எத்தனை வருடங்கள் சென்றாலும் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது

இராணுவச் சிறப்புப் படைப் பிரிவின் முன்னாள் தளபதியான ஜயவி பெர்னாண்டோ சிங்கள வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இராணுவ நடவடிக்கைகளை குறிப்பாக வன்னியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தப் பேட்டி வெளியானதையடுத்து நாட்டிலுள்ள இராணுவ முகாம்கள் எதற்கும் செல்வதற்கு அவருக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவரது பேட்டியின் முக்கியமான பகுதிகளை இங்கு தருகின்றோம்.

இராணுவத் தளபதிகளும் அரச தலைவர்களும் இவ்வருட இறுதிக்குள் போரை முடிக்கப்போவதாக நாள் குறித்திருந்தார்கள். ஆனால், அவ்வாறு நாள் குறிப்பிட்டு கூற முடியாது என்று கூறுகின்றனர். இதனை நீங்கள் எப்படி நோக்குகின்றீர்கள்...?

ஜனாதிபதியும் இராணுவத் தளபதியும் இவ்வருட இறுதிக்குள் யுத்தத்தை முடிக்கப்போவதாக கூறியிருந்தனர். இதனை அவர்கள் அறியாமையில் கூறவில்லை. நிலைக்கேற்ப மக்களை ஏமாற்றுவதற்காகவே அப்படிக் கூறியிருந்தனர். கிழக்கு வெற்றி மமதையில் இருந்த மக்களைத் தொடர்ந்தும் போரை நோக்கிக் கவர்வதற்காகவே அவ்வாறு கூறினார்கள்.

ஆனால், போரின் பாரதூரத் தன்மையை மக்கள் விளங்கிக் கொண்டிருக்கவில்லை. உதாரணமாக 1998 காலப் பகுதியில் இரண்டு வருடங்களாக ஜயசிக்குறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வடக்கை மீட்பதற்காகவே அப்போர் நடத்தப்பட்டது. இரண்டு வருட முயற்சியை 5,6 நாட்களில் புலிகள் பூச்சியமாக்கினார்கள். இலாபமும் நட்டமும் போரில் பொதுவானதே. எமக்கு எப்போதும் இலாபம் கிட்டாது.

மக்களை முட்டாளாக்கி போரின் பக்கம் இழுக்கவே நாள் குறித்துக் கூறப்பட்டது. போர் அழகாக நடக்கிறது. புலிகளின் தலைவரும் புலிகளும் அழிக்கப்பட்டு விடுவார்கள் என்றே 90 % மக்கள் எண்ணுகின்றனர். இது பச்சைப் பொய்யாகும். இப்படிப் போனால் இன்னும் பல வருடங்கள் சென்றாலும் போரை முடிக்க முடியாது. ஒருபோதுமே போரை முடிக்கமுடியாது என்றுதான் உறுதியாகக் கூறுவேன்.

இன்னும் பல வருடங்களானாலும் போரை முடிக்கமுடியாது என்கிறீர்கள். எந்த சான்றுகளின் அடிப்படையில் அப்படிக் கூறுகின்றீர்கள்?

கடந்த காலத்தில் நடந்தவற்றை வைத்தே அப்படிக் கூறுகின்றேன். எடுத்துக்காட்டாக இன்று நாற்றிசையாலும் வன்னி நோக்கி படையினர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நான் போர் ரகசியம் எதனையும் வெளியிடவில்லை. கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் பணிப்பாளர் நாயகம் போர் தொடர்பான அழகிய விளக்கத்தை வழங்கியிருந்தார். படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ள வியூகம் பற்றி விளக்கியிருந்தார். முன்னாள் போர்த் தளபதி என்ற வகையில் அவரது விளக்கங்களை நான் அறிவேன். இதனை முடிக்க முடியாது.

மன்னாரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெருந்தொகைப் படையினரை நான் தரக்குறைவாகக் கூறவிரும்பவில்லை. இது அரசியல் இலாபத்துக்கான போர் என்பதில் பரப்பாங்கண்டல், மடு, யோதவெவ போன்ற ஊர்ப் பெயர்களே ஒவ்வொரு நாளும் கூறப்படுகின்றன.

மடுவிலிருந்து நேரடியாகப் பார்த்தால் கூட 50 கி.மீ. தூரத்திலேயே கிளிநொச்சி உள்ளது. அந்த 50 கிலோ மீற்றரையும் கடப்பதற்கான காலப்பகுதி கூட பாதுகாப்பு ஊடகமையப் பணிப்பாளர் லக்ஷ்மன் குலுகல்லவுக்குத் தெரியாது.

டிசம்பர் 31 இற்கு இடையில் என்ன செய்தும் கிளிநொச்சியை நெருங்க கூட முடியாது. புலிகளுடன் போரிட்டு முன்னேற முடியாது. வடபோர் முனையில் நாகர்கோவில், முகமாலையிலுள்ள படையினர் புலிகளின் காப்பரண்களை தூளாக்குவதில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். பெருமளவு படையினர் அங்கே முன்னேறி காப்பரண்களை தூளாக்கிப் பின்வாங்குகின்றனர். அது தொடர்பாக ஊடகங்கள் ஊர் பேருடன் பெரும் செய்திகளை வெளியிடுகின்றன. அது எமக்குத் தெளிவாகப் புரிகின்றது.

இந்த நிலையில் எத்தனை வருடம் சென்றாலும் போரை முடிக்க முடியாதென்று மிகவும் பொறுப்புணர்வுடன் கூறுகின்றேன்.

ஆனால், புலிகளுக்கு கடும் இழப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக எப்போதுமே செய்திகள் வருகின்றனவே.?

உண்மை, புலிகளுக்கு சில இழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இழப்புகள் ஏற்பட்டால்கூட அவர்கள் பலமுடன் இருக்கிறார்களே. புலிகள் கொல்லப்பட்டாலும் காயப்பட்டாலும் அவர்கள் பெருகுகின்றனர்.

இது விளங்கவில்லையா? புலிகளிடம் ஆட்கள் தானாகவே இணைகின்றனர். யாழ். குடாநாட்டில் ஐந்தரை இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். அம்மக்கள் படையினர் பக்கமா? புலிகளின் பக்கமா இருக்கின்றனர் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்கள் எம்முடன் இருப்பதாக நான் கூறமாட்டேன்.

அந்த மக்களுக்கு உணவு, மருந்து கொண்டுசெல்லப்படும் ஒரேயொரு பாதை மூடப்பட்டுள்ளது. புலிகளே பாதையை மூடியதாக பெரும் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், அங்கிருக்கும் இராணுவத் தளபதியோ போர் முடியும் வரை பாதையைத் திறக்கமாட்டோம் என்று கூறுகின்றார். அங்கிருக்கும் மக்களுக்கு எந்த வாய்ப்பு உள்ளது.

மாவிலாறு மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அப்பகுதி திறக்கப்பட்டது என்கிறார்கள். அப்படியானால் ஏன் 5 இலட்சம் மக்கள் வாழும் பாதையை திறக்கவில்லை? அரசு புலிகளுடன் போரிடவில்லை. தமிழ் மக்களுடனேயே போரிடுகின்றது என்று நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.

விடுதிகளில் இருந்த மக்களை வவுனியாவிற்கு விரட்டியது போன்றதே. அனைத்து தமிழ் மக்களும் அரசுடன் இருப்பதாக கூறவே முடியாது. கிழக்கிலும் துணைப்படை உறுப்பினர்களை தவிர எந்தவொரு தமிழரும் அரசுடன் இல்லை. கொழும்பு தமிழரை வெல்லமுடியாத அரசு யாழ்ப்பாணத் தமிழரின் மனங்களை எப்படி வெல்லப்போகின்றது?

இராணுவத் தளபதி முதலாவது தவறிழைத்ததாக கூறமுடியும். இன்று உள்ள புலிகள் இவ்வளவே என்று அவர் கணக்கு கூறினார். ஒவ்வொரு நாளும் இவ்வளவு பேர் கொல்லப்படுவதாகவும் கூறுகின்றார். குறித்த நாளில் புலிகள் முடிந்து விடுவார்கள் என்று நிறுவியவர் அவரே. அந்த நிறுவல் தவறானது என்பது இப்போது அனைவருக்கும் உறைத்துள்ளது. தற்போது தனது தவறை மூடிமறைக்க முடியாமல் திண்டாடுகின்றார்.

அரசே இதற்குப் பொறுப்பு கூற வேண்டும். அரசு வன்னியை கைப்பற்றுவது இதுவே. கிளிநொச்சி முல்லைத்தீவை கைப்பற்றும் நடவடிக்கையும் இதுவேதான். அவர்கள் கூறும் மனிதாபிமான நடவடிக்கையை மடு வலயத்திற்கு மேலால் தான் செல்ல வேண்டுமா? காட்டுக்குள் இருக்கும் மடு ஆலயம் எந்த விதத்திலும் இராணுவ முக்கியத்துவமற்ற இடமாகும்.

புலிகள் மோட்டார் தாக்குதல் நடத்தியதன் காரணமாகவே மடு மாதா திருச்சொரூபம் இடம்மாற்றப்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றனவே?

அது எமக்கு தெரியாது. புலிகள் மோட்டார் அடித்ததாக அரசு தானே கூறுகின்றது. புலிகள் அங்கு தாக்குதல் நடத்த தூண்டியது யார். இதற்கு முன்னர் ஒருபோதும் அப்பகுதி மீது புலிகள் தாக்குதல் நடத்தவில்லைதானே. அங்கே படையினர் நுழைய முற்பட்டாலும் அதனை தடுக்க புலிகள்தயார். அதைத்தான் போர் என்று கூறுவார்கள்.

ஜனகபுர அத்தாவெட்டுனுவெவ பகுதியில் மாதக்கணக்கில் முன்னேற தயாராகும் போது புலிகள் அதனை தடுத்து நிறுத்த முற்படுகின்றனர். மன்னாரிலும் அதுவே நடக்கின்றது. அந்த நடவடிக்கை மடுவில் இருந்து ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் நடந்தால் கூட இதுதான் நடக்கும். மடு ஆலயம் ஊடாக செல்லமுற்பட்டே புலிகளை அந்த இடத்திற்கு இழுத்துள்ளனர்.

புலிகள் மடு ஆலயம் மீது மோட்டார் தாக்குதல் நடத்துவதாயின் 25 வருடத்திற்கு முன்பே தாக்கியிருப்பார்களே. என்ன செய்வது என்று மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் புலிகளிடம் கேட்டதற்கு, படையினர் இங்கே வர முற்படுகின்றனர். நாங்கள் தடுத்து நிறுத்துகின்றோம் என்று புலிகள் கூறியதாக தொலைக்காட்சியில் கூறப்பட்டது.

படையினர் ஒரு அங்குலத்தை கூட பிடிக்காது தடுப்பதே புலிகளின் கடமையாகும். மடு ஆலயம் என்பதற்காக புலிகள் படையினரை உள்ளே நுழையவிட்டால் தூக்கிக் கொண்டே படையினர் கிளிநொச்சி வரை செல்ல முடியுமே. அப்போது புலிகள் ஒன்றும் செய்யமாட்டார்கள். அதற்கு அரசே பொறுப்புக் கூற வேண்டும். இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைக்கின்றேன்.

மடுவுக்கு படையினர் செல்லவேண்டியதேவை எதுவும் இல்லை. போரியல் ரீதியில் எதுவித முக்கியத்துவமும் அற்ற இடம். மடு ஆலயமானது பண்பாட்டு, சமய, கல்வி, வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடம் மட்டுமே.

1987 இல் நாம் மடு ஆலயம் சென்றோம். போரின்போதுதான் அப்படையினருக்கு நானே தலைமை தாங்கினேன். நான் ஓர் கத்தோலிக்கன் என்பதாலே என்னிடம் பொறுப்புத் தரப்பட்டது. நாம் எதுவித சேதத்தையும் ஏற்படுத்தமாட்டோம் என்று எனது அதிகாரி எண்ணியிருந்தார். நாம் மூன்று நாட்கள் அப்பகுதியில் நின்றோம். அன்றிருந்த அருட்தந்தை திருச்சிலையை வெளியே எடுத்து திருவிழாவை நடத்தினார்.

புலிகள் ஒருபோதும் மடு ஆலயத்தில் முகாம் அமைத்திருக்கவில்லை. போரற்ற வலயத்தை போர்க்களமாக்கியது அரசே. முக்கியத்துவம்மிக்க இடங்களை கைப்பற்றுவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. நேரடியான தாக்குதல் நடத்துவது அதிலொரு முறையாகும்.

அப்போது அவ்விடத்திற்கு சேதம் ஏற்படும். அவ்விடத்தை விட்டு ஏனைய பகுதிகளை மீட்பதன் மூலம் அவ்விடத்தைப் பாதிப்பு இன்றி மீட்கலாம். மடுவுக்குச் செல்ல முற்பட்டது முட்டாள் தனமே. மடுவுக்குச் சென்றால் புலிகள் கைகட்டிக் கொண்டு பார்த்திருப்பார்கள் என்றே அரசு எண்ணியது. அப்படி அவர்கள் கைக்கட்டி நின்றிருந்தால் திருச்சொரூபத்தை தலையில் வைத்துக் கொண்டே கிளிநொச்சி வரை செல்லலாம் என்று அரசு நினைத்தது.

மடுப் பிரதேசத்தை போரற்ற வலயமாக்குமாறு புலிகளிடமும் அரசாங்கத்திடமும் ஆயர் குழாம் வேண்டுகை விடுத்துள்ளதே?

அப்படியானால் தொடங்கியது யார்? தொடக்கியவர்களே நிறுத்த வேண்டும்? தொடக்கியது நாங்களே. நாங்கள் அங்கே செல்ல முற்பட்டதாலே தான் புலிகள் அங்கே வந்தார்கள். நாம் அரச படையினர். பயங்கரவாதிகள் போன்று செயற்பட முடியாது அரசாங்கமே முதலடியை வைக்க வேண்டும்.

Please Click here to login / register to post your comments.