மன்னார் மருத மடு

யாழில் வெடித்து , புகைத்த மும்முனை சமரும், புலிகளின் திடீர் மருதமடு வெளியேற்றமும் இலங்கை அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளதோடு சர்வதேசத்தின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளன.

புலிகளை பொருத்தமட்டில் இவை இரண்டும், இராணுவரீதியிலும்,இராஜீகரீதியிலும் அதிக முக்கியத்துவத்தை பெறுவதாக அரசியல் ஆய்வாளர்களால் நோக்கப்படுகிறது. நீண்ட காலமாக புலிகள் வசமிருந்த மடு புனித பிரேதேசம், தற்போது இலங்கை இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதை தொடர்ந்து "மன்னார் மருத மடு" என்ற ஆய்வை வாசகர்கள் முன் வைக்கிறோம் .

மன்னார்,மருத மடுவை கைப்பற்றும் படை நடவடிக்கைகளை, கடந்த மார்ச் மாத நடுப் பகுதியில் இலங்கை இராணுவம் பெரும் முஸ்தீபுகளுடன் ஆரம்பித்திருந்தது. ஆனால் ஆரம்பத்தில் புலிகளின் தீவிர எதிர்ப்புக்களால் படை நடவடிக்கைகள் தாமதப்பட்டுத்தப்பட்டு வந்தன என்பது வெள்ளிடைமலை.

அத்தோடு தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்பாக மடுவை மீட்பதை பெரு வெற்றியாக எதிர்பார்த்திருந்த இலங்கை இராணுவத்துக்கு படை நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டமை பெரும் ஏமாற்றமே?

இதன் மூலம் இராணுவ நகர்வுகளுக்கும் , சிங்கள அரசியலாளர்களின் வாய் ஜாலங்களுக்குமிடையில் நீண்ட இடை வெளி இருப்பதை எல்லோரும் அறிவீர்கள் .

கிழக்கில் , தொப்பிகல மீட்கப்பட்டபோது இடம் பெற்ற வெற்றிக் கொண்டாட்டங்கள் அப்போது தென் இலங்கையை அதிர வைத்த போதும் , வடக்கில் மடு மீட்பு அரசை சத்தம் சந்தடியின்றி அமைதிப்படுத்தி உள்ளமை யாழ். சமரின் வீழ்ச்சிக்குள் படையும், அரசும் உறைந்துள்ளதை தெளிவுபடுத்துகிறது.

இலங்கையின், வட பகுதியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மருதமடு மாதா தேவாலயம் உலக கத்தோலிக்கர்களின் ஆன்மாவில் இடம் பிடித்துள்ள புனித ஸ்தலமாக விளங்குவதோடு, இன. மத , மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மக்களின் திருத்தலம் மீதான பக்தியே இலங்கை அரசின் இவ் ஆலயம் மீதான நீண்ட கால கவன ஈர்ப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படும் நிலையில், இந்த கவன ஈர்ப்பின் நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளால் மாதா தேவாலயத்திற்கு சற்று சேதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

மடுவை மீட்கும் படை நடவடிக்கைகள் ஆரம்பமானது முதல், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க சமூகமும்,மாவட்ட சர்வமத அமைப்பும், இலங்கை கத்தோலிக்க ஆஜர் மன்றமும், மடுப்பகுதி இராணுவ மயமாவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசுக்கும் , புலிகளுக்கும் இது தொடர்பில் அழுத்தங்களை பிரயோகித்து வந்துள்ள நிலையில் இவை எவையும் சம்பந்தப்பட்ட எந்த தரப்புக்களாலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாததால் மருத மடு அன்னையின் திருச்சொரூபத்தை பாதுகாப்பதன் பொருட்டு பாதுகாப்பான முறையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான தேவன் பிட்டிக்கு கொண்டு செல்ல மன்னார் மறை மாவட்ட ஆஜர் இல்லம் தீர்மானித்திருந்தது .இதன்படி தற்போது தேவன் பிட்டியில் உள்ள புனித சவேரியார் தேவாலயத்தில் மாதா திருச்சொரூபம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், மடு மாதாவோடு மடுவை அண்டிய பகுதிகளிலிருந்தும், புனித பிரதேசத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்களும் இடம் பெயர்ந்து புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் உள் நுளைந்தும் உள்ளனர்.

அத்துடன், இம் மாத முற்பகுதியல் மடுவை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் கையெழுத்து வேட்டை மன்னாரில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு அவை அரசுக்கும் , புலிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன, மன்னார் ஆஜர் இல்லம், இது தொடர்பான அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தது. இதன் அடிப்படையிலேயே புலிகள் தார்மீகப் பொறுப்புடன் மடுவிலிருந்து வெளியேறி பாரிய விட்டுக்கொடுப்பொன்றை மேற்கொள்ள முன் வந்துள்ளது போல் எண்ணத்தோன்றுகிறது!

இதன் பின்னணியில், கடந்த வியாழக்கிழமை மதியம், புலிகள் மடு புனித பகுதியிலிருந்து முற்றாக வெளியேறி இருந்தனர். புலிகள் வெளியேறிய செய்தியை ஆஜர் இல்லம் மறுநாள் வெள்ளிக்கிழமை உறுதி செய்திருந்து. இதே வேளை அன்றைய தினம் படையினரால் மடுவுக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்திருந்தது.பின்பு படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் மடு, பகுதி வந்துள்ளதாக தெரிவித்திருந்தது.தற்போது

மடு படையினரின் பூரண கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக படைத்தரப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், மடு மாதா திருச்சொரூபம் மீண்டும் அதே இடத்தில் திரு நிலைப்படுத்தப்பட வேண்டுமானால் மடுப்பகுதி புனித பிரதேசமாக இலங்கை அரசால் பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவமயம் நீங்கவேண்டும் என்பது, மன்னார் ஆஜர் இல்லத்தின் வேண்டுகோள் என்பதோடு உலக கத்தோலிக்கர்களின் அவாவாகவும் உள்ளது.

இது, எவருடைய படை பிரசன்னமும் அங்கு தேவையற்றது என்பதை வலியுறுத்துவதாக அமைகிறது . மடு, திருத்தலத்தை உள்ளடக்கிய 21/2 கீ.மீற்றர் பகுதி புனித பிரதேசம் என்பது மன்னார் மாவட்ட கத்தோலிக்கர்களின் எண்ணக்கரு என்பதால் இராணுப் பிரசன்னம் அகலாமல் மடு திருத்தலத்தில் மாதா மீண்டும் கொலு வைக்கப்படுவதை புலிகளும் விரும்பமாட்டார்கள்.

இது இவ்வாறிருக்க தற்போது மடு படையினர் வசம் உள்ள நிலையில் பாதுகாப்புத் தரப்பு அரசாங்கத்தை இவ் விடயத்தில் விட்டுக்கொடுத்து போகும் போக்கை கடைப்பிடிக்க விடுமா என்ற கேள்வியும் எழவே செய்கிறது. இதே வேளை மடு விடயத்தில் இலங்கை அரசு திடகாத்திரமான முடிவை எடுக்காது போனால் சர்வதேசத்தின் அவசியத்தை கோரும் நிலை ஏற்படலாம்!

இதேவேளை மடுவில் இருந்து வெளியேறிய புலிகளின் தார்மீக விட்டுக்கொடுப்பு, சர்வதேச சமூகத்திடம் இருந்து புலிகளுக்கு அதிக மதிப்பெண்களை பெற்றுக்கொடுக்கும் என்பது உண்மை! அத்தோடு இந்த தார்மீக பொறுப்பை இலங்கை அரசும், படைகளும் மீறும் பட்சத்தில் சர்வதேசத்தின் கண்டனங்களுக்குள்ளாவதோடு, புலிகளை மீளவும் மடுவை கைப்பற்ற தூண்டலாம் எனவும் எதிர்பார்க்கலாம்!

மடு தொடர்பில், மெளனத்தில் இருக்கும் இலங்கை அரசு அடுத்து என்ன செய்யப்போகிறது. களமுனைகளில், இரவு, பகல், துயில் இன்றி, குடும்ப நினைவுகளோடு, போரிட்டு வரும் படையினருக்கு அரசு வழங்கப்போகும் பதில் தான் என்ன? இதே வேளை படைத்தரப்பை பொருத்தமட்டில் மடு மீட்போடு மன்னாரின் இதர பகுதிகளையும் கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என தெரிவிக்கப்படும் நிலையில் அரசாங்கம் இவ் விடயத்தில் விட்டுக்கொடுக்காத ? என்ற கேள்வியும் எல்லோரிடமும் எழத்தான் செய்கிறது .

அரசாங்கம் மடு விடயத்தில் நெகிழ்வு போக்கை கடைப்பிடிக்கத் தவறும் பட்சத்தில், விடுதலைப்புலிகள் நிகழ்காலத்தில் மடு உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடும்! அத்துடன் மன்னாரில் உள்ள பின் தளங்களை பாதுகாக்க வேண்டுமானால் மன்னார் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டிய தேவை படையினருக்கும் உள்ளது.

இதேவேளை மடுவை புனித பகுதியாக அறிவிக்காமல் படைத்தரப்பு அகலக்கால் விரிக்குமானால் மன்னாரின் பல பகுதிகளை விரைவில் இழக்கக்கூடும் என்பது அரசியல் எதிர்வு கூறல் !

இதற்கிடையில் மாதா திருச்சொரூபத்தை மீண்டும் நானூரு ஆண்டுகள் பழமைவாய்ந்த மடு திருத்தலத்தில் திரு நிலைப்படுத்துவதை பரிசீலிப்பதற்கான கூட்டம் ஒன்று இன்று மாலை 3.30 மணியளவில் மன்னார் ஆஜர் இல்லத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Please Click here to login / register to post your comments.