யுத்தத்தை மேலும் வலுவடையச் செய்வதற்கான ஓர் ஒப்பந்தம்

ஆக்கம்: பேராசிரியர் ஜயதேவ உயங்கொட
கொழும்பு அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக ரத்து செய்ததன் மூலம் இலங்கையின் தேசியப் பிரச்சினை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இது நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கவே வழிகோலும்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் தோல்வியடைந்த சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பான பிரச்சினையின் பரிமாணங்களில் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒரு குறிப்பிட்டுக் கூறக்கூடிய இடமுண்டு. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் சமாதான முன்னெடுப்புக்களுக்கான முதல்கட்டமாக போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்த அனைத்து சமாதான பேச்சுவார்த்தைகளுக்கும் நோர்வே அரசாங்கப் பிரதிநிதிகள் மத்தியஸ்தம் வழங்கினர். சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளாக தொடர்ச்சியாக நோர்வே அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்கி வந்தது. போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்டதன் பின்னர் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஆறு சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இவை அனைத்தும் இலங்கைக்கு வெளியே இடம்பெற்றவை என்பது நோக்கத்தக்கது.

2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒஸ்லோவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியது எனக் குறிப்பிடலாம். தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக சமஷ்டி ஆட்சி முறைமை குறித்து ஆராயப்பட்டது. எனினும், ஒஸ்லோவில் காணப்பட்ட புரிந்துணர்வு தொடர்ச்சியாக நீடிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த ஒஸ்லோ புரிந்துணர்வை நிராகரித்தனர். 2003 ஆம் ஆண்டளவில் சமாதான பேச்சுவார்த்தைகள் சர்ச்சைக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் இணங்கியவற்றை அமுல்படுத்தவில்லை எனக்கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக் கொண்டனர். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களினாலும், 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவினாலும் தடைப்பட்டிருந்த இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

போர்நிறுத்த உடன்படிக்கை மீறல்களுடன் படிப்படியாக பழைய மோசமான நிலைமைக்கு இந்தப் பிரச்சினை மீண்டும் திரும்பியது. அனேகமான சந்தர்ப்பங்களில் நேரடியான யுத்த நிறுத்த மீறல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளே ஈடுபட்டதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் குற்றஞ் சாட்டினர். குறிப்பாக ஆயுதக் கடத்தல்கள் மற்றும் இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளின் படுகொலைகள் தொடர்பாக குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மறுபுறத்தில் போர்நிறுத்த உடன்படிக்கையில் காணப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில் கொழும்பு அரசாங்கம் செயற்படவில்லை எனக் குற்றஞ் சாட்டப்பட்டது. குறிப்பாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களாகக் காணப்பட்ட கிராமங்களிலிருந்து இராணுவத்தினரை அகற்றுவது தொடர்பில் கொழும்பு அரசாங்கத்தின் நிலைப்பாடு யுத்த நிறுத்த மீறல்களில் பிரதான சர்ச்சையாகக் கருதப்படுகிறது.

போர்நிறுத்த மீறல் குற்றச்சாட்டை ஒருவர் மீது ஒருவர் சுமத்தும் இந்த ஆடு புலியாட்டத்தில் யார் குற்றவாளிகள் என்பதை ஆராய்வதைவிட, போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய இணக்கப்பாடுகளின் உண்மை நிலைமையை வெளியிலிருந்து அவதானிப்போருக்கு இலங்கையின் இனப்பிரச்சினையின் தெளிவான பரிமாணங்களை நன்றாக விளங்கிக்கொள்ள முடியும். அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அரசியல் ரீதியான அனுகுமுறையை தொடங்குவதற்கான அடித்தளமாகவே உண்மையில் போர்நிறுத்த உடன்படிக்கை அறிமுகப் படுத்தப்பட்டது. அதிகாரப் பரவலாக்கலின் மூலம் அரசியல் சாசனத்தினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க அப்போதைய கொழும்பு அரசாங்கம் தயாராக இருந்தது. தனிநாட்டு கோரிக்கையினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் தமது தீர்வுத் திட்டங்களைத் தேட தமிழீழ விடுதலைப் புலிகள் விளைந்தனர்.

இந்த இரு வேறுபட்ட நோக்கங்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப வேண்டிய நிர்ப்பந்தமே 2002 ஆம் ஆண்டு சமாதான முன்னெடுப்புக்களின் பிரதான சவாலாகக் காணப்பட்டது. இரண்டு தரப்பினருக்கும் இடையில் காணப்படும் இணக்கப்பாட்டுத் திறனின் அடிப்படையில் சாதாரண அதிகாரப் பகிர்வொன்றை நோக்கிச் செல்லக்கூடிய வாய்ப்பு இருந்த போதிலும், மறுபுறத்தில் அது பிரிவினையாக மாறக்கூடிய வாய்ப்பாகவும் அமைந்திருந்தது. சர்வதேச மத்தியஸ்தர்களின் ஒத்துழைப்புடன் 2002-2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இனப்பிரச்சினை தொடர்பாக நிலவிய இணக்கப்பாட்டு நிலைமை இதுவரையில் எட்டப்படவில்லை என்றே குறிப்பிடலாம்.

போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் சமாதான முன்னெடுப்புக்களின் போது இலங்கை அரச தரப்பு இரண்டு பிரதான பிரிவுகளாக பிளவுபட்டிருந்தது என்பது ஒரு முக்கியமான விடயமாக நோக்கப்பட வேண்டும். 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கையின்போது காணப்பட்ட நிலைமையை ஒத்த ஒரு சந்தர்ப்பமாகவே இது காணப்பட்டது. ஆழமாக பிளவுபட்டு காணப்பட்ட அரசாங்கமாகவே காணப்பட்டது. இந்த நிலை ஏற்கனவே பிளவுபட்டிருந்த நிலைமையை மேலும் வலுப்படுத்துவதாகவே கருதப்படுகிறது.

இந்தப் பிளவு நிலை சிங்கள அரசாங்கத்தில் மிக அழுத்தமாக வெளிப்படத் தொடங்கியது. உண்மையில் அரசாங்க அதிகாரம் இரண்டு மாறுபட்ட எதிரணிகளைக் கொண்டமைந்ததாக காணப்பட்டது. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பொதுஜன ஐக்கிய முன்னணி ஒரு அணியாகவும், பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மற்றொரு அணியாகவும் இரண்டு பிரிவுகளாகக் காணப்பட்டன. ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஒரு சிறந்த அடித்தளமாக போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சமாதான முன்னெடுப்புக்களினூடாக எதிர்பார்க்கப்பட்ட பலன்கள் கிடைக்கப் பெறாமை என்பவற்றை பொதுஜன ஐக்கிய முன்னணி உபாயமாகப் பயன்படுத்திக் கொண்டது. போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகபட்ச சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதனால் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் எனவும், நாட்டின் இறைமைக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் ஏற்படக்கூடும் எனவும் பொதுஜன ஐக்கிய முன்னணி உள்ளிட்ட சிங்கள தேசியவாதக் கட்சிகள் தர்க்கித்தன.

போர்நிறுத்த உடன்படிக்கைக்கான தடைகள் மிகவும் வலுவானவை. அரைகுறை அர்ப்பணிப்புடன் கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தினால் சமாதான முன்னெடுப்புக்களின் சரியான வெளியீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. சுயநலவாத, நெகிழ்வுப் போக்கற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியமை, பொருளாதார சுதந்திரத்துடன் கூடிய எளிமையான ஜனநாயக முறைமையை நிலைநாட்ட முனைந்த சர்வதேச மத்தியஸ்தர்களின் தூரநோக்கற்ற கொள்கைகள் என்பவற்றின் காரணமாக இறுதியில் சமாதான முன்னெடுப்புக்களுக்கு அரசியல் தீர்வொன்றின் அவசியப்பாடு மிக மிக குறைந்தளவான சாத்தியப்பாடுடைய ஒன்றாக மாறியது. பூர்த்தி செய்யப்படாத சமாதான முன்னெடுப்புக்கள் மேலும் மேலும் பிளவுகளையே ஏற்படுத்தி நிற்கும் என்பது தெளிவாக இதன் மூலம் புலனாகின்றது. தீட்டிய கைகளைப் பதம்பார்த்த நிலைமையாகவே நாம் இதனை உணர்கின்றோம்.

இந்தப் பூரணப்படுத்தப்படாத புரட்சியின் மூலம், இலங்கையின் இனப்பிரச்சினை விசித்திரமான ஒரு கட்டத்தை எட்டியது. சமாதானத்தை நிலைநிறுத்த இராணுவமல்லா முறையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் இறுதியில் யுத்த வன்முறைகளின் கரங்களை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. வேறு விதத்தில் கூறினால், இனப்பிரச்சினையின் தன்மை மேலும் பாரதூரமான வகையில் வளர்ச்சிபெற்று தொடர்ந்தது. இது இலங்கையில் சமாதான முன்னெடுப்புத் திட்டங்கள் காணப்படவில்லை என்பதைவிட, சமாதான முன்னெடுப்புக்களை மேற்கொண்ட தரப்புக்கள் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அரசியல் தீர்வுவொன்றைப் பெற்றுக்கொடுக்க தவறியமையையே விளக்கி நிற்கின்றன. உண்மையில் கடும் சிக்கல் மிகுந்த இலங்கையின் தேசியப் பிரச்சினை நிறைவு செய்யப்படாத சமாதான முயற்சிகளாகவே காணப்படுகின்றன.

யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் ஆரம்பம் முதலே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தேவையற்ற அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையும், இந்தியாவும் பலமாக குற்றஞ்சாட்டி வந்தன. ஏனென்றால் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சம இராணுவ அதிகாரம் வழங்கப்பட்டது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகளால் ஆட்சி செய்யப்படும் நிலப்பரப்புக்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலைமையை ஏற்றுக்கொள்ள ஏனைய அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டின.

பேச்சுவார்த்தைக்கான ஒரு அடித்தளம் என்ற நோக்கிலேயே விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டனர். போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் இராணுவ படையினருக்கு நிகரான அங்கீகாரம் தமக்கு கிடைக்கும் என்ற தந்திரோபயமே புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையைக் கைச்சாத்திடத் தூண்டியது. எனினும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அந்த சமவலுவை வழங்கவில்லை. இராணுவ பலத்தைக் கொண்ட தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே கொழும்பு தரப்பினரது நோக்கம். எனினும், இந்த தந்திரோபாயம் உரிய முறையில் செயற்படுத்தப் படவில்லை. இதனால் 2002-2003 ஆம் ஆண்டுகளில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையையும், சமாதான முன்னெடுப்புக்களையும் எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் தெற்கின் பல அரசியல் சக்திகளுக்கு ஏற்பட்டது.

கொழும்பில் ஆளும் வகுப்பினருக்கு இடையே காணப்பட்ட பிரிவினை மற்றும் முரண்பாடுகளின் காரணமாக முக்கிய பிரச்சினைகளின் போது ஒன்றுபட்டுச் செயற்பட முடியாது போயுள்ளது. பிரதான கட்சிகளுக்கு இடையே காணப்பட்ட இடைவெளியின் காரணமாக போர்நிறுத்த உடன்படிக்கையை முன்னெடுக்கத் தேவைப்பட்ட அவகாசம் அற்றுப் போனது. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது அவர், ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி உள்ளிட்ட ஏனைய பிரதான கட்சிகளிடம் அபிப்பிராயம் கேட்வில்லை என்பதை ஞாபகப்படுத்துவது இந்த இடத்தில் உசிதமானதாக அமையும். இரண்டு தரப்பினரது இணக்கப்பாட்டினால் மட்டும் விடுதலைப் புலிகளுடன் சமாதான முன்னெடுப்புக்களை ஏற்படுத்த முடியும் என்பதே ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் தந்திரோபயமாக காணப்பட்டது. அதாவது ரணில் விக்ரமசிங்கவின் ஆளுங்கட்சிக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான இணக்கப்பாட்டின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்பதே அவரது நோக்கம். எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரைவாசிப் பகுதி சிங்கள மக்களையே பிரதிநிதித்துவப் படுத்தினார். ஏற்கனவே நடந்தது போன்று சமாதான முன்னெடுப்புக்களை பலவீனப்படுத்த மற்றைய தரப்பு தருணம் பார்த்து காத்திருந்தது.

சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு இடையே காணப்படும் பிளவுகள், முரண்பாடுகள் எந்தளவு தேசிய இனப்பிரச்சினையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மீண்டுமொருமுறை பறைசாற்றியது. சிங்கள கடும்போக்குடைய தேசியவாதிகளின் உந்துதலினால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை 2003ம் ஆண்டு இறுதிப்பகுதியில் கலைத்தார். போர்நிறுத்த உடன்படிக்கையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் இடைக்கால சுய நிர்ணய அதிகாரசபை உள்ளிட்ட தீர்வுத் திட்டங்களும் தேசிய பாதுகாப்பிற்கும், நாட்டின் இறைமைக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதனாலேயே ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலைப் புலிகள் தன்னிச்சையாக சமாதான பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து, சமாதான முன்னெடுப்புக்கள் மற்றும் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஏற்பட்ட இரண்டாவது பாரிய இடையூறாக இந்த ஆட்சி கவிழ்ப்பு கருதப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பாராளுமன்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் கொழும்பு அரசாங்கம் மெதுவாக போருக்கான ஆயத்தங்களை மேற்கொண்டது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகம், குறிப்பாக நோர்வே அரசாங்கம் முன்னெடுத்த சமாதான முயற்சிகளை ரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிங்கள தேசியவாத அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டது. போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள் பற்றி குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மீறல்கள் குறித்து சிங்கள கடும்போக்குடைய தேசியவாதிகள் தமது அதிருப்தியை வெளியிட்டதுடன் போர்நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அழுத்தங் கொடுக்கத் தொடங்கினர்.

2005 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளை “பயங்கரவாதிகள்”; என்று பிரச்சாரம் செய்து, விடுதலைப் புலிகள் அமைப்பை சில நாடுகள் தடை செய்வதற்கும், யுத்த நிறுத்த உடன்படிக்கையை ரத்து செய்வது தொடர்பான பிரச்சாரங்களிலும் கதிர்காமர் முக்கிய பங்காற்றியுள்ளார். போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பான தமது நிலைப்பாட்டினால் தமது அரசாங்கத்திற்கு சிக்கல்கள் தோன்றியதை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உணர்ந்தார். சமாதான முன்னெடுப்புக்களை தொடர்வதற்கு திரும்புமாறு விடுதலைப் புலிகளுக்கு சந்திரிக்கா அழைப்பு விடுத்தார், மறுபுறம் சர்வதேச சமூகம் (ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான்) எச்சரிக்கை விடுப்பதன் மூலமும், ஜனநாயக ரீதியிலும் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பச் செய்ய முயற்சித்தன. எனினும், இவை அனைத்தும் இறுதியில் தோல்வியிலேயே முடிவுற்றன. 2004 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் போரைத் தொடரப் போவதாக தகவல்கள் வெளியாகின. தமது இராணுவ பலத்தை வெளிக்காட்டி புதிய நிலையிலிருந்து சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராகினர்.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலை அநர்த்தம் இலங்கையின் இனப்பிரச்சினையை மாற்றியமைத்தது. அதற்கு முந்தைய ஒரு வருட காலமாக இலங்கையில் போர் மேகங்கள் சூழ்திருந்தன. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து வந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உயிர்களை மிக மோசமான முறையில் ஆழிப் பேரலை அநர்த்தம் காவுகொண்டது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள வடக்கு கிழக்கு பகுதிகளில் மிகப் பாரியளவிலான அழிவுகள் ஏற்பட்டன. இந்தக் கோரமான இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட மனித அவலங்கள் காரணமாக விடுதலைப் புலிகள் தமது ஆயுதப் போராட்ட உத்தியை கைவிட்டனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இந்த அநர்த்த சூழ்நிலை புதிய சமாதான பாதைகளைத் திறந்ததாகவே கூறலாம். இரு தரப்பினரும் இணைந்து அநர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்கக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியதுடன் அதன் மூலம் சமாதான முன்னெடுப்புக்களை மீண்டும் ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்பும் காணப்பட்டது.

இதன்படி, இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பித்தனர். 2005 ஆம் ஆண்டு யூலை மாதம் சுனாமி நிவாரணப் பணிகளுக்கான ஒப்பந்தமொன்றை இரு தரப்பினரும் கைச்சாத்திடுமளவிற்கு இந்த சுமூகமான சூழ்நிலை வளர்ச்சியடைந்திருந்தது. எனினும் புதிதாக உருப்பெற்ற சிங்களத் தேசியவாதிகளின் செயற்பாடுகளினால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித அரசியல் தொடர்புகளும் பேணப்படக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பலம்வாய்ந்த அங்கத்தினரான மக்கள் விடுதலை முன்னணியினர் சுனாமி நிவாரணப் பணிகளைத் தொடரும் பொருட்டு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அரசியல் சாசனத்திற்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர். இதன்படி அரசாங்கத்திற்கும், விடுதலை; புலிகளுக்கும் இடையே மிகவும் இன்றியமையாத மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்தது. (இதேபோன்று இந்தோனேசிய அரசாங்கத்திற்கும் ஆசே கெரில்லா கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட மனிதாபிமான செயற்பாடுகளுக்கான ஒப்பந்தம் இன்றும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.)

2005 ஆம் ஆண்டு சமாதான முன்னெடுப்புக்களைத் தொடருவதற்கான தவறவிடப்பட்ட சந்தர்ப்பமாக கருதினால், 2006 ஆம் ஆண்டை யுத்தப் பாதையை நோக்கி முன்னகர்ந்த ஆண்டாககவும் குறிப்பிட முடியும். 2005 ஆம் ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் இந்தப் பிரச்சினையின் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு காரணிகளின் அடிப்படையில் தேர்தலில் வெற்றிபெற்றார். கடும்போக்குடைய சிங்களத் தேசியவாதிகளின் ஒத்துழைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளின் வேண்டுகொள் காரணமாக வடக்குத் தமிழ் வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலை பகிஷகரித்தமை என்பனவே இந்த இரண்டு பிரதான காரணிகளாகும். இரண்டு கடும்போக்குடைய சிங்களத் தேசியவாதக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மஹிந்த ராஜபக்ஷ நிர்ப்பந்திக்கப்பட்டார். மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளுடன் ஜனாதிபதித் தேர்தலில் அவர் கூட்டணி வைத்துக் கொண்டார். சிங்கள பௌத்த தேசியவாதக் கொள்கைகளின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தார். தேசியப் பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வோன்று முன்வைக்கப்பட வேண்டும் எனத் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்கவை சிறியளவு வாக்கு வித்தியாசத்தின் அடிப்படையில் தேர்தலில் வெற்றிகொண்டார். 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளும், புதிதாக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் யுத்தத்தை ஆரம்பித்தன.

மஹிந்த ராஜபக்ஷவை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் மறைமுகமாக தேர்தலில் வெற்றிபெறச் செய்தனர்? தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்காமல் இருநதிருந்;தால் தேர்தல் முடிவுகள் ரணில் விக்ரமசிங்கவிற்கு சாதகமாக அமைந்திருக்கும். இந்தப் பிரச்சினையை புதியதொரு கோணத்திற்கு கொண்டு செல்ல விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு தேவையேற்பட்டது. துரதிஷ்டவசமாக 2006, 2007 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளின் தந்திரோபயங்கள் குறிப்பிடத்தக்களவு வெற்றி பெற்றன என்றே கூறலாம்.

2006 ஆம் ஆண்டின் முதல் பகுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதிய அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைகளைத் தொடரத் தீர்மானித்தனர். இதன்படி இரண்டு தடவைகள் ஜெனீவாவில் இரு தரப்பும் சந்திப்புக்களை மேற்கொண்டன. பெ;பரவரி மாதம் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது போர்நிறுத்த உடன்படிக்கையை பூரணமாக அமுல்படுத்த இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் அதிலிருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களினால் கிழக்கில் பதற்றம் நிலவியது. 2005, 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனேகமான சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளின் உட்கட்சி பூசல் காரணமாகவே போர்நிறுத்த உடன்படிக்கை மீறல் தொடர்பான சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகின. போர்நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்களின் அடிப்படையில் துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களைக் களைய கொழும்பு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா குழுவினர் பிரிந்து சென்ற சம்பவம் போர்நிறுத்த உடன்படிக்கை சர்ச்சையில் மிக முக்கியமானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இலங்கை இராணுவம் கருணா குழுவினருக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியது. இறுதியாக ஜெனீவா பேச்சுவார்த்தைகள் உண்மையில் இருதரப்பினரின் யுத்த ஆயத்தமாகவே அமைந்தது என்பது தெளிவாகிறது.

அரசியல் காரணங்களுக்காக இரண்டு தரப்பினரும் போர்நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக ரத்து செய்ய விரும்பவில்லை. எவ்வாறெனினும், 2007 ஆம் ஆண்டு யுத்த ஆண்டாகவே கருதப்படுகிறது. பிரகடனப்படுத்தப்படாத போராகவே இந்த நிலைமை கருதப்பட்டது. போர்நிறுத்த உடன்படிக்கையின் 4.4 சரத்திற்கு அமைய எந்தவொரு தரப்பும் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமானால் அது தொடர்பாக நோர்வே அரசாங்கத்திற்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். 2007 ஆம் ஆண்டின் ஆரம்பகாலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குக் கட்டுப்பாட்டுப் பிரதேசமொன்றை இராணுவத்தினர் கைப்பற்றியதுடன் பிரகடனப் படுத்தப்படாத யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்தது. சில மாதங்களாக தொடர்ந்த யுத்தம் காரணமாக பாரியளவிலான மக்கள் இடம்பெயர்ந்தனர். இரண்டு தரப்பிலும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. மேலும் மனிதாபிமான உதவியாளர்கள் கொல்லப்பட்டதுடன், மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களும் பதிவாகின. யுத்தம் உக்கிரமடைந்ததன் காரணமாக மனித உரிமை மீறல் மற்றும் மனிதாபிமான உதவிகள் என்ற விடயங்கள் தொடர்பாக அதிக அவதானம் செலுத்தப்பட்டது. 2007 ஆம் ஆண்டு முழுவதும் தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்பில் மிகக் குறைந்தளவு மரியாதையையே பேணிவந்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர்நிறுத்த உடன்படிக்கையை ரத்து செய்தது தொடர்பாக அனேகமான தெற்கின் அரசியல் சக்திகள் தமது வரவேற்பை தெரிவித்தன. 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் போர்நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டது. சிலர் இந்த முடிவை வரவேற்றனர். போர்நிறுத்த உடன்படிக்கை என்ற நடைப்பிணம் கடைசியில் தகனம் செய்யப்பட்டது என அவர்கள் தெரிவித்தனர். சிலருக்கு அது ஒரு சுவையில்லாத நாவல், இன்னும் சிலருக்கோ போர்நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டமை தேசத்தின் கௌரவம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கும் - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டதன் மூலம் இராணுவ வெற்றிகளுக்கு வழிகோலும் என சிங்கள மக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட ஒரு சாரார் தெரிவித்தனர். இதனால்தான் விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கை பூரணமாக செயற்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். எனினும் தெற்கின் அரசியல் சக்திகள் இதனை நிராகரித்தன. உண்மையில் போர்நிறுத்த உடன்படிக்கை மீதான விடுதலைப் புலிகளின் காதலை ஒரு யுத்த தந்திரோபாயமாகவே நோக்க வேண்டும்.

இந்த ஏதுக்கள் ஒருபுறமிருக்க, போர்நிறுத்த உடன்படிக்கை அமுலில் இல்லாத இலங்கை மிகவும் சிக்கல் நிறைந்த ஒன்றாகவே காணப்படும் என்பது திண்ணம். ஆளும் தரப்பினரும், விடுதலைப் புலிகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல்களில் ஈடுபட்ட போதிலும், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் பிரசன்னத்தினால் போராட்டக் களத்தில் இடம்பெறக்கூடிய உக்கிர மோதல்களையேனும் கட்டுப்படுத்தக் கூடிய உத்தரவாதம் காணப்பட்டது. எனினும், போர்நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டதனைத் தொடர்ந்து யுத்த நிலவரங்களைக் கண்காணிப்பதற்கோ அல்லது அது தொடர்பான எச்சரிக்கைகளை விடுப்பதற்கோ எந்தத் தரப்பும் இல்லாமல் போனது.

இந்த நிலைமை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு தனித்துவமான போக்கையே விளக்கி நிற்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்களுடைய நியாயங்களை மிகத் தெளிவாக சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் விளக்கியிருந்தனர். இனப்பிரச்சினை மற்றும் தீர்வுத் திட்டங்களில் முன்னொருபோதும் இல்லாதவகையில் 2002 ஆம் ஆண்டு சமாதான முன்னெடுப்புக்கள் சர்வதேச ரீதியில் ஆழமான தாக்கத்தைச் செலுத்தியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இந்த நிலைமையை அளவுக்கு மீறிய வகையில் சர்வதேச மயப்படுத்தினர் என்றே கூறலாம்.

இலங்கை அரசாங்கத்தின் இனமுரண்பாடுகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடையிலான வலுவான பிணைப்பாகக் காணப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டதன் மூலம், தமக்கு விரும்பிய வகையில் சுதந்திரமாக யுத்தத்தில் ஈடுபடக்கூடிய சந்தர்ப்பங்கள் உதயமாகியுள்ளன. மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான ஏதுக்கள் தொடர்பான எவ்வித அழுத்தங்களுமின்றி மோதல்களில் ஈடுபட வாய்ப்பு கிட்டியுள்ளது. எதிர்வரும் மாதங்களில், எவ்வித தங்குதடையுமின்றி உக்கிர மோதல்கள் இடம்பெறும் என்பதனையே இந்த நிலைமைகள் எமக்கு வெளிப்படுத்தி நிற்கின்றன.

Please Click here to login / register to post your comments.