சரத் பொன்சேகா தனது இலக்கை அடைய புலிகள் அனுமதிப்பார்களா?

ஆக்கம்: மகிழினி
வட போர்முனையிலும் வன்னிக் களமுனையிலும் இராணுவத்தினர் படுதோல்வியைச் சந்தித்து வருகின்ற போதும் சிறிலங்கா அரசாங்கத்தின் போர் நிகழ்ச்சி நிரலில் எதுவித மாற்றங்களும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தமது போர் நிகழ்ச்சி நிரலில் அளவுகடந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். 'கிழக்கை விடுவித்ததைப் போன்று வடக்கையும் இராணுவத்தினர் மிக விரைவில் விடுவிப்பர்" என்று மே தின உரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சூளுரைத்துள்ளார். அதேநேரம் 'புலிகளை தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஒடுக்கியே தீருவேன்" என்று கடந்த 04 ஆம் திகதி கொழும்பிலிருந்து வெளியாகிய சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சரத் பொன்சேகா காலக்கெடு விதித்திருக்கிறார்.

இவர்கள் தவிர அமைச்சர்கள், படையணிக் கட்டளைத் தளபதிகள் என ஒவ்வொருவரும் சுமார் ஒன்றரை வருடங்களாக தாங்கள் விரும்பியபடி இவ்வாறு ஒவ்வொரு சூளுரைப்புகளையும் காலக்கெடுக்களையும் விடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், களமுனைகளில் இராணுவத்தினர் எதிர்பார்க்கும் வெற்றிகளை அடைந்து கொள்ள புலிகள் இடமளிக்காத நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வடபோர் அரங்கைப் பொறுத்தவரை புலிகள் எக்காலத்திலும் பலமாகவே உள்ளனர் என்று கூறி வடபோரரங்கில் இனிமேல் ஏற்படவிருக்கும் தோல்விகளுக்கும் பிராயச் சித்தம் தேடுவதற்கு முற்பட்டிருக்கும் சரத் பொன்சேகா, மன்னார் களமுனை மீதுள்ள தன்னுடைய நம்பிக்கையை இன்னமும் இழந்துவிடவில்லை என்றே தெரிகிறது.

மன்னார் களமுனையில் அடம்பனில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் இதற்குச் சிறந்த உதாரணமாகும். கடந்த 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை அடம்பன் சந்தி எனப்படும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

அடம்பனைக் கைப்பற்றி அங்கு தமது வலுவான படைத்தளம் ஒன்றை அமைக்க வேண்டுமென்பது இராணுவத்தினருக்கு சுமார் ஒருவருடமாக இருந்துவரும் ஆசையாகும். அடம்பனைக் கைப்பற்றி விட்டதாக இராணுவத்தினர் அறிவிப்பது இது முதற் தடவையல்ல. இதற்கு முன்னரும் பல தடவைகள் அடம்பனைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவத்தினர் அறிவித்திரு;நதனர். ஆனால், உண்மையில் அடம்பன் நகர மையப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.

இறுதியாக தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்கு முதல்நாளன்று அடம்பன் நகரைக் கைப்பற்றும் பாரிய நடவடிக்கை இடம்பெற்று அது படுதோல்வியில் முடிந்தது. இந்நிலையிலேயே மீண்டும் அடம்பனைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவத் தரப்பு அறிவித்துள்ளது. உண்மையில் அடம்பனில் நடப்பது என்ன என்பது குறித்து இனிப் பார்க்கலாம்.

பிரிகேடியர் சவீந்திர டி சில்வாவைக் கட்டளைத் தளபதியாகக் கொண்ட 58 ஆவது படையணியைச் சேர்ந்த ஒட்டுமொத்த துருப்பினரும் அடம்பன் நகர மையப் பகுதியை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே சுற்றி வளைத்திருந்தனர்.

58 ஆவது படையணியின் முதலாவது பிரிகேட் கேணல் சுஜீவ தலைமையில் உயிலங் குளத்தில் இருந்து கட்டுக்கரைக் குளம், மணல் மோட்டை, பாலைப்பெருமாள் கட்டு, இலந்தைவான், இத்திக் கண்டல், கள்ளிக் குளம் ஊடாக முன்னேறி அடம்பன் சந்தியை அண்மித்துள்ள மாந்தோட்டையில் நிலைகொண்டிருந்தது. அடம்பன் சந்தியில் இருந்து மாந்தோட்டை மேற்காக 800 மீற்றர் தூரத்திலேயே அமைந்திருப்பதாக இராணுவத் தரப்பு தெரிவித்திருந்தது.

58 ஆவது படையணியின் இரண்டாவது பிரிகேட் கேணல் சஞ்சய வணிகசிங்க தலைமையில் திருக்கேதீஸ்வரத்தில் இருந்து மாந்தை, வேட்டை முறிப்பு, கொல்லன் குளம் ஊடாக முன்னேறி வண்ணாங்குளம் பகுதியில் நிலைகொண்டிருந்தது. அடம்பன் சந்தியிலிருந்து கிழக்காக ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்திலேயே பாப்பா மோட்டை அமைந்துள்ளது.

58 ஆவது படையணியின் மூன்றாவது பிரிகேட் உயிலங்குளத்தில் இருந்து கடாவெட்டிக் கண்டல், பாலைக்குழி ஊடாக முன்னேறி அடம்பன் நகருக்கு தெற்காக சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்தது.

அடம்பனைக் கைப்பற்றும் நோக்கில் சுமார் ஓரு வருடமாக இந்த சுற்றிவளைப்பை 58 ஆவது படையணி மேற்கொண்டிருந்த போதும் அந்த இலக்கை அடைவது இராணுவத் தரப்பிற்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது. மன்னார் களமுனையில் இதுவரை நடைபெற்ற சமர்களில் அடம்பன் நகரைக் கைப்பற்றுவதற்காக நடைபெற்ற சமரே மிக நீண்டகாலமாக இடம்பெற்று வந்தது.

இந்நிலையில்தான் கடந்த 4 ஆம் திகதி இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வன்னிக் கூட்டுப்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்து அடம்பன் நகரைக் கைப்பற்றும் நடவடிக்கைத் திட்டத்தை இறுதி செய்தார் என்று இராணுவத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. அவரது திட்டப்படியே அடம்பனில் கடந்த 8; ஆம் 9 ஆம் திகதிகளில் பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப் பட்டது.

கேணல் சுஜீவ தலைமையிலான 58-1 பிரிகேட் படையினரே இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். மாந்தோட்டையில் இருந்து நடுக்கண்டல் ஊடாக அடம்பன் சந்தி நோக்கி முன்னேறுவதே இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம். இந்த பிரிகேட்டில் உள்ள 10 ஆவது கஜபா றெஜிமென்ட் படையினர் மேஜர் சாரத சமரக்கோன் தலைமையிலும், 8 ஆவது கெமுனு வோச் படையினர் லெப். கேணல் சமிந்த ஜெயசுந்தர தலைமையிலும், 8 ஆவது சிங்க றெஜிமென்ட் படையினர் லெப். கேணல் ரமேஷ் பெர்னாண்டோ தலைமையிலும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப் பட்டனர்.

இரண்டு முனைகளில் இந்த நடவடிக்கை இடம் பெற்றது. முதலாவது முனை மாந்தோட்டையில் இருந்து நடுக்கண்டல் ஊடாகவும் இரண்டாவது முனை மாந்தோட்டையில் இருந்து மணிப்புல் குளம் ஊடாகவும் முன்னேறி அடம்பன் நகரைச் சென்றடைவதென திட்டமிடப் பட்டது.

இந்த திட்டத்தின்படி 8 ஆம் திகதி காலை 4.30 மணியளவில் ஆரம்பித்த தாக்குதல்கள் இரண்டாவது நாளான 9 ஆம் திகதியும் தொடர்ந்தது. 9 ஆம் திகதி காலை 8 மணியளவில் அடம்பன் நகரப்பகுதியை இராணுவத்தினர் சென்றடைந்தனர். ஆட்லறி, மோட்டார்கள், பல்குழல் பீரங்கிகள் என்பனவற்றின் சூட்டாதரவுடனும் விமானத் தாக்குதல் ஆதரவுடனும் இடம்பெற்ற இந்த முன்னேற்ற முயற்சியில் நடுக்கண்டல் பகுதி ஊடாக முன்னேறிய இராணுவத்தினர் பொறிவெடிகளில் சிக்கிக் கொண்டனர்

இந்த பகுதியில் தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நேரம் புலிகளைத் திசைதிருப்பும் நோக்கில் பாலம்பிட்டியை அண்மித்து நிலைகொண்டிருந்த 57 ஆவது படையணியின் முதலாவது பிரிகேட் இராணுவத்தினர் ஒரு திசைதிருப்பும் தாக்குதலை மேற்கொண்டு பலத்த எதிர்ப்பைச் சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மடுப்பகுதியில் புலிகள் நிலைகொண்டிருந்தபோது அடம்பன் சந்தியை உள்ளடக்கிய பகுதியை விட்டுக் கொடுக்க முன்வராத புலிகள், மடுவில் இருந்து வெளியேறியதன் பின்னர் அடம்பன் நகரிலிருந்து பின்வாங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது. மடுவில் புலிகள் இல்லாத நிலையில் அடம்பனுக்காக தமக்கு சாதகமில்லாத ஒரு இடத்தில் நின்றபடி அதிக விலை கொடுப்பதற்கு புலிகள் தயாராக இல்லை என்பதே உண்மையாகும்.

அதேவேளை, மடுவிலிருந்து வெளியேறிய பின்னர் மன்னார் களமுனையில் புலிகள் தமது போர்த் திட்டங்களை மாற்றியமைத்துள்ளனரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏனெனில், மடுவில் புலிகள் நின்றபோது மடுவிற்கான விநியோக மார்க்கமாக இருந்த பாலம்பிட்டியை விட்டும் புலிகள் அதிக எதிர்ப்பின்றி பின்நகர்ந்துள்ளனர்.

இந்நிலையில்தான் “மிகக்குறுகிய தூர நடவடிக்கை” ஒன்றைச் செய்து அடம்பன் நகருக்கும் இராணுவத்தினர் சென்றிருக்கின்றனர். மாந்தோட்டையில் இருந்து 800 மீற்றர் தூரத்திலுள்ள அடம்பன் நகரை சென்றடைய முடியாமல் சுமார் ஐந்து மாதங்களுக்கும் இராணுவத்தினர் திணறிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 800 மீற்றர் பகுதியைத்தான் இப்போது இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் 5 மாத காலமாக அடம்பன் நகரை தக்கவைத்த புலிகள் திடீரென அடம்பன் நகரை கைவிடுமளவுக்கு வந்துள்ளனர் எனில் நிச்சயமாக அதற்கு வலுவான காரணங்கள் இருக்கும். புலிகள் எப்போதும் தமக்கு பாதகமான களநிலமைகளில் நின்று போரிட்டது கிடையாது. ஆனால், சாதகமான நேரம் வரும்போது மரண அடி கொடுக்கவும் புலிகள் தவறியதில்லை. அந்த வகையிலேயே அடம்பன் நகரிலிருந்தும் புலிகள் விலகியுள்ளனர்.

    புலிகளின் ஆயுதவளத்தைக் குறைக்க திட்டம் வகுத்து அதேதிட்டத்தில் தாமே சறுக்கி விழுந்த கதையாகத்தான் இராணுவத்தின் நிலை உள்ளது.

புலிகளின் இந்த விலகலானது இராணுவத்தினர் அடம்பனைக் கைப்பற்றி, மன்னார் களமுனையில் அகலக்கால்வைக்க வியூகம் வகுக்கின்றனரா என்ற சந்தேகமும் பலமாக எழுந்திருக்கிறது.

அதேநேரம் அடம்பன் நகரில் இருந்து விலகிய புலிகள் அதேதினத்தன்று அடம்பனை அண்மித்துள்ள கட்டுக்கரைக் குளத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கைக்கு கறுக்காய்குளத்தில் வைத்து மரண அடி கொடுத்துள்ளனர். கறுக்காய் குளத்தில் இடம்பெற்ற மோதல்களில் 30 இராணுவத்தினர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ள புலிகள், இராணுவத்தினரின் 5 சடலங்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமன்றி பெருமளவான ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

அடம்பன் விலகலும் கறுக்காய்க்குள மரண அடியும் புலிகளின் போர்த் திட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உறுதிப் படுத்தியுள்ளன. மன்னார் களமுனையைப் பொறுத்தவரை புலிகளின் தளபதிகளான கேணல் பானு, கேணல் ரமேஸ், கேணல் விதுசா, கேணல் ஜெயம், கேணல் லக்ஸ்மன் ஆகியோர் பரப்புக் கடந்தான் என்ற இடத்தில் உள்ள புலிகளின் மன்னார் களமுனைக்கான கட்டளை மையத்தில் நிலைகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அடம்பனில் இருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இடம்தான் பரப்புக் கடந்தான். பரப்புக் கடந்தானில் புலிகளின் தளபதிகள் கூடும் நிலையம் எனக்கருதப்படும் இடம்மீது கடந்த 9 ஆம் திகதி கடுமையான விமானத் தாக்குதலை நடத்தியதாக விமானப் படையினர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத் தக்கது.

அதாவது அடம்பனிலுள்ள 58 ஆவது படையணியின் அடுத்தகட்ட நகர்வு பரப்புக் கடந்தான் நோக்கியதாகவே இருக்கலாம். அதேநேரம் மடுவிலுள்ள 57 ஆவது படையணி தற்போது மடுவை அடுத்துள்ள பெரிய மடுவையும் பள்ளமடுவையும் கைப்பற்றும் தாக்குதல்களை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கலாம்.

ஆனால், புலிகளைப் பொறுத்தவரை தற்போதைய இராணுவ நடவடிக்கையை இன்னொரு ஜயசிக்குறு சமர் என்றே அவர்கள் நோக்குகின்றனர். எனவே மன்னார் களமுனையில் இராணுவத்தினருக்கு வலைவிரிக்க மேலும் பல இடங்களிலிருந்தும் விலகி, ஓயாத அலைகள் -3 தாக்குதல் போன்று திடீரென அழித்தொழிப்பு தாக்குதல்களை நிகழ்த்தும் சாத்தியங்களும் அதிகமாகி வருகின்றன.

அதேநேரம் நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியபோது குறைந்தது ஒரு வருட தொடர்த் தாக்குதல் மூலம் புலிகளின் ஆயுத வளத்தைக் குறைத்து விடலாம் என்றும் அதன்பின்னர் மன்னார் களமுனை ஊடாக வன்னிக்குள் இலகுவாகச் செல்லலாம் என்றும் இராணுவத்தினர் போட்ட கணக்கு இன்று பிசகிவிட்டது.

மன்னாரில் தொடர் தாக்குதல் நடத்தியதால் தமது ஆயுதக்களஞ்சிய சாலைகளை வெறுமையாக்கியது மட்டுமன்றி கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் அரசாங்கம் மாட்டியிருக்கிறது. ஆனால், புலிகளோ அண்மைக் காலமாக களமுனைகளில் தாரளமாக ஆயுதங்களையும் எறிகணைகளையும் பயன்படுத்தி வருவதுடன் புதிய புதிய ஆயுதங்களையும் பாவனைக்குக் கொண்டு வந்துள்ளனர்.

இது இராணுவத்திற்கு பெருத்த தலைவலியைக் கொடுத்திருக்கிறது. இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பாகிஸ்தானுக்கு அவசர விஜயத்தை மேற்கொண்டு ஆயுதங்களை வாங்கிக் குவிக்க பயணிக்க – புலிகள் முல்லைத்தீவுக் கடலிற்கு தமது ஆயுதக் கப்பல்களை கொண்டு வந்துள்ளனர்.

அதுமட்டுமன்றி இரண்டாம் ஈழப்போரில் உள்ள+ர் தயாரிப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டு யாழ் கோட்டை, மாங்குளம் இராணுவ முகாம் தகர்ப்புகளில் பெரும் பங்காற்றிய உள்ளூர் எறிகணைகளையொத்த புதிய புதிய எறிகணைகளையும் புலிகள் களமுனைகளுக்குக் கொண்டு வந்துள்ளனர். உள்ளூரில் கிடைக்கும் மிகச் சொற்ப மூலப் பொருட்களை ஒருங்கிணைத்துத் தயாரிக்கப்படும் “சமாதானம்”, “ராகவன்;” என்ற பெயரிலான புலிகளின் இந்த சக்திவாய்ந்த சிறியரக எறிகணைகள் களமுனைகளில் அதிகளவில் பயன்படுத்தப் படுவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் ஆயுதவளத்தைக் குறைக்க திட்டம் வகுத்து அதேதிட்டத்தில் தாமே சறுக்கி விழுந்த கதையாகத்தான் இராணுவத்தின் நிலை உள்ளது.

அதேநேரம் மன்னார் களமுனையில் இராணுவத்தினரின் இறுதி இலக்கு விடத்தல் தீவாகவே உள்ளது. விடத்தல் தீவைக் கைப்பற்றி கடற்புலிகளின் செயற்பாட்டை மேலும் முடக்கி, பூநகரியிலுள்ள இராணுவத்தினருடன் தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதே இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பிரதான திட்டம்.

சரத் பொன்சேகா தனது இலக்கை அடைய புலிகள் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள். மாறாக, இராணுவத்தினரை காடுகளுக்குள் வரவழைத்து, அகலக்கால் விரிக்க வைத்து, மரண அடி கொடுப்பதற்கே முனைவர். அதற்கான வியூகங்களே தற்போது புலிகளால் வகுக்கப்படுகின்றன என்பதையே களமுனை நகர்வுகள் உணர்த்தி நிற்கின்றன.

நன்றி: சுவிஸ் முரசம்

Please Click here to login / register to post your comments.