவவேண்டிய இந்தியா அதற்குப் பதிலாக, அவர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத் தரப்புடன் கைகோர்ப்பதாக இந்தியாவின் தமிழ்நாட்டு எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலரும், ஈழத்தமிழர் தரப்புக்கள் சிலவும் வலுவாகக் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடுகளை, இந்துசமுத்திரப் பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட பூகோள அரசியல் யதார்த்தத்தின் பின்புலத்தில் நோக்காமல், வெறுமனே தமிழ் உணர்ச்சி சார்ந்தும், உள்நாட்டு அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்தும் நோக்குவதாகவே இந்தக் கருத்துக்கள் அமைந்துள்ளன. இதனால், இவை சர்வதேச அரசியல் யதார்த்தங்களுக்கு அப்பால் வெகு தூரத்தில் நிற்கும் வெறும் வாதங்களாக மட்டுமே இருக்கின்றன.

பூகோள அரசியல் யதார்த்தம்

பல பிரதான வீதிகள் சந்திக்கின்ற ஒரு சந்தியில், மத்தியில் இருக்கும் சுற்றுவட்டக்கல் போலவே, இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் இலங்கைத் தீவின் அமைவிடம் உள்ளது. உலகின் பிரதான நாடுகள் பலவற்றுக்கும் இடையிலான முக்கிய கப்பல் போக்குவரத்து இடம்பெறும் கடல்மார்க்கத்தில் இருக்கும் இலங்கை, அதன் ஆதி காலம் தொட்டே அந்நிய ஆதிக்கத்துக்கு அடிக்கடி உட்பட்டு வந்திருக்கிறது. வரலாற்றுக்கு முந்திய இதிகாசக் கதையில் இராவணேசனுக்கு எதிராக படையெடுத்ததாகக் கூறப்படும் இராமரில் ஆரம்பித்து, சோழ மன்னர்கள், போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்று மாறி மாறி இலங்கை அந்நிய ஆதிக்கங்களுக்கு உட்பட்டு வந்துள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட உலக ஒழுங்கு மாற்றத்தின் விளைவாக, 1948இல் இலங்கைத் தீவு நேரடி அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டபோதும், முக்கிய கடல் பாதையில் அமைந்துள்ள இலங்கைத் தீவின் துறைமுகங்களும், விமானத்தளங்களும் எப்போதுமே சர்வதேச நாடுகளின் கழுகுக் கண் பார்வையின் கீழேயே இருந்து வருகின்றன.

1948இல் இலங்கையை விட்டு பிரித்தானியா வெளியேறியபோதும், திருகோணமலை, காங்கேசன்துறை துறைமுகங்கள் மற்றும் கட்டுநாயகா உள்ளிட்ட முக்கிய வான் தளங்கள் போன்றவற்றில் பிரித்தானியப் படைகள் நிலைகொண்டிருக்கக்கூடிய ஒப்பந்தம் ஒன்றை அப்போதைய இலங்கைப் பிரதமர் டி.எஸ்.சேனநாயகா பிரித்தானிய அரசுடன் செய்துகொண்டிருந்தார். இது பிராந்தியத்தின் பிரித்தானிய நலன்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தமாக அமைந்திருந்தாலும், எப்போதுமே இந்திய ஆதிக்கம் குறித்த அச்சத்திலிருக்கும் தென்னிலங்கைச் சிங்கள அரசியல்வாதிகள் இந்தியாவிடமிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்வதற்காகச் செய்துகொண்ட ஒரு உடன்படிக்கையாகவும் அது அமைந்திருந்தது.

பிராந்தியத்தின் பெரிய வல்லரசு நாடான இந்தியா குறித்து அன்று தொடக்கம் இலங்கையின் அரசாங்கங்கள் கடைப்பிடித்துவரும் இத்தகைய சந்தேகப்பார்வையுடன் கூடிய அரசியல் அணுகுமுறை, இலங்கை குறித்து எப்போதும் விழிப்பாக இருக்கும் வெளியுறவுக் கொள்கையை வகுக்கவேண்டிய தேவையை இந்தியாவுக்கு ஏற்படுத்தியிருந்தது.

1977இல் ஆட்சியைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பொன்றின் மூலம் தன்னைப் பலப்படுத்திக்கொண்டு, திறந்த பொருளாதாரக் கொள்கையையும், மேற்குலக மைய வெளியுறவுக் கொள்கையையும் பின்பற்றத் தொடங்கியபோது, இந்தியாவின் அச்சம் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், ஏக காலத்தில் இலங்கையில் தீவிரம் பெற்ற ஈழத்தமிழர் போராட்டத்தை மையமாகக் கொண்டு இலங்கை விடயத்தில் இந்தியா தலைப்போடத் தொடங்கியது.

அமெரிக்க அச்சம்

இலங்கையின் அமெரிக்க சார்பு வெளியுறவுக் கொள்கைக்கு சவால் விடுப்பதற்கான ஒரு துரும்புச் சீட்டாக ஈழ விடுதலைப் போராளிகளைப் பலப்படுத்தி, அவர்களுக்கு பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கி இலங்கை அரசாங்கத்துக்கு அது நெருக்கடி கொடுத்தது. இவ்வாறு ஆரம்பம் முதலே, ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு என்பது, இந்து சமுத்திரப் பிராந்தியம் சார்ந்த அதன் தேச நலன்களை அடிப்படையாகக் கொண்டதாக இருந்ததே தவிர, அது ஒன்றும் முழுவதும் தமிழர் நலன் சார்ந்த ஒன்றாக இருந்திருக்கவில்லை.

இந்திய நிலைப்பாடு இப்படி இருந்ததில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. எந்தவொரு நாடும் தன்னுடைய நாட்டின் நலன்கள் சார்ந்து தனது வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துக்கொள்வதே அரசியல் யதார்த்தம். அது ஏதோ தமக்குச் சார்பானதாக இருக்கிறது என்று மயங்குவதும், இருந்துவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் எதிர்பார்ப்பவர்களின் தவறேயன்றி வேறல்ல.

சர்வதேச உலக ஒழுங்கு அமெரிக்கா தலைமையிலான ஓரணியாகவும், சோவியத் ஒன்றியம் தலைமையிலான ஓரணியாகவும் பிரிந்து நின்று முரண்பட்டுக்கொண்டிருந்தபோது, சோவியத் தலைமையிலான அணியுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இந்தியா, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையை மையமாகக் கொண்டு அமெரிக்கா காலூன்றிவிடக்கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையையே இலங்கை தொடர்பில் கடைப்பிடித்தது. ஆனால், 80 களில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்கா தலைமையிலான ஒற்றை வல்லாதிக்க உலக அரசியல் ஒழுங்குக்கு ஏற்ப உடனடியாகத் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, அமெரிக்காவோடு அணுசக்தி உடன்படிக்கை செய்துகொள்ளுமளவுக்கு அதன் அரசியல் சாணக்கியம் அமைந்திருந்தது.

இந்தப் புதிய உலக ஒழுங்கின் பின்புலத்தில் இலங்கைத் தீவை மையமாகக் கொண்டு அமெரிக்கா தொடர்பான பாரிய அச்சங்கள் எதுவும் இந்தியாவுக்கு இல்லாவிட்டாலும், புதிதாக வளர்ச்சி கண்டுவரும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இலங்கைக்கு ஏற்பட்டுவரும் நெருங்கிய உறவுகளால் மீண்டும் குழப்பமடைந்திருக்கிறது. இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விரிவாக்கும் பணியில் சீனா முதலீடு செய்திருப்பது வெறுமனே ஒரு பொருளாதார, வர்த்தக நடவடிக்கை என்று சீனாவும், இலங்கையும் கூறுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இந்தியா தயாராக இல்லை.

இதனால்தான் 1990 களில் இந்தியப் படைகளின் இலங்கை வருகையால் ஏற்பட்ட கசப்புணர்வுகளின் பின்னர் சற்றுத் தள்ளி நின்று அவதானித்துக்கொண்டிருந்த இந்தியா, இப்போது மீண்டும் இலங்கை விடயத்தில் அக்கறை கொள்ளத் தொடங்கியிருக்கிறது. இந்தப் பின்னணியிலேயே இந்திய உயர்மட்டக் குழுவினரின் இலங்கை விஜயத்தை நாம் நோக்கவேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டு உணர்வலைகள்

சர்வதேச அரசியல் யதார்த்தங்கள் எப்படியாக இருந்தாலும், தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட தமிழர்களின் உணர்வலைகள் இந்திய மத்திய அரசின் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தாதா என்ற கேள்வி இங்கே எழுவதும் நியாயமானதே. 'தொப்பூழ் கொடி' உறவின் பெயரால் தமிழகம் கொதித்தெழும்போது இந்திய மத்திய அரசு அதற்குப் பணிந்தே ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்புக்களும் இதை மையமாகக் கொண்டு முன்வைக்கப்படுகிறது.

மத்திய அரசில் அதிக அமைச்சுப் பதவிகளை வகிக்குமளவுக்கு இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான கூட்டரசாங்கத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்(தி.மு.க.) முக்கிய இடம்பிடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு இந்தியா மதிப்புக்கொடுத்தாகவேண்டும் என்பது ஒருவகையில் நியாயமான எதிர்பார்ப்பே. அதுவும், விரைவில் பாராளுமன்றத் தேர்தல் ஒன்று இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ள ஒரு நிலையில், எங்கே ஈழத்தமிழர்களின் துயரங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் பிரசாரம் கூட்டரசாங்கத்தில் பிரதான இடம்பிடித்துள்ள தி.மு.க. வை பலவீனப்படுத்தி வாக்கு வங்கிக்கு சேதம் விளைவித்து விடுமோ என்ற அச்சம் மத்திய அரசாங்கத்திடம் இருக்கத்தான் செய்யும்.

ஆனாலும், இது இந்தியாவின் உள்நாட்டு கட்சி அரசியல் பிரச்சினை மட்டுமே. கட்சி அரசியல் நலன்களுக்காக பிராந்தியத்தை மையமாகக் கொண்ட தேச நலன்களை மையப்படுத்திய வெளியுறவுக் கொள்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆட்சி மாற்றங்களைக் கடந்தும் பொதுவான ஒரு தேசியக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் பாரம்பரியம் கொண்ட இந்தியா, தமிழ்நாட்டு அரசியல் அழுத்தங்களுக்குப் பணிந்து இலங்கை தொடர்பான தனது அணுகுமுறைகளை மாற்றும் என்று எதிர்பார்ப்பது மீண்டும் ஒரு மயக்கத்துக்குள்ளேயே எம்மை இட்டுச்செல்லும்.

என்ன செய்யலாம்?

சர்வதேச அரசியல் யதார்த்தங்களும், அரசியல் இராஜதந்திரங்களும் ஒருபுறம். உணர்ச்சி சார்ந்த அரசியல் எதிர்பார்ப்புக்கள் ஒருபுறம். இரண்டு பக்கமும் நியாயங்களும், விளக்கங்களும் என்னதான் கொடுக்கப்பட்டாலும், கடைசியாக துன்பப்படும் ஓரினம் அவல நிலையிலிருந்து விடுபட என்னதான் வழி? உணர்ச்சி பொங்கி வழிவதாலும், அரசியல் மேதாவித்தனமான வாதங்களாலும் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிட்டிவிடாது. அப்படியானால், நடைமுறை சாத்தியமான வழிதான் என்ன?

தமது நலன்களுக்காக யாரும் பரிந்து பேசுவார்கள் என உலகில் எந்தவொரு நாட்டு மக்களும் சர்வதேசத்தை எதிர்பார்த்து நிற்க முடியாது. தமது அவலங்களைக் கண்டு மனம் இரங்குவார்கள் என்று சர்வதேச அரசியல் இராஜதந்திரத்திடம் மனிதாபிமானத்தை எதிர்பார்த்திருப்பதிலும் பயனில்லை.

இந்த சர்வதேச அரசியல் நலன்களுக்குள் பொருந்தக்கூடிய வகையில் தமது நலன்களை இராஜதந்திர ரீதியாக நிலைநிறுத்திக்கொள்வதொன்றே, உலக அரசியல் ஒழுங்குக்குள் எந்தவொரு நாடோ, இனமோ தன்னுடைய நலன்களை வென்றெடுப்பதற்கான நடைமுறை சாத்தியமான ஒரே வழிமுறை.

Please Click here to login / register to post your comments.